ஒரு டஜன் யோசனைகள்!

ன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. பெற்றோர்களும் மாணவர்களும் கல்லூரி அட்மிஷனுக்கான வேலைகளில் தீவிரமாக இருப்பார்கள். இந்த இதழ் `ஒரு டஜன் யோசனைகள்' பகுதியில் வங்கியில் கல்விக் கடன் பெறுவதற்கான வழிகாட்டல்களைத் தருகிறார், `சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா' வங்கியின் சீனியர் மேனேஜர் ரவீந்திர குமார்.

1. தகுதி நிர்ணயம்

பத்தாம் வகுப்பு தேர்வானவர்கள் ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வானவர்கள் எந்தப் பிரிவில் இளநிலை கற்கவும் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

2. இணைக்க வேண்டியவை

• சேரவிருக்கும் கல்லூரியின் கல்விக் கட்டண விவரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• பத்தாம் வகுப்பு / பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்று

• பிறப்புச் சான்று

• குடும்ப அட்டை

• சாதிச்சான்று

• கல்லூரியில் அட்மிஷன் பெற்றதற்கான சேர்க்கை சான்று

• வங்கி பாஸ்புக்

இவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.

3. கடன் தொகை

இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனங்களில், அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் சேர அதிகபட்சமாக 10 லட்சம் வரை கல்விக்கடன் தரப் படுகிறது. வெளிநாடுகளில் படிக்கச் செல்பவர்கள், 20 லட்சம் வரை கடன் தொகை பெற்றுக்கொள்ளலாம்; அவர்கள் போக்கு வரத்துச் செலவுக்கும் கடன் பெறலாம்.

4. முன்பணம்

இந்தியாவில் படிக்கிறவர்கள், 4 லட்சம் வரை எந்த முன் பணமும் செலுத்தாமல் கல்விக்கடன் பெற இயலும். அதற்கு மேலான தொகைக்கு விண்ணப்பிக்கும்போது, கடன் தொகையில் 5% முன்பணமாக செலுத்த வேண்டும். அதுவே வெளிநாடுகளில் படிக்கச் செல்பவர்கள், 4 லட்சத்துக்கு மேல் கல்விக்கடனுக்கு விண்ணப்பித்தால் 15.5% வரை முன்பணமாக செலுத்த வேண்டும். 

5. இன்ஷூரன்ஸ் கட்டாயம்

கல்விக்கடன் பெற, இன்ஷூரன்ஸ் கட்டாயம். அதற்கான ப்ரீமியத்தை வங்கியே மாணவரின் கடன் தொகையில் இருந்து செலுத்தும். ஒருவேளை எதிர்பாராதவிதமாக அந்த மாணவர் இறந்துபோனால், அவர் செலுத்த வேண்டிய கடனை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வங்கி பெற்றுக்கொள்ளும்.

6. உத்தரவாதம்

ஒரு டஜன் யோசனைகள்!

கல்விக்கடன் தொகை 7.5 லட்சத்துக்கு மேல் எனில், அந்த மாணவருடன் பெற்றோரும் கல்விக்கடன் ஆவணங்களில் உத்தரவாத கையெழுத்திட வேண்டும்.

7. வட்டிச் சலுகை

கல்விக்கடன் பெறும் மாணவர்கள் புரொஃபஷனல் கோர்ஸ் படிக்கும்பட்சத்தில், அவர்களுக்கு மத்திய அரசு வட்டிச் சலுகை அளிக்கிறது. அதற்கு பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 4.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. இந்த வட்டிச் சலுகையை படிப்பு முடிந்த ஒரு வருடம் வரை பெற முடியும். இதைப் பெற விரும்பும் மாணவர்கள், பெற்றோர்களின் வருவாய் சான்றிதழை தங்கள் பகுதியில் உள்ள தாசில்தாரிடம் பெற்று இணைக்கவும்.

8. வட்டி விகிதம்

வங்கிகளில் தற்போது `மார்ஜினல் காஸ்ட் ஆன் லெண்டிங் அண்ட் ரெட்' முறையில் வட்டி வசூலிக்கப்படுகிறது. அதாவது, தொடக்க நிலை வட்டியானது 11.5% வசூலிக்கப்படுகிறது. வங்கிகளைப் பொறுத்து இந்த வட்டி சதவிகிதம் மாறுபடலாம். எனினும் தனியார் வங்கிகளில் கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கவும்.

9. காத்திருப்பு நேரம்

வங்கிகளில் கல்விக்கடன் பெற விண்ணப் பித்து அதற்கான சான்றிதழ்களை இணைத்துக்கொடுத்த 15 நாட்களில் இருந்து ஒரு மாத காலத்துக்குள் அவர்களின் விண்ணப் பம் வங்கிகளால் பரி சீலனை செய்யப்பட்டு கடன் கொடுக்கப்படும்.

10. ஆன்லைன் விண்ணப்பம்

‘வித்யாலட்சுமி’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கல்விக்கடன் பெற www.vidyalakshmi.co.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பம், நீங்கள் கல்விக்கடன் பெற விரும்புவதாக அதில் குறிப்பிட்டிருக்கும் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வங்கிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கும்போது, மறக்காமல் ரசீது வாங்கவும்.

11. ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கடன்...

ஒரே குடும்பத்தில் எத்தனை பிள்ளைகள் வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் கல்விக்கடன் பெற இயலும். மேலும், வட்டிச்சலுகை பெற தகுதி இருப்பின், அந்தக் குடும்பத்து மாணவர்கள் அனைவரும் அதைப் பெற்றுக்கொள்ளலாம்.

12. கல்விக்கடனை திருப்பிச் செலுத்தும் காலம்

கடன் பெறப்பட்ட இரண்டாம் மாதத்தில் இருந்தே செலுத்தத் தொடங்கலாம். அது இயலாதவர்கள், படிப்பை முடித்த 6 மாதத்துக்குள் செலுத்த ஆரம்பித்து, 15 ஆண்டுகளுக்குள் முழுக்கடனையும் முடித்திருக்க வேண்டும். வேலை கிடைக்காதபட்சத்தில், படிப்பை முடித்த ஒரு ஆண்டு காலத்துக்குள் செலுத்த ஆரம்பிக்க வேண்டும்.

கல்விக்கடன்... காலத்தில் கிடைக்கும் உதவி!

சு.சூர்யா கோமதி, படங்கள்:மீ.நிவேதன்