பிரீமியம் ஸ்டோரி
வேண்டாமே... மார்க் ரேஸ்!

த்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகள் தேர்வுகளை முடித்துவிட்டாலும், அவர்களது பதற்றம், பயம் இன்னும் குறையவில்லை... தேர்வு மதிப்பெண்களை எதிர்நோக்கி! மார்க் ரேஸில் குதிரைகளாக இருக்கும் மாணவர்கள் நிலை, பரிதாபத்துக்குரியது. அதன் வெளிப்பாடாகத்தான், எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பரீட்சையை எழுதிய அடுத்த நாளே, சரியாகத் தேர்வெழுதவில்லை என்ற பயத்தில் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

பொதுத்தேர்வு மதிப்பெண் பயம், மாணவர்கள் தங்களின் வாழ்க்கையை அவ்வளவு சொற்பமாக மதிப்பிட வைத்துவிட்டதா? அவர்கள் தற்கொலை முடிவில் வேறு யாருக்கும் பங்கில்லையா? இந்த பிரச்னைக்குத் தீர்வு என்ன? பல தளங்களில் விடை காண்போம் இங்கு...

வணிகச் சந்தையில் கல்வி!

‘‘இன்று அனைவரது வீடுகளிலும் பிரதான பிரச்னையாக மாறியுள்ள மார்க் ரேஸின் பின்னணி, பள்ளி மற்றும் பெற்றோர்களே’’ என்கிறார்,  கல்வியாளரும், பொதுப் பள்ளிக்கான  மாநில மேடையின் பொதுச் செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு.

‘‘ப்ரீ-கேஜி முதல் பிஹெச்.டி வரை கல்வி, வணிகப்பொருளாக மாறிவிட்டது. கல்லூரிகளில் அந்த வணிகத்தின் விளம்பரம் ‘ப்ளேஸ்மென்ட்’ என்றால், பள்ளிகளில் மதிப்பெண்கள். பள்ளிகள் மிக வெளிப்படையாகவே இந்த விளம்பரத்தை மேற்கொள்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் தங்கள் பள்ளியின் ‘டாப்பர்ஸ்’ மாணவர்களின் மதிப்பெண்களை விளம்பரமாக்கி, ‘உங்கள் பிள்ளையும் இந்த மதிப்பெண்களை எட்ட, எங்கள் பள்ளியில் சேருங்கள்’ என்று கூசாமல் அழைக்கின்றன. சொல்லப்போனால், இப்படி தங்கள் பள்ளியில் படித்த மாணவர்களை வைத்து விளம்பரம் தேடுவது சட்டப்படி கிரிமினல் குற்றம். இந்த விளம்பரங்களைப் பார்த்து, மார்க் ரேஸில் தங்கள் பிள்ளைகளும் முந்த வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர் பெற்றோர்.

விளைவு... பிள்ளைகள் குறித்த மிகுந்த மதிப்பெண் எதிர்பார்ப்புடன் தனியார் பள்ளிக்கு ஃபீஸ் கட்டுகிறார்கள் பெற்றோர்கள். இது, தங்கள் பிள்ளைகளை பிராய்லர் கோழிகளைப்போல பணம் கட்டி வளர்க்கச் செய்யும் ஏற்பாடு. 5  - 6 மணி நேர தூங்கும் பொழுதைத்் தவிர, மற்ற நேரங்களில் மாணவர்கள் படிக்க வேண்டும் என்பது பள்ளியின் நிபந்தனை, பெற்றோரின் எதிர்பார்ப்பு. இந்த மாணவர்களின் மனநிலை இயல்பாக இருக்குமா? தூங்கும் நேரத்தைத் தவிர, எல்லா நேரமும் படிக்கச் சொல்வது ஆரோக்கியத்தைக் கெடுக்கும் செயல்.

வேண்டாமே... மார்க் ரேஸ்!

‘நாங்கள்தான் சரியா படிக்கல; இப்போ கஷ்டப்படுறோம். நீ நல்லா படிச்சு, நல்ல வேலைக்குப் போகணும்’ என்பதைத்தான் எல்லா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் சொல்கிறார்கள். இந்த எதார்த்த பெற்றோர்கள், ‘பிள்ளை ஆசைபட்டுக் கேட்ட எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்திருக்கேன். டியூஷனுக்கு அனுப்புறேன். இத்தனையும் பண்ணி, என் பிள்ளைகிட்ட நான் எதிர்பார்க்கிறது ஒண்ணே ஒண்ணுதான்... மார்க்’ என்பார்கள். இந்த நிலைப்பாட்டில் இருப்பது, அறியாமை. உண்மையில், மதிப்பெண்களில் இல்லை எதிர்காலம்.

சாதனையாளர்கள் அனைவரும் டாப் ரேங்கர்ஸ் இல்லை!

ஒவ்வொரு மாணவனுக் கும் ஒவ்வொரு திறமை இருக்கும். எழுத்து, கற்பனை, விளையாட்டு, பேச்சுத்திறன் என அந்தத் திறமையை மதிப்பெண்களால் அளக்க இயலாது. எந்தத் துறையில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்று அறிந்து, அதில் அவர்களைச் செலுத்தினால், அவர்களுக்கு வருங்காலத்தில் வெற்றி சொந்தமாகும். மேலும், பொதுத்தேர்வில் மனப்பாடம் செய்து கக்கி மதிப்பெண்கள் எடுத்து, வேலை கிடைத்து விட்டாலும், அறிவும் ஆர்வமும் இல்லை என்றால், அந்த வேலையில் தொடர்ந்து முன்னேற முடியாமல் தேங்கித்தான் கிடக்க வேண்டும். இன்று உள்ளூர் வெற்றியாளர்களில் இருந்து உலக சாதனையாளர்கள்வரை எத்தனை பேர் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவர் கள்? அதே சமயம், பத்தாம் வகுப்பில் ஃபெயிலான சச்சின் டெண்டுல்கரில் இருந்து பல விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், மீடியா பிரபலங்கள், தொழிலதிபர்கள் கல்வியில் ஃபெயில் ரெக்கார்டு வைத்திருப்பவர் கள்தான்.

பள்ளிகள் மதிப்பெண்கள்தான் வாழ்க்கை என்ற தங்களின் விளம்பர யுக்தியைக் கைவிட்டு, ‘உங்கள் பிள்ளையின் திறமையை எங்களால் முடிந்தவரையில் வெளிக்கொணர்ந்து, அவன் எடுக்கும் மதிப்பெண்ணுக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற மேற்படிப்புகளை அடையாளம் காட்டுவது எங்கள் கடமை’ என்று சொல்லும் பட்சத்தில், இந்த மார்க் ரேஸ் பிரச்னைக்குத் தீர்வு காணலாம். அப் போதுதான் கல்வியை மாணவர்களும், பெற்றோர் களும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் எதிர் கொள்வார்கள்.

பரந்து விரிந்த இந்த உலகத்தில் வேலைவாய்ப்புகளை கொடுக்கும் ஏராளமான படிப்புகள் இருக் கின்றன. அதைப் பற்றி அறியாத காரணத்தால், ஒன்றன் பின் ஒன்றாக குட்டையில் விழும் வாத்துக்கள்போல, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இன்ஜினீயரிங் படிப்புகளில் தள்ள நினைக்காமல், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ற துறைகளுக்குச் செவிசாய்க்கும்போதும், மதிப்பெண்கள் குறைந்தாலும் வாழ்க்கையை பாசிட்டிவாக எதிர்கொள்ளும் அணுகுமுறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும்போதும், அந்த பரிதாப பந்தயக் குதிரைகள் மீட்கப்படுவார்கள்’’ என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு. 

மார்க் ரேஸில் தங்கள் குழந்தைகளை ஓடவிடும் பெற்றோர்கள், அது தவறு என்று மனதார உணர்வது தான் இந்தப் பிரச்னைக்கான முதல் தீர்வு!

கு.ஆனந்தராஜ்,படங்கள்:இரா.யோகேஷ்வரன் மாடல்: கௌஷிக்

ஜெயந்தஸ்ரீ  தரும் பேரன்டிங் டிப்ஸ்..!

வேண்டாமே... மார்க் ரேஸ்!

• படிப்புக்காக குழந்தைகளுக்கு அவர்களின் திறனுக்கு மீறிய சுமை கொடுப்பது, கொடுமை. ‘பரீட்சை நடக்குது. ஒரு வாரமா ஃப்ரெண்ட்ஸ், டி.வி, விளையாட்டு எல்லாம் கட். இவ்வளவு ஏன்... நாங்களே அவன்கூட பேசி ஒரு வாரம் ஆகுது’ என மற்றவர்களிடம் பெருமை பேசுவது, வன்கொடுமை.

வேண்டாமே... மார்க் ரேஸ்!

• ‘டென்த் படிக்கிறான்’, ‘ப்ளஸ் டூ எழுதுறா’ என்று சொல்லி, உறவினர்கள் வீட்டு விழாக்களில் இருந்து, நண்பர்களுடனான விளையாட்டு வரை பிள்ளைகளைத் தனிமைப்படுத்தி சித்ரவதை செய்யாதீர்கள். அரை மணி நேரம் பேசினால் செல்போனே சூடேறி, தனக்கு ஓய்வு தேவை என்பதைத் தெரியப்படுத்துகிறது. ‘பரீட்சை முடியுற வரைக்கும் அப்படித்தான்’ என்று ஒராண்டு காலம் அவர்களை இயல்பான நிகழ்வு, மகிழ்வுகளில் இருந்து விலக்கிவைப்பது நியாயமற்றது. ஒரு பிரேக் எடுத்தால்தான், அடுத்த உழைப்புக்கான புத்துணர்ச்சி கிடைக்கும்.

வேண்டாமே... மார்க் ரேஸ்!

• தேர்வு நேரத்தில் மட்டும் சின்சியர் பெற்றோராக கடமை செய்யாமல், கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்தே கல்வியில் ஆர்வம் ஏற்படும் வகையில், படிப்பு குறித்த பயம், வெறுப்பு விலகும் வகையில் பிள்ளைகளிடம் பேசுங்கள். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைந்திருந்தால், அதற்கான காரணத்தை கண்டறிந்து அப்போதிலிருந்தே அவற்றைச் சரிசெய்வதற்கான முயற்சிகளை எடுங்கள்.

வேண்டாமே... மார்க் ரேஸ்!

• பள்ளி முடிந்து பிள்ளை வீட்டுக்குள் நுழையும்போதே, ‘நாளைக்கு மேத்ஸ் டெஸ்டாமே?’ என்று அவன் பள்ளியில் இருந்து உங்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை, மிலிட்டரி தோரணையில் கேட்காதீர்கள். அவனிடம் கொஞ்சம் பேசுங்கள். ‘இன்னிக்கு புதுப்பாடம் ஏதாச்சும் எடுத்தாங்களா?’, ‘கஷ்டமான பாடம் எதுவும் புரியலையா? ஃப்ரெண்ட்கிட்ட கேட்டுக்கிறியா?’, ‘நாளைக்கு மேத்ஸ் டெஸ்ட்னு மெசேஜ் வந்திருக்கே, சேப்டர்ஸ் ஏதாச்சும் முடிச்சிருக்கியா’ - இப்படி ஃப்ரெண்ட்லியாக அவன் படிப்பைப் பற்றி விசாரியுங்கள்.

வேண்டாமே... மார்க் ரேஸ்!

• பன்னிரண்டு வருடங்கள் பள்ளியில் படித்து ஒரு மாணவன் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தால், சம்பந்தப்பட்ட பள்ளியும்தான் அவன் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும். சொல்லப்போனால், இந்தக் கல்விமுறைக்கு அரசும் பொறுப்பு. தவிர, ஒரு மாணவனின் திறன் அறிந்து சிறப்புக் கவனம் கொடுத்துப் பாடம் கற்றுக்கொடுக்காத ஆசிரியர், அவன் திறனுக்கு மீறிய குரூப் எடுக்கவைத்த பெற்றோர் என்று அனைவரும் இதுக்குப் பொறுப்பானவர்கள்தான்.

குழந்தை வளர்ப்பில் சில திருத்தங்கள்!

‘‘சில வாரங்களுக்கு முன் சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் சரியாக தேர்வு எழுதாததால் அவளுடைய தாயார் திட்டிய விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதும், தொடர்ந்து அந்த மாணவியின் தாயும் தற்கொலை செய்துகொண்டதும் அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள். கல்வியைப் பெற்றோர்கள் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், பிள்ளைகளிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதை, ஓர் ஆசிரியராக, அடுத்த வீட்டு ஆன்ட்டியாக, அம்மாவாக கடந்த 35 வருடங்களாகச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும், மார்க் ரேஸில் பிள்ளைகளைத் தள்ளி, துரதிர்ஷ்டவிதமாக சில பிஞ்சுகளை தற்கொலை வரை துரத்திவிடுகிறார்கள் பெற்றோர்கள்’’ என்று வேதனைப்படும் பேராசிரியர், பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ  பாலகிருஷ்ணன், இன்றைய குழந்தை வளர்ப்பில் தேவைப்படும் சில திருத்தங்களைக் குறிப்பிட்டார்.

வேண்டாமே... மார்க் ரேஸ்!

‘‘ஒரு சின்ன ஏமாற்றம், தோல்வியைக்கூட தாங்க முடியாத அளவுக்கு பிள்ளைகளை வளர்ப்பதும், தேர்வில் தோல்வி, எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்று அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்குக் காரணமாகிறது. எனவே, ஏமாற்றங்கள், தோல்விகளை பழகட்டும் உங்கள் குழந்தைகள். அதிலிருந்து மீண்டு வருவதை அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.

பெற்றோர்கள் தன் பிள்ளைகளை ‘நல்லா படி’ என்று சொல்கிறார்களே தவிர, ‘நல்லதை படி’ என்று சொல்வதில்லை. பள்ளியிலும், கல்லூரியிலும் தங்கள் ஆசைப்படி அதிக மார்க் எடுத்து, ‘ஐ.டி நிறுவனத்துல வேலை பார்க்கிறான் என் பையன்’ என்று பெருமையாகச் சொல்லும் பல பெற்றோர்களுக்கு, அங்கு தன் பையன் எவ்வளவு மனஅழுத்தத்தோடும், சந்தோஷம் இல்லாமலும் வேலை செய்கிறான் என்பது தெரியுமா? அதிக மதிப்பெண், அதிகச் சம்பளம் என்று அவர்களை வதைப்பதை நிறுத்துங்கள். குறைவான மார்க் எடுத்தாலும், மருத்துவம், இன்ஜீனியரிங் படிக்கவில்லை என்றாலும், அவர்கள் எதிர்காலத்தில் யாரையும் ஏமாற்றிப் பிழைக்காமல், சொந்தக் காலில் உழைத்து முன்னேறும் வகையில் வளர்த்தாலே போதும். அதுதான் நல்ல வளர்ப்பாக இருக்கும். பணம் நிறைவான வாழ்க்கையைவிட, மன நிறைவான வாழ்க்கையே முக்கியம்’’ என்று அழகாகச் சொன்னார் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்.

ஆறுதல் சொல்லுங்கள்!

``வெளியாகவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டு வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் பிள்ளைகள் தோல்விய டைந்தால், அவமான வார்த்தைகள் தராதீர்கள். ஆறுதல் சொல்லி, மறுதேர்வுக்குத் தயார்படுத்துங்கள். அதை எதிர்கொள்ள உறுதுணையாக இருங்கள். வரமான இந்த வாழ்க்கை மதிப்பெண்களுக்காக அல்ல!''என்கிறார் ஜெயந்தஸ்ரீ  பால கிருஷ்ணன்

தற்கொலைக்கான முக்கியக் காரணங்கள்!

``பெற்றோர்களின் நம்பிக்கையை பூர்த்திசெய்ய முடியவில்லை, சக நண்பர்கள் மற்றும் சமூகத்தில் அவமானம், கல்விச் சூழல் மற்றும் மனஅழுத்தம், எதிர் காலத்தை நோக்கிய லட்சியங்கள் நிறைவேறாமல் போனது என்பது போன்ற காரணங்களினால்தான் மாணவர்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்'' என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு