Published:Updated:

என் டைரி - 379

என் டைரி - 379
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 379

வசந்தங்களை வரவேற்காத மகன்... வாழ்க்கையே வெறுப்பான தாய்!

என் டைரி - 379

கனின் பிரியத்தால் மனம் குளிர்வாள் அம்மா. ஆனால், என் மகன் என் மீது வைத்துள்ள அளவு கடந்த பிரியமும் பாசமுமே என்னை வாட்டுவது, விதியின் விளையாட்டு. இளம்வயதிலேயே நான் என் கணவரை இழந்தபோது, என் மகன்தான் வாழ்க்கையில் எனக்கிருந்த ஒரே பிடிப்பு. புகுந்த வீட்டினரின் வெறுப்பு, பிறந்த வீட்டினரின் புறக்கணிப்பு என எல்லாவற்றையும் எதிர்கொண்டு என் மகனை நான் வளர்த்தெடுக்க, என் அரசு வேலை எனக்குக் கைகொடுத்தது. ‘இந்த உலகத்தில் கோடி பேர் இருந்தாலும், எனக்கு நீயும், உனக்கு நானும்தான் உலகம்’ என்று என் மகனிடம் சொல்லி வளர்த்தேன். அவனும் அப்படியே வளர்ந்தான்.

எனக்குத் தோழிகள், உறவினர்கள் என்று யாரும் தேவைப்படவில்லை. என் மகனும், அவன் மகிழ்வுமே மட்டும் போதும் என்று வாழ்ந்தேன். இன்னொரு பக்கம், என் பையனும் விளையாட்டு, நண்பர்கள் என்று எதையும் நாடாமல், கதைகள் கேட்பது, பேசிச் சிரிப்பது, செஸ், கேரம் என வீட்டுக்குள் விளையாடுவது என்று என்னுடன் இருக்கவே விரும்புவான்.

ஆரம்பத்தில் என் பையனின் உலகம் என்னை அச்சாக வைத்து சுழல்வதில் மகிழ்ந்தாலும், வருடங்கள் செல்லச் செல்ல, அதுவே உறுத்தவும் ஆரம்பித்தது. பள்ளி, கல்லூரி முடிக்கும் காலம் வரை அவனுக்கென்று நெருங்கிய நண்பர், தோழி என்று யாரும் இல்லை. இப்போது அலுவலகம் செல்லும் வரையிலும்கூட நிலைமை இதுவே..! பதின்வயதிலோ, இந்த 27 வயதிலோ அந்தந்த வயதுக்குரிய சந்தோஷங்கள், கேளிக்கைகள் என்று எதுவும் இல்லாமல், வீட்டுக்குள் என்னுடனேயே கிடக்கிறான்.

`திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடுவான்' என்று பெண் பார்க்க ஆரம்பிக்க, இடியை இறக்கினான் என் பையன். ‘எனக்குக் கல்யாணமெல்லாம் வேண்டாம். மீறிப் பண்ணினா நான் சந்தோஷமா இருக்க மாட்டேன்; அந்தப் பொண்ணோட வாழ்க்கையும் பாழாகிடும். கடைசிவரை எனக்கு நீ... உனக்கு நான்னே இருந்துடலாம்’ என்கிறான் பிடிவாதமாக! ‘கடைசிவரைன்னா, எனக்குக் கடைசிவரை நீ இருப்ப. நான் போயிட்டா உனக்குக் கடைசிவரை யாருடா இருப்பா?’ என்றால், ‘ஒருவேளை அப்போ தோணுச்சுன்னா, கல்யாணம் பண்ணிக்கிறேன். எனக்காக வாழ்க்கை எல்லாம் உழைச்சு, ரிட்டையர்ட் ஆகி... சுகர், பிரஷர், மூட்டுவலினு போராடிட்டு இருக்கே... இப்போ உன்னைப் பார்த்துக்கிறதுதான் மட்டும்தான் என் சந்தோஷம்’ என்கிறான்.

உண்மையில், என் கஷ்ட நஷ்டங்களை அவன் மீதும் திணித்து, என்னைவிட்டு அகலாமல் இப்படி வளர்த்துவிட்டேனே என்று குற்ற உணர்ச்சி என்னைக் கொல்கிறது. வாழ்வின் பிற சந்தோஷங்கள், கொண்டாட்டங்களில் இருந்து அவன் பிரிந்து இருந்துவிட்டதும், இருப்பதும், இனியும் இருப்பேன் என்று சொல்வதும் என் மனதை அறுக்கிறது.

என் மகன் இல்லற வாழ்க்கை, இனிய உறவுகள், உற்சாகப்படுத்தும் நண்பர்கள் என வாழ நான் என்ன செய்ய வேண்டும் சகோதரிகளே?!

- பெயர் வெளிடயிட விரும்பாத வாசகி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என் டைரி 378-ன் சுருக்கம்

குடிகாரரான என் கணவர் 10 வயது குழந்தையான என் பையனையும், என்னையும் நிராதரவாக விட்டுச்சென்று 25 வருடங்கள் ஆகின்றன. பல போராட்டங்களுடன் வாழ்க் கையை எதிர்கொண்டேன். பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு மகனும் வேலையில் சேர்ந்தான். இருவரும் உழைத்து கணவரால் ஏற்பட்ட கடனை அடைத்ததுடன், காசு சேர்த்து அழகானதொரு வீடு கட்டினோம். மகனுக்குத் திருமணம் முடித்து, மருமகளை என் மகளாகவே நினைக்க... அவளும் என்னிடம் அன்பும் மரியாதையுமாக இருந்தாள்.  பேரன் பிறந்ததும் வீட்டில் மகிழ்ச்சி இரட்டிப்பானது. வாழ்க்கை நிறைவாகச் சென்றது... ஓர் ஆண்டுக்கு முன் வரை.

என் டைரி - 379

மருமகளின் குடும்பத்தார் என் வீட்டுக்கு வந்து செல்வர். அவர்கள் சென்றதும் அவளது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து விலகியவள், குற்றம் சொல்வது, சண்டைபோடுவது என மாறினாள். `என்ன பிரச்னை’ என்று நேரடியாக கேட்டதற்கு, ‘தனிக்குடித்தனம் போகணும்’ என்றாள். ‘அதுக்காகவா நானும் என் மகனும் ரத்தமும் வியர்வையுமா உழைச்சு வீடு கட்டினோம்?’ என்றால், ‘அப்ப நீங்க போங்க’ என்கிறாள். வேலைக்குச் செல்ல முடியாத வயதிலிருக்கும் நான், அவளுக்குப் பாரமாக இருக்கிறேன் என்கிறாள். ‘பையனை வளர்த்ததுல என்ன தியாகம்? அது உங்க கடமைதானே?’ என்று சொல்கிறாள். மகனின் நிம்மதியைக் கருத்தில்கொண்டு... இந்தப் பிரச்னையை எழுப்பாமல்,  வேறு ஏதாவது சொல்லி தனியாகச் செல்லலாம் என்றிருக்கிறேன். ஆனால், மனசு கேட்கவில்லை. என் மகன், மருமகள், பேரக்குழந்தையுடன் இதே வீட்டில் வாழ விருப்பப்படுகிறது. வழி உண்டா?’’

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

வாழ்க்கையை நரகமாக்கிக்கொள்ளாதே!

மகனைக் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய உன்னுடைய வேதனை புரிகிறது. ஒரு பேரக்குழந்தை பிறந்தவரை உன்னிடம் அன்பாகவும், கரிசனமாகவும் இருந்தவள் ஏன் மாறினாள்? பேசித் தீர்க்க முடியாத அளவுக்கு பெரிய பிரச்னை இல்லை இது. தீர்க்க முடியவில்லை என்றால் மகன் சந்தோஷம்தான் பெரிது என எண்ணினால் எதாவது ஒரு ஹோமுக்கு போ. கூட இருந்து வாழ்க்கையை நரகமாக்கிக்கொள்வதைவிட பிரிவதே மேல்!

- சியாமளா ரங்கன், மந்தைவெளி

வீறாப்பு வேண்டாம்!

உங்கள் நிலையை நினைக்கும்போது நெஞ்சம் வாடுகிறது. பிள்ளையை உருவாக்கி அவனுக்காக தியாக வாழ்வு வாழ்ந்து வரும் உங்கள்மீது மருமகள் கோபம் காட்டுவதும், வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிப்பதும் அபத்தம். உங்கள் உழைப்பு, தியாகம், பாசம் உங்கள் மருமகளுக்குத் தெரியாது; மகனுக்குத்தான் தெரியும். வயதான காலத்தில் மருமகளுடன் வீறாப்பு செய்துகொண்டு வீட்டை விட்டு போக வேண்டாம். நிச்சயம் மாற்றம் ஏற்படும்.

- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை

பொறுமை, நம்பிக்கை கரைசேர்க்கும்!

கணவன் ஓடிவிட்டாலும் மகனை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டுவந்துவிட்டதுடன் உன் கடமை முடிந்தது. இருந்தாலும் உன் பாசம் கண்களை மறைப்பதால் இதுபற்றி மருமகளிடமே பேசிப்பார். அவள் பிடிவாதம் பிடித்தால் முதியோர் இல்லம் போய் சேர்ந்துவிடு. மகன் காரணம் கேட்டால், பிரச்னையை சொல்லாமல் சில காலம் இருந்துவிட்டு வருகிறேன் என்று மட்டும் சொல். அதன்பிறகும் மருமகள் பற்றி யாரிடமும் குறைகூறாதே. அவள் தானே மனம் மாறி உன்னை அழைத்துக்கொள்வாள். நம்பிக்கையுடன் காத்திரு.

- உஷா முத்துராமன், திருநகர்