தன்னம்பிக்கை
Published:Updated:

``வெற்றி நிச்சயம் உங்களிடம் மண்டியிடும்!''

``வெற்றி நிச்சயம்  உங்களிடம் மண்டியிடும்!''
பிரீமியம் ஸ்டோரி
News
``வெற்றி நிச்சயம் உங்களிடம் மண்டியிடும்!''

விளையாட்டுத் துறையில் பெண்கள் சாதிக்க ஆலோசனைகள்...ஸ்போர்ட்ஸ்

ம் நாட்டில் விளையாட்டுத் துறையில் திறன்பெற்ற பெண்கள் ஆண்களுக்குச் சமமாக இருந்தாலும், அவர்களால் ஆண்களைப்போல அடுக்குகள் கடந்து உயர்ந்து செல்ல முடிவதில்லை. கலாசாரக் கட்டுப்பாடு, குடும்பப் பொருளாதாரம், பொய் நம்பிக்கைகள், ஊட்டச்சத்தின்மை... என அந்தத் தடைக்கற்களைத் தாண்டி அவர்கள் வெற்றிக்கோட்டை எட்டச் செய்யவேண்டிய முயற்சிகளைச் சொல்கிறார்கள், பல்துறை நிபுணர்கள். 

``வெற்றி நிச்சயம்  உங்களிடம் மண்டியிடும்!''

நாகராஜன், தடகளப் பயிற்சியாளர்

‘‘பெண் குழந்தைகளின் பெற்றோர், விளையாட்டில் தங்கள் பிள்ளைக்குத் திறமை இருந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. இதனால் நாடெங்கிலும் பல்லாயிரம் வீராங்கனைகளின் திறன், வெளிச்சத்துக்கு வர வாய்ப்பில்லாமல் பள்ளியின் பி.இ.டி வகுப்புகளுடன் முடங்கிப்போய்விடுகிறது. அந்தக் கட்டுப்பாடுகள் உடைத்து வரும் பெண்களுக்கும், முன்னேறிச் செல்ல பாதைகள் கிடைப்பதில்லை. நகரங்களைவிட, கிராமப்புறப் பெண்கள் விளையாட்டுகளில் சிறப்பாக செயல்படுபவர்களாக இருந்தாலும், அவர்களுக்குச் சிறந்த பயிற்சியாளர்கள் அமைவதில்லை. அப்படியே கிடைத்தாலும், போட்டிகளுக்குச் செல்வதற்கான செலவு, அவர்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை பெரிய பாரமாகவே இருக்கிறது. கடன்பட்டாவது பெங்களூரு, மும்பை என தேசியப் போட்டிகள்வரை அவர்கள் தங்கள் திறமையால் முன்னேறினாலும், ஆடையில் இருந்து உணவு வரை அனைத்திலும் வெளிப்படும் ஏழ்மை, அவர்களை பின்தங்க வைக்கிறது. 
 
இதற்கான தீர்வை பெற்றோர், பள்ளி, பயிற்சியாளர்கள், அரசாங்கம் என்று அனைவரும் சங்கிலித் தொடராக இணைந்து கொண்டுவர வேண்டும். விளையாட்டில் சிறந்துவிளங்கும் மாணவிகளை முதலில் கண்டடைய வேண்டியதும், ஊக்கப்படுத்த வேண்டியதும் பள்ளியின் பொறுப்பு என்றால், அவர்களின் எதிர்காலத்தை இந்தத் துறையில் நிறுவுவதற்கான ஒத்துழைப்பும் ஊக்கமும் அளிக்கவேண்டியது பெற்றோர், பயிற்சியாளரின் பொறுப்பு. அதற்குத் தேவையான பொருளாதார உதவிகளைச் செய்துதர வேண்டியது அரசின் கடமை.

இத்தனை தடைகள் இருக்கின்றன என்பதற்காக, பெண் பிள்ளைகள் பின்வாங்கத் தேவையில்லை. பி.டி.உஷாவில் இருந்து மேரிகோம் வரை... தடைகள் பல தாண்டி சிகரம் தொட்டவர்களே! விளையாட்டில் உங்களுக்கான உரிமையையும், உதவியையும், ஊட்டச்சத்தையும் தொடர்ந்து கேட்டபடி முன்னேறிக் கொண்டே இருங்கள். தளராத பாதங்கள் நிச்சயம் இலக்கை எட்டும்!’’

சல்மா, கவிஞர்

``வெற்றி நிச்சயம்  உங்களிடம் மண்டியிடும்!''

“பெண்களை எப்போதும் எதிலும் முன்னேறவிடாமல் செய்ய உடை, கலாசாரம், உடல்வலுவின்மை என்று ஏதாவது ஒரு காரணத்தை இந்தச் சமூகம் தாங்கிப்பிடித்துக்கொண்டே இருக்கும். அதிலும் விளையாட்டுத் துறைப் பெண்கள் இவை அனைத்தையும் ஒருசேர எதிர்கொள்கிறார்கள். என்றாலும், இவையெல்லாம் பழைய பொய்கள் என்பதை உங்கள் முன்னோடிப் பெண்கள் பலர் நிரூபித்துவிட்டார்கள். தன் ஆடையின் சர்ச்சையை வென்றுதான் சானியா மிர்சா சாதனைப் பக்கங்களை எழுதினார். ஆனால், வேரிலேயே வெட்டி எறியப்பட்ட சானியாக்கள் இங்கு அதிகம். அது உங்களுக்கும் நிகழாமல் இருக்க, உடலில் ஏற்றும் வலிமையை மனதிலும் ஏற்றி மைதானங்களில் தொடர்ந்து முன்னேறுங்கள். வெற்றி ஒருநாள் உங்களிடம் மண்டியிட்டுதான் ஆக வேண்டும்!’’

ஷைனி சந்திரன், நியூட்ரிஷியன்

``வெற்றி நிச்சயம்  உங்களிடம் மண்டியிடும்!''

“விளையாட்டுத் துறைப் பெண்கள், அவர்கள் பயிற்சி செய்யும் கால அளவு மற்றும் சீதோஷ்ண நிலைக்குத் தேவையான உணவும் நீரும் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பால், தயிர், நெத்திலி மீன், முட்டை, சுண்டல் வகைகள், கீரைகள், கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தினமும் 5 - 10 பாதாம் பருப்புகள் சாப்பிடுவது நல்லது. விளையாடி முடித்ததும், எலுமிச்சைச் சாற்றுடன் உப்பு, சர்க்கரை கலந்து ஜூஸாகக் குடிக்கலாம். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பழங்களான மாதுளை, ஆரஞ்சு போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். விளையாடச் செல் வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் அரை லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். சூப் வகைகளும் அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையுடன் டயட் பின்பற்றுவது நல்லது.’’

ரித்திகா சிங், குத்துச்சண்டை வீராங்கனை, நடிகை

``வெற்றி நிச்சயம்  உங்களிடம் மண்டியிடும்!''

‘‘விளையாட்டுத் துறையில் மேல்தட்டுப் பெண்களைவிட, அடிமட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு தடைக்கற்கள் குவிந்து கிடப்பது உண்மையே! என் பெற்றோர் எனக்குத் தந்த ஊக்கம், இங்கு பெரும்பான்மை யான பெண்களுக்குக் கிடைப் பதில்லை. ஏழையாக இருந்து விளையாட்டில் ஏணிகள் ஏணி வருவது, உண்மையில் சிரமம்தான். ஆனால், முடியாததில்லை. ஆல் த வெரி பெஸ்ட் கேர்ள்ஸ்!’’

மைதிலி, மகப்பேறு மருத்துவர்

``வெற்றி நிச்சயம்  உங்களிடம் மண்டியிடும்!''

“விளையாட்டுத் துறையில் இருக்கும் பெண்களுக்கு, அவர்களின் கடின உடற்பயிற்சிகளால் சருமம் இறுகி, எலும்புகள் உறுதியடைந்திருக்கும். இது ஆரோக்கியமான விஷயம்தானே தவிர, விளையாட்டுத் துறையில் ஈடுபடும் பெண்கள் பெண் தன்மைக்கு அந்நியமாகிவிடுவார்கள் என்பதெல்லாம் பொய் நம்பிக்கைகளே! மாதவிடாய் நாட்களில் தாராளமாக உடற்பயிற்சி செய்யலாம், அதற்குத் தகுந்தாற்போல ஊட்டச்சத்து எடுத்துக்கொள்வது அவசியம். மேலும், போட்டிகள், பயிற்சிகளுக்காக மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்கான மாத்திரைகள் அதிகம் உபயோகிக்காமல் இருக்கவும். மற்றபடி, விளையாட்டுத் துறையில் பெண்கள் முழு ஈடுபாடும் உழைப்பும் முனைப்பும் காட்ட... உடல் சார்ந்த, பாலினம் சார்ந்த எந்தத் தடையும் இல்லை!’’

விளையாட்டுத் துறையில் பெண்கள் களமிறங்கவும், திறமையான ஏழைப் பெண்கள் அதற்கான அங்கீகாரம் பெறவும் அரசு ஆவன செய்ய வேண்டும். பெண்குலம் தலைநிமிரட்டும்!

-  சு.சூர்யா கோமதி   படங்கள்: என்.ஜி. மணிகண்டன்