Published:Updated:

பச்சிளம் குழந்தைகள்... `பளீர்' புகைப்படங்கள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பச்சிளம் குழந்தைகள்... `பளீர்' புகைப்படங்கள்...
பச்சிளம் குழந்தைகள்... `பளீர்' புகைப்படங்கள்...

வித்தியாசமான களத்தில் வியக்கவைக்கும் தமிழ்த் தம்பதி!போட்டோகிராஃபி

பிரீமியம் ஸ்டோரி
பச்சிளம் குழந்தைகள்... `பளீர்' புகைப்படங்கள்...

டலைக் குறுக்கிப் படுத்திருக்கும் அழகு, கண்கள் மூடிக்கிடக்கும் அமைதி, பூமி தொடாத பாதம் என பச்சிளம் குழந்தைகளைப் படம் எடுப்பதில் (நியூ பார்ன் போட்டோகிராஃபி), ‘நம்பர் ஒன்’ இடத்தில் இருக்கிறது தமிழ்த் தம்பதி... அமெரிக்காவின் சிகாகோவில்! சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தவர்களைச் சந்தித்தபோது, உற்சாகம் ஸ்ரீனிவாசன், ஜனனி பேச்சில்!

7 வயதுப் பையனுக்கு அம்மா என்று நம்பமுடியாத அளவுக்கு தோற்றத்தில் இளமை. பேச்சிலும் வசீகரிக்கிறார் ஜனனி.

‘‘நானும் ஸ்ரீனியும் ஸ்கூல் படிக்கும்போதிலிருந்து ஃப்ரெண்ட்ஸ். ஃபிஸியோதெரபி படிச்சுட்டு, ஹெல்த் அட்மினிஸ்ட்ரேஷன்ல மாஸ்டர் டிகிரி பண்றதுக்காக யு.எஸ் போனேன். அதை முடிச்சுட்டு, சிகாகோவில் ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷனில் வேலை பார்த்தேன். ஸ்ரீனி பி.காம் படிச்சிட்டு, மேல்படிப்புக்காக யு.எஸ் வந்தார்’’ என்று சொல்லிப் புன்முறுவல் பூக்கும் ஜனனிக்கும், ஸ்ரீனிவாசனுக்கும் 2005-ல் திருமணம் முடிந்திருக்கிறது.

பச்சிளம் குழந்தைகள்... `பளீர்' புகைப்படங்கள்...

பின் கதையைத் தொடங்கிய ஸ்ரீனிவாசன், ‘‘அமெரிக்காவிலேயே எனக்கு வேலையும் கிடைச்சப்போதான், என் நண்பரின் கேமரா லென்ஸை ஒருமுறை எதேச்சையா பார்த்தேன். என் வீட்டு பால்கனியிலிருந்து தூரத்தில் இருந்த கட்டடங்களை லென்ஸ் மூலமா பார்த்தப்போ, துல்லியத்தில் பிரமிச்சுப் போனேன். கேமரா மேல காதல் வந்தது. அந்தச் சமயத்தில்தான் டிஜிட்டல் கேமரா அறிமுகமாகி இருந்தது. அந்த வருஷ பிறந்தநாளுக்கு ஜனனி எனக்கு கேமரா வாங்கிக் கொடுத்தாங்க. அதுதான் என் தொழிலுக்கு அஸ்திவாரம்’’ என்று காதலுடன் மனைவியைப் பார்த்தார்.

‘‘போட்டோகிராஃபியில அவரோட ஆர்வம் தீவிரமாயிட்டே இருக்க, ஒரு கட்டத்தில் வேலையை விட்டுட்டார். வீட்டின் முன் கூடத்தையே ஸ்டுடியோவா மாத்தி, வீட்டின் நம்பர் 13 என்பதால் ‘ஸ்டுடியோ 13’-ஐ ஆரம்பிச்சு, முழுநேர போட்டோகிராஃபர் ஆகிட்டார். ஆர்டர்கள் நிறைய வர ஆரம்பிச்சதும், தனி ஸ்டுடியோ போட்டாச்சு. அவருக்கு வேலைகள்ல உதவுறதுக்காக நானும் என் வேலையை ரிசைன் பண்ணிட்டேன்’’

- முன்நெற்றியில் விழும் கூந்தல் கற்றையை ஒதுக்கியபடி கூறுகிறார் ஜனனி.

பச்சிளம் குழந்தைகள்... `பளீர்' புகைப்படங்கள்...

‘‘மாடல்ஸ் வெச்சுதான் நான் போட்டோ எடுத்துட்டு இருந்தேன். அப்போ என்னுடைய ஒரு மாடல் கர்ப்பமா இருந்தாங்க. ‘எங்களை எல்லாம் நீங்க போட்டோ எடுக்க மாட்டீங்க’னு கிண்டலா சொன்னாங்க. தாய்மைங்கிறது அழகான அனுபவம், மகிழ்ச்சியான உணர்வு. அதை ஏன் கலர்ஃபுல்லா எடுக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அந்த மாடலையே ‘ப்ரெக்னன்ஸி போட்டோஸ்’ எடுத்தேன்.

தொடர்ந்து, ரெண்டு மூணு ப்ரெக்னென்ஸி போட்டோ ஷூட் பண்ணினோம். வைப்ரன்ட் கலர்களில் டிரெஸ், வித்தியாசமான லொகேஷன், லைட்டிங்னு வெச்சு எடுத்தோம். அட்டகாசமா வர, எல்லோரும் அதே மாதிரி கேட்க ஆரம்பிச்சாங்க. அடுத்து அந்த மாடல் பொண்ணுக்கு குழந்தை பிறந்தப்போ, அதையும் நான்தான் போட்டோ எடுத்தேன். அந்த போட்டோக்களைப் பார்த்துட்டுத்தான் அடுத்தடுத்து குழந்தைகளை போட்டோ எடுக்கச் சொல்லி ஆர்டர் வர ஆரம்பிச்சது. இப்போ மெடர்னிடி, நியூ பார்ன், சில்ட்ரன் போட்டோஸ்னா அமெரிக்காவில் ‘கூப்பிடு  - ஜனா’தான்!’’ - அட்டகாசமாகச் சிரிக்கிறார் னிவாசன்.

பச்சிளம் குழந்தைகள்... `பளீர்' புகைப்படங்கள்...

கணவர் போட்டோ எடுக்க, ஷூட்டுக்கு வரும் பெற்றோர்களுக்கு கவுன்சலிங் செய்து ‘கம்ஃபர்ட்’ ஆக்குவது ஜனனியின் வேலை. இவர்கள் புகைப்படம் எடுப்பது எல்லாமே பிறந்து 2 வாரங்களுக்குள் இருக்கும் குழந்தைகள். எனவே, அதைத் தூக்குவது, ஆன்டிக் ஆன பொருட்களின் மீது சௌகரியமாக, குழந்தைக்கு உறுத்தாமல் படுக்கவைப்பது எல்லாமே ஜனனிதான்.

‘‘எப்போதுமே குழந்தைகள் ஆழ்ந்து தூங்கும்போதுதான் போட்டோ எடுப்போம். அந்த போட்டோஸ் பார்த்தா நமக்கே மனசு அமைதியாகும். அவ்வளவு பரிசுத்தமான முகங்கள், புன்னகைகள்! இப்போ நாங்க ரொம்ப பாப்புலர் ஆயிட்டதால, இந்தியன் கஸ்டமர்களும் வர ஆரம்பிச்சிருக்காங்க.

பச்சிளம் குழந்தைகள்... `பளீர்' புகைப்படங்கள்...

ஒரு பெண் கர்ப்பமானா, எப்படி வளைகாப்பு, சீமந்தம், குழந்தைக்கு புண்ணியாசனம், பேர் வைக்கிறது இதெல்லாம் சடங்குகளோ, அது மாதிரி இப்போ மேல்நாட்டில் ‘நியூ பார்ன் போட்டோஸ்’ ஒரு சடங்காயிடுச்சு. 7-வது மாதத்திலேயே அப்பாயின்ட்மென்ட் புக் பண்ணிடறாங்க. சிகாகோவில் போலீஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் போன்ற மேல்தட்டு மக்களின் குடும்ப விழாக்கள், குழந்தைகள் படங்கள் எல்லாவற்றுக்குமே எங்களோட ‘ஸ்டூடியோ 13’தான். காரணம், நாங்க தம்பதியா இந்த வேலையைச் செய்றதுதான்னு நினைக்கிறோம்’’ என்று சந்தோஷமாகச் சொல்கிறார் ஜனனி. இவர்களின் மகன் வியாஸை விதம் விதமாகப் படம் எடுத்து, இவர்கள் வெப்சைட்டில் (photosbysri.com) பதிவிட்டிருப்பதைப் பார்த்து வரும் கஸ்டமர்களே அநேகம்.

பச்சிளம் குழந்தைகள்... `பளீர்' புகைப்படங்கள்...

‘‘நிறைய கைக்குழந்தைகளைப் பார்ப்பதால, குழந்தையின் கண்கள், சருமம் மற்றும் உடலைப் பார்த்தே சில குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை, ஆட்டிஸம்னு அவங்களுக்கு இருக்கிற அப்நார்மாலிட்டீஸை கண்டுபிடிச்சு, பெற்றோர்கள்கிட்ட சொல்லுவோம். அப்படி தங்களோட பிள்ளையின் சிகிச்சை முடிந்து வந்து நன்றி சொல்லிட்டுப் போகும் பெற்றோர்கள் பலர்’’ எனும்போது, ஜனனியின் முகத்தில் தொழில் தாண்டிய ஒரு நிறைவு.

தம்பதிக்கு சபாஷ்!

பிரேமா நாராயணன், படங்கள்:மா.பி.சித்தார்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு