Published:Updated:

`சி.வி’யை சிங்காரிப்பது எப்படி..?

`சி.வி’யை சிங்காரிப்பது எப்படி..?
பிரீமியம் ஸ்டோரி
News
`சி.வி’யை சிங்காரிப்பது எப்படி..?

வேலைவாய்ப்பு ஸ்பெஷல்

`சி.வி’யை சிங்காரிப்பது எப்படி..?

ன்டர்வியூவுக்கு சீவி சிங்காரித்துப் போவதுடன், `சி.வி’யையும் (CV - Curriculum Vitae) சிங்காரிக்க வேண்டும்.

‘‘சி.வி (அல்லது Resume) என்பது நம்மை நாமே மார்க்கெட்டிங் செய்துகொள்ள ஏதுவானதொரு டாக்குமென்ட், ஒரு நிறுவனத்தில் நாம் சென்று பேசும் முன்பு, நம்மைப் பற்றி அவர்களுக்குச் சொல்லும் அறிமுக அறிக்கை. தகுதியிருந்தும் ஒழுங்கற்ற `சி.வி’யால் வேலை கிடைக்காமல் போனவர்கள் அதிகம் பேர். எனில், அதை எவ்வளவு கவனத்துடன் தயாரிக்க வேண்டும்?!’’ என்று வலியுறுத்தும் சென்னையைச் சேர்ந்த ஹெச்.ஆர் கன்சல்டன்ட் நந்தினி, தேவையான அம்சங்களுடன் தெளிவான `சி.வி’ தயாரிப்பதற்காக தந்த குறிப்புகள் இங்கே...

ஃபான்ட் சைஸ்: 10 (அ) 12

ஃபான்ட் டைப்: Times New Roman

பெயர்: பெரிதாக போல்டு (BOLD) செய்திருக்க வேண்டும்

பணி நோக்கம் (Objective): எந்தத் துறையில் திறம்பட செயல்பட விரும்புகிறீர்கள் என்பதைக் குறிப்பிடவும். ‘க்ளிஷே’வாக வெப்சைட்டு களிலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்படும் அப்ஜெக்ட் டிவ்களை தவிர்த்து, தனித்துவமாக எழுதவும்.

கல்வித் தகுதி (Educational Qualification): ரிவர்ஸ் க்ரோ னாலாஜிக்கல் ஆர்டரில், அதாவது சமீபத்திய டிகிரி முதலிலும், அதன் கீழே இளங்கலை, பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு என்ற வரிசையில், மதிப்பெண்களுடனும் படித்த பள்ளி, கல்லூரி விவரங்களுடனும் எழுதவும். கட்டம் கட்டி இடத்தை நிரப்ப வேண்டும் என்றில்லை... பாயின்ட்டுகளாகக் கொடுத்தாலே போதுமானது.

முன் அனுபவம் (Experience): முன் அனுபவமுள்ளவர்கள் தற்போது வேலைசெய்யும் நிறுவனத்தின் பெயர், வகிக்கும் பதவி, எந்த வருடம், மாதம் முதல் எந்த வருடம், மாதம் வரை அங்கு பணிபுரிகிறீர்கள் போன்ற விவரங்களைக் குறிப்பிடவும். அங்கு நீங்கள் வகிக்கும் பொறுப்புகள் (Roles & Responsibilities) என்னென்ன என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவும். நீங்கள் பணிபுரிந்த ப்ராஜெக்ட்டின் பெயர், அதன் சுருக்கம், ஆரம்பித்த தேதி, முடித்த தேதி, முக்கியமாக அதில் உங்கள் பங்கு என்ன என்பதை ஹைலைட் செய்யவும். இதுவே உங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும்.

`சி.வி’யை சிங்காரிப்பது எப்படி..?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திறன்கள் (Skills): எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அதற்குத் தேவையான திறன்களைக் குறிப்பிடவும். அதாவது, விற்பனைப் பிரதிநிதி வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, அங்கு உங்களின் எழுத்துத் திறன் குறிப்பிடத் தேவையில்லாத ஒன்று. மாறாக, உங்களின் கம்யூனிகேஷன் ஸ்கில் பற்றிக் குறிப்பிடலாம்.

புகைப்படம்: ஜாப் போர்ட்டல்களில் அப்லோடு செய்யும்போது மட்டுமே புகைப்படம் தேவைப்படும். `சி.வி’யை நிறுவனத்துக்கு அனுப்பும்போதோ, நேர்காணலுக்குச் செல்லும்போதோ `சி.வி’யில் புகைப்படம் இணைப்பதைத் தவிர்த்துவிடலாம். அவசியம் வேண்டும் என்றால், `சி.வி’யின் மேல் வலது மூலையில் சந்தனம், குங்குமம், விபூதி ஏதுமில்லாத, கோட் - சூட் என ஃபார்மல் உடையில் உள்ள புகைப்படத்தை இணைக்கலாம்.

கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!

• ஒன்றுக்கு இரண்டு முறை ஸ்பெல்லிங் செக், கிராமர் செக் செய்யவும். இது மிகவும் அடிப்படையான விஷயம்.

• மார்க்கெட்டிங், சேல்ஸ், கஸ்டமர் சப்போர்ட் போன்ற வேலைகளுக்கு கிரியேட்டிவ் `சி.வி’-க்கள் பயன்படும். மற்ற வேலைகளுக்கு வழக்கமான டெம்ப்ளேட்களையே பின்பற்றவும். இணையத்தில் ஆயிரக்கணக்கான டெம்ப்ளேட்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை முன்மாதிரியாக வைத்து நீங்களே ஒன்று தயார் செய்யவும். `சி.வி’ உங்கள் கைவண்ணத்தில் இருப்பதே சிறப்பு.

• மூன்று பக்கங்களுக்கு மேல் மிகாமல் பார்த்துக்கொள்ளவும்.

• ஜாப் டிஸ்க்ரிப்ஷன்களுக்கு ஏற்ப உங்கள் திறமைகளை ஹைலைட் செய்ய வேண்டும்.

• எல்லா வேலைகளுக்கும் ஒரே `சி.வி’யை ஃபார்வேர்டு செய்யக்கூடாது.

• நிறுவனம் தங்களுக்குத் தேவையான தகுதிகள் உள்ள `சி.வி’யை, கீவேர்ட்ஸ் கொடுத்துத் தேடுவார்கள். அந்தத் தேடலுக்குத் தகுந்தவாறு `சி.வி’ அம்சங்களை அமைக்கவும்.

சி.வி ரெடி... இனி தயாராகவேண்டியது நீங்கள்தான். வாழ்த்துகள்!’’

- கைகுலுக்குகிறார் நந்தினி!

அ.நிவேதா