பிரீமியம் ஸ்டோரி

`வேலைதேடல் செயலி'களின் அறிமுகம்...

வேலை தேட கோப்பு (ஃபைல்) ஒன்றை தூக்கிக்கொண்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கியது எல்லாம் அந்தக் காலம். இப்போது கைக்குள் அடங்கும் கைபேசி நம் கண் முன் கொண்டுவந்து கொட்டுகிறது... வேலைவாய்ப்பு விவரங்களை! வேலை தேடுவதற்கான பிரத்யேக `ஆப்’களை மொபைலில் டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான். அப்படி சில சூப்பர் ஸ்மார்ட் `ஜாப் சர்ச்சிங் ஆப்’களின் அறிமுகம் இங்கே...

ஆல் கவர்மென்ட் ஜாப் (All Government Job)

`ஆப்’ இருந்தால் ஜாப்!

அரசு வேலை வேட்டையில் இருப்பவர்களுக்கான ஆப் இது. வங்கி வேலைகள், ரயில்வே வேலைகள் என எந்த அரசுப் பணிக்கான அழைப்பு வெளியிடப்பட்டாலும், உடனே இந்த `ஆப்’பில் நோட்டிஃபிகேஷன் வந்துவிடும். ஒவ்வொரு நோட்டிஃபிகேஷனிலும் அந்தக் குறிப்பிட்ட வேலைக்கு எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள், தேர்வின் பாடப்பகுதி போன்ற விவரங்களும் இருக்கும்.

ஷைன் (Shine)

`ஆப்’ இருந்தால் ஜாப்!

கிட்டத்தட்ட `ஆர்குட்’ மாதிரி வேலைசெய்யும் ஆப் இது. இதனுடன் உங்கள் லிங்க்டுஇன் (LinkedIn) மற்றும் `ஜிமெயில்’ தொடர்புகளை சின்க் (Sync) செய்து, உங்கள் நண்பர்கள் வேலைசெய்யும் நிறுவனங்களிலும் வேலை தேடலாம். அந்த நிறுவனங்களில் அவர்கள் உங்களைப் பரிந்துரைக்க, அவர்களுக்கு வேண்டுகோள் அனுப்பலாம். முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்துவிட்டால், தகுதியான வேலைவாய்ப்பு கிடைக்கும்போது `ஆப்’பே உங்களுக்குத் தெரியப்படுத்தும்.

லிங்க்டுஇன் ஜாப் சர்ச் (LinkedIn Job Search)

`ஆப்’ இருந்தால் ஜாப்!

இந்த `ஆப்’பில் இடம், படிப்பு, சீனியாரிட்டி என பல பிரிவுகளின் அடிப்படையில் வேலை தேடலாம். கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் பயன்படுத்தும் இந்த `ஆப்’ இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளையும் தேட உதவும். ஆப் சர்ச் ஹிஸ்டரியை வைத்து, அதையொத்த மற்ற வேலைவாய்ப்புகள் ஏதேனும் வந்தால் தானாகவே நோட்டிஃபிகேஷன் கொடுக்கும். தேவைக்கு ஏற்ப கஸ்டம் சர்ச் செய்துகொள்ளும் வசதி, இதன் சிறப்பம்சம்.

டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு (TNPSC Tamil Nadu)

`ஆப்’ இருந்தால் ஜாப்!

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், அதற்கான அறிவிப்புகள், பாடத்திட்டங்கள், முந்தைய ஆண்டின் வினாத்தாள்கள், ஆன்லைன் தேர்வுகள் என அனைத்துக்குமான ஆப் இது. வினாத்தாளுக்கான பதில்கள், தேர்வு முடிவுகள், தேர்வு அட்டவணை என எல்லாவற்றையும் இந்த `ஆப்’பில் பார்த்துக்கொள்ளலாம்.

டைம்ஸ்ஜாப்ஸ் ஜாப் சர்ச் (TimesJobs Job Search)

`ஆப்’ இருந்தால் ஜாப்!

வசிக்கும் இடம், பணி அனுபவம், கல்வித் தகுதி என அனைத்து விவரங்களையும் இந்த `ஆப்’பில் உள்ள உங்கள் புரொஃபைலில் பதிவேற்றம் செய்துவிட்டால் போதும்... தானாக உங்கள் தகுதிக்கேற்ற வேலைகளை வடிகட்டிக் காட்டும். பலநூறு புதிய வேலைவாய்ப்புகள் தினந்தோறும் இந்த `ஆப்’பில் அப்டேட் செய்யப்படுகின்றன. ஜாப் டிஸ்க்ரிப்ஷன், நீங்கள் தேடும் வேலையை ஒத்ததுபோல் உள்ள சிமிலர் ஜாப்ஸ், இதுவரை உங்கள் புரொஃபைலை பார்த்திருப்பவர்களின் எண்ணிக்கை என அசத்தல் வசதிகள் இந்த `ஆப்’பில் உண்டு.

கிளாஸ்டோர் (Glassdoor)

`ஆப்’ இருந்தால் ஜாப்!

இந்திய கம்பெனிகள், வெளிநாட்டு கம்பெனிகள் என நீங்கள் வேலைக்காக நாடவிருக்கும் நிறுவனங்களின் முகவரிகளில் இருந்து, அதன் ஊழியர்களின் அனுபவங்கள், நிறுவனத்தின் வளர்ச்சி, குறிப்பிட்ட வேலைக்குத் தேவைப்படும் திறன்கள் என அந்த நிறுவனத்தைப் பற்றிய முழு விவரங்களையும் இந்த `ஆப்’பில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். அதே வேலைக்கு முன்னர் விண்ணப்பித்து தேர்வானவர்களின் நேர்காணல் அனுபவங்கள், சீனியர் ஆபீஸர்களின் அறிவுரைகள் என நல்ல வழிகாட்டியாக இருக்கும் ஆப் இது.

நௌக்ரி  (Naukri)

`ஆப்’ இருந்தால் ஜாப்!

இந்த `ஆப்’பில் உங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவேற்றம் செய்துவிட்டால், நிறுவனங்கள் உங்கள் புரொஃபைலைப் பார்த்துவிட்டு, திருப்தி என்றால் அவர்களே தொடர்புகொள்வார்கள். நீங்கள் விண்ணப்பித்திருக்கும் வேலையின் புராக்ரஸை ட்ராக் செய்யலாம். உதாரணத்துக்கு, உங்கள் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் ‘வியூ’ செய்யும் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இந்த `ஆப்’பில் உங்கள் விவரங்களைப் பதிவு செய்யாமல்கூட வேலை தேடலாம். 50 லட்சம் பேர் உபயோகிக்கும் `ஆப்’ இது என்பது குறிப்பிடத்தக்கது.

கோ.இராகவிஜயா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு