தன்னம்பிக்கை
Published:Updated:

கதை கதையாம் காரணமாம்! - 7

கதை கதையாம் காரணமாம்! - 7
பிரீமியம் ஸ்டோரி
News
கதை கதையாம் காரணமாம்! - 7

கதை கதையாம் காரணமாம்! - 7

கதை கதையாம் காரணமாம்! - 7

‘கடிதம் எழுதி, அதற்குப் பதிலை எதிர்பார்த்த காலம் மலையேறி... இ-மெயிலிலும், `வாட்ஸ்அப்'பிலும் நொடியில் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறோம். அப்படித்தானே கதைகள் சொல்வதும், கேட்பதும்..! முன்பெல்லாம் தாத்தா, பாட்டி கதை சொல்வதைப் பிள்ளைகள் கேட்டார்கள். இப்போது கார்ட்டூன் சேனலில் டோராவும், ஷின் சானும், சோட்டோ பீம்மும் கதை சொல்கிறார்கள். கதை கேட்கும் வடிவம் மாறிவிட்டதை உணராமல் பிள்ளைகளை உட்காரவைத்து கதை சொல்லுங்கள் என்பது சரிதானா?’

மிக நியாயமான கேள்வி இது. இதைப் புறம்தள்ளிவிட்டு, பெற்றோரை ’கதை சொல்லுங்கள்’ என்றோ, பிள்ளைகளிடம் ‘நான் சொல்லும் கதையைக் கேள்’ என்றோ கூறுவது நிச்சயம் சரியானது அல்ல.

முதலில், டி.வி கார்ட்டூன் சேனல்களில் வரும் தொடர்களில் பயன்படுத்தப்படும் கதைகளைப் பற்றி பார்ப்போம். பொதுவாக, கார்ட்டூன் தொடர்களில் சுவாரஸ்யத்தை மிகுதியாக அள்ளித்தருவது என்பதை ஒட்டியே கதைகள் அமைக்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால், அந்த ஒற்றை நோக்கம் மட்டுமே கதை உருவாக்கத்தில் இருக்கும் பட்சத்தில், அதைப் பார்க்கும் குழந்தைகளின் மன இயல்பை அது மாற்றி அமைத்துவிடும். ஓர் இயல்பான கதைக்கு அதில் இடமே இல்லை. சோட்டோ பீம் எல்லோரையும் வென்றுகொண்டே இருப்பான். இதன் மூலம் தன்னுடன் படிக்கும் சக மாணவர், தேர்வில் அடையும் தோல்வி பற்றிய சித்திரம் குழந்தைகளுக்கு வேறுவிதமாக மாறுகிறது. 

அடுத்ததாக, கார்ட்டூன் தொடர்களில் பலவும் மொழிபெயர்ப்புகளே! அதனால் கதை நடக்கும் இடம் பெரும்பாலும் நமது ஊராக இருக்காது. அதில் வரும் பள்ளிக்கூடங்கள், குழந்தைகள் ஆசிரியர்களோடு உரை யாடும் விதம் அந்நியமாகவே இருக்கும். விரும்பிப் பார்க்கப்படும் ஷின் சான் சாப்பிடும் உணவுப் பொருட்களில் ஒன்றிரண்டைத் தவிர அதிகம் நமது பிள்ளைகளுக்கு அறிமுகம் இருக்காது.

இப்போது வீடுகளில் சில பிள்ளைகள் பேசும் சில வார்த்தைகள், அவர்களின் பெற்றோர் வாழ்நாளில் ஒரு முறைகூட பேசியதாக இருக்காது. அந்த வார்த்தைகளை மொழிபெயர்ப்பு கார்ட்டூன் தொடர்களிலிருந்தும் பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள். மேலும் சரியான வாக்கிய அமைப்பில் வசனங்கள் உருவாக்கப்படுவதில்லை. ‘நீ போக வேண்டாம் அங்கே’ என்றெல்லாம் எழுதுகிறார் கள். இதுபோன்ற வசனங்களைக் கேட்டுப் பழகும் பிள்ளைகள் மொழியை தவறாகவே கற்றுக் கொள்வார்கள். அடுத்து, எல்லையற்ற வன்முறை திணிப்புக் காட்சிகள். துப்பாக்கியைப் பயன்படுத்தி ஹீரோ சண்டை போடுவதெல்லாம் குழந்தைகளுக்கு இப்போது சுவாரஸ்யம் தருவதில்லை. துப்பாக்கியையும் தாண்டி அதிகமான குண்டுகளை எறிகிற இயந்திரங்களை எதிர்நோக்குகின்றனர். பவர் ரேஞ்சர்கள் மூலம் ஒருவரை அழிக்க புதிய யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றைப் பார்க்கும் பிள்ளைகளின் மனதில் அவர்களை அறியாமலேயே அது சேகரமாகிவிடும். இதன் சின்ன அடையாளத்தை, ஸ்கூட்டியில் பிள்ளைகளை அழைத்துச் செல்லும்போது அவர்கள் எப்படி வண்டியை ஓட்ட வேண்டும் என நினைக்கிறார்கள் என்று கேட்டாலே புரிந்துவிடும். இதுபோல இன்னும் பல விஷயங்களைச் சொல்லலாம்.

குழந்தைகளின் மனநிலையை மிக நுணுக்கமாக கையாள வேண்டும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். குழந்தைகளால் தூக்கமுடியாத பொருட்களை அவர்கள் முன் தூக்காதீர்கள் என்றும் சொல்கிறார்கள். அதனால் அவர்களின் அன்றாட வாழ்வில் முக்கிய இடம் பிடிக்கும் கார்ட்டூன் தொடர்கள் பற்றி கவனத்தோடு அணுக வேண்டும்.

சரி, இவற்றிலிருந்து கதைகள் எவ்வாறு மேம்படுகின்றன என்ற கேள்வியும் எழுகிறதல்லவா? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அதைக் கேட்பவருக்கு சந்தேகம் எழும்போது கதைசொல்லியிடம் கேட்டு தீர்வு காண்கிறார். இதை இருவருக்கிடையே நடக்கும் ஓர் உரையாடல் என்றும் கொள்ள முடியும். கதை கேட்பவர்கள் பலராக இருக்கும்போது உரையாடல் இன்னும் செழுமையானதாக மாறுகிறது. இந்த அனுபவம் நிச்சயம் கார்ட்டூன் தொடர் பார்க்கும்போது கிடைக்காது.

சொல்லப்படும் கதையின் தன்மை, அதைக் கேட்பவரின் முகத்தில் தெரிந்துவிடும். அதனால் அந்தக் கதையை நீட்டிக்கச் செய்வதையும் குறுக்கிக்கொள்வதையும் அங்கேயே முடிவுசெய்துவிட முடியும். மேலும் கதையில் வரும் நரிக்கு ரொம்ப பசி, சாப்பிட என்ன கொடுக்கலாம் எனக் கேட்கும்போது, குழந்தைகள் தனக்கு ரொம்ப பிடித்த உணவைச் சொல்வார்கள். நரியிடம் இருந்து மானைக் காப்பாற்ற பாதுகாப்பான இடம் எங்கே இருக்கிறது எனக் கேட்க, தான் உறங்கும் அறையைக் காட்டுவதும் உண்டு. குழந்தைகள் அப்படிச் சொல்வது விளையாட்டாக சொல்பவை அல்ல... ஏதோ ஒரு வகையில் அவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக அமைகிறது.

கதைசொல்லியின் கதையில் ஒரு விலங்கு, இடம், உருவம், மனிதர், பறவை, செடி, மரம் பற்றி சொல்லும்போது, அது எப்படி இருக்கும் என ஒரு விவரணையைத் தருகிறார். அதைக் கேட்கும் குழந்தைகள், அந்த விவரணை களைக் கொண்டு தங்கள் மனதில் ஒரு உருவத்தை உருவாக்குகிறார்கள். 10 பேர் கதை கேட்டால் 10 விதமான உருவங்கள் உருவாகின்றன. இப்படி அந்தக் கதையின் இடம், கதாபாத்திரம் என 10 விதமான கதைக்காட்சிகள் உருவாக்கப்படுகின்றன. இதனால், கொடுக்கப்படுகிற குறிப்புகளை வைத்து புதிதாக ஒன்றை உருவாக்குகிற சிந்தனைத் திறன் இயல்பாகவே வளர்கிறது.

சுயமாக சிந்திப்பதைத்தான் பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கிறது. இந்தத் திறனை நேரடியாகச் சொல்லப்படும் கதைகளின் வழியே எளிதாக பிள்ளைகளின் மனதில் புகுத்தவும் வளர்த்தெடுக்கவும் முடியும். கார்ட்டூன் சேனல் களில் கதையைக் காட்சியாக மாற்றிவிடும்போது பிள்ளைகள் பார்வையாளராக மட்டுமே சுருங்கிவிடுகின்றனர். கதையை எழுதுபவரின் மனதில் இருக்கும் உருவம், உயரம், உடை, நிறம் ஆகியவையே பார்க்கும் பிள்ளைகளுக்கு புகுத்தப்படுகிறது.

`சரி, உடனே இன்றிலிருந்து ரிமோட்டைத் தொடவிடாமல் கதைகேட்க பழக்கிவிடுவோம்' என நினைத்தால், அது முதலுக்கு மோசமாகி விடும். டி.வி பார்க்கும் நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கதைகளின் பக்கம் திருப்புவதே சரியானது.

முயற்சியுங்கள்!

- விஷ்ணுபுரம் சரவணன்