அறிவிப்புகள்
Published:Updated:

குழந்தைகள் பாதுகாப்பு...

குழந்தைகள் பாதுகாப்பு...
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தைகள் பாதுகாப்பு...

ப்ளீஸ், பீ சீரியஸ்!அவேர்னஸ்

குழந்தைகள் பாதுகாப்பு...

`கலங்க வைக்கும் குழந்தைக் கடத்தல்... உஷார் ரிப்போர்ட்' என்ற தலைப்பில் சென்ற இதழில் வெளியான கட்டுரையில் குழந்தைகள் எப்படி, எதற்காக கடத்தப்படுகிறார்கள், கடத்தல் நெட்வொர்க், கடத்தல் டார்கெட் இடங்கள் போன்றவை இடம்பெற்றன. அதன் தொடச்சியாக இந்த இதழில் குழந்தைக் கடத்தலைத் தடுக்க அரசாங்க அமைப்பின் பரிந்துரை, குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை, குழந்தைக் கடத்தல் தொடர்பாக புகார் அளிப்பது, தத்தெடுப்புக்கான விதிமுறைகள் என பல்வேறு விஷயங்களை விரிவாக பார்ப்போம்...

குழந்தைகள் கடத்தலைத் தடுக்க என்ன வழி?

2000-வது ஆண்டு குழந்தைகள் காணாமல் போன வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், காணாமல்போன குழந்தைகள், கடத்தப்பட்ட குழந்தைகளாகத்தான் அடையாளம் காணப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி 2001-ம் ஆண்டு தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்றத்திலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் தலைவராக ஊராட்சிமன்ற தலைவரும், அந்தப் பகுதியின் காவலர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், சுயஉதவிக் குழுக்களை சார்ந்தவர்கள் குழுவின் உறுப்பினர்களாகவும் இருந்தனர். இக்குழு ஆண்டுக்கு மூன்று முறை கூடி விவாதித்து, மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கையை சமர்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கிராமப்புற பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பிறந்ததில் இருந்து, ஒவ்வொரு வகுப்புக்கு செல்வது குறித்த அனைத்து தகவல்களையும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்தக் குழு அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே செயலற்று போனது சோகமே!

பெற்றோர்கள் செய்ய வேண்டியவை!

கடத்தப்படுவதில் இருந்து குழந்தையைக் காக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் சில...

• சென்னயைச் சேர்ந்த வசதி படைத்த தம்பதி, அரசு அலுவலர்களாக இருந்துள்ளனர். கணவர் குடித்துவிட்டு, அடிக்கடி மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டே இருந்துள்ளார். பெற்றோர் சண்டையைத் தொடர்ந்து பார்த்து வந்த ஒரே மகனுக்கு, பெற்றோருடன் வசிக்கவே பிடிக்கவில்லை. இதனால் 150 ரூபாய் பணத்தோடு திடீரென வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.

குழந்தைகள் பாதுகாப்பு...

அச்சிறுவன் ஒரு பஸ்ஸில் பயணித்தபோது, அந்த பஸ்ஸில் அவனை நோட்டமிட்ட குழந்தைக் கடத்தல் கும்பலைச் சார்ந்த ஒருவன், சிறுவனைக் கடத்தி ஒரு ஹோட்டலில் வெளிநாட்டினரிடம் விற்றுச் சென்றுள்ளான். அவர்கள் அவனை இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு பயன்படுத்தி, அச்சிறுவன் எப்படியோ தப்பித்து, பெற்றோரிடம் மீண்டும் சேர்ந்திருக்கிறான்.

எனவே, பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் கடத்தப்படுவதற்கு மறைமுகக் காரணமாக இருந்துவிடக் கூடாது. குழந்தைகள் முன்னிலையில் சண்டையிடுவது, கோபமாக பேசிக்கொள்வது போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்கலாம்.

• குழந்தைகள் பாதுகாப்புக்கு என சைல்டு புரொடக்‌ஷன் பாலிசி அம்சங்கள் ஏராளமாக உள்ளன. இதனை பள்ளிகள் முறையாக கடைப்பிடிக்கின்றனவா என தெரிந்துகொள்ள வேண்டும்.

கணவன் - மனைவிக்கு இடையே விவாகரத்து ஆகி, பெற்றோர்களில் யாராவது ஒருவரிடம் குழந்தை வசித்தால், பள்ளியில் பெற்றோர் தெளிவாக குடும்ப சூழ்நிலைகளைக் கூறிவிட வேண்டும். குழந்தையின் உறவினர் எனக் கூறி குழந்தையை அழைத்துச் செல்ல யார் வந்தாலும் அனுப்பக் கூடாது என கூறிவிட வேண்டும். தற்போது இத்தகைய பிரச்னை தனியார் பள்ளிகளில் குறைந்துள்ளது. ஆனால், அரசுப் பள்ளிகளில் இன்னும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் உள்ளன.

• எல்லா பெற்றோர்களும் பெரும்பாலும், படிப்பு சார்ந்த விஷயங்களை மட்டுமே தங்கள் குழந்தைகளிடம் பேசுகின்றனர். `இன்றைக்கு உங்கிட்ட புதிய நபர் யாராவது நெருங்கிப் பழகினார்களா?, `யாராவது தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்தார்களா?', குறிப்பாக... பெண் குழந்தைகளிடம் `யாராவது தொட்டுப் பேசினார்களா? என்பது போன்ற தகவல்களைத் தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி பெற்றோர்கள் விசாரிக்க வேண்டும்.

• யாராவது குழந்தைக்கு சிறப்பான கவனம் தந்து தனியாக அழைத்தால் போகக்கூடாது எனக் கூற வேண்டும். மேலும், யாராவது குழந்தையிடம் பேசி தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்றால், சத்தமாக ஒலி எழுப்ப வேண்டும் என்பன போன்ற தகவல்களை கற்றுக்கொடுங்கள்.

• பணத்துக்காக கடத்தப்படும் குழந்தைகள் பெரும்பாலும், தங்களுக்கு நெருக்கமானவர் களால்தான் கடத்தப்படுகின்றனர். எனவே, தங்கள் வீட்டுக்கு புதிய வேலையாட்கள், கார் டிரைவர்களை வேலைக்கு வைக்கும்போது, அவர்களைப் பற்றிய அனைத்துத் தகவல் களையும் முழுமையாகச் சேகரித்து, அவர்கள் சரியான நபர்கள்தான் என உறுதிபடுத்திய பின்னர்தான், வேலைக்கு வைக்க வேண்டும்.

• தங்களின் குழந்தைகளுக்கு என ஒரு சேஃப்டி எண்ணைக் சொல்லிக் கொடுக்க வேண்டும். பெற்றோரும் சரி, புதிய நபர்களும் சரி... அந்த நம்பரை சொல்லித்தான் அழைத்துச் செல்ல வேண்டும். தவிர, பெற்றோர்களின் செல்போன் எண், வீட்டு முகவரி, அவசர காலத்துக்கு உதவும் வகையில் அருகில் இருக்கும் உறவினர்/நண்பர் முகவரிகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் சார்ந்த புகாருக்கு...

குழந்தை காணாமல் போனால் உடனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். அடுத்தபடியாக ‘1098’ என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டும் புகார் தெரிவிக்கலாம். மேலும், குழந்தைகள் கடத்தல் மற்றும் சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகள் ஏதாவது நடப்பது தெரிந்து, காவல்நிலையத்தில் தெரிவிக்க பயப்படுபவர்கள், ‘1098’ எண்ணிலேயே தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

தத்தெடுப்புக்கான விதிமுறைகள்!

``கடத்தி வரப்படும் குழந்தைகளை தத்தெடுப்பதும் சட்டவிரோதமான செயலே'' என்று சொல்லும் `யூனிசெஃப்' (The United Nations Children’s Emergency Fund) அமைப்பில் பணியாற்றி ஓய்வுபெற்ற குழந்தைகள்நல பாது காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, முறையான தத்தெடுப்பு விதிமுறைகளை விளக்குகிறார்.

• கணவனும், மனைவியும் முழு மனதோடு, நாம் குழந்தையை பெற்றுக்கொள்ளாமல், ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளலாம் எனவோ அல்லது குழந்தை பெற இயலாத நாம், ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளலாம் எனவோ முடிவெடுத்து ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம்.

• தத்தெடுக்கும் தம்பதியர் இருவரின் வயதையும் கூட்டினால், 80-க்கு அதிகமாக இருக்கக் கூடாது.

• பல்வேறு விதிமுறைகளின்படி தனி ஆண் அல்லது பெண் குழந்தையை தத்தெடுக்க முடியும்.

• பதிவு செய்யப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசின் ‘காரா’ (Central Adoption Resource Agency) தத்தெடுப்பு மையத்தில் முறையாக பதிவு செய்ய வேண்டும். பின்னர், தம்ப தியை, ‘காரா’ மையத்தினர் தனியாக கவுன்சிலிங் செய்வார்கள். அதன் பின்னர்தான், குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடியும். அதோடு, நீதிமன்றம் உத்தரவு கொடுத்த பிறகுதான் குழந்தையைத் தத்தெடுக்க முடியும். எனவே, பதிவு செய்த நாளிலிருந்து ஒரு வருடம், இரண்டு வருடம் வரைக் கூட, ஒரு குழந்தையை தத்தெடுக்க காலம் செலவாகும்.

கு.ஆனந்தராஜ், படங்கள்:இரா.யோகேஷ்வரன்

``கடத்தலுக்கு, அரசும் மறைமுகக் காரணம்!''

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா, ``உலக அளவில் ஆயுதக்கடத்தல், போதைப்பொருள் கடத்தலுக்கு அடுத்தபடியாக குழந்தைகள் கடத்தல் சட்டத்துக்குப்புறம்பான லாபகர தொழிலாக விளங்குகிறது.  குழந்தைக் கடத்தலில் ஈடுபட்டால் குறைந்த பட்சம் 7 ஆண்டுகளில் இருந்து, அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை இந்தியாவில் வழங்கப்படுகிறது. ஆனால், குற்றவாளிகளைக் கையிலேயே பிடிக்க முடியாமலும், குற்றவாளிகள் யார் என தெரியாமலுமே அடுத்தடுத்த நிலைகளை பற்றி மட்டுமே பேசிக்கொண்டே இருக்கிறோம்.

குழந்தைகள் பாதுகாப்பு...

குழந்தைக் கடத்தலானது சட்டத்துக்குப் புறம்பான, மிகவும் லாபகரமான தொழிலாக இருக்க அரசும் மறைமுகக் காரணம். பெரும்பாலும் பிச்சை எடுக்கவும், பாலியல் தொழிலுக்கும்தான் குழந்தைகள் பயன்படுத்தப்படுகின்றனர். பொது இடத்தில் பிச்சை எடுப்பதே தவறு என்ற சட்டமுள்ள நிலையில், கடத்தப்படும் குழந்தைகள் பிச்சை எடுக்க  பயன்படுத்தப்படுவதையும் நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். சட்டம் சரியாகத்தான் இருக்கிறது. நடைமுறைப் படுத்துவதில்தான் தோல்வியடைகிறோம்.

குழந்தைக் கடத்தல் தொடர்ந்து நடைபெறு கிறது. காவல் துறையோ... பெரும்பாலான வழக்குகளில் சில ஆண்டுகள் கழித்து, தங்களால் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என கைவிரிக்கிறது. பெற்றோர்கள்தான் தங்களின் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலையே நீடிக் கிறது'' என்று வருத்தம் பொங்கச் சொல்கிறார்.

``இது தேசிய துயரம்!''

குழந்தைக் கடத்தல் பற்றி நடிகர் பார்த்திபன் பேசும்போது, ``இதை தேசிய துயரமாக கருதுகிறேன். எனக்கு தெரிந்தவரைக்கும் குழந்தை களைக் கடத்தி ஊனப்படுத்தி பிச்சை எடுக்க வைக்கவும், பாலியல் தொழிலுக்கும், 8-10 வயசு குழந்தைகளை கடத்தி ஆபாச படங்களை எடுக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

குழந்தைகள் பாதுகாப்பு...

சமீபத்தில் சென்னையில் இரண்டு குழந்தைகள் காணாமல் போனவுடன், இனியும் தாமதிக்காமல் நம்மால் முடிந்த வரையில் ஏதாவது செய்தாகவேண்டும் என நினைத்தேன். இதற்காக லதா ரஜினிகாந்த் அவர்களுடைய தயா ஃபவுண்டேஷனின் ‘அபயம்' அமைப்பு, எம்.பி.நிர்மலின் எக்ஸ்னோரா அமைப்பு, என்னுடைய பார்த்திபன் மனிதநேய மன்றம் இணைந்து குழந்தை கடத்தல் சம்பவங்களைத் தடுக்க தேவையான முயற்சிகளை செய்து வருகிறோம். பிளாட்ஃபாரத்தில் வசிக்கும் குழந்தைகள் பெருமளவு கடத்தப்படுகின்றனர். எனவே அந்த மக்களுக்கு போதிய விழிப்புணர்வு தரும் வேலையை செய்ய முடிவுசெய்துள்ளோம்''என்றவர்,

``இந்த நாட்டில் பிளாட்ஃபாரங்களில் மக்கள் வசிக்காத நிலை ஏற்பட வேண்டும்'' என்று ஆதங்கத் துடன் சொன்னார்.

``குற்றவாளிகள் மக்களோடு கலந்து இருக்கின்றனர்!''

குழந்தை கடத்தல் மற்றும் குழந்தைகள் காணாமல் போவதை மையப்படுத்தி கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது ‘6 மெழுகுவர்த்திகள்’ திரைப்படம். அதன் இயக்குநர், வி.இசட்.துரையிடம் பேசியபோது,

``நான் ஒருமுறை குடும்பத் தோடு மெரினா கடற்கரைக்குச் சென்றிருந்தேன். அப்போது எங்களோட வந்திருந்த நண்பர்கள் குடும்பத்தினர், அவருடைய குழந்தையைத் கூட்டத்தில் தொலைத்துவிட்டனர். அந்தக் குழந்தையைத் தேடி அவர்கள் பட்ட துயரம் என்னையும், எங்கள் குடும்பத்தையும் கண்கலங்கச்செய்தது. இந்தச் சம்பத்தை மையப்படுத்தி, ஒரு படமெடுக்க திட்டமிட்டேன். பல மாத தேடலுக்கும், உழைப்புக்கும் பிறகு ‘6 மெழுகுவர்த்திகள்’ படத்தை இயக்கினேன். பத்திரிக்கைகளும், பெற்றோர்களும் படத்தைப் பாராட்டி இருந்தனர்.

குழந்தைகள் பாதுகாப்பு...

இந்தப் படத்தை இயக்கிய அனுபவத்தில் இருந்து நான் தெரிந்துகொண்டவற்றை சொல்கிறேன். குழந்தைகள் கடத்தலானது பெரிய நெட்வொர்க் கும்பலால் செய்யப்படுகிறது. நம் குழந்தைகளை நாம் தொலைத்துவிடுவதனால்தான், குழந்தை கடத்தல் சம்பவம் அதிகமாக நடக்கிறது. குறிப்பாக, சிறு குழந்தைகளுடைய உடல் உறுப்புகளுக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருக்கிறது. அதற்காகவும், கொல்கத்தாவில் செயல்படும் பிச்சையெடுக்கும் கும்பலுக்காகவும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.

இந்த பிசினஸை செய்பவர்கள் மக்களோட மக்களாக கலந்து வாழ்கின் றனர். இதனால், அவர்களைக் கண்டு பிடிப்பது கஷ்டம். எனவே, நம் குழந்தை களை நாம்தான் முதலில் பத்திரமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும்'' என்று சொன்னார், மிகவும் அக்கறையுடன்.