Published:Updated:

மியூசிக் ஃபேமிலி... ஹேப்பி ஃபேமிலி!

மியூசிக் ஃபேமிலி... ஹேப்பி ஃபேமிலி!
பிரீமியம் ஸ்டோரி
மியூசிக் ஃபேமிலி... ஹேப்பி ஃபேமிலி!

சினிமா ஸ்பெஷல்

மியூசிக் ஃபேமிலி... ஹேப்பி ஃபேமிலி!

சினிமா ஸ்பெஷல்

Published:Updated:
மியூசிக் ஃபேமிலி... ஹேப்பி ஃபேமிலி!
பிரீமியம் ஸ்டோரி
மியூசிக் ஃபேமிலி... ஹேப்பி ஃபேமிலி!

‘அட்டக்கத்தி’ திரைப்படத்தில் தன் இசையால் இதயங்களை அள்ளியவர் சந்தோஷ் நாராயணன். ‘ஜிகர்தண்டா’, ‘குக்கூ’, ‘இறுதிச்சுற்று’ என தன் ஒவ்வொரு படத்திலும் உச்சம் சென்றுகொண்டே இருக்கும் இவர் இப்போது, சூப்பர் ஸ்டாரின் `கபாலி' படத்துக்கு இசையமைக்கிறார். இவர் காதல் மனைவி, பாடகி, மீனாட்சி ஐயர். இந்தத் தம்பதியின் மகளும் பாடகியே! அழகான இந்த இசைக்குடும்பத்தின் இனிய கீதங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார், மீனாட்சி சந்தோஷ் நாராயணன்.

மியூசிக் ஃபேமிலி... ஹேப்பி ஃபேமிலி!

‘‘நான் இலங்கை, யாழ்ப்பாணத்துல பிறந்தேன். என் அம்மாவோட சொந்தங்கள் மதுரையிலும், அப்பாவோட சொந்தங்கள் யாழ்ப்பாணத்திலும் வசிச்சதால... நானும் மதுரை, யாழ்ப்பாணம்னு மாறி மாறி வளர்ந்தேன். அம்மா வீட்டில் இசை மட்டும்தான் சூழலா இருந்தது. பாட்டி, அம்மா, நான், இப்போ என் பொண்ணுனு நான்கு தலைமுறைகளா இசைக்குடும்பம் எங்களுடையது.

சின்ன வயசில் நான் எங்கம்மாகிட்டயும், நித்யஸ்ரீ  மகாதேவனோட அக்கா காயத்ரிகிட்டயும் முறையா கர்னாடிக் மியூசிக் கத்துக்கிட்டேன். ப்ளஸ் டூ முடிச்சதும் இசையையே பிரதான மாக்கி, அம்மாவும் நானும் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் செய்துட்டு இருந்தோம். குறிப்பா, கொழும்புவில் நான் நிறைய மேடைக் கச்சேரிகள் மற்றும் டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் பாடிட்டு இருந்தேன்’’ என்றவர், தன் கணவர் வளர்ந்துவந்த சூழல் பற்றிப் பேசினார்.

‘‘சந்தோஷ் குடும்பமும், திருச்சியில ஒரு மியூசிக் குடும்பம்தான். அவரோட அம்மா, சித்தி எல்லோரும் ரொம்ப நல்லா பாடுவாங்க. காலேஜ்ல படிக்கும்போது கல்ச்சுரல் ஈவன்ட்ஸில் ஃப்ளூட் உள்ளிட்ட இசைக்கருவிகளில் கலக்கியவர், பின் நண்பர்கள் சிலரோட சேர்ந்து குட்டி குட்டி டிராக்ஸ் கம்போஸ் பண்ணியிருக்கார். இன்ஜினீயரிங் பட்டதாரி. இசைதான் வேணும்னு சென்னைக்கு வந்து சவுண்ட் இன்ஜினீயரிங் டிப்ளோமா படிச்சிருக்கார். ஏ.ஆர்.ரஹ்மானோட அசிஸ்டன்ட் பிரவீன் மணிகிட்ட அசிஸ்டன்ட் வேலை, ‘கர்நாட்டிகா’ என்ற ஸ்டூடியோவில் வேலைனு பெரிய வருமானமெல்லாம் கிடையாது. இசையை ஆழ்ந்த நுணுக்கங்களோட கத்துக்கணும் என்ற ஆர்வமும், தேடலுமா இருந்திருக்கார்.

10 வருஷத்துக்கு முன்னாடி ‘அத்வைதம்’ என்ற மியூசிக் பேஸ்டு தெலுங்கு ஷார்ட் ஃபிலிமுக்கு இசையமைச்சார். அந்த படத்துக்கு நேஷனல் அவார்டு கிடைச்சது. அவரும், அவரோட ஃப்ரெண்ட்ஸ் சிலரும் சேர்ந்து, ‘லா பொங்கல்' (La Pongal) என்ற ஒரு மியூசிக் பேண்டை தொடங்கினாங்க. அந்தச் சமயத்தில்தான் ‘அட்டக்கத்தி’ பட வாய்ப்பு கிடைச்சது!'' நிறுத்திய மீனாட்சி, அவர் சந்தோஷ் நாராயணனின் வாழ்க்கையில் இணைந்ததைச் சொன்னார்.

‘‘என் தம்பியோட ஃப்ரெண்டுக்கும், சந்தோஷின் ஃப்ரெண்டுக்கும் பொதுவான ஒரு ஃப்ரெண்டு இருந்தார். அவர்தான், பின்னணிப் பாடகர் பிரதீப் குமார். அவரோட இசை நிகழ்ச்சிகளில் சந்திச்சுக்கிட்ட நானும் சந்தோஷும் நண்பர்கள் ஆனோம். அப்புறம் நான்தான் முதல்ல சந்தோஷ்கிட்ட புரொபோஸ் செய்தேன். இசைத் தம்பதியா இணைந்தோம்.

2009-ம் வருஷம். எனக்கு ஆஸ்திரேலியா, சிட்னி நகரத்தில் மியூசிக் டீச்சர் வாய்ப்பு கிடைச்சது. ஏற்கெனவே இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் இசை வகுப்புகள் எடுத்திருந்தா லும், ஆஸ்திரேலியா அனுபவம் கொஞ்சம் புதுமையா இருந்தது. இன்னொரு பக்கம், சந்தோஷை விட்டுப் பிரிஞ்சிருக்க வேண்டிய நிலை. அவர் அப்பப்போ ஆஸ்திரேலியாவுக்கும், நான் அப்பப்போ சென்னைக்குமா வந்து போயிட்டு இருந்தோம். ‘அட்டக்கத்தி’ படத்துக்கு அப்புறம் சந்தோஷுக்கு வேலைப்பளு அதிகமானதால, அவருக்கு சப்போர்ட்டிவ்வாக இருக்க நான் சென்னைக்கே வந்துட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மியூசிக் ஃபேமிலி... ஹேப்பி ஃபேமிலி!

ஆஸ்திரேலியாவுல படிச்சுட்டு இருந்த எங்க பொண்ணு தீக்‌ஷிதாவுக்கு படிப்பில் அவ்வளவா ஆர்வமில்லை. இப்போ ஃபுல்டைம் மியூசிக் வேலைகளில் இருக்கா. பையன் தீக்‌ஷணன், ஆஸ்திரேலியாவுல படிச்சிட்டு இருக்கான்’’ என்ற மீனாட்சி, சந்தோஷ் இசையில் தான் பாடிய தருணத்தை பகிர்ந்தார்.

‘‘ஒருநாள் ரெக்கார்டிங் தியேட்டர்ல சந்தோஷ் மியூசிக் கம்போஸ் பண்ணிட்டு இருக்கும்போது, அவருக்குக் காபி கொடுக்கப் போனேன். திடீர்னு, ‘இந்தப் பாட்டை நீ பாடுறியா?’னு கேட்க, நான் பாடினதுதான் ‘ஜிகர்தண்டா’ படத்தின் ‘திசையும் இழந்தேனே’ பாடல். சமீபத்துல ரிலீஸ் ஆன ‘காதலும் கடந்து போகும்’ படத்துல ‘கா க போ’ பாடல், ரிலீஸ் ஆகவிருக்கிற ‘இறைவி’ படத்துல ஒரு பாடல் என எனக்கும் சான்ஸ் தந்திருக்கார் நம்ம மியூசிக் டைரக்டர். மற்ற மியூசிக் டைரக்டர்ஸோட இசையில் நான் பாடினதில்ல.  என்னைவிட எத்தனையோ திறமையான சிங்கர்ஸ் திரை வாய்ப்புக்காகக் காத்துட்டு இருக்கும்போது, சந்தோஷ் மனைவி என்பதாலேயே, மத்தவங்களுக்காக நான் விட்டுக் கொடுத்திடுவேன். ஆனா, என் பொண்ணு தீக்்ஷிதாவோட வாய்ஸ்தான் வேணும்னு டைரக்டர்ஸ் விரும்பிக் கேட்டதால, சந்தோஷ் மியூசிக்ல அவ சில பாடல்கள் பாடியிருக்கா. அதில் ஒன்றுதான் சமீபத்தில் ரிலீஸான ‘இறுதிச்சுற்று’ படத்தின் ‘ஏ சண்டக்காரா’ பாடல்’’ என்று நிதானமாகப் பேசும் மீனாட்சி, சந்தோஷ்@ஹோம் எப்படி என்று சொன்னார்...

‘‘சந்தோஷ் ரொம்ப அமைதியானவர்னு பலரும் சொல்வாங்க. சுத்த பொய். பழகிட்டா, அவர் ரொம்பவே ஓபன் டைப். நாள் முழுக்க உழைக்கணும், ஈவினிங் டைம் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கணும். இதுதான் எங்க பாலிசி. அதிலும் 90 பர்சன்ட் படத்துக்குப் போறது, ஹோட்டலில் சாப்பிடுறதுதான் எங்களுக்குப் பிடிச்ச பொழுதுபோக்கு. தினமும்  எங்க பொண்ணு தூங்கினதுக்கு அப்புறம்தான் அவர் தூங்கு வார். குழந்தைகளுக்கு அவரும் ஒரு தாயா இருப்பார். சொன்னா நம்பமாட்டீங்க... வீட்டில் மட்டுமில்ல, தெருவில் குப்பை இருந்தாலும் சந்தோஷ் சுத்தம்செய்ய ஆரம்பிச்சிடுவார். சமையல் உள்பட, வீட்டு வேலைகள் எல்லாம் என்னைவிட அவருக்கு நல்லா தெரியும்’’ என்று பூரிப்பும் புன்னகையுமாகச் சொல்லும் மீனாட்சி, ஒரு டிசைனரும்கூட.

‘‘சின்ன வயசில் இருந்தே எனக்கு டிசைனிங்ல ஆர்வம்.ஓய்வு நேரங்கள்ல எனக்கு நானே சாரீஸ் டிசைன் பண்ணஆரம்பிச்சேன். இப்போ அது சேல்ஸ் வரைக்கும் வந்திருக்கு. குறிப்பா, புராண,இதிகாச வேலைப்பாடுகளில் ஆர்வம் அதிகம். ஜுவல்லரி டிசைனிங்கும் செய்துட்டு இருக்கேன். பிசினஸ் சூப்பரா போயிட்டிருக்கு.

நான் ஒரு டிசைனரா இருந்தாலும், என் கணவரை மட்டும் ஆடை விஷயத்தில் மத்தவங்க கண்ணுக்கு அழகா பிரசன்ட் பண்ணவே முடியாது. வீடு, வெளியேனு ஆடைகளில் எந்த வித்தியாசமும் இல்லாத அளவுக்கு அநியாயத்துக்கு சிம்பிளா இருப்பார்.

ஆனா, ஒரு மனைவியா சொல்றேன்...சந்தோஷ் மனசின் அழகுக்கு இணை இல்லை இந்த உலகத்துல. அவர் இசையைப்போலவே, அதை ரசிச்சு அதில் லயிச்சு வாழ்றேன். ஐயாம் பிளெஸ்டு!’’

- இதற்கு மேல் என்ன சொல்ல என்பதுபோல பளபளக்கின்றன, மீனாட்சியின் கண்கள்!
 

கு.ஆனந்தராஜ் படங்கள்:  எம்.உசேன்

சந்தோஷ் தாடியின் ரகசியம்!

‘‘சந்தோஷ் எப்பவும் தாடியோடவேதான் இருப்பார். ‘என்ன அந்த தாடி ரகசியம்?’னு பலரும் கேட்பாங்க. பதில், சோம்பேறித்தனம். ஷேவ் பண்ண சோம்பேறித்தனப்பட்டுட்டுதான், தாடிக் கலைஞரா இருக்கார். ஒருகட்டத்துல அவருக்கே அட்ஜஸ்ட் செஞ்சுக்க முடியாத அளவுக்கு தாடி அரிக்க ஆரம்பிச்சதும்தான், ஷேவ் அல்லது ட்ரிம் பண்ணிப்பார். தினமும் குளிச்சுட்டுக் கிளம்புற அந்த நொடிகள்கூட கண்ணாடியைப் பார்க்க மாட்டார். இயல்புதான் அழகு என்பது அவர் நம்பிக்கை!’’ என்கிறார் மீனாட்சி