தன்னம்பிக்கை
Published:Updated:

குழல் இனிது... குரல் இனிது!

குழல் இனிது...  குரல் இனிது!
பிரீமியம் ஸ்டோரி
News
குழல் இனிது... குரல் இனிது!

- நார்வேயில் கலக்கும் தமிழ் சகோதரிகள்

குழல் இனிது...  குரல் இனிது!

“நான் மீரா. வயசு 22. நார்வே யுனிவர்சிட்டியில மாலிகுலர் பயாலஜி படிக்கறேன். இவள் என் தங்கை தீபா. இப்போ ஹைஸ்கூல் முடிச்சிருக்கா...”

- உற்சாகமாக அறிமுகம் செய்து கொள்கிறார் மீரா . இந்த சகோதரிகளின் பூர்வீகம் இலங்கை. நார்வேயில் பிறந்து வளர்கிறார்கள். வெளிநாட்டில் இருந்தாலும் தமிழையும் நம் கலாசாரத்தையும் மறக்காமல், வீட்டில் தமிழிலேயே பேசுகிறார்கள், பாடுகிறார்கள். `யூடியூப்’பில் களைகட்டுகிறது இந்தச் சகோதரிகளின் புல்லாங்குழல் கச்சேரி.

“எங்களுக்கு உத்வேகம் கொடுத்தவர், அப்பா திருச்செல்வம். அவர் இலங்கையில் இருக்கும் போது குழல் கத்துக்கிட்டார். இங்க வந்து குடியமர்ந்ததுக்கு அப்புறம், எனக்கு எட்டு வயசானப்போ, எங்களுக்கும் கத்துக்கொடுத்தார். அடிப்படையை அப்பாகிட்ட கத்துக்கிட்டு, அப்புறம் அதற்கு மேலான நிலைகளை இணையம், `யூடியூப்’பில் பெரிய வித்வான்களின் கச்சேரிகளைப் பார்த்தும், கேட்டும், குறிப்புகள் எடுத்தும் நாங்களே கத்துக்கிட்டோம்” என்று அக்கா மீரா சொல்ல,

“இங்க தமிழ் மக்கள் மிக மிகக் குறைவு. அதனால எங்களுடைய திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கலை. ஊக்கமே இல்லாமல் இருந்தது ஆரம்பத்துல. முதன் முதலா ஒரு பள்ளிக்கூடத்துல வாசிச்சோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மேடையில வாசிக்க ஆரம்பிச்சோம். இங்கே உள்ள மக்களுக்குப் புரியுற மாதிரி மேற்கத்திய மற்றும் கர்னாடக சங்கீதத்தை கலந்து (ஃப்யூஷன்) கொடுத்தோம். இங்கே ஆண்கள் வாசிக்கிற கிடார், டிரம்ஸ்ஸை நாங்களும் கத்துக்கிட்டு வாசிக்க ஆரம்பிச்சோம். இப்படி ஆர்வத்தோட தொடர்ந்து புதுப் புது முயற்சிகள் எடுத்ததால, இப்போ வெற்றியைத் தொட்டுட்டோம்” என்கிறார் தங்கை மீரா.

 “சில சமயம் படிப்புக்கும் இசைக்கும் பெரிய போராட்டமே நடக்கும். எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கறதுன்னு தெரியாம இருப்போம். குழல் வாசிக்கும்போது எங்களுக்கு அளவற்ற சந்தோஷம் கிடைக்குது. அதனால எப்படியாவது இரண்டையும் ஈடுகட்டிடுவோம். எனக்கும் தீபாவுக்கும் நல்ல புரிதல். இசையை கடமையா இல்லாம, அனுபவிச்சு செய்வோம்’’ என்று தங்கையைப் பற்றி பெருமைப்படும் மீராவை இடைமறித்த தீபா, “எங்களோட எல்லா கச்சேரிக்கும் அக்காதான் இசை அமைப்பார்; பாடல்களைத் தேர்ந்தெடுப்பார். சில சமயம் மேடையில சொதப்பிட்டு சிரிச்சுட்டு நிப்போம். அடிக்கடி செல்ல சண்டையும் போட்டுப்போம். ஆனா, அக்காவுக்கு மிகுந்த இசை ஞானம். வித்வான்கள்கூட சரிக்கு சமமா உட்கார்ந்து வாசிச்சிருக்கா’’ என்று அக்கா புராணம் பாடுகிறார்.

குழல் இனிது...  குரல் இனிது!

“எங்களின் மிகப்பெரிய பலம் எங்கள் குடும்பம். மேடையில பாடும்போது பயப்படுவோம். அப்போ எல்லாம், ‘உங்க திறமையை வீணாக்கக் கூடாது. அதை நேர்த்தியோட வெளிப்படுத்தி மக்களை சந்தோஷப்படுத்தணும்’னு எங்க பெற்றோர் எங்களை பெரிதும் ஊக்குவிப்பாங்க. நாங்களும், எங்க அப்பாவும் சேர்ந்து, இங்க இருக்கிற இந்தியக் குழந்தைகளுக்கு 8 வருடங்களா குழல் சொல்லிக் கொடுக்கிறோம். நம் நாட்டுக் கலையை வளர்க்கணும் என்ற அடிப்படை ஆசைதான் எல்லாத்துக்கும் காரணம்’’ என்று கைகோத்துக்கொள்கிறார்கள் சங்கீத சகோதரிகள்.

“ஆரம்பத்துல சின்னச் சின்ன நிகழ்ச்சிகள்னு செஞ்சு, இப்போ நிறைய கச்சேரிகள் செய்துட்டு இருக்கோம். வெளிநாட்டு இசையமைப்பாளர் களுக்குக்கூட அவங்களோட ஆல்பம்களில் ஃபில்லிங்க்ஸ் செய்து கொடுக்கிறோம். இப்படி நிறைய படிகள் ஏறிட்டே இருந்தாலும், எங்க சொந்த மண் இலங்கையில் ஒருமுறை இசைக்க கிடைத்த வாய்ப்பை மறக்கவே மாட்டோம். அவ்வளவு வசீகரமா னது அந்தச் சூழல்” என்று மெய்சிலிர்க்கிறார் தீபா.

“எங்களோட இசைக்குழுவின் பெயர் `9 கிரேடர் நார்டு’ (9 GRADER NORD). ஏன்னா, பூமி மையத்துல இருந்து 9 டிகிரி வடக்குல இலங்கை இருக்கு. அதனால இந்தப் பெயர். இசையை கர்னாடகம், லத்தீன் என்று பல வகைகளில் நாங்க வாசிச்சாலும், எப்போதும் தமிழ் பாடல்கள் மட்டுமே பாடுறோம். நான் இசையமைக்க, தீபா குரல் கொடுக்கிறா...”

- தங்களுக்குள் ஊறிக்கிடக்கும் ஊர் மனசைச் சொல்கிறார் மீரா.

“உண்மையில் எங்க பாடல்கள் பல இந்த ஊர் மக்களுக்குப் புரியல. ஆனாலும் தமிழோட அந்த பிரத்யேக வசீகரம், அவங்களை எல்லாம் கட்டிப்போட்டு உட்காரவைக்குது. அதனாலயே நார்வேயில மட்டும் இல்லாம, பல நாடுகளிலும் எங்களுக்கு ரசிகர்கள் இருக்காங்க. உலகம் முழுக்க தமிழையும் நம் நாட்டு இசையையும் பரப்பணும். இது எங்க ஆசை மட்டும் இல்லை... கடமையும்கூட!”

- குழலும் குரலுமாய் நம்மைக் கரைக்கிறார்கள் சகோதரிகள்! 

தா.நந்திதா