Published:Updated:

‘போன்சாய்’ குழந்தைகள்!

‘போன்சாய்’ குழந்தைகள்!
பிரீமியம் ஸ்டோரி
‘போன்சாய்’ குழந்தைகள்!

கல்வி

‘போன்சாய்’ குழந்தைகள்!

கல்வி

Published:Updated:
‘போன்சாய்’ குழந்தைகள்!
பிரீமியம் ஸ்டோரி
‘போன்சாய்’ குழந்தைகள்!
‘போன்சாய்’ குழந்தைகள்!

ந்தக் கல்வியாண்டு இனிதே துவங்கியிருக்கிறது. மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் இவ்வருடமும் இப்படித்தான் அதைக் கடக்கப்போகிறார்கள்...

எப்படி..?!

இரண்டரை வயதில், மழலையில் பேச ஆரம்பிக்கும் குழந்தைகளை, தரதரவென இழுத்து பிளே ஸ்கூலில் தள்ளிவிடுகிறார்கள். அப்போதே பெற்றோர்களின் வன்முறையான பாசம் துவங்கிவிடுகிறது. மெள்ள ஓடத் துவங்குகிற ரேஸ் குதிரைகள், ஒன்பதாம் வகுப்பு வந்ததும் வேகமாக
ஓடவேண்டியிருக்கிறது. பணம் கட்டிய பெற்றோர்கள், ‘ம்ம்... இன்னும் இன்னும்’ எனக் குழந்தைகளை மரணபயத்தில் நிறுத்துகிறார்கள்.

‘டென்த்ல நல்ல மார்க் வாங்கிடு,அப்பதான் கேட்ட குரூப் கிடைக்கும்.

இந்த வருஷம் எந்த ஸ்கூல் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருதோ அங்கேயே லெவன்த் சேத்துரலாம்’ என்ற பெற்றோரின் பேராவலுடன், பிள்ளைகள் தங்களின் பத்தாம் வகுப்பைத் தொடங்குகிறார்கள். வகுப்பில் 500-க்கு 480-க்கு மேல் மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் ‘ஏ’ கிளாஸ். 480-ல் இருந்து 460 வரை ‘பி’. இப்படி ‘எஃப்’ வரை பிரிவுகள் இருக்கின்றன. ‘ஏ’ கிளாஸ் மாணவர்கள்தான் பிரைட் ஸ்டூடன்ஸ். இந்த மாணவர்களின் வீடுகளுக்கு தாங்களே போன் செய்கிறார்கள் ஆசிரியர்கள். படிக்கிறார்களா இல்லையா என தினமும் சோதனை செய்கிறார்கள். ‘இ’, ‘எஃப்’ எல்லாம் டல் ஸ்டூடன்ட்ஸ் என ஒதுக்கித் தள்ளப்படுகிறார்கள், பல பள்ளிக்கூடங்களில்!  இப்படி உங்கள் மகளோ, மகனோ முட்டாள் என்பதை முடிவுகட்டும் ஒரு பள்ளிக்கூடத்தின் வாசலில், அட்மிஷனுக்காகக் காத்திருப்பது எவ்வளவு அபத்தமானது!

பதினோராம் வகுப்பின் முதல் நாளில் இருந்தே `கட் ஆஃப்... கட் ஆஃப்' என மார்க் மந்திரத்தை ஸ்நாக்ஸ் டப்பாக்களில் அடைத்து அனுப்புகிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பு வரை தொலைக்காட்சி, சினிமா, உறவினர் வீடு என எதுவும் கிடையாது என்ற பெற்றோர்களின் ஷேர் மார்க்கெட் சிந்தனையை யார் சரிசெய்வது?

‘பதினோராம் வகுப்புதானே... கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கலாம்’ என்றால் அங்கு தான் பெரும் தவறு நடக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களை பதினோராம் வகுப்பி லேயே ஆரம்பிக்கிறார்கள். மாணவக் கோழிகள் தனியார் கூண்டுகளில் அடைக்கப் படுகிறார்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்த்தவகையில் அது முட்டையிட்டே ஆக வேண்டும். இனி, குழந்தைகளின் அடிவயிற் றில் ஏறிநின்று முட்டைகள் லாகவமாக பிதுக்கி எடுக்கப்படும். ஒவ்வொரு முழு முட்டைக்கும் பயிற்சியாளருக்கு தனிச்சம்பளம் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘போன்சாய்’ குழந்தைகள்!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்ததில் இருந்து ரிசல்ட் வரும்வரை கடக்க வேண்டிய நாட்கள்தான் எரிமலை வெடிப்பதற் கான கால அவகாசம். தேர்வு குறித்து யாரும் பேசுவதையே விரும்பாதவனாக மாணவன் தன்னை தனிமைப்படுத்திக்கொள்கிறான். நுழைவுத் தேர்வு உண்டா, இல்லையா என்ற அரசாங்கத்தின் ஊசலாட்டத்தில் கதிகலங்கி நிற்கிறான். குற்றவாளியைப்போல பெற்றோர்களின் முகத்தைக் காணவே அச்சம்கொள்கிறான். இந்த மனோபாவம்தான் அத்தனையையும் புறக் கணிப்பதற்கான துவக்கப்புள்ளி.

தேர்வில் தோல்வி அடைந்தாலும் அரவணைத்துக்கொள்கிற சமூகம் அவர்களுக்கு வாய்க்கவில்லை. பூச்சிமருந்துகளும், தூக்குக்கயிறுகளும் அவர்களின் பதுங்கு குழிகளாகின்றன. வளர்ப்பு முறையில் ஏற்படுகிற சிக்கலால், தோல்விகளை எதிர்கொள்கிற மனோபாவத்தில் குழந்தைகள் இல்லை.

இன்னொரு பக்கம், பெற்றோர்கள் தாங்களே தேர்வு எழுதியவர்கள்போல நடுக்கமும் குழப்பமுமாக இருக்கிறார்கள். ‘மார்க் நிறைய வாங்கிடுவானா?’, ‘மெரிட்ல சேர்க்க முடியுமா?’, ‘வயலை விற்கலாமா?’, ‘நகையை அடகுவைக்கலாமா?’, ‘ஃபைனான்சியரைப் பார்க்கலாமா?’ என்பது போன்ற பதற்றங்களும், ‘ரிசல்ட்டுக்கு முன்னரே பணம் கட்டிட்டா ஃபீஸ் குறையுமே’ என்கிற மனக் கணக்குகளும், அந்தப் பதற்றத்தில் பிள்ளைகளிடம் முறைப்பும் இறுக்கமுமாக இருப்பதும்... என இவையெல் லாம் மார்க் கலாசாரத்தின் விளைவுகள்.

பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் பணி என்பதே மாறிவிட்டது. ‘சார் உங்கள் பி.இ.டி பீரியடை எங்களுக்குக் கொடுத்துருங்க, டெஸ்ட் வெச்சிக்கிறோம்’ என இயற்பியல், வேதியியல் ஆசிரியர்கள் படையெடுக்கிறார்கள். பள்ளியின் மேலிடம் சொல்வதும் இதுதான். பொதுத்தேர்வு மாணவர்களுக்கு பள்ளியின் கலை விழாக்களில் பங்கேற்கவும் தடை. புத்தகத்தில் மேயும் புழுக்களாய் மூச்சுமுட்ட பக்கங்களைத் தின்று, செரிக்கும் திறனற்று மாணவச் செல்வங்கள் மனநோயாளிகளாக ஆகிவிடுகின்றனர்.

‘மகளுக்கு இசை பிடிக்குமா? பாடுவாளா? ஓவியம் வரைவாளா?’ - இப்படி அவளுக்கான மகிழ்வு எதைப்பற்றியாவது யோசித்துப் பார்க்கிறீர்களா? ‘எல்லாம் அவங்க நல்லதுக்கு தான்’ என்று விடுதியில் தள்ளுகிறீர்கள். ஆரோக் கியத்தையும், அன்பையும், தாய் - தந்தையரின் அரவணைப்பையும் இழந்து வாங்கும் அந்த 200/200 மதிப்பெண்களில் மலட்டுத் தன்மை இருப்பதை புரிந்துகொள்வது எப்போது?

ஃபெயிலாகும் மாணவர்களின் பெற்றோர் களுக்கே... `கவலைப்பட தேவையில்லை' என்று நாம் அறிவுரை சொல்லிக்கொண்டிருக்க,  ‘சென்ட்டம்க்கு 2 மார்க் போச்சு’, ‘1100-க்கு மேல வாங்குவான்னு நினைச்சோம், 1080-தான் வாங்கிருக்கான்’ என்று ஒப்பாரி வைக்கும் பெற்றோர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. ‘உன் இஷ்டப்படி எதுலயாவது சேர்த்துவிடு, படிச்சுத் தொலைக்கேன்’ என்கிற திருநெல்வேலி மாணவனுக்கும், ‘நீ வேணா பாரு... பயாலஜில ஃபெயில்தான் ஆவேன்’ எனச் சொல்லிவிட்டு, பயத்தில் கஷ்டப்பட்டு படித்து சென்ட்டம் எடுத்துவிடும் டெல்டா மாவட்டத்து மாணவியின் மனநிலைக்கும் பெரிய வித்தியாசமில்லை. குழந்தைகள் அவர்களுக்காக வாழாமல்... பெற்றோர்கள் காட்டும் அன்பின் நன்றிக்கடனாகத்தான் கொடுமையை அனுபவிக்கிறார்களோ எனத் தோன்றுகிறது.

‘போன்சாய்’ குழந்தைகள்!

அவர்களுக்குப் பிடித்த படிப்பை படிக்கவிடாமல், உங்கள் கனவுக்கும் கணக்குகளுக்கு மான பொறியியல் படிப்பில் அவர்களைச் சேர்த்துவிடும்போது, நான்கு ஆண்டுகள் கழித்து கரன்சியைக் கக்கும் இயந்திரமாகத்தான் அவர்கள் வெளியில் வருவார்கள். ஆனால், விருப்பமில்லாத, திருப்தியற்ற ஒரு வேலையில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறது? ‘எவ்வளவோ செலவுசெய்து, உயிரைக்கொடுத்து படிக்க வெச்சோம். கடைசி காலத்துல பிள்ளைங்க கவனிக்க மாட்டேங்குதுங்க’ என்கிற பெற்றோர்களின் அழுகுரலுக்கு அடிப்படைக் காரணம் இதுதான். `ஆடுடா ராமா... ஆடுடா ராமா' என சுழற்றிய சாட்டையை, கடைசி காலத்தில் உங்கள் பக்கம் அவர்கள் திருப்பி வீசுகிறார்கள். இதுவா ஆரோக்கியமான சமுதாயம்?

பள்ளிக் கல்வி முறை குறித்து எத்தனையோ சமூக அக்கறை உள்ள படைப்பாளிகள் எழுதிக் குவித்துவிட்டார்கள். கடந்த இரண்டு ஆண்டு களில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் மீதான மோகம் சற்றுக் குறைந்திருப்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம்தான். பெற்றவர்களின் விழிப்பு உணர்வில்தான் குழந்தைகளின் சந்தோஷம் இருக்கிறது. கை, கால்கள் முடங்கிப்போனால் மாற்று உண்டு. ஆனால், குழந்தைகளின் மூளை முடக்கத்துக்கு ஒருபோதும் யாரும் மாற்றாக முடியாது.

பிள்ளைகளின் மீது மதிப்பெண் சுமையை ஏற்றாதீர்கள். எப்போது பார்த்தாலும் படிப்பு குறித்த கடும் வார்த்தைகளால் கொல்லாதீர்கள். இளம் தலைமுறை, ஆலவிருட்சம். சமுதாயத்துக்கு நிழல் தரக் காத்திருக்கும் அவர்களை, `போன்சாய்' மரங்களாய் தொட்டிக்குள் குறுக்கி அழகுபார்ப்பது ஆரோக்கியமானதல்ல. 

 அகிலா கிருஷ்ணமூர்த்தி