அறிவிப்புகள்
Published:Updated:

அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு எப்படி?!

அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு எப்படி?!
பிரீமியம் ஸ்டோரி
News
அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு எப்படி?!

- அலசுகிறார்கள் மதிப்புக்குரிய பெண் அரசியல்வாதிகள்...அரசியல்

அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு எப்படி?!

தேர்தல் நேரம் இது. அரசியல் கட்சிகளின் வீதிப் பிரசாரங்களில் ஓட்டுக் கேட்டும், கூட்டங்களில் பார்வையாளர்களாகவும் பெண்கள் அதிகம் தென்படுகிறார்கள். எனில், பெண்களுக்கு அரசியல் பார்வையும், ஆர்வமும் அதிகமாகிவிட்டதா என்றால், காரணம் அதுவல்ல. அரசியல் கட்சிகளின் மலிவான தேர்தல் அரசியலுக்கு, அப்பாவிப் பொதுமக்களும், பெண்களும் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை. ஆனால், இந்தப் பெண் சக்தி அரசியலுக்கு வரும்போது, அவர்களின் பிரச்னைகளுக்கு அவர்களே தீர்வுகாண முடியுமே?!

இந்தியாவில் ஆண் வாக்காளர்களுக்கு நிகரானது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை. ஆனால், தேர்தல் அரசியலில் ஆண் வேட்பாளர்களுடன் ஒப்பிடும்போது 10% பெண் வேட்பாளர்களே உள்ளனர். அதிலும் பெரும்பாலான பெண்கள், அரசியல் பின்புலம் கொண்டவர்கள். 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில், 2011-ம் ஆண்டில் 17 பெண் உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது வெறும் 7 சதவிகிதம் மட்டுமே.

அரசியலில் பெண்களின் பங்களிப்பு ஏன் முக்கியம்? அரசியல் பின்புலம், வசதி போன்றவை இருக்கும் பெண்களால்தான் அரசியலுக்குள் பிரவேசிக்க முடியுமா? அரசியல் களத்தில் இறங்கும் பெண்களுக்கான மரியாதை எப்படிப்பட்டது? இதுவரை அரசியலில் பெண்களின் பங்கு எப்படி இருந்திருக்கிறது? அரசியலில் பெண்களுக்கான ஆர்வம் குறைவாக இருப்பது ஏன்? பேசுகிறார்கள், போராட்ட அரசியல் மற்றும் தேர்தல் அரசியலில் மக்களின் நன்மதிப்பை பெற்ற பெண்கள்.

பாலபாரதி, சட்டமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு எப்படி?!

‘‘அரசியல் ஒரு வியாபாரமாக மாறிவிட்டதால், அதில் ஆண்களின் ஆதிக்கமும் போட்டியும் அதிகமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அரசியலில் நுழையும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்களை பலவீனப்படுத்தி, எளிதாக அரசியல் களத்தில் இருந்து புறக்கணித்துவிடுகிறார்கள். களத்தில் இருக்கும் அரசியல் பெண்களான நாங்கள், மகளிருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனாலும், ஆண்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெரும்பாலான கட்சிகளில் மட்டுமல்லாமல், பெண்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சிகளிலும்கூட பெண்களின் குரல் ஒலிக்காமலே போகிறது. உரிமைகளும், அங்கீகாரங்களும் பெண்களுக்குப் பல போராட்டங்களுக்குப் பின்னரே கிடைக்கப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட போராட்டத்தை நாம் தொடர்ந்து கடந்தால்தான், அரசியலில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் பங்கு இருக்கும் சூழலை நம் எதிர்கால சந்ததியருக்காவது பரிசளிக்க முடியும்.’’

அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு எப்படி?!

சுப்புலட்சுமி ஜெகதீசன், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்

‘‘ஆண்களே நீ, நான் என அடித்துக்கொள்ளும் நிலையில், பெண்களுக்கு வழிவிடுவதும், வாய்ப்பளிப்பதும் ரொம்பவே குறைவு. நான் 2004 - 2009 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த நேரத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கொடுக்கும் மசோதாவை தாக்கல் செய்ய முயற்சி நடந்தது. ஆனால், பெரும்பாலான கட்சியினர் மசோதாவை அறிமுகம் செய்யவே விடாமல் பிரச்னை செய்தார்கள். கட்சிகளின் தலைமை, பெண்களுக்கு அதிக ஸீட் அல்லது 33% இடஒதுக்கீடு தர முயற்சி செய்தாலும், கட்சி நிர்வாகிகள் அதற்கு ஒத்துழைப்பு தருவதில்லை. `பெண் வேட்பாளரை நிறுத்தினால் வெற்றிவாய்ப்பு கிடைக்காது' என்று முட்டுக்கடை போடுவார்கள்.

அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு எப்படி?!

இத்தனை தடைகள் இருந்தாலும்கூட, அரசியல் பின்புலமே இல்லாத பெண்களாக இருந்தாலும், சமூக அக்கறையுடன் உறுதியோடு உழைத்தால் பெண்கள் அரசியலில் தங்களுக்கான இடத்தை நிச்சயம் பெறமுடியும். ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் ஸீட் வாங்கி அரசியல் களத்துக்கு வருவது நீண்ட பயணத்துக்கான வலுவான அடிக்கல்லாக இருக்காது. சிறுவயது முதலே அரசியல் ஆர்வமும் அறிவும்கொண்டு வளர்ந்து, இளம் வயதில் அரசியலுக்குள் வந்து, அதன் அமைப்பு, செயல்முறைகள் பற்றி தெரிந்து, புரிந்துகொண்டு, பிறகு வேட்பாளராகி வெற்றி பெறும்போது, நீண்ட காலம் அரசியலில் தாக்குப்பிடிக்கவும், முன்னேறிச் செல்லவும் முடியும்.’’

வே.வசந்தி தேவி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர், ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி

அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு எப்படி?!

‘‘பெண் அடிமைத்தனம் அதிகம் இருந்த, கல்வி அறிவு குறைவாக இருந்த அந்தக் காலத்திலேயே, நம் முன்னோடி தலைமுறைப் பெண்கள், நம்மைவிட நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டு, போராடி, விடுதலைக் கனவுகளுடன் சமூக சீர்திருத்த இயக்கங்களின் வாயிலாக அரசியலுக்கும், அரசியல் பதவிகளுக்கும் வந்திருக்கிறார்கள். அவர்களால்தான் பெண்களுக் கான பல நல்ல செயல்பாடுகள் கிடைத்தன. அவர்களால் முடிந்தபோது, அவர்களைவிட சுதந்திரம் அதிகம் கிடைக்கப் பெற்றிருக்கும் நம்மால் முடியாதா? ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில், பெண் அடிமைத்தனமும், சாதியும் ஒழிந்தால் மட்டும்தான் அரசியலில் பெண்களின் பங்கு உயரும். அது தானாக ஒழியாது. அதை ஒழிக்க பெண்கள்தான் நம் பங்களிப்பையும், போராட்டத் தையும் முன்னெடுக்க வேண்டும்.’’

உ.வாசுகி, மத்தியக் குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு எப்படி?!

``சோவியத் யூனியனில் புரட்சி நடந்துமுடிந்த பிறகு சோஷலிச அரசு உருவானது. அப்போது லெனின், ‘சோவியத் யூனியன் குடிமக்கள் அனைவருமே எல்லா வாய்ப்புகளையும் பெற வேண்டும். ஆனால், பெண்களுக்கான எல்லா வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன. அதற்கு, சமையல், துணிதுவைப்பது, குழந்தைப் பராமரிப்பு வேலைகள் பெண்களின் சுமையாக உள்ள நடைமுறையே காரணம்’ என்றார். பெண்ணை நான்கு சுவர்களுக்குள் முடக்கும் வீட்டு வேலைகளில் இருந்து அவளுக்கு விடுதலை கிடைக்கும்போதுதான், அவளால் மற்ற தளங்களில் தன் திறமையை முழுமையாக வெளிக்காட்ட முடியும். குடும்பம் பெண்ணுக்கானது, வெளி உலகம் ஆணுக்கானது என்ற நிலையை மாற்ற, பெண்கள் அணிதிரள வேண்டும், அரசியலுக்கு வர வேண்டும்!''

கு.ஆனந்தராஜ்

அரசியல் பயணம்!

பாலபாரதி:

அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு எப்படி?!

‘‘ஏழாம் வகுப்பு படிக்கும்போது, என் ஆசிரியர் ஒருவர், ‘நம்மைச் சுற்றி நிகழக்கூடிய பிரச்னைகள்தான் அரசியல்’ என்று எனக்கு எளிமையாகப் புரியவைத்தார். சிறுவயதில் இருந்தே காமராஜர், பெரியார், அண்ணா, அம்பேத்கர் போன்ற தலைவர்களின் மீது பெரிய பற்றுக்கொண்டு, அவர்கள் வழியில் செயல்பட முடிவெடுத்தேன். கல்லூரிக் காலத்தில் லெனினின் வாழ்க்கை வரலாறு, இடதுசாரிகள் இயக்கம் சார்ந்த நூல்களைப் படித்து, பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்தேன். 2001 - 2016 வரை 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக நேர்மையாகப் பணியாற்றினேன்.’’

சுப்புலட்சுமி ஜெகதீசன்:

அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு எப்படி?!

‘‘நான் அப்போது டீச்சராக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்நேரம் நான் வசித்த மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அ.தி.மு.க சார்பில் நான் வேட்பாளராக... என் மூன்றரை வயதுப் பையனை ஸ்கூல் ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு, முழுநேர அரசியல் பணிக்கு வந்தேன். தேர்தலில் வென்றேன். அரசியலுக்குப் புதுவரவான எனக்கு முதல் முறையே அமைச்சர் பதவி கிடைத்தது. எனக்கு ஒதுக்கப்பட்ட கைத்தறித்துறையை வளர்ச்சியில் கொண்டு சென்றதற்காக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என்னைப் பாராட்டினார். பின் அ.தி.மு.க-வில் இருந்து விலகி தி.மு.கவில் சேர்ந்தேன். கட்சியிலும் அரசியலிலும் எத்தனையோ பிரச்னைகள், சவால்களை எதிர்நீச்சலில்தான் கடந்துவந்திருக்கிறேன். சோர்ந்துபோகாமல் தொடர்ந்து போராடியதால்தான் இன்றும் களத்தில் இருக்கிறேன்!’’

வே.வசந்தி தேவி:

அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு எப்படி?!

‘‘மக்களின் உரிமை களுக்கும், பிரச்னைகளுக்கும் குரல் கொடுத் தால், போராட்டங்களில் ஈடுபட்டால் அதுதான் அரசியல். நான் என்னுடைய இளம் வயதில் இருந்தே அரசியலில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், தேர்தல் அரசியலில் எனக்கு விருப்பம் இல்லை. தலித் மக்களுக்காகப் பெரிதும் போராடிய என் அப்பா, திண்டுக்கல் நகராட்சித் தலைவராக இருந்தார். இளம் வயதில் திண்டுக்கல்லில் பல போராட்டங்களில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். பேராசிரியர், துணைவேந்தர் என பல்வேறு அரசுப் பதவிகளில் இருந்துவிட்டு, ஓய்வு பெற்றுவிட்டேன். அரசியல் கலாசாரத்தில் என்னால் முடிந்த மாற்றங்களை செய்யும் நம்பிக்கையோடு, ஆர்.கே.நகர் தொகுதியில் (முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் தொகுதி) போட்டியிடுகிறேன்.’’

உ.வாசுகி:

அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு எப்படி?!

‘‘1968-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற கீழ்வெண்மணிப் படுகொலை சம்பவம் தொடர்பான போராட்டங்களில் பெற்றோ ருடன் நானும் கலந்துகொண்டேன். அப்படிப் பல போராட்டங்களில் கலந்துகொண்டதன் மூலம், தொடர்ந்து மக்களின் பிரச்னைகளுக்கு, குறிப்பாக தலித்களின் பிரச்னைகளுக்கு எதிராகப் போராட முடிவெடுத்து, என் 19-ம் வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தேன். ஜனநாயக  மாதர் சங்கத்தின் பல பொறுப்புகளிள் இருந்துள்ளேன். என் வாழ்நாளில் பாதிக்கும் மேற்பட்ட நாட்களை போராட்டங்களுக்கு செலவழித்து மக்களுக்கு நீதியையும் பெற்றுக் கொடுத்திருக்கிறேன்!’’

பெண் போராளிகள்!

அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு எப்படி?!

அன்னிபெசன்ட் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் இராமாமிர்தம், மணியம்மை, நாகம்மை, கண்ணம்மை, ருக்மணி லட்சுமிபதி, தருமாம்பாள், குஞ்சிதம் குருசாமி, நீலாவதி இராம.சுப்பிரமணியம், மீனாம்பாள் சிவராஜ், சின்னப்பிள்ளை போன்ற பல பெண்கள் நாடு சுதந்திரம் பெறும் முன்பும், பெற்ற பிறகும் சமூக பிரச்னைகளுக்கும், பெண் உரிமைகளுக்கும் கடுமையாக போராடியவர்கள். இவர்களால்தான் இன்றைய தலைமுறை பெண்கள் பல்வேறு அடிப்படை உரிமைகளுடன் வாழ்கிறார்கள்.

வாக்களிக்கும் உரிமை!

அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு எப்படி?!

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கீழ் இருந்த சென்னை மாகாணத்தில், 1921-ம் ஆண்டு பெண்களும் வாக்களிக்க சட்டம் கொண்டுவரப்பட்டு, 1927-ம் ஆண்டு அச்சட்டம் ஒப்புதல் பெறப்பட்டது. அதிலும், வசதிபடைத்த, சொத்து வைத்திருக்கும் பெண்கள் மட்டும்தான் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகுதான், ஆண் - பெண் இருபாலர்களும் 21-வயதிலிருந்து வாக்களிக்கும் உரிமை கிடைத்தது. 1988-ல் வாக்களிக்கும் வயது பதினெட்டாக குறைக்கப்பட்டது.

தமிழகத்தில் பெண் அமைச்சர்கள்!

அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு எப்படி?!

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபிறகு, சென்னை மாகாணத்துக்கு (இன்றைய தமிழ்நாடு) 1957-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் காமராஜர் இரண்டாவது முறையாக முதல்வரானார். காமராஜரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஏழு அமைச்சர்களில், கன்னியா குமரியைச் சேர்ந்த லூர்தம்மாள் மட்டுமே பெண். உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த லூர்தம்மாள்தான், சுதந்திரம் பெற்ற பிறகு தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் என்பது குறிப்பிடத் தக்கது.

• 1962-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் மூன்றாவது முறையாக முதல்வரான போது, அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற 8 அமைச்சர்களில், சுகாதாரம், மகளிர், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக இருந்த ஜோதி வெங்கடாச்சலம் மட்டுமே பெண்.

• 1967-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அண்ணா துரை முதல்வரானபோது, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தார் சத்தியவாணிமுத்து. இவரே 1969-ம் ஆண்டு சுகாதாரம், பெண்கள் நலன் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் இருந்தார்.தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை, ஒற்றை இலக்கங் களிலேயே பெண் அமைச்சர்கள் இருந்துள்ளனர்.

• தமிழகத்தின் முதல் பெண் முதல்வராக 1988-ம் ஆண்டில் ஜானகி ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்) பொறுப்பேற்றார். அடுத்து 1991-ல் ஜெயலலிதா முதல்வரானார்.