Published:Updated:

வாசகிகள் கைமணம்!

சுட்டிகளைக் கவரும் ஸ்வீட் கிரன்ச்!ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

பிரீமியம் ஸ்டோரி
வாசகிகள் கைமணம்!

ஸ்வீட் கிரன்ச்

தேவையானவை: ஏதாவது பிஸ்கட் - 100 கிராம், கண்டன்ஸ்டு மில்க் - அரை டின், வறுத்த முந்திரி - 15, தேங்காய் - அரை மூடி (துருவிக்கொள்ளவும்).

செய்முறை: பிஸ்கட்டை நன்றாகப் பொடிக்கவும். இதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கலந்து நன்கு குழைத்து, வறுத்த முந்திரி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து, விருப்பமான அளவில் உருட்டி ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும்போது எடுத்துப் பரிமாறலாம்.

எளிதாக செய்யக்கூடிய இந்த `ஸ்வீட் கிரன்ச்’சை, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

- எஸ்.சிநேகா, சென்னை-23

வாழைக்காய் - தூதுவளை குழம்பு

வாசகிகள் கைமணம்!

தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, தூதுவளை இலை - ஒரு கப், பூண்டு - 4 பற்கள், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, தேங்காய்ப்பால் - அரை கப், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புளி - எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி, எண்ணெயில் பொரிக்கவும். தூதுவளை இலைகளை முள் எடுத்துவிட்டு எண்ணெயில் பொரிக்கவும். வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து... பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, புளிக்கரைசல் சேர்க்கவும். இதனுடன்  மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து...  பொரித்த வாழைக்காய், பொரித்த தூதுவளை இலை சேர்த்துக் கொதிக்கவிடவும். பின்னர் தேங்காய்ப்பால் விட்டு, கொதிவந்ததும் இறக்கவும்.

- கே.ஷண்முகப்பிரியா, மேட்டூர் அணை

இஞ்சித் தீயல்

வாசகிகள் கைமணம்!

தேவையானவை: பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 2, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, புளி - எலுமிச்சைப்பழ அளவு, வெல்லம் - சிறு துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - அரை கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி... இஞ்சி, தேங்காய்த் துருவலை வதக்கி, கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். புளியை கெட்டியாகக் கரைத்து வடிகட்டவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து... நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன்  தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள் சேர்த்து... புளிக்கரைசலும், உப்பும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பிறகு, அரைத்த இஞ்சி - தேங்காய் விழுதை சேர்த்து சுருள கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம். 

- கே.அபிநயா, ஓசூர்

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு