தன்னம்பிக்கை
Published:Updated:

எளிமை... கருணை... எம்.எஸ்..! இசைப் பேரரசியின் வாழ்க்கைத் தருணங்கள்

எளிமை... கருணை... எம்.எஸ்..!  இசைப் பேரரசியின் வாழ்க்கைத் தருணங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
எளிமை... கருணை... எம்.எஸ்..! இசைப் பேரரசியின் வாழ்க்கைத் தருணங்கள்

சகாப்தம்

எளிமை... கருணை... எம்.எஸ்..!  இசைப் பேரரசியின் வாழ்க்கைத் தருணங்கள்

எம்.எஸ். சுப்புலெட்சுமியின் நூற்றாண்டு விழா கொண்டாடுப்படுவதை முன்னிட்டு அவர் குறித்த முழுமையான புத்தகம் ஒன்றைத் தொகுத்திருக்கிறார் எழுத்தாளர் ரமணன். பலர் அறியாத எம்.எஸ். அம்மாவின் வாழ்க்கைத் தருணங்களை அவர் பகிர்ந்துகொள்கிறார்...

‘‘பொதுவாக எல்லோருக்கும், எம்.எஸ் என்றால், புகழின் உச்சியில் இருந்த ஒரு சங்கீதக் கலைஞராகத்தான் தெரியும். ஆனால், அந்த உயரத்துக்கு வர்றதுக்கு முன்னால் அவர் வாழ்வில் பட்ட சோதனைகளும், அதைத் தாங்கிய நெஞ்சுரமும் பலரும் அறியாதவை.

மதுரையில், ஒரு தேவதாசி குடும்பத்தில் பிறந்தவங்க எம்.எஸ்.சுப்புலெட்சுமி. கோயிலில் சதிர் ஆடுவது, ஜமீன்தார்கள் அல்லது செல்வந்தர்களுடன் மனைவி அந்தஸ்து இல்லாமல் வாழ்வது... இப்படித்தான் அந்தக் காலத்தில் இருந்தது அந்தக் குலப் பெண்களின் வாழ்க்கைமுறை.

சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பச்சூழலில், தன் ஏழு வயசிலேயே ‘நான் கோயிலில் சதிர் ஆடமாட்டேன்’னு துணிச்சலாக மறுத்தாங்க எம்.எஸ். பாட்டு கத்துக்க ஆசை; ஆனா, அதுக்குப் பணம் இல்லை.

எம்.எஸ்-ஸின் அக்காவை ஒரு ஜமீன்தாருக்கு அந்தஸ்து இல்லாத மனைவியாக்கிய அவருடைய அம்மா ஷண்முகவடிவு, இளைய மகளுக்கும் அப்படி ஓர் எதிர்காலத்தை யோசிச்சப்போ, ‘முடியவே முடியாது’ என்று அழுத்தமாக மறுத்தபோது, அந்த சின்னப் பெண்ணுக்கு வயது 16.

‘ஒண்ணு சங்கீதம் கத்துக்குவேன்; இல்லேன்னா கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒருத்தருக்கு மனைவியாக வாழ்வேன். இப்படி ஒரு வாழ்க்கைக்கு சம்மதிக்க மாட்டேன்’னு அந்தக் காலத்தில், அந்த வயதில் குலவழக்கத்தை மீறி முடிவெடுக்க, எவ்வளவு துணிவும் மன உறுதியும் இருக்கணும்?!

தானே கேள்வி ஞானத்தால் சங்கீதம் கத்துக்க ஆரம்பிச்சாங்க எம்.எஸ். அம்மாவின் வீணை ரெக்கார்டிங்குக்கு தானும் கூடப்போன ஒரு சமயத்தில், எதேச்சையா அங்கே மிகக் கடினமான ஒரு பாட்டை அநாயாசமாகப் பாடுறாங்க. அது ரெக்கார்டிங் செய்யப்பட்டு, பயங்கரமா சேல்ஸ் ஆகுது. அங்கேதான் ஆரம்பிக்குது அவங்களோட மாபெரும் சங்கீதப் பயணம். அதன் பிறகு அரியக்குடி, செம்பைனு பெரிய வித்வான்கள்கிட்டே இசையை முறைப்படி கத்துக்கும் வாய்ப்பு கிடைக்குது. அந்தக் காலத்தில் சென்னை மியூசிக் அகாடமியில் பெண்கள் பாடறதுக்கு அனுமதி இல்லை.

ஆனால், ஈஸ்வர அய்யர் என்பவரின் ஆதரவால் முதன் முதலில் எம்.எஸ். அம்மா மியூசிக் அகாடமியில் பாடி சாதனை படைச்சாங்க. அதன் மூலம் அவங்களுக்கு மிகப்பெரிய புகழ் கிடைச்சது. அதன் பின், சென்னைக்கே குடிவந்துட்டாங்க. அதுவரையில் கல்யாணக் கச்சேரிகளில் மட்டுமே கேட்க முடிந்த அவரின் காந்தக் குரலை, மேடைக் கச்சேரிகளில் பரவலாகக் கேட்க முடிஞ்சது.

‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் விளம்பரப் பிரிவில் வேலைபார்த்து வந்த சதாசிவம், ஒரு கட்டுரைக்கு புகைப்படம் எடுக்கும் விஷயமா எம்.எஸ் அம்மாவைச் சந்திச்சார். அது பின்னர் காதலாகத் தொடர்ந்தது. ஆனால், சதாசிவத்துக்கு ஏற்கெனவே திருமணமாகி மூன்று மகள்களும் இருந்தாங்க. உடல்நலம் சரியில்லாமல் இருந்த சதாசிவத்தின் முதல் மனைவி காலமான பின்னால், எம்.எஸ்-ஸை கல்யாணம் பண்ணிக்கிட்டார் சதாசிவம். இந்தத் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. சதாசிவத்தின் மூணு மகள்களையும் தன் குழந்தைகள்போலக் கடைசிவரை பாசமாகப் பார்த்துக்கிட்டாங்க எம்.எஸ்.

தன் மனைவியை கலையுலகில் மிகப் பெரிய நட்சத்திரம் ஆக்கணும் என்பது சதாசிவத்தின் கனவு. அதற்கு கச்சேரிகள் மட்டுமே போதலை. அந்தச் சமயத்தில்தான் எம்.எஸ்-ஸுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கணவரின் விருப்பத்துக்காக படத்தில் நடிக்க சம்மதிச்சாங்க. ஆங்கிலேய இயக்குநர் டங்கனின் ‘சகுந்தலை’ அபார வெற்றிப் படம் ஆச்சு. தமிழில் வெளிவந்து, இந்தியிலும் ‘டப்’ பண்ண தால, இந்தியா முழுவதும் ஓடி, 1940-களில் எம்.எஸ் அம்மா அகில இந்திய பிரபலம் ஆனாங்க. புகழின் உச்சிக்குப் போனாலும் அந்தத் தன்னடக்கமும் சதாசிவத்தின் அடி தொடரும் பதிபக்தியும் கொஞ்சமும் குறையல.  ‘மாமா சொன்னா நடிக்கிறேன்!’ - இதுதான் யார் வந்து நடிக்கக் கேட்டாலும் எம்.எஸ் சொல்லும் பதில்! புகழின் உச்சியில் இருக்கும்போதே, திடீர்னு ஒருநாள் கணவரின் முடிவுக்குக் கட்டுப்பட்டு ‘சினிமாவில் நடிப்பதில்லை’ என்று முடிவு செஞ்சு, அப்படியே நிறுத்திட்டாங்க.

சதாசிவம் - சுப்புலெட்சுமி தம்பதியின் தாம்பத்யம், ஒர் அழகான கவிதை. எம்.எஸ் பாடறப்போ, முன் வரிசையில் முதல் ஸீட்டில் உட்கார்ந்து தலையாட்டி ரசிப்பார் சதாசிவம். ‘பாட்டு நல்லாயில்லை’ என்பதை அவருடைய தலையசைப்பிலிருந்தே கண்டுபிடிச்சிடுவாராம் எம்.எஸ். எத்தனை பேர் இருந்தாலும், கச்சேரி முடிந்ததும் சபாக்காரர்கள் தரும் சன்மான கவரைக் கொண்டுவந்து கணவரின் பாதங்களில் வைத்து, அங்கேயே நமஸ்கரிப்பார் அந்த மனைவி!

ஐந்தாம் வகுப்புவரையே படிச்ச அந்த இசைப் பேரரசி, தெலுங்கு, மலையாளம், மராட்டி, இந்தி, பெங்காலி,

எளிமை... கருணை... எம்.எஸ்..!  இசைப் பேரரசியின் வாழ்க்கைத் தருணங்கள்

ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் பாடி, அந்தந்த மொழி ரசிகர்களை மெய்மறக்க வெச்சிடுவார். ஃபிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்குப் போய் கச்சேரி பண்ணியிருக்கார். கையில் பேப்பர் வெச்சுக்காம பாடிய மேதை... 2,500 பாடல்களை மனப்பாடமாக வெச்சிருந்தார்னா அந்த ஞானத்தை என்னன்னு சொல்றது?!

ராஜாஜி எழுதிக் கொடுத்து, ஐக்கிய நாடுகள் சபையில் எம்.எஸ் பாடிய பாட்டுதான்... ‘குறையொன் றும் இல்லை!’. வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாமம் எல்லாம் பாடறப்போ, ரெக்கார்டிங் போறதுக்கு முன் தன்னுடைய உச்சரிப்பு, வார்த்தைகள் எல்லாம் சரியா இருக்கான்னு சம்பந்தப் பட்ட பெரியவங்ககிட்ட கேட்டுக் குவாங்க. கடைசி வரை ஒரு மாண வியாவே இருந்தாங்க எம்.எஸ்.

எம்.எஸ் அம்மாவின் இன்னொரு அபாரமான குணம் - ஈகை. கச்சேரிகளில் கிடைக்கும் பணத்தை அங்கேயே, அப்போதே நல்ல விஷயங்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கும் பழக்கம் அந்தத் தம்பதிக்கு இருந்துச்சு. அவங் களுக்குக் கிடைச்ச ‘மகசேசே விருது’க்கான தொகை 5,000 டாலர்! அதை அந்த மேடையிலேயே நன்கொடையாகக் கொடுக்கிறதா அறிவிச்சாங்க. ‘கல்கி கார்டன்’ என்கிற பெரிய மாளிகையில் வாழ்ந்துட்டு, சூழ்நிலையின் காரணமாக சாதாரண வீட்டுக்கு வந்தபிறகும்கூட, அவருடைய பண்புகளும் மனிதாபிமானமும் இம்மியளவும் மாறவேயில்லை. எம்.ஜி.ஆர் ஒரு முறை சதாசிவம் தம்பதியிடம், ரெண்டு வீடுகளோட போட்டோவைக் காண்பிச்சு, எது பிடிக்குதோ அதை எடுத்துக்கச் சொன்னாராம். அப்போ சதாசிவம், ‘‘எங்களுக்குக் கொடுத்துத்தான் பழக்கம்’’னு சொல்லி, அன்பாக மறுத்துட்டாராம்.

சொன்னா நம்பமாட்டீங்க... லட்சக்கணக்கில் சம்பாதிச்ச அந்த இசையுலக மகாராணிகிட்டே இருந்தவை, வெறும் 6 புடவைகள்தான். அதைத்தான் மாத்தி மாத்தி உடுத்துவார். அதுக்கு மேலே ஒரு புடவை வந்தாலும்கூட, அந்த ஆறில் முதல் புடவையை யாருக்காவது தானம் கொடுத்திடுவார்.
சதாசிவம் மறைவுக்குப் பின்னால, தனக்குள்ளேயே ஒடுங்கி, பாட்டு, பேச்சு எல்லாத்தையுமே நிறுத்திக்கிட்டாங்க. அந்தக் காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட ‘பாரத ரத்னா’ விருதைக்கூட, ‘‘மாமா இல்லாம சபையில் போய் வாங்க விரும்பலை’’னு சொல்லிட்டாங்க.

இசைக்குழு என்பதைத் தாண்டி, சக கலைஞர்கள் அனைவரையும் ஒரு குடும்பம்போல பாசமாக அரவணைச்சிருக்காங்க எம்.எஸ். வெளிநாட்டில் கச்சேரிகள் என்றால், மடி, ஆசாரமாக இருக்கும் கலைஞர்களுக்கு எல்லாம் அவரே சமையல்செய்து கொடுப்பாராம். அவருடைய அந்திமக் காலத்தில், அம்மா நினைவிழந்து இருந்த நேரம். அவருடைய பேத்தி கௌரி பக்கத்தில் உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்தாராம். அப்போ அம்மா ஏதோ சொல்றார். ரொம்பக் காலமா பேச்சையே நிறுத்தியிருந்த எம்.எஸ் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தைகள்... ‘‘கௌரி, தப்பா பாடறே..!’’
 
அவர் உயிர் இசையால் நெய்தது. அவர் இசை நம் ஆன்மாவைக் கவர்வது!  

பிரேமா நாராயணன்