
வேதனைப்படுத்தும் வாய்ப்புண்... விடுபடும் வழிமுறைகள்!

சரியாக சாப்பிடாமல் அவசர அவசரமாக கல்லூரிக்கு செல்லும் இளம்பெண்கள் பலரும் வாய்ப்புண்ணால் அவதியுற்று வருகிறார்கள். உணவை உட்கொள்ளும் வாயில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்கொள்வது ரொம்ப முக்கியம் கேர்ள்ஸ்!
“நேரத்துக்கு உணவு உட்கொள்ளாத காரணத்தால் முதலில் சிறிதாகத் தோன்றும் வாய்ப்புண் கவனிக்காமல் விடும்போது குழிப்புண்ணாக மாறிவிடும். பேச, சிரிக்க, சாப்பிட என எல்லாவற்றுக்கும் `செக்' வைக்கும். எனவே, ஆரம்பத்திலேயே அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்வது முக்கியம்’’ என்று சொல்லும் மதுரையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஸ்வேதா ரவிச்சந்திரன், அது குறித்த விழிப்பு உணர்வு தகவல்கள் தந்தார்.
வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது?
வாய்ப்புண், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்கள், வயிற்றுப்புண் கொண்டவர்களையே அதிகம் தாக்குகிறது. எந்நேரமும் வேலை, டென்ஷன், ஸ்ட்ரெஸ் என இருக்கும் பெண்களுக்கும் வாய்ப்புண் வர வாய்ப்புகள் அதிகம். மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினாலும் சிலருக்கு வாய்ப்புண் ஏற்படலாம். உணவு உண்ணும்போது உதடுகளிலும், வாயின் உட்பகுதியிலும் பல் குத்துவதாலோ அல்லது கடித்துக்கொள்வதாலோகூட புண் ஏற்படலாம். சிலருக்கு ஒவ்வாமையாலும் வாய்ப்புண் வரலாம். சமயங்களில் காலாவதியான லிப்ஸ்டிக் அல்லது லிப்பாம்கூட ஒவ்வாமை ஏற்படுத்தி வாய்ப்புண்ணுக்குக் காரணமாகலாம்.
செய்ய வேண்டியவை!
• வைட்டமின் B-12, இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் குறைபாட்டால் வாய்ப்புண் ஏற்படும் என்பதால், இந்தச் சத்துகள் மிகுந்த உணவு வகைகளை முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக்கொண்டால், தானாகவே வாய்ப்புண் குணமாகும்.

• வாய்ப்புண்ணுக்கு, தேங்காய்ப்பால் சிறந்த நிவாரணி. உணவாக எடுத்துக் கொள்வதுடன் அந்தப் பாலில் வாய் கொப்பளித்து வர, வலி குறையும்.
• சுள்ளென வலிக்கும் வாய்ப்புண்ணை விரைவில் குணமாக்க நெய், தேன் அல்லது தேங்காய் எண்ணெய் தடவலாம்.

• துளசி இலையை மென்றுவந்தாலும் விரைவில் குணமடையும் வாய்ப்புண். மேலும் பொதுவாகவே துளசி இலையை அவ்வப்போது மென்றுவருவது, வாய்ப்புண் ஏற்படுவதைத் தடுக்கும்.
• பல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பற்களுக்கேற்ற சிறந்த ஆன்ட்டிசெப்டிக் மவுத்வாஷால் தினமும் வாய்கொப்பளித்து வர, வாயில் கிருமிகள் அண்டாது; வாய்ப்புண் வருவதும் குறையும். வாய்ப்புண்ணைத் தடுக்க, டென்டல் ஹைஜீன் மிகவும் முக்கியம்.

• வாய்ப்புண் வராமல் தடுக்க, அதிகம் உப்புள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.
செய்யக் கூடாதவை!
• எப்போதும் வாயின் ஒரு பக்கத்தில் மட்டும் உணவை அசைபோடக்கூடாது.
• கடினமான பிரஷ்கொண்டு, மிகவும் அழுத்தி, மிக அதிக நேரம் பல்துலக்கக் கூடாது.
• மிகவும் குளிரான பானங் களை நேரடியாக அருந்தா மல், ஸ்ட்ரா மூலம் அருந்தலாம்.
• ஊறுகாய் மற்றும் அமிலத்தன்மை அதிகம் உள்ள பொருட்களைத் தவிர்க்கவும்.
• நீண்ட நாட்களாகியும் ஆறாமல் இருக்கும் வாய்புண்ணை கவனிக்காமல்விட்டால், பெரிய நோய்களுக்கு அது வழிவகுக்கும்.
• வாய்ப்புண்ணோடு காய்ச்சல், வயிற்றுவலி, எடை குறைவு காணப்பட்டால், காலம்தாழ்த்தாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
• ஒரே நேரத்தில் நிறைய இடங்களில் வாய்ப்புண் வந்தாலோ அல்லது வாய்ப்புண் குணமாக 10 நாட்களுக்கும் மேல் ஆனாலோ உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
உணவால் சரிசெய்யலாம்!

வாய்ப்புண் வருவதைத் தடுக்கவும், வந்துவிட்டால் விரைவில் குணமடையவும் உணவு முறையில் மாற்றம் செய்வது உதவும். பால், தயிர், கீரை, பச்சைக் காய்கறிகள் என எதையும் ஒதுக்கிவைக்காமல் சாப்பிடவும். நிறைய தண்ணீர் குடித்து உடல் சூட்டை தணிப்பதும் வாய்ப்புண் தவிர்க்க கைகொடுக்கும். பழங்களில் ஆப்பிளும் வாழைப்பழமும் அடிக்கடி உண்டு வர, வாய்ப்புண் வருவது குறையும். இளநீர் அருந்துவது, மீண்டும் மீண்டும் வரும் குழிப்புண்களிடம் இருந்து நிவாரணம் கொடுக்கும். தினமும் இரண்டுவேளை மோர் அருந்தி வருவது வாய்ப்புண் வராமல் தடுப்பதோடு உடற்சூட்டை தணித்து பல நோய்களில் இருந்து காக்கும்.
வாய்ப்புண்ணில் இருந்து விடுபடலாம்... வாழ்க்கை முறை மாற்றத்தால்!
கோ.இராகவிஜயா