தன்னம்பிக்கை
Published:Updated:

“உயிர் பிழைத்தார்... உயிர் காக்கிறோம்!”

“உயிர் பிழைத்தார்... உயிர் காக்கிறோம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“உயிர் பிழைத்தார்... உயிர் காக்கிறோம்!”

40 ஆண்டுகளுக்கும் மேலாக ரத்ததானம் செய்துவரும் குடும்பம்...விழிப்பு உணர்வு

“உயிர் பிழைத்தார்... உயிர் காக்கிறோம்!”

‘‘எந்த தானம் செய்யவும் பணம் தேவை. ஆனா, ரத்ததானம் செய்ய மனசு இருந்தா போதும். ஜூன் 14-ம் தேதி உலக ரத்ததான விழிப்பு உணர்வு நாள். எல்லோரும் ரத்ததானம் செய்யணும்னு வேண்டிக் கேட்டுக்கிறேன்!’’

- பேச்சை ஆரம்பித்ததுமே, வேண்டுகோளை முன்வைக்கிறார் மஞ்சுளா... சென்னையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ரத்ததானம் செய்துவரும் குடும்பத்தின் தலைவி! 

“உயிர் பிழைத்தார்... உயிர் காக்கிறோம்!”

‘‘1972-ம் வருஷம், ஒரு நடுராத்திரி நேரத்துல என் கணவருக்கு சாலை விபத்து ஏற்பட்டுச்சு. நிறைய ரத்தம் வெளியேறி உயிருக்குப் போராடிட்டு இருந்தவரை, யாரோ சில நல்ல மனசுக்காரங்க அரசு மருத்துவமனையில சேர்த்ததோட, அதில் ஒருத்தர் ரத்தம் கொடுத்தும் உதவியிருக்கார். முகம் தெரியாத அந்த நல்லவர் செஞ்ச உதவியாலதான், இன்னிக்கு என் கணவர் உயிரோட இருக்கார்.

இல்லைன்னா, எங்க குடும்பம் சின்னாபின்னமாயிருக்கும்’’ என்று இத்தனை வருடங்கள் கழித்தும் தன் நன்றியை சொன்னவர், தன் குடும்பமே ரத்ததானம் செய்ய ஆரம்பித்த கதையை விவரித்தார்.
‘‘அன்றாடம் சாலை விபத்துலயும், பல்வேறு பிரச்னையாலும் பாதிக்கப்பட்டு, தேவையான ரத்தம் கிடைக்காம பலர் உயிரிழக்க நேரிடுது. அப்படி ஒரு சூழல்ல இருந்த என் கணவருக்கு ஒருத்தர் உதவினமாதிரி, நாங்களும் மத்தவங்களுக்கு உதவ முடிஞ்சளவு ரத்ததானம் செய்ய முடிவெடுத்து, பல வருஷங்களா அதை செய்துட்டு வந்தோம். இடையில் எனக்கு ரத்தக்கொதிப்பு வந்துட்டதால,
மருத்துவரோட ஆலோ சனைப்படி ரத்ததானம் செய்றதை நிறுத்திட்டேன். என் கணவர், ஆண்டுக்கு நான்கு முறை ரத்ததானம் செய்றதை இன்றளவும் தொடர்ந்துட்டு வர்றார். என் மகனும் மகளும் ரத்ததானம் தரும் வயதுக்கு வளர்ந்ததில் இருந்து, அவங்களும் தவறாம ரத்ததானம் செஞ்சுட்டு வர்றாங்க’’ என்று மஞ்சுளா நிறுத்த, தொடர்கிறார் அவருடைய கணவர் ராஜ்சேகரன்...

‘‘என் மனைவி ரத்தக்கொதிப்பு காரணமாக ரத்ததானம் செய்ய முடியாம போனப்போ, ‘நமக்குத் தெரிஞ்சவங்களை எல்லாம் ரத்ததானம் செய்யவைக்க முயற்சிக்கலாம்’னு சொன்னாங்க.

அதன்படியே உறவினர்கள், நண்பர்கள்னு எல்லாரையும் நேரிலும், போன் மூலமாவும் தொடர்புகொண்டு, ரத்ததானத் தின் தேவையை வலியுறுத்திப் பேசி, அதுக்கு அவங்களோட சம்மதம் வாங்கினோம். 

அதோட, பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள், பள்ளி, கல்லூரிகள்லயும் ரத்ததானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை செய்ய ஆரம்பிச்சோம். அதுக்கு நல்ல பலன் கிடைச்சது. ஆண்களும், பெண்களுமா நிறைய பேர் எங்களோட இணைந்து மருத்துவமனைக்கு வந்து ரத்ததானம் செஞ்சாங்க. அப்படி வந்தவங்களோட எண்ணிக்கை அதிகமாகிட்டே போக, ரத்த வங்கிகளோட இணைந்து நகரின் பல்வேறு இடங்கள்லயும் நாங்களே ரத்ததான முகாம்களை முன்னெடுத்து நடத்த ஆரம்பிச்சோம்’’ என்றவர், இப்போதுவரை தொடர்ந்து 25 ஆண்டுகளாக ரத்ததான முகாம்களை நடத்திவருகிறார். அந்தச் சேவைக்காக பல தனியார் அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

``தொடர்ந்து 44 ஆண்டுகளா ரத்ததானம் செஞ்சுட்டு வர்றேன். ஆரோக்கியமா இருக்கேன். இப்போ எனக்கு 66 வயசு. 65 வயசுக்கு மேல ஆகிட்டதால, இப்போ ஒவ்வொரு முறையும் மருத்துவரின் பரிசோதனை, அனுமதியோட ரத்ததானம் செய்றேன். இதுவரை நான் 187 முறையும், மதுரையில் தன் கணவரோட வசிக்கிற எங்க மக அனிதா கண்ணன் 50 முறையும், போன வருஷம் இறந்துபோன எங்க மகன் விஜய்பாபு 45 முறையும் ரத்ததானம் செஞ்சிருக்கோம்’’ என்றபோது, பெருமிதமும் நிறைவும் அவர் குரலில்.

‘‘அவசர ரத்ததான தேவைகளுக்கு ரத்த வங்கிகள், மருத்துவமனைகள்னு பல தரப்பில் இருந்தும் என் கணவரைத் தொடர்புகொள்வாங்க. எங்க தொடர்புல இருக்கிறவங்ககிட்ட பேசி எப்பாடுபட்டும் உடனடியா அதை ஏற்பாடு செஞ்சிடுவோம். பருப்பு வியாபாரம் செய்ற என் கணவர், ஓய்வு நேரங்கள்ல இந்தச் சேவையை செய்துட்டு இருக்கார். தமிழ்நாட்டிலேயே அதிக முறை ரத்ததானம் செஞ்சது என் கணவர்தான்னு டாக்டர்கள் சொல்வாங்க. அது, அவரோட உயிர் செலுத்த வேண்டிய நன்றி!’’ எனும்  மஞ்சுளாவின் வார்த்தைகளை ஆமோதித்து நிற்கிறார் ராஜ்சேகரன்.

இந்த குடும்பம் காத்த உயிர் களின் நன்றியும் நன்மையும் இவர்களைச் சூழட்டும்!

யார் செய்யலாம்... யார் செய்யக் கூடாது?

‘‘18 - 65 வயதுடையவர்கள், குறைந்தபட்சம் 45 கிலோ எடையுள்ளவர்கள் எவரும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம். ஐந்தரை லிட்டர் ரத்தம் உள்ள நம் உடலில் ரத்ததானத்தின்போது 300 மில்லி ரத்தம் எடுக்கப்படுதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக, எடுக்கப்பட்ட ரத்தத்துக்கு பதிலாக புதிய ரத்த செல்கள் உற்பத்தியாகும். ஹீமோகுளோபின் அளவு 12.5-க்கும் குறைவானவர்கள், இதயக் கோளாறு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மலேரியா, மஞ்சள்காமாலை, டைஃபாய்டு, ரத்தசோகை போன்ற பிரச்னை உள்ளவர்கள், மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், தொற்று நோய் உள்ளவர்கள், மதுபோதையில் இருப்பவர்கள், சமீபத்தில் ஆபரேஷன் செய்துகொண்டவர்கள் ரத்ததானம் செய்யக் கூடாது. ஒவ்வொரு முறையும், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே ரத்ததானம் பெறப்படும்’’ என்று தகவல்கள் தந்தார் ராஜ்சேகரன்.

வாழ்க்கையில் ஒருமுறையாவது..!

இந்தியாவில் ஆண்டுக்கு 5 கோடி யூனிட் ரத்தம், பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் தேவையாக இருக்கிறது. ஆனால், சராசரியாக 80 - 90 லட்சம் யூனிட் ரத்தம்தான் தேவைக்கேற்ற நேரத்தில் கிடைக்கிறது. ரத்தப் பற்றாக்குறையால் மரணத்தைத் தழுவும் உயிர்கள் ஏராளம். நம் நாட்டில் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது ரத்ததானம் செய்தாலே, ரத்தப் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.