Published:Updated:

ஒலிம்பிக்... தங்க வேட்டையில் பெண் சிங்கங்கள்!

ஒலிம்பிக்...  தங்க வேட்டையில் பெண் சிங்கங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒலிம்பிக்... தங்க வேட்டையில் பெண் சிங்கங்கள்!

ஸ்போர்ட்ஸ்

‘இந்தியப் பெண்கள் பதக்கம் வெல்ல லாயக்கற்றவர்கள்' என்று உச்சரித்த உதடுகளையெல்லாம், ‘‘இல்லை... இல்லை... இந்தியப் பெண்களாலும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும்'' என புகழவைத்தவர் கர்ணம் மல்லேஸ்வரி. தொடர்ந்து, கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் சாய்னா நேவாலும், மேரி கோமும் வெண்கலப் பதக்கம் வெல்ல, அது தேசத்திலுள்ள ஒட்டுமொத்தப் பெண்களுக்கும் உத்வேகத்தைக் கொடுத்தது.

இதோ, ‘இந்திய பெண்களால் முடியாதது எதுவும் இல்லை’ என்று மீண்டும் பறைசாற்ற இன்னும் சில மாதங்களில் தென் அமெரிக்கா புறப்படவுள்ளனர் நம் பெண் சிங்கங்கள். வில்வித்தை, பேட்மின்டன், ஜிம்னாஸ்டிக் என பல பிரிவுகளிலும் உலக சாம்பியன்களுக்கு சவால் விடும் வகையில் கிளம்பியிருக்கும் இப்படை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் மாதம், பிரேசிலில் தொடங்கும் ரியோ ஒலிம்பிக்குக்கு இதுவரை 80-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தகுதி பெற, அவர்களுள் ‘பதக்கம் வெல்வார்கள்’ என்ற நம்பிக்கையை விதைக்கும் மங்கைகளைப் பற்றிப் பார்ப்போமா..?

ஒலிம்பிக்...  தங்க வேட்டையில் பெண் சிங்கங்கள்!

சாய்னா நேவால் (பேட்மின்டன்)

பேட்மின்டனில் சீனர்கள் மற்றும் இந்தோனேஷியர்களின் ஆதிக்கத்தை அடக்கப் பிறந்தவர். ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்தியர் என்ற அளப்பரிய சாதனைக்குச் சொந்தக்காரர். இதுவரை 21 பதக்கங்கள், விளையாட்டுத்துறையின் மிக உயரிய ‘ராஜிவ் காந்தி கேல் ரத்னா' விருதை வென்றவர். இயற்கையிலேயே போராட்ட குணம் நிறைந்த இவரின், ‘ஸ்மாஷ்’களுக்கு எதிராளியின் ராக்கெட் திக்குமுக்காடிவிடும். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளதால் சாய்னா நிச்சயம் பழைய ஃபார்முக்குத் திரும்பி இம்முறை தங்கத்தோடு வருவார் என்று எதிர்பார்க்கலாம். தனது ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னரும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டாடும் சாய்னா, இம்முறை மொத்த தேசத்துக்கும் ஐஸ்க்ரீம் ஊட்டட்டும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டின்டு லூகா (800 மீ ஓட்டம்)

சர்வதேச ஓட்டப்பந்தயங்களில் பதக்கங்கள் வெல்லுமளவுக்கு இந்திய வீராங்கனைகளிடம் ஸ்டெமினா இல்லைதான். ஜமைக்கா, கென்யா நாட்டவர்களோடு போட்டி போட முடியாதுதான். ஆனால், ரத்தத்தில் தடகளம் ஊறிய ஒருவரால், இந்திய தடகள ராணி பி.டி.உஷாவை குருவாகக் கொண்ட ஒரு வரால்... சரித்திரம் படைக்க முடியாமல் போய்விடுமா என்ன? டிண்டு லூகா, 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தரும் முனைப்போடு ஓடிக்கொண்டிருக்கிறார். ஆசியப் போட்டியில் தங்கத்தை இழந்தாலும், இவர் ஓடிய விதம்... நிச்சயம் இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் நூலிழையில் பதக்கத்தை இழந்த தன் குரு, பி.டி.உஷாவுக்கு சிறந்ததொரு குருதட்சணை தர ரியோ ஒலிம்பிக் டின்டுவுக்கு ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு.

ஒலிம்பிக்...  தங்க வேட்டையில் பெண் சிங்கங்கள்!

தீபிகா குமாரி (வில்வித்தை)

இந்தியாவின் தங்கக் கனவு, மிகப்பெரிய நம்பிக்கை... தீபிகா. 17 வயதில் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்றபோது தீபிகாதான் தரவரிசையில் டாப் வீராங்கனை. ஆனால், இயற்கை அவரோடு விளை யாடியது. லண்டனில் அடித்த காற்று தீபிகாவின் அம்புகளையும், அவரது பதக்கக் கனவையும் இலக்கை விட்டு தூர எடுத்துச் சென்றது. ஆனால், இம்முறை தீபிகா இன்னும் பலமாக களம் காண்கிறார்... அதுவும் உலக சாதனைக்குச் சொந்தக்காரியாக. ஆட்டோ ஓட்டுநரின் மகளான இவர், ரியோவில் தங்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். தீபிகாவுக்குள் எரிந்துகொண்டிருக்கும் லட்சியத் தீ... இம்முறை எந்தக் காற்றையும் எதிர்கொண்டு வாகை சூடட்டும்.

ஒலிம்பிக்...  தங்க வேட்டையில் பெண் சிங்கங்கள்!

மன்பிரீத் கவுர் (குண்டு எறிதல்)

2010 காமன்வெல்த் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற்ற கவுர், தனது பயிற்சியாளரையே மணந்து, ஒரு குழந்தைக்குத் தாய் ஆன பிறகு, கடந்த ஆண்டு நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்தார். நான்கு வயது குழந்தையின் தாய் பெரிய அளவிலான பயிற்சி இல்லாமல், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு என்ன செய்துவிட முடியும்? ஒரு பெண் நினைத்தால் என்ன வேண்டுமானால் செய்துவிட முடியும். ஆம்... 18 ஆண்டு கால தேசிய சாதனையைத் தகர்த்தெறிந்து தங்கத்தோடு சேர்ந்து ஒலிம்பிக் வாய்ப்பையும் வென்றார் கவுர். கடும் பயிற்சியிலிருக்கும் கவுரின் கனவு... ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது ஒன்றுதான்.

தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்)


ஜிம்னாஸ்டிக் வரலாற்றிலேயே முதன் முதலில் ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்ற இந்தியப் பெண், 22 வயதான தீபா கர்மாகர். இதுவரை 67 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். ஜிம்னாஸ்டிக் செய்பவர்களுக்கு வளைவான பாதங்களே சிறப்பளிக்கும். ஆனால், தீபாவுக்கோ தட்டைப் பாதங்கள். தட்டைப் பாதங்களால் ஸ்பிரிங் செய்ய முடியாது. பயிற்சி மூலமாகவே பாதங்களின் அமைப்பை மாற்றிக்கொண்டவர் இவர். கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்று, ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். 6 வயதிலேயே தனது பாதத்தின் அமைப்பை மாற்றத் தொடங்கிய இந்தப் போராளியால் இந்தியாவுக்கு தங்கம் நிச்சயம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒலிம்பிக்...  தங்க வேட்டையில் பெண் சிங்கங்கள்!

சானியா மிர்சா (டென்னிஸ்)

இன்று டென்னிஸ் உலகமே வாய்பிளந்து ரசிக்கும் வகையில் சாதனைகளைக் குவித்துவருகிறார் சானியா. இதுவரை 7 கிரான்ட் ஸ்லாம் பதக்கங்கள் வென்றுள்ள சானியாவின் சமீபத்திய ஃபார்ம் அனைவரையும் மலைக்க வைக்கிறது. இரட்டையரில் தொடர்ந்து 41 போட்டி
களில் வென்று அமர்க்களப்படுத்திய இவரோடு இணைந்து விளையாடும் பார்ட்னரை இந்த முறையாவது இந்திய டென்னிஸ் சங்கம் ஒழுங்காகத் தேர்வு செய்ய வேண்டும். அப்படி அந்த பார்ட்னர்ஷிப் மட்டும் `கிளிக்' ஆகிவிட்டால், சானியா தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கலாம்.    
சரித்திரம் படைக்கும் துருவ நட்சத்திரங்களாய் காட்சியளிக்கும் இவர்கள் கொண்டு வரப் போவது வெறும் பதக்கமும் புகழும் மட்டுமல்ல... இந்தியப் பெண்களை போராடத் தூண்டும் உந்து சக்தி மற்றும் இந்திய பெண்களுக்கான சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றையும் தான்!

 தா.நந்திதா
மு.பிரதீப் கிருஷ்ணா