Published:Updated:

வண்ணங்களற்ற வாழ்வில் வர்ணஜாலம் நிகழ்த்திய கல்வி!

      வண்ணங்களற்ற வாழ்வில் வர்ணஜாலம் நிகழ்த்திய கல்வி!
பிரீமியம் ஸ்டோரி
வண்ணங்களற்ற வாழ்வில் வர்ணஜாலம் நிகழ்த்திய கல்வி!

மாற்றுத்திறனாளியின் திறமைக்கு மரியாதைடானிக் ஸ்டோரி

வண்ணங்களற்ற வாழ்வில் வர்ணஜாலம் நிகழ்த்திய கல்வி!

மாற்றுத்திறனாளியின் திறமைக்கு மரியாதைடானிக் ஸ்டோரி

Published:Updated:
      வண்ணங்களற்ற வாழ்வில் வர்ணஜாலம் நிகழ்த்திய கல்வி!
பிரீமியம் ஸ்டோரி
வண்ணங்களற்ற வாழ்வில் வர்ணஜாலம் நிகழ்த்திய கல்வி!
      வண்ணங்களற்ற வாழ்வில் வர்ணஜாலம் நிகழ்த்திய கல்வி!

மின்சார ரயிலில் கடலை பர்ஃபி விற்றுவந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி, சென்னையைச் சேர்ந்த சுகுணா. இப்போது அவர் பள்ளித் தமிழ் ஆசிரியை. சுகுணாவின் கணவர் ஏழுமலையும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிதான். இந்தத் தம்பதியின் வாழ்வில் ஒளி ஊடுருவியிருக்கும் மகிழ்ச்சித் தருணத்தில் சந்தித்தோம்...

“நான் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை பாண்டிச்சேரியில் உள்ள, பார்வையற்றோருக்கான பள்ளிக்கூடத்துல படிச்சேன். அப்புறம் திருச்சியில் பன்னிரண்டாம் வகுப்புவரை படிச்சேன். அங்கே ஆறாம் வகுப்புல எனக்கு ஒரு நண்பர் கிடைச்சார். அவர்தான் இப்ப என் கணவர்...’’ என்று சுகுணா  நிறுத்த, அவருடைய கணவர் பேசினார்...

 ‘‘எனக்கு அம்மா, அப்பா இல்லை. சித்திதான் வளர்த்தாங்க. அப்போ வகுப்பில் சுகுணாதான் முதல் மாணவி. எந்தப் பாட ஆசிரியர், என்ன கேள்வி கேட்டாலும் கடகடனு பதில் சொல்வாங்க. எனக்குப் படிப்பு வராது. ரெண்டு பேரோட இருட்டு உலகத்துலயும், எங்களோட நட்புதான் அப்போ எங்களுக்கான பெரிய சந்தோஷமா இருந்துச்சு. அதுவே பருவ வயதில் காதலா மாறிச்சு.

பள்ளிப் படிப்பை முடிச்சதும், நான் மின்சார ரயில்ல பொருட்கள் விற்க ஆரம்பிச்சுட்டேன்.  `அஞ்சோ, பத்தோ... சுயமா சம்பாதிக்கிறோம்' என்ற தெம்புல என் சொந்தக்காரங்களோட போய் சுகுணாவைப் பொண்ணு கேட்டேன். 2004-ல் எங்களுக்குக் கல்யாணம். ஒரு வருஷத்துல பையனும், ரெண்டு வருஷம் கழிச்சு பொண்ணும் பிறந்தாங்க’’ என்றார் ஏழுமலை.

தொடர்ந்து பேசினார் சுகுணா... ``கல்யாணம், குழந்தைனு சந்தோஷமான குடும்பம் அமைஞ்சாலும், பணக் கஷ்டம் எங்களை துரத்திட்டே இருந்துச்சு. என்னோட அப்பா, அம்மா இருந்தவரை கொஞ்சம் உதவினாங்க.

ஆனா, அவங்க ரெண்டு பேரும் இறந்ததுக்கு அப்புறம் நிலைமையை சமாளிக்கவே முடியல.

அரசாங்கப் பள்ளியில் படிக்கிற என் ரெண்டு பசங்களும் ரொம்ப நல்லா படிக்கிறாங்கனு அவங்க ஆசிரியர்களை எங்ககிட்ட சொல்லும்போது பெருமையா இருக்கும். அதேசமயம், பசங்களை வறுமை இல்லாம வளர்க்க முடியலையேனு குற்ற உணர்ச்சியா இருக்கும். அரசாங்க உதவி... வீட்டு வாடகைக்கும் மருத்துவச் செலவுக்குமே சரியா இருக்கும்.

எல்லா கஷ்டத்தையும் ஓரமா வெச்சுட்டு அடுத்தவேளை சோற்றுக்கு ஓடிட்டே இருப்போம். ஆனா, ரயில்ல பர்ஃபி விக்கிற இந்த வேலையில, சில சமயம் சுத்தமா வியாபாரம் இருக்காது. வயித்தைக் கட்டி நாங்க வாங்குற பொருளை சமயங்கள்ல போலீஸ்காரங்க வந்து தூக்கி எறிஞ்சிடுவாங்க. இந்த நிலையிலதான் என் கணவர், ‘இப்படியே போனா இந்த வாழ்க்கை கொடூரமாதான் இருக்கும். நீ படி... நம்ம பிள்ளைங்களுக்காக நீ படி’னு சொல்லி, 2009-ல அண்ணாமலை பல்கலைக்கழகத்துல என்னை பி.ஏ., தமிழ் படிக்க சேர்த்துவிட்டார். 2012-ல பி.ஏ முடிச்சதோட, 2013-ல பி.எட் முடிச்சேன்.

ஆனா, இவ்வளவு கஷ்டப்பட்டு நான் படிச்ச படிப்புக்கு எந்த மரியாதையும் இல்ல. வேலை கேட்டு போற இடங்களில் எல்லாம், பார்வையில்லைனு நிராகரிக்கப்படுவேன். `இதுக்காகவா இவ்வளவு சிரமப்பட்டு படிச்சோம்'னு மனசு நொந்திருந்த நேரத்துல, அன்னிக்கு வழக்கம்போல தாம்பரம் ரூட்ல வியாபாரம் பண்ணிட்டு இருந்தோம். அப்போ எங்ககிட்ட பேசின சந்தானம்னு ஒருத்தர், என்னைப் பத்தின விவரம் எல்லாம் கேட்டுட்டு, அவரோட நண்பர் சுஜீத்னு ஒருத்தர்கிட்ட அறிமுகப்படுத்தினார். அவர் என்னோட சான்றிதழ்களை எல்லாம் பார்த்துட்டு, செங்கல்பட்டுல இருக்கிற மஹிந்திரா வேர்ல்டு ஸ்கூலுக்கு என்னை நேர்காணலுக்கு அழைச்சுட்டுப் போனார்.

அங்கே கேட்ட கேள்விகளுக்கு தன்னம்பிக்கை யோட பதில் சொன்னேன். பள்ளித் தலைமை ஆசிரியர் நிர்மலா மேடம், ‘என்ன சம்பளம் வேணும்?’னு கேட்டாங்க. தயங்கினபடியே 15,000னு சொன்னேன். அவங்க 18,500 சம்பளம் நிர்ணயிச்சு, என்னை அவங்க பள்ளியில் தமிழ் ஆசிரியை பணிக்குச் சேர்த்துக்கிட்டாங்க!’’ என்று சுகுணா சொல்லச் சொல்ல... கேட்கும் நமக்கே மகிழ்ச்சி பெருகுகிறது.  சுகுணா, ஏழுமலையின் சந்தோஷத்துக்கு சொல்லவா வேண்டும்?!

அவர்களின் மகன் விஜய் பேசும்போது, “நாங்க அம்மா, அப்பாகூட வீட்டுல இருக்கிறதைவிட, ரயில்லதான் அதிக நேரம் இருப்போம். கூட்டமான சமயங்கள்கூட பர்ஃபி வித்துட்டே அம்மா எனக்கும் தங்கச்சி சுப்ரியாவுக்கும் பாடம் சொல்லிக் கொடுப்பாங்க. எனக்கு கலெக்டராவும், தங்கச்சிக்கு டாக்டராவும் ஆகணும்னு ஆசை. நாங்க பெரிய ஆளாகி எங்கப்பா, அம்மாவை நல்லா பார்த்துக்குவோம்!’’ என்று சொல்ல, மகன் பேசும் ஒலி அடங்கியதும் தன் குரல் ஒலிக்கிறார் சுகுணா....

‘‘டேய்... ரயில்ல வீட்டுப்பாடம் செஞ்ச கஷ்டமெல்லாம் இனி உங்களுக்கு இல்ல. இனி அம்மா வீட்டிலேயே சொல்லிக்கொடுப்பேன். உங்களுக்கு வேணும்ங்கிறதெல்லாம் வாங்கிக் கொடுப்பேன்!’’

 பி.நிர்மல், படங்கள்: ஜெ.விக்னேஷ்