Published:Updated:

கதை கதையாம் காரணமாம்! - 6

கதை கதையாம் காரணமாம்! - 6
பிரீமியம் ஸ்டோரி
கதை கதையாம் காரணமாம்! - 6

இந்தக் காலத்து பிள்ளைகள் கதை கேட்க விரும்புகிறார்களா..?

கதை கதையாம் காரணமாம்! - 6

இந்தக் காலத்து பிள்ளைகள் கதை கேட்க விரும்புகிறார்களா..?

Published:Updated:
கதை கதையாம் காரணமாம்! - 6
பிரீமியம் ஸ்டோரி
கதை கதையாம் காரணமாம்! - 6
கதை கதையாம் காரணமாம்! - 6

`கதை சொல்வதன் மூலம் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தலாம்... ஒருவருக்கொருவர் புரிதல்களை விரிவுபடுத்தும் என்றெல்லாம் கூறுவது சரி. ஆனால், இந்தக் காலத்து பிள்ளைகள் கதை கேட்க விரும்புகிறார்களா... அப்படியே கேட்டாலும் கதையின் மூலம் சிந்திக்கத் தயாராக இருக்கிறார்களா?’

இந்தக் கேள்வி இயல்பாகவே எழக்கூடும். ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதில், எப்போதுமே பெரியவர்களைவிட பிள்ளைகள் ஆர்வத்துடன் இருப்பார்கள். வீட்டில் உள்ள செல்போனில் என்னென்ன ஆப்ஷன்கள் இருக்கின்றன என்பது பற்றி அப்பாவைவிட, நான்காவது, ஐந்தாவது படிக்கும் மகனுக்கு அதிகமாகத் தெரியும். கால் டாக்ஸியை புக் செய்வதற்கு பெரியவர்கள் தடுமாறும்போது பிள்ளைகள் ஈஸியாக அதைச் செய்துவிடுவார்கள்.

பிள்ளைகளுக்கு நீங்கள் செல்போன் கொடுத்தீர்கள்; அவர்கள் அதை வைத்து என்ன செய்யலாம் என்று ஆராய்ந்தார்கள். அவர்களிடம் கதையையும் கொடுங்கள்; நிச்சயம் கதைகளோடு பயணிப்பார்கள். உங்களைவிட சிறப்பான கதைசொல்லியாக மாறிவிடுவார்கள். இதை நம்பிக்கை ஊட்டுவதற்காக, கற்பனையாக எழுதவில்லை. கதையைச் சிறுவர்கள் நிச்சயம் பின்தொடர்வார்கள்; நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத விதத்தில் புதிய விஷயத்தை கதைக்குள் கொண்டுவருவார்கள் என்பதற்கு ஓர் உண்மைச் சம்பவத்தை பகிர்கிறேன்.

கதை கதையாம் காரணமாம்! - 6

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேட்டுப்பாளையம் அருகே ஓர் அரசுத் தொடக்கப் பள்ளி. அங்கு வருடத்துக்கு ஒருமுறை கதை விழா நடக்கும். கதை சொல்வது, விடுகதை, பாடல், நாடகப் பயிற்சி, விளையாட்டு, பொம்மைகள் செய்வது என விதம்விதமான நிகழ்ச்சிகளுடன் மூன்று நாட்களும் திருவிழா போல அந்தப் பள்ளியில் மகிழ்ச்சி கரைபுரண்டோடும். தமிழ்நாட்டின் வெவ்வேறு ஊர்களில் இருந்து கதைசொல்லிகள், நாடகக்காரர்கள், எழுத்தாளர்கள் விருப்பத்துடன் அங்கே வந்து மாணவர்களோடு மாணவர்களாக கலந்துவிடுவர். அந்தத் திருவிழாவின் ஒரு பகுதியான கதை உருவாக்கத்தில் நடந்தது, ரொம்பவும் சிலிர்ப்பான அனுபவம்.

இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள், வகுப்பறையில் வட்டமாக அமர்ந்திருக்க, அவர்களை வெளியே அழைத்து வருகிறார் கதைசொல்லி. மாணவர்களை, பத்து நிமிடங்கள் வானத்தை வேடிக்கை பார்க்கச் சொன்னார். வானத்தைப் பார்க்கும் காரணத்தைக் கூறவில்லை. மலையை ஒட்டிய கிராமம் என்பதால் வானத்தில் மேகங்கள் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தன. பத்து நிமிடங்கள் முடிந்ததும் மாணவர்கள் மீண்டும் வகுப்பறையில் உட்கார்ந்தனர். அவர்களிடம் சார்ட்டைக் கொடுக்கிறார், கதை சொல்லி. சார்ட்டின் மூலையில் சின்னதாக கட்டம்போட்டு, மேகத்தை வரையச் சொன்னார். மாணவர்களும் வரைந்தனர். அடுத்து, `வானத்தில் இருந்த மேகத்தைப் பார்த்தபோது, ஏதேனும் உருவம் தெரிந்ததா?’ என்று கேட்க, மாணவர்கள் ஆரவாரமாக ஆளுக்கொரு உருவத்தைச் சொன்னார்கள். உடனே அந்த உருவத்தை சார்ட்டின் மீதமுள்ள இடத்தில் வரையச் சொன்னார். சில மாணவர்கள் தாங்கள் இரண்டு, மூன்று உருவங்களைப் பார்த்தோம் என்றதும், ``அவை எல்லாவற்றையும் வரையுங்கள்’’ என்றார்.

கதை கதையாம் காரணமாம்! - 6

மாணவர்கள் ஆர்வமாக வரைந்து கொண்டிருக்க, மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தவருக்கு பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. சிங்கம், புலி, கரடி, மான் போன்ற விலங்குகளையும்... துப்பாக்கி, விமானம், கத்தி, மரம் போன்றவற்றையும் வரைந்துகொண்டிருந்தனர். எல்லோரும் வரைந்து முடித்ததும், சார்ட்டைத் தலைக்கு மேலே தூக்கிக் காட்டச் செய்தார். `மேகத்தில் தான் கண்ட உருவத்தை, வேறு யாராவது பார்த்திருக்கிறார்களா?’ என்று ஆவலுடன் மற்றவர்களின் ஓவியங்களைப் பார்த்தனர். பலரும் புலி, விமானம், துப்பாக்கிகளை மேகத்தில் பார்த்திருக்கிறார்கள்.

“வானத்தைப் பார்த்தீர்கள், அதில் பார்த்த மேகத்தையும் மேகத்தில் பார்த்த உருவத்தையும் வரைந்தாகிவிட்டது, அடுத்து இதை வைத்து கதையை உருவாக்கலாமா?” என்றார். மாணவர்களில் ஒருவர்கூட தயங்கவே இல்லை. `‘நாங்க ரெடி’’ என்று சத்தமாகச் சொன்னார்கள்.

“சரி, மேகம் மற்றும் அதில் நீங்கள் பார்த்த உருவம் இரண்டையும் இணைத்து ஒவ்வொருவரும் கதை சொல்லுங்கள்” என்று அவர் சொல்லி முடித்ததும், `நான்தான் முதலில் சொல்வேன்’ என போட்டி போட்டனர். அதற்கு ஒரு சின்ன போட்டி வைத்தார். ``நான் விசில் ஊதியதும், சார்ட்டின் பின்பக்கத்தில் ஒரு புறாவை வரைய வேண்டும், யார் விரைவாக வரைகிறாரோ அவரே முதலில் கதை சொல்ல வேண்டும். அவருக்கு அருகில் இருப்பவர் அடுத்து கதை சொல்ல வேண்டும்’’ என்றதும், போட்டி நடந்து, வெற்றிபெற்றவர் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார். அரை மணி நேரத்துக்கு முன் இந்தக் கதை அவர்களுக்குத் தெரியாது; நாம் இந்தக் கதையை உருவாக்குவோம் என்பதும் தெரியாது. ஒன்றுக்குப் பின் ஒன்றான பயிற்சியில் ஒவ்வொருவரும் அசத்தினர். மாணவர்கள் தங்கள் கதையை ஒரு பேப்பரில் எழுதியும் கொடுத்தனர். இதில் ஏழாம் வகுப்பு படித்த சிந்துஜாவின் கதை மிக முக்கியமானது. சிந்துஜா மேகத்தில் பார்த்த உருவங்கள் இரண்டு: கரடி, கிளி. இவற்றோடு மேகத்தையும் இணைத்து அவர் உருவாக்கிய கதையைப் படிக்க ரெடியா..?

கதை கதையாம் காரணமாம்! - 6

ஒரு கிளி உணவு தேடிச் செல்லும் போது, காட்டைத் தாண்டி ஊருக்குள் வந்துவிட்டது. மரம் ஒன்றில் உட்கார்ந் திருந்தபோது, யாரோ அதைக் கல்லால் அடித்துவிட்டனர், எப்படியோ பறந்து காட்டுக்குள் வந்து விட்டது, ஆனால், கிளியால் ரொம்ப நேரம் பறக்க முடியாமல், மயங்கி மண்ணில் விழுந்துவிட்டது. அப்போது அந்தப் பக்கமாக வந்த கரடி, கிளியைப் பார்த்து பரிதாபப்பட்டது. கிளியைத் தூக்கி, சின்னப் பாறை மேல் வைத்துவிட்டு, தண்ணீர் எடுக்கச் சென்றது. ஓடை அருகே சென்றபோதுதான் கிளியைச் சுட்டெரிக்கும் வெயிலில் போட்டுவிட்டு வந்தது கரடிக்கு உறைத்தது. அவசரம் அவசரமாக தண்ணீர் எடுத்துச் சென்றபோது, கிளி படுக்க வைக்கப்பட்டிருந்த பாறை மட்டும் நிழலாக இருக்க, அதைச் சுற்றி வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. கரடி ஆச்சர்யப்பட்டு மேலே பார்த்தபோது, ஒரு மேகம் ஆடாமல் அசையாமல் அங்கே நின்று, கிளிக்கு நிழல் தந்தது. கரடி, கிளியின் மயக்கத்தைப் போக்கியது. மேகம் பற்றி கிளியிடம் கரடி கேட்டதற்கு, ‘ஓ! அதுவா... மேகம் என்னோட ஃப்ரெண்ட்!” என்று சொன்னது. சில நாட்களில் கிளியின் காயம் சரியாகி, இயல்பாக பறக்க ஆரம்பித்துவிட்டது.

கதை கதையாம் காரணமாம்! - 6

தன் உயிரைக் காப்பாற்றிய கரடிக்கு ஏதேனும் பரிசு கொடுக்க கிளி ஆசைப்பட்டு, கரடியிடம், “வெகுதூரத்தில் சிவப்பு வண்ணத்தில் ஒரு பழம் இருக்கு, ரொம்ப சுவையாக இருக்கும், அதைப் பறித்து வந்து தரவா?” என்று கேட்டது, செய்த உதவிக்கு பரிசெல்லாம் வேண்டாம் என கரடி மறுத்துவிட்டது. “ஆனால், எனக்கு ஓர் ஆசை இருக்கு. உன்னோட ஃப்ரெண்ட் மேகத்தை நான் ஒரு தடவை தொட்டுப் பார்க்க வேண்டும்” என்றது கரடி. கரடியைத் தூக்கிக்கொண்டு எப்படி பறப்பது என்று யோசித்தது கிளி. காட்டில் பலரிடம் யோசனை கேட்டும் பலனில்லை. கரடியின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என வருத்தத்துடன் பறந்துகொண்டிருந்த கிளியின் கவலையை மேகம் தெரிந்துகொண்டது. அதற்காக ஒரு திட்டம் தீட்டி கிளியிடம் கூறியது. மேகத்தின் திட்டப்படி, ஒரு சின்னப் பாறையின் மேல் கரடி நின்றுகொண்டது. மேகம் தன்னில் ஒரு பகுதியை மழையாக பெய்து, கரடியைத் தொட்டது.

கதை கதையாம் காரணமாம்! - 6

இப்படித்தான் சிந்துஜா அந்தக் கதையை முடித்திருந்தார். அந்த விழாவுக்கு வந்திருந்த அனைத்து கதைசொல்லிகளும் சிந்துஜாவின் கதையைப் படித்து வியந்துபோயினர். மலையாளத்திலிருந்து மிகச்சிறப்பான நூல்களை, குறிப்பாக குழந்தைகளின் நூல்களை மொழிபெயர்க்கும் எழுத்தாளர் யூமா வாசுகி, சிந்துஜாவின் கதையைப் படித்தபோது, ‘மிகச்சிறந்த சிறார் கதையைப் படிக்கும் உணர்வு ஏற்படுகிறது’ என்று பாராட்டினார்.

இப்போது சொல்லுங்கள்... பிள்ளைகள் கதைகளோடு பயணிக்கத் தயாராகத்தானே இருக்கிறார்கள்..!

கதைப் பயிற்சிக்கு செல்வோமா? நேற்றிரவோ அல்லது இதற்கு முன் இரவுகளிலோ கனவு கண்டிருப்பீர்கள் அல்லவா... அதை ஓர் ஓவியமாக வரையுங்கள். அந்த ஓவியத்தை வைத்துக்கொண்டு புதிய கதையை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்.

விஷ்ணுபுரம் சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism