அறிவிப்புகள்
Published:Updated:

``லஞ்சம் வாங்காம இருக்கிறதுகூட பெருமையா?''

``லஞ்சம் வாங்காம இருக்கிறதுகூட பெருமையா?''
News
``லஞ்சம் வாங்காம இருக்கிறதுகூட பெருமையா?''

விழிப்பு உணர்வு

``லஞ்சம் வாங்காம இருக்கிறதுகூட பெருமையா?''

‘‘லஞ்சம் வாங்கறது தப்பு மட்டுமில்ல, கேவலமும்கூட. தப்பு, கேவலம்னு தெரிஞ்சும் ஒரு விஷயத்தை செஞ்சா அதுதான் கீழ்புத்தி. நீங்க என்னடான்னா, ‘லஞ்சம் வாங்க மாட்டேன்னு சொல்ற நேர்மையான அரசு அலுவலராமே நீங்க?’னு அதை ஏதோ பெருமை மாதிரி கேட்டு என்னை பேட்டி எடுக்கவேற வந்திருக்கிறீங்க!”

- அலுவல்களுக்கு இடையே படபடக்கிறார், கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி.

கிராம நிர்வாக அலுவலகங்களில் சாதிச் சான்றிதழ் தொடங்கி ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ரேட்!  வி.ஏ. ஓ-வின் பணி, 100 ரூபாய்  என்பதில் தொடங்கி, ஆயிரக்கணக்கில் லஞ்சம் விளையாடும் பணியாகப் புரையோடிப்போயிருப்பது நாம் அறிந்ததே..! ஆனால், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில், லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அலுவலகத்துக்குள் நுழைந்ததும், ‘நான் லஞ்சம் வாங்க மாட்டேன்’ என கொட்டை எழுத்தில் அச்சிட்டு, போர்டாகவே மாட்டிவைத்துள்ளார் `வி.ஏ.ஓ' முத்துமாரி. மேலும், அங்கு பணிகளும் குறிப்பிட்ட நேரத்துக்குள் நேர்மையாக முடித்துக்கொடுக்கப்படுவது சிறப்பு.

முத்துமாரியின் இந்த முன்னுதாரண செயல்பாடு, சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுதலைச் சந்தித்து வரும் நிலையில், அவரைச் சந்திக்க அவர் அலுவலகம் சென்றிருந்தபோதுதான், ‘பேட்டி எடுக்கிற அளவுக்கு நான் என்ன செஞ்சேன்?’ என்று நம்மிடம் கேள்வியை நீட்டினார் அவர்.

“என் சொந்த ஊர் மதுரைப் பக்கம் இருக்கிற பேரையூர். அப்பா ராமர், விவசாயி. நான் மதுரை மீனாட்சி காலேஜ்ல படிச்சேன். ஐ.ஏ.எஸ் ஆகணும் என்பதுதான் என் ஆசை. ஆனா, அதுக்கு ஆரம்பத்துல நான் சரியா முயற்சி எடுக்கல. காலேஜ் முடிச்சதும் கோயம்புத்தூர்ல ஒரு ஹாஸ்பிடல்ல வேலைக்குச் சேர்ந்தேன். வேலைக்கு போய்க்கிட்டே நேரம் கிடைக்கும்போது பழனி, ஆயக்குடி இலவச பயிற்சி முகாமில் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்குப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். 2011-ல தேர்வு எழுதி, 2012-ல வெளியிடப் பட்ட ரிசல்ட்ல தேர்ச்சிபெற்றிருந்தேன். பொள்ளாச்சி ஆனைமலை வி.ஏ.ஓ-வாக வேலைக்குச் சேர்ந்தேன்.

சின்ன வயசுல இருந்தே எனக்கு லஞ்சத்துக்கு எதிரான பார்வை இருந்துச்சு. ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்துல சொல்லிக்கொடுத்ததும் இதைத்தான். அதனால லஞ்சம் வாங்கக் கூடாதுங்கிறதுல உறுதியா இருந்தேன். வேலைக்குச் சேர்ந்த உடனே இதை நான் தெளிவா என் அலுவலகத்தில் சொல்லிட்டேன். அதனால லஞ்சம் சம்பந்தமா எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கல. சுதந்திரமா வேலை பார்த்துட்டு இருந்தேன். அதுக்கு அப்புறம்தான் காளியாபுரத்துக்கு வந்தேன். இங்கே வந்து ஒரு வருஷம் ஆகுது. 

``லஞ்சம் வாங்காம இருக்கிறதுகூட பெருமையா?''

இந்த கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வர்ற மக்களின் வேலைகளை உடனுக்குடன் முடிச்சுக் கொடுத்துடுவேன். இல்லாத மக்கள் சந்தோஷமா போயிடுவாங்க. ஆனா, இருக்கிறவங்க சும்மா போக மாட்டாங்க. அவங்களுக்கு கொடுத்துக் கொடுத்து பழக்கமாயிடுச்சுபோல. ‘மேடம் உங்களுக்கு மரியாதை செய்யணும்’னு மறைமுகமா லஞ்சம் கொடுக்க ட்ரை பண்ணுவாங்க. சிலர் நேரடியா பணத்தை எடுத்து நீட்டிடுவாங்க. சிலரோட பேப்பர்ல தப்பு இருக்கும். அதை சரிபண்ணிட்டு வாங்கனு சொல் வோம். ஆனா, பணத்துக்காகத்தான் அப் படிச் சொல்றேன்னு நினைச்சுட்டு, நான் பணம் வாங்க மாட் டேன்னு சொன்னாலும் அதை ஏத்துக்காம பணம் கொடுக்க ட்ரை பண்ணுவாங்க.

‘நானே வாங்கிறதில்லைனு சொல்லியும், பணம் கொடுக்கிறதுல ஏன் இவ்வளவு முனைப்பா இருக்கீங்க? இப்படி எல்லா வேலைகளுக்கும் லஞ்சம் கொடுத்துப் பழகாதீங்க... அலுவலர்களை லஞ்சம் கொடுத்தும் பழக்காதீங்க’னு ஒவ்வொருத்தர்கிட்டயும் சொல்லி சொல்லி எனக்கு வாயே வலிச்சுடுச்சு. பல நேரங்கள்ல எனக்கு டென்ஷனே வந்துடும். இது சம்பந்தமா என் கணவர் நவநீதன்கிட்ட சொன்னேன். அவர்தான் இந்த போர்டு ஐடியாவைக் கொடுத்தார். இந்த போர்டு வெச்சதுக்கு அப்புறம், இப்போ டென்ஷன் இல்லை. வர்றவங்க போர்டை பாப்பாங்க. வேலையை மட்டும் முடிச்சுக்கிட்டு போயிடுவாங்க. இப்போதான் ரிலாக்ஸ்டா இருக்கு’’ என்று சிரிப்பவர்,

“அரசியல்வாதிகள்கிட்டயும், அதிகாரிகள் கிட்டயும் மாற்றம் வரணும்னு மக்கள் எதிர்பார்க்கிறாங்க. ஆனா, அந்த மாற்றம் நம்மகிட்ட இருந்து ஆரம்பிக்கணும்னு அவங்க நினைக்கிறதில்ல. மக்கள் விழிப்போடு இருந்தா லஞ்சத்தை ஒழிக்கலாம்’’ என்று உறுதியான குரலில் சொன்னார்.

நிறைவாக, “லஞ்சம் வாங்கக்கூடாதுங்கிறது கடமை. இதுல எந்தப் பெருமையும் எனக்கு இல்ல. நான் பார்க்கிற வேலைக்குச் சம்பளம் வாங்குறேன். எதையும் நான் தியாகம் செய்யல. என் அப்பாவைப் பார்த்து, ‘இவரு பொண்ணு லஞ்சம் வாங்கி சம்பாதிக்கறாங்க’னு யாரும் சொல்ல முடியாது. அதே மாதிரி என் குழந்தையைப் பார்த்து, ‘உங்க அம்மா லஞ்சம் வாங்கித்தான் உங்களை வளர்த்தாங்க’னு யாரும் சொல்ல முடியாது. இந்த வாழ்க்கையில அந்த நேர்மைதான் என்னோட கம்பீரமா இருக்கும்!”

- விடைகொடுத்து வேலைகளில் கவனம் திருப்புகிறார், முத்துமாரி!

வணக்கங்கள் பெண்மணி!

ச.ஜெ.ரவி   படங்கள்:தி.விஜய்