பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!

‘மிக நீண்ட நாட்கள் கழித்து பள்ளித்தோழியை தற்செயலாக சந்தித்தேன். இரண்டு பிள்ளைகளுக்கு அவள் அம்மா. அவளைப் பார்த்ததும் பழைய நினைவுகள் அடுக்கடுக்காய் என்னுள் பரந்து விரிந்தன. நான் அவளைப் பிரிந்தபோது இருந்ததைவிட சற்று உடல் கூடியிருந்தாள்.

பார்த்ததும் இருவரும் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. ‘எத்தனை வருஷமாச்சுடி உன்னப் பார்த்து’ என்று ஆரத்தழுவிக்கொண்டபோது இமைகள் நனைந்திருந்தன. சட்டென தன் துப்பட்டாவால் முகம் துடைத்தவள், `உன் ஸ்கூட்டர் ரொம்ப அழகா இருக்கு, என்னை ஒரு ரவுண்ட் கூட்டிட்டுப் போறியா?’ என்று பச்சைக் குழந்தையாகிக் கேட்டாள். கல்லூரி நாட்களில் அவளுடைய சைக்கிள் பின்பக்க கேரியரில் உட்கார்ந்து பலமுறை பயணம் செய்திருக்கிறேன். இப்போது அவளை என் ஸ்கூட்டரில் உட்கார வைத்துக்கொள்ள பிடிக்காதா என்ன?

பில்லியனில் சிறு பிள்ளைபோலவே உட்கார்ந்துகொண்டாள். பழைய நினைவுகளை மெதுவாய் மீட்டெடுத்தோம். அவளைப் பார்க்காத இத்தனை வருடங்களில் விட்டுப்போன கதைகளையெல்லாம் பேசித்தீர்த்தோம். மனசு லகுவானது. கடைசியாக அவளிடம் இருந்து விடைபெறலாம் என்று கிளம்பும்போது, ‘மீண்டும் கல்லூரி நாட்கள் திரும்ப வராதா?’ என்று கைகளைப் பிடித்துக்கொண்டு சொன்னாள். இருவரின் ஏக்கமும் ஒரே மாதிரிதான் இருந்தது.

சுகமோ, துக்கமோ... பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளும்போது, அது நம்மை ஆசுவாசப்படுத்தும் என்பதை நெஞ்சுக்கு நெருக்கமாகப் புரிந்துகொண்டேன். அன்று என் குடும்பத்தாருக்கும் எனக்கும் சிறுபிரச்னை இருந்தது. தோழியுடனான சந்திப்புக்கு பிறகு, அதையெல்லாம் தூர வைத்துவிட்டு மனசு முழுக்க சந்தோஷங்களை மட்டுமே சுமந்தபடி வீடு திரும்பினேன். இந்த வாழ்க்கைதான் எத்தனை அழகானது!’

 - முகநூலில் இப்படி ஒரு நிலைத்தகவலைப் படித்தேன்.

பிரச்னைகள் என்பது யாருக்குத்தான் இல்லை? ஒவ்வொருவரும் தங்கள் தலைகளில் பிரச்னைகளை சுமந்துகொண்டுதான் வாழ்கிறார்கள். சிலர் வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள். சிலர் மனதுக்குள் புதைத்துக்கொள்கிறார்கள்.

எல்லோரிடமும் நம்மைப் பற்றி பகிர்ந்துகொள்ள அவசியம் இல்லை. என்றாலும் நமக்கான நம்பிக்கைக்குரிய, அன்புக்குரியவர்களிடம் பகிர்ந்துகொண்டால், வாழ்க்கை அழகாகும் என்கிற பாடத்தைப் படித்தேன் அந்த நிலைத்தகவல் மூலம்!

என்ன... உங்களுக்கும் இதுவேதான் தோன்றுகிறதா?!

உரிமையுடன்,

நமக்குள்ளே!


ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு