பிரீமியம் ஸ்டோரி
32 ரூவா!

``அப்பா, எந்திரிங்கப்பா... எல்லாரும் பாக்கறாங்க...” - கண்ணீரோடு கதறினாள் கண்மணி. ரோட்டோரம் குடிபோதையில் மயங்கிக்கிடக்கும் மாரிமுத்துவை ஊரே வேடிக்கை பார்த்தது. 

மாரிமுத்து, கரும்பாலை வேலைக்குச் செல்பவன். இரவு 9 மணிப் பேருந்துக்குப் புறப்பட்டுவிடுவான்... பிராந்திக் கடைக்கு. பிறகு பேருந்து பிடித்து வீட்டுக்கு வந்துவிடுவான். இன்றும் அதேபோலத்தான் குடித்துவிட்டு நிலைதடுமாறி ரோட்டில் விழுந்துகிடக்கிறான்.

கிழிந்திருக்கும் வேட்டியை சரியாகக் கட்டிவிட முயற்சித்தாள் கண்மணி. ஆனால், மாரிமுத்துவோ பிணம்போல அசையாமல் கிடந்தான். யாருமே உதவ முன்வரவில்லை. வேடிக்கை பார்ப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள கூட்டம். என்ன செய்வது என்று யோசித்தவள், ராமாயாள் வீட்டுக்கு வேகமாக நடந்தாள்.

“பாட்டி... பாட்டி... இந்தக் கொடத்துத் தண்ணிய எடுத்துக்கிறனுங்க...”

“இதப்பாரு பாப்பா, உங்கப்பன் கூத்துக்கு நான்தான் கெடச்சனா? அவவளுக்கு குடிக்கவே தண்ணி இல்லயாமா, குடிகாரப்பயலக் குளிப்பாட்ட தண்ணி கேக்குதா?” - ஒவ்வொரு கேள்வியிலும் கொள்ளிக்கட்டை எடுத்து வீசினாள் ராமாயாள்.

குடத்திலிருந்து கையை எடுத்துவிட்டு, ஒரு எட்டு எடுத்து வைக்கையில், ‘‘வந்துட்டா எங்கப்பனுக்கு நானிருக்கேன்னு” என்ற ராமாயாளின் அலுப்பும் சலிப்பும் அவள் காதுகளில் வந்து விழுந்தன. மாலை மாலையாகக் கண்ணீர் கொட்டியது கண்மணிக்கு.

எப்படியோ ஒருவழியாக மாரிமுத்து தள்ளாடிக்கொண்டு எழுந்து நின்றான். ஆனால் வேட்டி?

கீழே கிடந்த வேட்டியை எடுத்த கண்மணி, அதை அவனுக்குக் கட்டிவிட்டாள். பின்புறமாகக் கிழிந்திருந்தது. தன் கழுத்திலிருந்த துப்பட்டாவை எடுத்து, அவனுடைய இடுப்பைச்சுற்றிக் கட்டினாள். 

ஒருவழியாக வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். கதவைத் திறந்து கால்வைக்கும்போது ‘வ்வே... வ்வே...’ என்று மாரிமுத்து நடுவீட்டில் வாந்தி எடுத்துவிட்டான். தினமும் நடப்பதுதான். கண்மணி ஒரு பழைய துணியை எடுத்துவந்து சுத்தம் செய்தாள். பிறகு, இருவருமே இரவு உணவு சாப்பிடாமல் படுத்துவிட்டார்கள்.

எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு உறங்கியதுபோல் உறங்காமல் படுத்திருந்தாள் கண்மணியின் அம்மா. விடிய விடிய ஒவ்வொரு நொடிக்கும் ஒரு சொட்டுக் கண்ணீர் சொட்டியது அவள் கண்கள்.

பொழுது விடிந்தது.

மாரிமுத்து மெதுமெதுவாய் எழுந்து, முகம் கழுவத் தண்ணீர்த் தொட்டிக்குச் சென்றான். படித்துக்கொண்டிருந்த கண்மணி எழுந்து அவன் பின்னே சென்றாள்.

“அப்பா... அப்பா... இன்னிக்கோட கடைசிநாள் முடியுதுங்க. காசு கட்டியே ஆகணுங்க” என்று நூலகக் கட்டணம் 25 ரூபாயைக் கேட்டாள்.

தன்னுடைய சட்டைப்பையை தடவிப் பார்த்த மாரிமுத்து, இருந்த 10 ரூபாயை எடுத்துக்கொடுத்தான்.

“மீதிக்காச உங்க அம்மாகாரிகிட்ட வாங்கிக்க.”

“உங்களுக்கே தெரியுமுங்கப்பா... அம்மாளுக்கு காலுமுறிஞ்சு கட்டுப்போட்டு சரியானதுக்கப்பறமும், வலி இருக்குறதால வேலைக்குப் போறதிலன்னு! அப்றம் எப்பிடி அம்மாகிட்ட காசிருக்கும்... சொல்லுங்க?”

“சரி கண்ணு... ம்ம்ம்... பள்ளிக்கோடம் கிளம்பிப் போகும்போது ஆலமேட்டுக்கு வா, வாங்கித்தரன்” என்று சொல்லிவிட்டு தூக்குச்சட்டியை தூக்கிக்கொண்டு வேலைக்குக் கிளம்பினான் மாரிமுத்து.

‘‘சரிங்கப்பா” என்று தலையாட்டிவிட்டு, மீண்டும் படிக்கச் சென்று அமர்ந்தாள்.

“கண்மணி...  சோறு அடுப்புல வெச்சிருக்கேன்... ஒல கொதிக்குதானு பாரு. தண்ணி பத்தலனா ஒரு டம்ளர் ஊத்துடி” - அம்மாவின் குரல் மட்டும் பொடக்காலிக்குள்ளிருந்து கண்மணியின் காதை வந்தடைந்தது.

வேகமாக ஓடிச்சென்று அடுப்பைப் பார்த்தாள் கண்மணி. அடுப்பு எரியவில்லை, அணைந்திருந்தது. அவள் நெஞ்சு, தன் வீட்டின் நிலையின்மையில் கொதித்துக்கொண்டிருந்தது. மீண்டும் அடுப்பைப் பற்றவைத்தாள். அம்மா மெதுவாக எழுந்து வர, அவளிடம் அடுப்பைக் கைமாற்றிவிட்டு குளிக்கச் சென்றாள். அவள் வருவதற்குள் சாப்பாடு ஆறட்டுமே என்று, வட்டலில் சாப்பாட்டைப் போட்டுவைத்தாள் கண்மணியின் அம்மா.

குளித்துவிட்டு வந்த கண்மணி தலைவாரி விட்டு, அவசர அவசரமாக நான்கே நான்கு கையெடுத்து வாயில் போட்டுக்கொண்டாள்.

“போதும் போதும்! இதுக்குமேல சாப்ட முடியாதுமா. பள்ளிக்கோடத்துக்கு நேரமாச்சு.”

புத்தகமூட்டையை தூக்கியவாறு அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டுச் சென்றாள். ‘‘பாத்துச் சூதானமா போயிட்டு வாடி கண்ணு” என்று அனுப்பிவைத்தாள் அம்மா.

தேசியகீதம் பாடும்போது கண்மணிக்குள் ஒரு படபடப்பு. தேசியகீதம் முடிந்து மௌனம் அனுசரிக்கப்பட்டது. எல்லோரும் தலைகுனிந்து பிரார்த்தனை செய்ய, கண்மணியால் முடியவில்லை. உடம்பெல்லாம் சற்று வியர்த்துவிட்டது. வயிறு வலி தாங்கமுடியவில்லை. அடிவயிற்றைப் பிடித்தவள், ‘அம்மா..!’ என்று கத்தினாள்.

அது அவளுக்கு நடந்துவிட்டது. ஆமாம்... மௌனத்தில் மலர்ந்துவிட்டது 16 வயதுப் பருவமலர்!

எல்லோரும் மௌனம் முடிந்து வரிசையாக வகுப்பறைக்குச் செல்ல, கண்மணியின் தோழிகள் அவளை ஒரு திண்ணையில் அமரவைத்தனர். இந்த அரசுப் பள்ளியிலும் கழிவறை வசதி முழுமையாக இல்லை. பெண்ணாகப் பிறந்தது எவ்வளவு கொடுமையானது என்பதை கசிந்து விழுந்த ரத்தச்சொட்டு அவளுக்கு உணர்த்தியது.

கண்மணியின் தோழிகள் வேகமாகச் சென்று விஷயத்தை வகுப்பாசிரியர் லலிதாமதியிடம் தெரிவித்தனர். பிறகு, அவர் கண்மணியின் அம்மாவுக்கு அலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்தார். சில நிமிடங்களில் ஓட்டமும் நடையுமாக பள்ளிக்கு வந்த அவள் அம்மா, கண்மணியை வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்.

செய்யவேண்டிய சடங்குகளைச் செய்து, கண்மணியை குடிசைக்குள் தள்ளினர். அக்கம்பக்கமெல்லாம், ‘இந்த மாரிமுத்துக்கு சொல்லி அனுப்பியாச்சா?’ என்ற கேள்வி கசிந்துகொண்டே இருந்தது.

“இந்த மனுசன் இன்னிக்கும் குடுச்சுட்டுத் தான் வருவாம்போல!” -  கண்மணியின் அம்மாவுடைய கவலை உறுதியான உண்மை.

மாலை முடிந்து இரவானது... மாரிமுத்து வரவில்லை. கண்மணியும் அவள் அம்மாவும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர். பழைய சேலையை விரித்துப்போட்டு, வீட்டுக்கு வெளியே படுத்திருந்தாள் கண்மணி. பூத்துக்கிடந்த வானத்தைப் பார்த்தாள்.

“பள்ளிக்கோடம் போட்டுப்போக ஒரு செட்டுத் துணி கேட்டு ஒரு மாசமாச்சு. கால் கொலுசு வாங்கித் தாங்கனு கேட்டத காதுலயே வாங்கிக்கல. காலைல பாஞ்சுரூவா கடனா வாங்கித் தரங்கறாரு. இனி எப்டி மாசமாசம் 32 ரூவா கேட்ப?”

கால்கள் பிசுபிசுப்பிலும், கண்கள் கதகதப்பிலும் தவித்துக்கிடக்க, பூத்துக்கிடந்த வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் கண்மணி.

கிருபா
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு