
பயோடெக்னாலஜி படிப்பு... `பலே' வேலைவாய்ப்பு!

உயிர் தொழில் நுட்பவியல் எனப்படும் பயோடெக்னாலஜி இன்று உணவு, மருத்துவம், விவசாயம் போன்ற துறைகளில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்துவருகிறது. அத்துறையில் உள்ள படிப்புகள், அதன் எதிர்காலம், வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களைத் தருகிறார் சேலம், ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் துறையின் தலைவர் கே.சி.பி. ராஜாமணிகண்டன்.
பயோடெக்னாலஜி என்றால் என்ன?
ஒவ்வொரு உயிரிலும் உள்ள செல்லின் செயல்பாட்டையும், அதன் மூலக்கூறுகளின் செயல்பாட்டையும் வைத்து தொழில்நுட்பம் மூலம் நமக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்க உதவுவது, பயோடெக்னாலஜி. உதாரணமாக, நுண்ணுயிர்கள் மூலம் மனித நோய்களுக்கு மருந்து தயாரிக்கவும், நோய்களைத் தடுக்கவும், சுவையான உணவுப் பொருட்களை என்சைம் மூலம் பல நாட்கள் கெடாமல் பாதுகாக்கவும், விவசாயத்தை மேம்படுத்தவும் என இந்த உயிர் தொழில்நுட்பத்தின் தொழில்நுட்ப முறைகள் இனி வரும் காலங்களில் நமக்கு அவசியமாகும்.
சிலபஸ்
ஜெனிட்டிக்ஸ், செல் பயாலஜி, இம்யூனாலஜி, மைக்ரோ பயாலஜி, ஆர் டிஎன்ஏ டெக்னாலஜி, பிளான்ட் பயோடெக்னாலஜி, அனிமல் பயோடெக்னாலஜி, பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் உள்ளிட் டவை பாடத்திட்டங்களாக விரியும் துறை இது.
கல்வித்தகுதி
பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், உயிரியல், ப்யூர் சயின்ஸ், பயோ பாட்டனி, பயோ ஜூவாலஜி, நர்ஸிங், பயோ அக்ரி பாடப்பிரிவுகளில் படித்த மாணவர்கள், மூன்று வருடப் படிப்பான பி.எஸ்ஸி., பயோ டெக்னாலஜி அல்லது நான்கு வருடப் படிப்பான பி.டெக்., பயோடெக்னாலஜி படிக்க விண்ணப்பிக்கலாம்.

கல்லூரிகள்
மூன்று வருடப் படிப்பான பி.எஸ்ஸி., பயோடெக்னாலஜி பெரும்பாலான தனியார் மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. நான்கு வருடப் படிப்பான பி.டெக்., பயோடெக்னாலஜி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. எம்.எஸ்ஸி, எம்.ஃபில், எம்.டெக் மேற்படிப்புகளை பல தனியார் கல்லூரிகளும், பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், வி.ஐ.டி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களும் வழங்குகின்றன.
மேற்படிப்பு
முதுநிலை படிப்புகளில் இரண்டு வருடப் படிப்பான எம்.எஸ்ஸி., பயோ டெக்னாலஜி, எம்.ஃபில்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., பயோடெக்னாலஜி மற்றும் பிஹெச்.டி ஆராய்ச்சிப் படிப்புகளும் உள்ளன.
வேலைவாய்ப்புகள்
மருத்துவம், விவசாயம், உணவு, லெதர் போன்ற தொழில் துறைகளில் பயோடெக்னாலஜி படித்தவர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. லேப் டெக்னீஷியன், குவாலிட்டி அனலைசர், ஆர் & டி அசிஸ்டன்ட், க்வாலிட்டி கன்ட்ரோலர், பேராசிரியர்கள் என ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. மேற்கண்ட பணிகளுக்கான ஆரம்ப சம்பளம் 10,000 ரூபாயிலிருந்து என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கும் தேவை உள்ள துறை இது.
பயோடெக்னாலஜி... படிக்கலாம், எதிர்காலத்தை ஜெயிக்கலாம்!
- ச.ஆனந்தப்பிரியா படம்: சூ.நந்தினி