தன்னம்பிக்கை
Published:Updated:

சகலகலா தீபா!

சகலகலா தீபா!
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா தீபா!

திறமை

சகலகலா தீபா!

டிகை, நாடகக் கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், இயக்குநர், டயட்டீஷியன் என பன்முகங்கள் கொண்டு அசத்துகிறார் தீபா ராமானுஜம். ‘ரஜினி முருகன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மா, ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தில் விஜய் ஆன்டனிக்கு அம்மா, ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தில் நயன்தாராவுக்கு அம்மா... என சமீபத்தில் கோலிவுட்டுக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பாசக்கார புதிய அம்மா, கே.பாலச்சந்தரின் ‘பிரேமி’ நாடகத்தில் நமக்குப் பரிச்சயமானவர் என்பது, நினைவுகளை மீட்டும்போது தெரியவருகிறது!

இந்தியா டு கலிஃபோர்னியா, கலிஃபோர் னியா டு இந்தியா என 48 வயதிலும் தளராமல் பறந்து பறந்து கலைச்சேவை செய்துகொண்டிருக்கும் தீபாவிடம் பேசினோம்.

‘‘நான் காலேஜ் படிக்கிறவரைக்கும், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குதான் திரைப்படங்கள் பார்த்திருப்பேன். எம்.எஸ்ஸி., ஃபுட் அண்ட் நியூட்ரிஷன் படிச்சப்போ யுனிவர்சிட்டி அளவில் முதல் ரேங்க் வாங்கினேன். படிப்பு முடிச்சதும் கல்யாணம். சென்னையில ஒரு தனியார் மருத்துவமனையில சிறுநீரகக் கோளாறு நோயாளிகளுக்கான டயட்டீஷியனா வேலை பார்த்தேன். ஐ.டி துறையில் வேலைபார்த்த என் கணவருக்கு, இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் டிரான்ஸ்ஃபர் கிடைச்சுட்டே இருக்க... நானும் அவரோட சேர்ந்து பயணப்பட்டேன்.

1995-ம் ஆண்டு மீண்டும் சென்னை திரும்பினப்போ, என் சகோதரர் மூலமா தூர்தர்ஷன்ல நிகழ்ச்சித் தொகுப்பாளராகும் வாய்ப்பு கிடைச்சது. அதுக்கப்புறம்தான் கே.பாலச்சந்தரோட ‘பிரேமி’, பி.ஆர்.விஜயக்ஷ்மியின் ‘மீண்டும் குட்டிச்சாத்தான்’, ஆபாவாணனின் ‘சுந்தரவனம்’ போன்ற சீரியல்கள்ல தொடர்ந்து நடிச்சேன். ‘பாம்பே’ ஞானம் நட்பால்,  அவங்களோட நாடகக்குழுவுல இணைஞ்சு நிறைய மேடை நாடகங்களிலும் நடிச்சேன்’’ என்று ஒரு நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர், தொடர்ந்து தன் மற்ற அடையாளங்கள் பற்றியும் பேசினார்.

‘‘நான் ஒரு சமையல் கலைஞர் மற்றும் உணவுத் தொழில்முனைவோர். என் கணவர் பெங்களூர்ல இருந்த சமயம், அவருக்கு நான் கொடுத்தனுப்பும் சாப்பாட்டைச் சாப்பிட்ட அவரோட நண்பர்கள், தங்களுக்கும் தொழில்முறையா சமைச்சுத் தர முடியுமானு கேட்டாங்க. ஆரம்பத்தில் நாலு பேருக்கு சமைக்க ஆரம்பிச்சு, தினமும் 35 பேருக்கு தனியாளா சமைச்சுக்கொடுக்கிற அளவுக்கு வளர்ந்தேன். கேட்டரிங் பிசினஸ் வெற்றிகரமா போயிட்டு இருந்தப்போ, கணவரோட வேலை காரணமா, அந்த பிசினஸ் அதோட முடிஞ்சது.

சகலகலா தீபா!

அமெரிக்காவில் செட்டிலான பிறகு, அமெரிக்க தமிழ்ச்சங்கம் மூலமா நாடகங்களில் நடிக்கிறதோட, நாடகம் இயக்கிற வாய்ப்பும் கிடைச்சது. ‘க்ரியா’ என்ற ஒரு நாடக்குழுவை ஆரம்பிச்சு, அதன் மூலமா பல கலைஞர்களையும் என்னோட இணைச்சுகிட்டு, நிறைய நாடகங்களை உருவாக்கினேன். சமீபத்தில் இரா.முருகன் எழுதிய ‘சில்லு’ என்ற நாடகத்தை சென்னை மற்றும் கலிஃபோர்னியாவில் அரங்கேற்றினேன்.  நல்ல வரவேற்பு கிடைச்சது’’ என்றவர் கோலிவுட்டில் குணச்சித்திர நடிகையாக அறியப்பட்டாலும், தனக்கு இருக்கும் இயக்குநர் கனவு பற்றி நம்மிடம் பகிர்ந்தார்.

‘‘பெண்களுக்கான அழுத்தமான கதையோட காத்திருக்கேன். நிறைய தயாரிப்பாளர்கள்கிட்ட வாய்ப்பு கேட்டேன். அந்தப் பயணத்தில் ஒரு பெண்ணா நான் சந்திச்ச சவால்கள் அதிகம். மனிதர்களின் நிஜ முகங்களையும், நிஜமான மனிதர்களையும் அடையாளம் காணவே எனக்குக் கிட்டத்தட்ட அஞ்சு வருஷங்கள் ஆச்சு. முயற்சி தொடருது. என் கதை நிச்சயம் விரைவில் திரையில் பிரவேசிக்கும்னு நம்புறேன்!’’

- நம்பிக்கை கண்களில் ததும்ப, புன்னகை இதழ்களில் தவழ்கிறது தீபாவுக்கு.

 -  பொன்.விமலா