
நமக்குள்ளே!
‘நம்ம தெருமுனையில் தள்ளுவண்டியில அயர்ன் பண்ணி கொடுக்குறவங்களோட பையன் 500-க்கு 475 மார்க் வாங்கியிருக்கான். அவங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஸ்கூல் பக்கம் எட்டிக்கூட பார்த்திருக்க மாட்டாங்க. அயர்ன் கடையில வேலை பார்த்துக்கிட்டே இவ்வளவு மார்க் வாங்கியிருக்கான். ஆனா, குடிச்ச காபி டம்ளரைக்கூட கழுவி வைக்காத நம்ம பசங்க அந்த அளவுக்கு வாங்கல!’

- காலையில் வாக்கிங் சென்றபோது இப்படி ஓர் உரையாடல் காதில் விழுந்தது. வாக்கிங் போகும்போதே இந்த அளவுக்கு அந்த மனிதர் எரிச்சலுடன் புலம்புகிறார் என்றால், வீட்டில் மகன் / மகளை என்ன பாடு படுத்தியிருப்பார்?
பேப்பரைத் திறந்தால்... ப்ளஸ் டூ, பத்தாம் வகுப்பு, சி.பி.எஸ்.சி என்று அடுத்தடுத்து தேர்வு முடிவுகள் வெளியாவதோடு... கடும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு இடையே படித்து மாநில அளவில் ரேங்க் வாங்கிய மாணவ - மாணவியரின் பேட்டிகள் பிரமிக்க வைக்கின்றன. பலவிதமான குடும்ப சிரமங்களுக்கு இடையே படித்து சிறப்பான மதிப்பெண்கள் எடுத்திருப்பவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
`நீயும் இப்படியெல்லாம் மார்க் வாங்கணும்... அம்மா, அப்பாவை பெருமைப்படுத்தணும்’ என்று மற்ற குழந்தைகளை ஊக்கப்படுத்துவதிலும் தவறில்லை. ஆனால், இந்த விஷயத்தை குழந்தைகளின் மனதில் பயமாகவும், தலையில் சுமையாகவும் ஏற்றி வைப்பதுதானே பெரும்பாலும் நடக்கிறது!
இப்படியெல்லாம் குழந்தைகளை வறுத்தெடுத்தால், அது அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்குமா அல்லது தன்னம்பிக்கையை இழக்க வைக்குமா?
அடுத்தவர்களோடு தங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஒப்பிட்டு கோபப்படுகிற எந்த அப்பா, அம்மாவின் நோக்கமும் நிச்சயம் தங்கள் பிள்ளைகளை மட்டம் தட்டுவது இல்லைதான். ஆனால், இப்படிப் பேசுவதால்... பிள்ளைகள் தங்களை மட்டமானவர்கள் என்று நினைத்துக்கொள்வதுதான் பெரும்பாலும் நடக்கிறது!
ஆகவே, `உன் முயற்சியை நீ கைவிட்டுடவே கூடாது. இந்த வருஷம் நீ கஷ்டப்பட்டு உழைச்சா, அதுக்கான பலன் உன்னை நிச்சயம் வந்தடையும். அதேசமயம், நீ என்ன மார்க் வாங்கினாலும், நாங்க உன் பக்கம்தான்’ என்று அன்பாகவும் ஆதரவாகவும் தட்டிக் கொடுப்பதுதானே சரியாக இருக்கும் தோழிகளே!
உரிமையுடன்,

ஆசிரியர்