Published:Updated:

பெண்களை சிதைக்கும் ஆணவக் கொலைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெண்களை சிதைக்கும் ஆணவக் கொலைகள்!
பெண்களை சிதைக்கும் ஆணவக் கொலைகள்!

சமூக அவலம்

பிரீமியம் ஸ்டோரி
பெண்களை சிதைக்கும் ஆணவக் கொலைகள்!

மிழகத்தில் சாதியின் பெயரால் காதலர் கள் பலியிடப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தருமபுரி இளவரசன் தொடங்கி, உடுமலைப்பேட்டை சங்கர் வரை உலகுக்குத் தெரிந்த கொலைகள் சிலவே. ஆனால், வெவ்வேறு காரணங்களோடு மூடிமறைக்கப்பட்டவை எத்தனையோ?!

இதுபோன்ற ஆணவக் கொலைகள், அந்த நேரத்து வெறியில் நடத்தி முடிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால், இதன் எதிர்விளைவாக வெகுவாக பாதிக்கப்படுவது வழக்கம்போல பெண்களே! ஒருபக்கம் காதல் கணவனை இழந்த பெண்கள்... மறுபக்கம், கொலைகாரர்களாக சிறையில் அடைபட்டுக் கிடக்கும் கணவன், மகன்கள் மற்றும் உறவினர் என பலரையும் பிரிந்து தவிக்கும் பெண்கள். இத்தகைய பெண்களின் வலி... வார்த்தைகளால் படம்பிடிக்க முடியாதது!

ஆணவக் கொலைக்கு முக்கிய காரணம்... உயர்சாதி என்று வகைப்படுத்தப்படும் அந்தக் குடும்பம் அடையும் அவமானங்களும் புறக்கணிப்புகளும்தான். உற்றார், உறவினர், நண்பர்கள் என்று அனைவரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும்... குடும்ப விழாக்களில் புறக்கணிக்கப்படுவோம்... அவமானத்துக்கு உள்ளாவோம் என்பது போன்ற காரணங்களால், சாந்தமானவர்களாக இருப்பவர்கள்கூட, தாம் பெற்றெடுத்த உயிருக்கு எதிராகவே கொலைவாளினை தூக்கிவிடுகிறார்கள்.

ஆனால், ஓர் ஆவேசத்தில் நிகழ்த்தப்படும் இந்தக் கொலைக்குப் பிறகு என்ன நடக்கிறது? கொல்லப்பட்டவரின் குடும்பம் மட்டுமல்ல, கொலை செய்த குடும்பமும்கூட பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. ஆம்... இதுதான் நிதர்சனம்!

ஊரைக்கூட்டி கல்யாணம்கூட கட்டிவைக்கத் தேவையில்லை. `எப்படியோ... எங்கேயோ வாழ்ந்துகொள்ளட்டும்‘ என்று விரட்டிவிட்டிருந்தால், அவர்கள் மட்டுமல்ல... இரண்டு குடும்பங்களும்கூட நிம்மதியாக வாழ்ந்திருக்குமே!

சாதிப்பெருமை கொள்பவர்கள், இங்கே இடம்பிடிக்கும் இந்தக் குடும்பங்களின் கதைகளைப் படித்த பிறகாவது மாறினால் சரி!

திருவாரூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த லெட்சுமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிவாஜியை ஆறு வருடங்களாக காதலித்து, திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். ஒரு கட்டத்தில் சிவாஜியைக் கடத்தி கொலை செய்து விட்டார்கள்.

இந்தச் சம்பவம் நடந்தது 2008-ம் ஆண்டு. இப்போது லெட்சுமியும் அவருடைய எட்டு வயது மகனும் சிவாஜி வீட்டிலேயே வசிக்கிறார்கள். சிவாஜியின் அம்மாவும் தம்பிகளும்தான் லெட்சுமிக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள். 

“மூணு பொண்ணுங்க, மூணு பசங்கனு எங்க வீட்ல மொத்தம் ஆறு புள்ளைங்க. நான் சின்னப்புள்ளயா இருக்கும்போதே எங்க அப்பா, அம்மா இறந்துட்டாங்க. அண்ணன், அக்காங்கதான் என்ன வளத்தாங்க. அம்மாபேட்டையில நான் ஸ்கூலுக்கு போய்க்கிட்டு இருந்தப்பதான் பஸ்ல சிவாஜிய பாத்தேன். அவரு அப்ப ஐ.டி.ஐ போய்க்கிட்டு இருந்தார். ஆறு வருஷம் லவ் பண்ணுனோம். அவரைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு உறுதியா இருந்தேன். அதனால ரெண்டு பேரும் ஒண்ணா இருந்துட்டோம். வயித்துல குழந்த வளர ஆரம்பிச்சிடுச்சு. நாலு மாசம். வீட்ல கண்டுபுடிச்சிட்டாங்க.

பெண்களை சிதைக்கும் ஆணவக் கொலைகள்!

‘அவன் என்ன சாதி... நாம என்ன சாதி? அவன மறந்துடு’னு அடிச்சு துன்புறுத்துனாங்க. ஒரு கட்டத்துல திண்டுக்கல்ல அவருக்குத் தெரிஞ்ச ஒருத்தர் வீட்டுல போய் தங்கினோம். நாலு மாசம் அங்க நிம்மதியா இருந்தோம். ஆனா, எங்க அண்ணனுங்க எப்படியோ கண்டுபுடிச்சுகிட்டு வந்துட்டாங்க. அன்னிக்கு காலையில ஆறரை மணி இருக்கும். கதவு தட்டுற சத்தம் கேட்டு, நான் எழுந்திருச்சு திறக்கப் போனேன். ‘நீ போக வேண்டாம்... நான் பார்க்கிறேன்’னு அவரு போய் கதவத் தொறந்தாரு. வெளியில நின்ன ரெண்டு, மூணு பேரு அவரு மூஞ்சியில துணியப்போட்டு தூக்கிகிட்டுப் போயிட்டாங்க. கொஞ்ச நேரத்துல எங்க அண்ணனுங்க வந்தாங்க. நான் ஓடி ஒளிஞ்சுக்கிட்டேன். அப்புறம் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர், என்னை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிகிட்டு போனாரு. `சிவாஜியை கல்லணையில வெச்சி கொன்னுட்டாங்க'னு ஸ்டேஷன்ல இருக்கும்போது போன் வந்துச்சு. என் உயிரையே உருவிப்போட்ட மாதிரி இருந்துச்சு. அப்போ வயித்துல எட்டு மாச சிசுவா இருந்தான் இவன்...’’ 

- மகன் சிவபாலாவின் தலையைக் கோதுகிறவருக்கு வார்த்தைகள் தடைப் படுகின்றன.

இப்போது, ‘‘கேஸை வாபஸ் வாங்கச் சொல்லி அப்பப்ப மிரட்டிகிட்டுதான் இருக்காங்க. ஆனா, என் வீட்டுக்காரரை கொன்னவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தே ஆகணும்னு உறுதியா இருக்கேன். எங்கள, எங்க போக்குல விட்டிருந்தா... சந்தோஷமா இருந்திருப்போம்லங்க? இப்ப இந்த உசுரைப் பறிச்சு, என்னையும் என் புள்ளையும் அநாதையாக்கி என்ன சாதிச்சுட்டாங்க?’’- லெட்சுமியின் கண்ணீரும் கேள்வியும் கனக்கின்றன.

திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த பரமசிவம், மாரியம்மாளின் மகன் முத்துக்குமார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முத்துக்குமாரும்,  ஒட்டன்சத்திரம், விருப்பாச்சியைச் சேர்ந்த மல்லிகாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்திருக்கிறார்கள். ஆத்திரமடைந்த மல்லிகாவின் பெற்றோர்,  முத்துக்குமாரை கொலை செய்துவிட்டார்கள். கொலைகாரர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள் முத்துக்குமாரின் பெற்றோர்.

முத்துக்குமாரின் அம்மா மாரியம்மாள், “எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. நாங்க கூலி வேலை செஞ்சு ரேஷன் அரிசி சாப்புட்டுதான் புள்ளைய படிக்க வெச்சோம். முத்துகுமாரும் எம்.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி முடிச்சுட்டு, பி.எட் பண்ணிகிட்டு இருந்துச்சு. பேங்க் பரீட்சை எழுதி பாஸாகிட்டதா மெசேஜெல்லாம் வந்துருந்துச்சு. அன்னிக்கு சாயங்காலம்தான் அந்தப் புள்ளைகிட்ட இருந்து போன் வந்துச்சு. ‘எங்கூட படிக்கிற பொண்ணுக்கு பொறந்தநாளு. கூடப் படிச்ச ஃப்ரெண்ட்ஸுங்க எல்லாம் நாளைக்கு அவங்க வீட்டுக்கு போறோம்’னு சொல்லிச்சு என் புள்ள. ஃப்ரெண்டு சுரேஷ்கூடத்தான் போறேன்னு சொல்லிச்சு.

மறுநாள் ரொம்ப நேரமா ஆளைக் காணோமேனு போன் பண்ணினப்போ சுவிட்ச் ஆஃப்னு வந்துச்சு. சுரேஷுக்கு போன் பண்ணுனேன். ‘அவனை முன்னாடியே அனுப்பி விட்டுட்டேம்மா’னு சொன்னான். சுரேஷுக்கு மறுபடியும் மறுபடியும் போன் பண்ண, அவன் மாத்தி மாத்தி சொன்னான். ‘கண்ணு... என் மகன் எங்க கண்ணு?’னு அவன்கிட்ட அழ ஆரம்பிச்சுட்டேன். அப்பதான் அவன், ‘நீங்களும் அப்பாவும் மட்டும் விருப்பாச்சிக்கு கிளம்பி வாங்கம்மா’னு சொன்னான். எங்களுக்கு ஒண்ணுமே புரியல. பதறி அடிச்சிகிட்டு கார் எடுத்துகிட்டு ஓடுனோம். அங்க போய் பார்த்தா... எம்புள்ள கிணத்துக்குள்ள மிதக்குது!’’ - மாரியம்மாள் அழுகை மனதை அறுக்கிறது.

தொடர்ந்தார்... ‘‘கேட்டா, ‘கோழி திருட வந்தான், துரத்துனோம், தவறி கிணத்துல விழுந்துட்டான்’னு ஊரே சேர்ந்து அப்பட்டமா பொய் சொன்னாங்க. அதுக்குப் பொறகுதான் என் புள்ளையும் அந்தப் பொண்ணும் விரும்பின வெவரமே எங்களுக்குத் தெரியவந்துச்சு. அதுக்கு அவுங்க வீட்ல மாப்பிள்ளை பாத்துருக்காங்க. அப்பதான் முத்துக்குமாரை காதலிக்கிறதா அது வீட்டுல சொல்லியிருக்கு. நாங்க தாழ்த்தப்பட்ட சாதிங்கிறதால, பிளான் பண்ணி, முத்துக்குமாரை விருப்பாச்சிக்கு வரவெச்சு, கிணத்துல தள்ளி கொன்னுருக்காங்க. அவளையும் மறைச்சுட்டாங்க.

என் உசுரே என்னவிட்டு அநியாயமா போயிருச்சு. பொணத்த வெச்சிக்கிட்டு போராடினப்ப அவுங்க இவுங்கனு அதிகாரிங்க எல்லாம் வந்து பாத்தாங்க. அடக்கம் பண்ணதுக்கு அப்புறம் யாரும் வரல. இப்பக்கூட உடுமலையில சங்கர்ங்கிற பையனை துள்ளத் துடிக்க வெட்டிக் கொன்னுருக்காங்க. எங்க உசுரும் உங்க உசுரு மாதிரிதானே? உங்க கோபத்துக்கு விலை ஒரு உசுரா? பெத்த வயித்து சாபம், உங்கள எந்நாளும் தொரத்திக்கிட்டே இருக்கும்!’’

அந்தத் தாயின் கண்ணீர், சாதிவெறி பிடித்தவர்களின் மனசாட்சியைச் சுடும் அமிலம்!

எம்.புண்ணியமூர்த்தி, கே.குணசீலன்,படங்கள்:வீ.சிவக்குமார், க.சதீஷ்குமார்

சைலன்ட் கில்லிங்!

காதல் திருமணத்துக்கு எதிராக பட்டவர்த்தனமாக நடக்கும் ஆணவக் கொலைகள் ஒரு வகை என்றால், விஷயம் தெரிந்ததும் மகளை வெளியில் தெரியாமல் கொலை செய்துவிடுவது இன்னொரு வகை. படிக்கவில்லை என்று பெற்றோர் திட்டியதால் தற்கொலை, வயிற்றுவலி காரணமாக தற்கொலை என்றெல்லாம் வரும் செய்திகளில் பலவும் இத்தகைய பகீர் கொலைகளாகவே இருக்கக்கூடும் என்கிறார்கள் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவு குரல் கொடுப்பவர்கள்.

ஒரு வருடத்தில் மட்டும் 105 ஆணவக் கொலைகள்!

தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 6,500 பெண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதில் 50% காதலுக்காக நடக்கும் தற்கொலைகள்தான். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சாதி மாறி திருமணம் செய்ததற்காக 75 படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக, ஜனநாயக மாதர் சங்கம் தெரிவிக்கிறது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 105 சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சொல்லும் புள்ளிவிவரம், அதிர்ச்சியளிக்கிறது.

சாதி மறுப்புத் திருமணம்!

சாதி மறுப்புக் கொள்கையை முன்வைத் திருக்கும் திராவிடக் கட்சிகள் ஆளும் தமிழகத்தில் வெறும் 2.59% சாதி மறுப்புத் திருமணங்களே நடக்கின்றன. இதுவே ஹரியானாவில் 29%, கேரளாவில் 19%. இந்தியாவில் சராசரியாக சொந்த சாதிக்குள்ளேயே 89% திருமணங்கள் நடத்தப்படுகின்றன. அதில் தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் அதிகபட்சமாக 97.41% திருமணங்கள் சொந்த சாதிக்குள்தான் நடத்தப்படுகின்றன. மீதம் உள்ள 2.59% திருமணங்களில்தான் ஆணவக் கொலை உள்ளிட்ட அனைத்து அநியாயங்களும்!

அன்றும்.. இன்றும்!

காதல் பிரச்னையில் கணவன் இறந்துவிட, தற்போது தன் பெற்றோருடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் அந்தப் பெண். அவருக்கு ஆதரவாக முதலில் குரல் கொடுத்தனர் பலரும். தற்போது, அந்தப் பெண்ணை சொந்தச் சாதிக்காரர்களே... ஏளனமாக நடத்திக்கொண்டிருப்பதுதான் கொடுமை.

அந்தப் பெண் எப்படி இருக்கிறார் என்பதை அறிய, அந்த ஊர் இளைஞர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தபோது, ``அவளா, இருக்கா... இருக்கா... அவளுக்கு என்ன கேடு? அவகூட நாங்களெல்லாம் பேசமாட்டோம்ங்க. எங்க சமுதாயத்துக்கு கேவலத்த ஏற்படுத்துன அவ, பொண்ணே கிடையாதுங்க’' என்று அர்ச்சித்தனர் அந்தப் பெண்ணை.

`எங்கள் சாதிக் கௌரவத்தை காப்பாற்ற, எங்களுடன் வந்துவிடு’ என்று அன்று கெஞ்சியவர்கள், காரியம் முடிந்தவுடன் கைகழுவியதோடு, அந்தப் பெண்ணையே கரித்துக்கொட்டுவதைக் கேட்டபோது, கண்கள் கலங்கின... அப்பாவிப் பெண்களை நினைத்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு