Published:Updated:

நோய் நாடி..! - தோல் வியாதிகள்... காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரை!

நோய் நாடி..! - தோல் வியாதிகள்...  காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரை!
பிரீமியம் ஸ்டோரி
News
நோய் நாடி..! - தோல் வியாதிகள்... காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரை!

கம்ப்ளீட் மெடிக்கல் கைடு

நோய் நாடி..! - தோல் வியாதிகள்...  காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரை!

நோயை வெல்வதற்கான முதல் படி, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக்கொள்வதுதான். அந்த வகையில் தொடர்ந்து நோய்களைப் பற்றி வெளிச்சம் தந்துவரும் ‘நோய் நாடி’ பகுதியில், நாளுக்கு நாள் பெருகி வரும் தோல் வியாதிகள் பற்றி, காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரையிலான விஷயங்களைப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த சரும சிறப்பு மருத்துவர் டாக்டர் மாயா வேதமூர்த்தி. 

நோய் நாடி..! - தோல் வியாதிகள்...  காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு, தோல். அது தன்னிகரற்ற பாதுகாப்புக் கவசம். தட்பவெப்பநிலைக்கு ஏற்ப மாறி உடலைப் பாதுகாப்பது தொடங்கி, ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமான பல வேலைகளை தோல் செய்கிறது. அதற்கு உரிய பாதுகாப்பும், பராமரிப்பும் தருவதுடன், அதன் ஆரோக்கியத்துக்கு ஏதும் ஊறு ஏற்பட்டால் விரைந்து சரியான சிகிச்சை எடுக்க வேண்டியதும் முக்கியம். இல்லையெனில், முகப்பரு தொடங்கி, சரும புற்றுநோய் வரை அதன் பாதிப்புகள் இருக்கும்’’ என்று எச்சரிக்கையூட்டி ஆரம்பித்தார் டாக்டர்.

தோலின் பணிகள் என்ன?

உடலைப் பாதுகாக்கும் தோல், ஆரோக்கியத்துக்குத் தேவையான `விட்டமின் டி’யை சூரியனிடம் இருந்து பெற்று உடலுக்குத் தரும் கருவி. உணர்ச்சிகளை உணரவைக்கும் உறுப்பு. தோலில் 2 மில்லியன் வியர்வை துவாரங்கள் உள்ளன. உடலில் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் அதன் பணி, மிக அத்தியாவசியமானது. சருமத்தின் ஆரோக்கியத்தை எதிரொலிக்கவல்லது என்பதால் தோலை ஆரோக்கியத்தின் கண்ணாடி (mirror of health) என்பார்கள். நகம், முடி என உடலுக்குத் தேவையான பாதுகாப்புக் கவசங்களை உருவாக்கும் தோல், அனைத்து உடல் உறுப்புகளையும் தன்னுள்ளே கொண்டு பாதுகாப்பதால், அது மனித உடலின் மிக முக்கிய உறுப்பாகிறது. எனினும், உடலில் மிகவும் எளிதாக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய உறுப்பும் அதுதான். 80% தோல் பாதிக்கப்பட்டால் (தீப்புண், ஆசிட் வீச்சு போன்றவற்றால்), அது மரணம்வரை இட்டுச்செல்லும். 

பாதிப்புகள்... வயது வாரியாக!

பிறந்த குழந்தைக்கு: கொப்புளங்கள் தொடங்கி ஆங்காங்கே அதிக கறுப்பு மச்சங்கள், உடல் முழுக்க சிவப்பு மச்சங்கள், சருமத் தொற்று.

1 - 10 வயதுக் குழந்தைகளுக்கு: சொறி, சிரங்கு தொடங்கி சருமத் தொற்றுவரை. 

பருவ வயதினர்: முகப்பரு, முடி உதிர்வு, பொடுகு, சொரியாசிஸ், வெண்புள்ளிகள், சருமத் தொற்று. 

பெண்களுக்கு: முடி உதிர்வு, தோல் நிறம் மாறுவது, அதிக எடை அதிகரிப்பு/குறைவால் உடலில் ஆங்காங்கே தழும்புகள் (உதாரணம்: பிரசவத்துக்குப் பிறகான ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்), தேவையில்லாத இடங்களில் ரோம வளர்ச்சி.

வயதானவர்களுக்கு: மருக்கள் உண்டாவது, தோல் தடித்து, வற்றிப்போவது.

என்ன காரணங்கள்?

நோய் நாடி..! - தோல் வியாதிகள்...  காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரை!

தனிநபர் சுகாதாரமின்மை, சருமத்தை சரிவரப் பராமரிக்காதது, பாதுகாக்காதது, உடலுக்குத் தேவையான சரிவிகித உணவு, தேவையான தண்ணீரில் பற்றாக்குறை ஏற்படுவது, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற ஆடை உடுத்தாதது, அளவுக்கு அதிகமான அழகு சாதனப் பொருட்கள் பயன்பாடு, புகைப்பிடித் தல், அதிக வெப்பத்துக்கு சருமம் ஆட்படுவது, மனஅழுத்தம் இவையெல்லாம் சருமத்தின் ஆரோக்கியத்தை சிதைக்கும் காரணிகள். உடலில் உள்ள 2 மில்லியன் வியர்வைத் துவாரங்கள் வழியாக கழிவுகள் சரிவர வெளியேற, குடிக்கும் தண்ணீரும், சூரியஒளியும் துணைபுரியும். அந்த துவாரங்களின் செயல்பாட்டில் பிரச்னை ஏற்படும்போது, வியர்க்குரு, வேனல் கட்டி, முகப்பரு, அம்மை, தோல் நோய்கள் போன்றவை வரக்கூடும். 

அலர்ட் செய்யும் அறிகுறிகள்!

சருமம் ஆங்காங்கே சிவந்துபோவது, அரிப்பு, கொப்புளம், நிற மாற்றம், முடி உதிர்வு, வாய்ப்புண், நகம் பாதிக்கப்படுவது... இவையெல்லாம் சருமத்தின் ஆரோக்கியம் குன்றியதை உணர்வதற்கான அறிகுறிகள். அதை உணர்ந்தவுடன் தாமதிக்காமல் மருத்துவரை நாட வேண்டும். எந்தளவுக்கு வளரவிடுகிறோமோ, அந்தளவுக்கு சிகிச்சை அளிப்பது கடினமாகும்.  உதாரணமாக, சொரியாசிஸ் வியாதியை ஒரு கட்டத்துக்கு மேல் குணப்படுத்த முடியாது, கட்டுப்படுத்த மட்டுமே முடியும். சிகிச்சையளிக்கப்படாத வாய்ப்புண், புற்றுநோயில் கொண்டுபோய் நிறுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே, கவனம்.

சோதனையும் சிகிச்சையும்!  

நோய் நாடி..! - தோல் வியாதிகள்...  காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரை!

ரத்தப் பரிசோதனை, சருமம், கேசம், நகத்தின் செல்களை எடுத்துச் செய்யப்படும் பயாப்ஸி பரிசோதனைகள் போன்றவை தோல் நோய்களைக் கண்டறிவதற்கான அடிப்படை சோதனை முறைகள். வாய்ப்புண், சொரியாசிஸ் என பிரச்னையின் தன்மை, வீரியத்தைப் பொறுத்து, நவீன பரிசோதனை முறைகள் பரிந்துரைக்கப்படும்.

சருமத்துக்கு அரணாக அமையவல்ல   உணவு முறைகள்!

நோய் நாடி..! - தோல் வியாதிகள்...  காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரை!

வண்ணமான பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளவும். காபி, செயற்கை பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை முற்றிலும் தவிர்க்கவும். இளநீர், நுங்கு, மோர் போன்ற இயற்கை ஆகாரங்களே நல்லது. பெரும்பாலான தோல் வியாதிகளுக்கு அதிகமாக கொழுப்பு உணவை உட்கொள்வதே காரணம் என்பதால் அதைத் தவிர்க்கவும். அதேபோல மாவுச்சத்து உணவுகளை அளவோடு எடுத்து, நார்ச்சத்து உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளவும். நம் பாரம்பர்ய உணவுகளான தினை, சாமை, கேழ்வரகு போன்றவை சருமத்துக்கு நன்மை செய்யவல்லவை. தினமும் 6 - 8 கிளாஸ் தண்ணீர் (அ) இரண்டு லிட்டர் சிறுநீர் வெளியேறும் அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மொத்தத்தில், ஆரோக்கியத்தின் கண்ணாடியான, அழகின் குறியீடான சருமத்தை பராமரிப்போம், பாதுகாப்போம்!’’

- அக்கறையுடன் சொல்லி முடித்தார் டாக்டர் மாயா வேதமூர்த்தி.

சா.வடிவரசு

வெயிலும் சருமமும்!

நோய் நாடி..! - தோல் வியாதிகள்...  காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரை!

• வெயில், சருமத்துக்கு அதிக பாதிப்புகளைத் தரக்கூடியது. அதில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள் இங்கே...

• காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். பொதுவாக, ஒருவரது உயரத்தைவிட அவரது நிழலின் உயரம் அதிகமாக இருந்தால், அது ஆபத்தில்லாத சூரியஒளி.  

• சூரியஒளி நேரடியாக தோலில் படுவதைக் காட்டிலும் ஆபத்தானது... தண்ணீர், மண், சிமென்ட் தரை போன்றவற்றின் மீது பட்டு எதிரொளித்துப்படுவது.

• வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போது விட்டுவிட்டுப் படக்கூடிய சூரியஒளி சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

• வெயிலின் தகிப்பில் இருந்து காக்க பருத்தி உடைகளே சருமத்துக்கு நண்பன். பெரியவர்கள் தளர்வான ஆடைகளும், குழந்தைகள் உடம்பு முழுக்க மறைக்கும் ஆடையாக இல்லாதவற்றையும் உடுத்தவும்.

• ஒரு நிமிடம் உடல் மீது கதிர்வீச்சு பட்டிருந்தாலும், அதன் தாக்கம் 14 நாட்கள் வரை இருக்கும்.

• மின்விளக்கு, தொலைக்காட்சி, கணினி, அலைபேசி என்று சூரியஒளி தவிரவும் ஏதாவது ஒரு கதிர்வீச்சு நம்மீது பட்டுக்கொண்டுதான் இருக்கும். அத்தகைய கதிர்வீச்சுக்கு மிகவும் அதிகமாக உட்படும் சமயங்களில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது பாதிப்பை குறைக்க உதவும்.

• வெயிலில் செல்லும்போது சூரியஒளியை ஈர்க்கவல்ல அடர் நிறங்கள் தவிர்த்து வெளிர் நிறங்களில் ஆடைகள் அணியவும்.

டாப் 5 சரும நோய்கள்

1. படர்தாமரை: இந்த நோய் வருவதற்கு ஃபங்கஸ் இன்ஃபெக்‌ஷன் (fungus infection) காரணமாக இருக்கும். இதனை ஸ்க்ராப் பிங் (scraping) சய்து கண்டறியலாம் (படர்தாமரை உள்ள இடத்தில் லேசாக சுரண்டி எடுத்து மைக்ரோஸ்கோப் வழியாக பார்த்து உறுதி செய்வது). இதற்கு, ஆயின்மென்ட், உட்கொள்ளும் மருந்து போன்றவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

2. சொரியாசிஸ்: சிஸ்டமிக் டிஸ்ஆர்டர் (systemic disorder), மன அழுத்தம், அதிக உடல் எடை, மதுப்பழக்கம்.. உள்ளிட்ட காரணங்களால் இது வரக்கூடும். இதை ஸ்கின் பயாப்ஸி (skin biopsy) மூலமாகக் கண்டறியலாம். ஆயின்மென்ட், மாத்திரை, போட்டோதெரபி உள்ளிட்ட பல  சிகிச்சை முறைகள் உள்ளன.

நோய் நாடி..! - தோல் வியாதிகள்...  காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரை!

3. வெண் புள்ளிகள்: நிறமிக் குறைபாடு காரணமாக வரக்கூடும். வுட்’ஸ் லேம்ப் (Wood’s lamp), ஸ்கின் பயாப்ஸி போன்ற சோதனை முறைகள் உள்ளன. ஆயின்மென்ட் தொடங்கி... மாத்திரைகள், போட்டோதெரபி உள்ளிட்ட பல சிகிச்சை முறைகள் உள்ளன.

4. வாய்ப்புண்: இதற்கு கூரிய பல், புகைபிடித்தல், மனஅழுத்தம், சரிவர சாப்பிடாமை போன்ற பல காரணங்கள் சொல்லலாம். இதை மருத்துவர்கள் நேரடியாக பார்த்தே உறுதிசெய்வார்கள். இதற்காக... ஆயின்மென்ட் தொடங்கி  பல சிகிச்சை முறைகள் உள்ளன. உண்மைக் காரணத்தை கண்டறிந்து அதை சரிசெய்யவேண்டியது மிக முக்கியம். உதாரணமாக, மனஅழுத்தம் என்றால் அதை குறைக்கவேண்டியது மிக முக்கியம்.

5. சருமப் புற்றுநோய்: பரம்பரை, சூரிய ஒளி, ஆர்சனிக் (Arsenic) என்ற ஒருவகை கெமிக்கல் (செடிக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி, ரசாயன  உரத்தில் ஆர்சனிக் உள்ளது) உள்ளிட்ட பல காரணங்களால் வரக்கூடும். இதை ஸ்கின் பயாப்ஸி சோதனை மூலமாக கண்டறிந்து... பாதிக்கப்பட்ட இடத்தை நீக்குவது, ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகள் வழங்கலாம். எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ அவ்வளவு எளிதில் சரிசெய்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய்...  வேண்டுமா, வேண்டாமா?

சருமம், கேசத்தின் வனப்புக்கு எண்ணெய்த் தன்மை தேவை. எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் அதிகமாக எண்ணெய் தடவத் தேவையில்லை. வறண்ட சருமம் கொண்டவர்கள் தவறாமல் எண்ணெய் தடவ வேண்டும். குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வாரத்தில் ஒரு முறை எண்ணெய்க் குளியல் (தரமான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்) எடுத்துக்கொள்ளலாம். மற்றவர்கள் தங்கள் சருமத்தன்மைக்கேற்ப எண்ணெய்க் குளியல் எடுத்துக்கொள்ளலாம். ஒருபோதும் கண், காது, மூக்கு போன்றவற்றுக்குள் எண்ணெய்விட்டுக் குளிக்கக் கூடாது.

சரியான சிகிச்சை!

நோய் நாடி..! - தோல் வியாதிகள்...  காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரை!

சரும நோய்க்கு பச்சிலை வைத்தியத்தில் இருந்து பியூட்டி பார்லர்வரை தீர்வு தேடிவிட்டு இறுதியாக மருத்துவரிடம் வருவதற்குள் நோயின் வீரியம் அதிகமாகிவிடும் என்பதால், உடனடியாக, நேரடியாக, தரமான சரும சிறப்பு மருத்துவரிடம் சென்று மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்யக்கூடாதவை..!

• தரமற்ற சோப்பு, ஷாம்பு பயன்படுத்தக்கூடாது.

• சருமத்தை நார், நைலான் மெஷ் போன்றவற்றால் தேய்த்தலை தவிர்க்கவும்.  

நோய் நாடி..! - தோல் வியாதிகள்...  காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரை!

• கடைகளில் வாங்கும் ரெடிமேட் குளியல் பொடிகளில் ரசாயனம் கலந்திருக்கலாம் என்பதால் தவிர்க்கவும்.

• வெந்நீரில் குளிக்கும்போது சரும பாதுகாப்பு லேயர் பாதிக்கப்படும் என்பதால் தவிர்க்கவும்.

• இரு சக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் தூசு, வெயில் போன்றவற்றில் இருந்து தப்பிக்க முகம் முழுக்க துப்பட்டாவைச் சுற்றிக்கொள்ளும்போது காற்று உட்செல்ல வாய்ப்பில்லாமல், தோலில் இருக்கும் துளைகள் வழியாக நடக்கும் சுவாசம் தடைப்படும். இதனால் முகப்பரு, வியர்க்குரு ஏற்படலாம் என்பதால், ஹெல்மெட் பயன்படுத்தவும். மெல்லிய காட்டன் துணியை தலையில் போட்டு, தரமான ஹெல்மெட் பயன்படுத்தும்போது உஷ்ணம், வியர்வையை அந்தத் துணி உறிஞ்சிக்கொள்ளும்.