Published:Updated:

ரத்த வெள்ளத்தில் அன்று... மருத்துவராக இன்று!

ரத்த வெள்ளத்தில் அன்று... மருத்துவராக இன்று!
பிரீமியம் ஸ்டோரி
ரத்த வெள்ளத்தில் அன்று... மருத்துவராக இன்று!

தன்னம்பிக்கை நாயகி ரேச்சல் ரெபெக்காடானிக் ஸ்டோரி

ரத்த வெள்ளத்தில் அன்று... மருத்துவராக இன்று!

தன்னம்பிக்கை நாயகி ரேச்சல் ரெபெக்காடானிக் ஸ்டோரி

Published:Updated:
ரத்த வெள்ளத்தில் அன்று... மருத்துவராக இன்று!
பிரீமியம் ஸ்டோரி
ரத்த வெள்ளத்தில் அன்று... மருத்துவராக இன்று!
ரத்த வெள்ளத்தில் அன்று... மருத்துவராக இன்று!

‘‘அன்னிக்கு நானும் அம்மாவும் மட்டும்தான் வீட்ல இருந்தோம். யாரோ கதவைத் தட்ட, நான் போய் திறந்தேன். சட்டுனு வீட்டுக்குள்ள நுழைஞ்ச அவர், ரூம்ல இருந்த கட்டில்ல அதிகாரமா கால் மேல கால் போட்டுட்டு உட்கார்ந்தார். ஏதோ விபரீதம் நடக்கப்போகுதுனு தோணுச்சு. செல்போனில் அப்பாவுக்கு மெசேஜ் அனுப்ப டைப் பண்ணினார் அம்மா. வந்தவர் அம்மா கையில இருந்த செல்லை பிடுங்கி வீசி எறிஞ்சு உடைச்சார்.

நான் பயத்துல கத்தினேன். அவர் அம்மாவை கீழ தள்ளிவிட்டு, மறைச்சு வெச்சிருந்த கத்தியை எடுத்து என் தலையில ஒரு வெட்டு வெட்டினார். நான் துடிச்சேன். ‘நீ என்ன பெரிய அழகியாடீ’ன்னு ஆரம்பிச்சு காது கூசுற வார்த்தைகளால திட்ட ஆரம்பிச்சார். கத்தியால தாக்கின வலியைவிட, அந்தக் கேவலமான வார்த்தைகள் என்னை அமிலமா சுட்டுச்சு. அவர் அடுத்து தாக்குறதுக்குள்ள வீட்டைவிட்டு ஓடணும்னு நினைச்சு, வீட்டுக்குள்ள அம்மா இருக்கிறதை மறந்துட்டு வெளிய போய் தாழ் போட்டேன். அக்கம்பக்கம் உள்ளவங்களை உதவிக்குக் கூப்பிட்டேன். ஆனா, யாருக்கும் கேட்கலை. அப்பதான் அம்மா உள்ள இருக்கிறது ஞாபகத்துக்கு வந்து, மறுபடியும் கதவை திறந்துட்டு உள்ள போனேன்.

அப்ப அவர் அம்மாவை அடிச்சு கீழ தள்ளியிருந்தார். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து அவர் குத்தின கத்தி, என் நெஞ்சு எலும்புக்குப் பக்கத்துல பாய்ஞ்சது. மூச்சுவிட முடியல. கீழே சரிஞ்சு விழுந்தேன். அவர் வீட்டைவிட்டு ஓடினார். நான் வலி தாங்காம கத்த, ஓடிப் போனவர் திரும்பவும் வீட்டுக்குள்ள வந்து என் வயித்துல குத்திட்டு அங்க இருந்து தப்பிச்சுப் போனார்.

ரத்த சகதியில் கிடந்த எனக்கு, செத்துடக் கூடாதுனு மனசு துடிச்சது. அக்கம்பக்கத்துல இருந்தவங்ககிட்ட உதவி கேட்டு, அம்மா என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனாங்க. அன்னிக்கு காலையில நான் சாப்பிட்ட தோசை, கத்திக்குத்து பட்ட இடத்துல இருந்து வெளிய வந்ததை பார்த்த அந்த ரத்த கணங்களை என்னால எப்பவும் மறக்க முடியாது!’’ படிக்கும்போதே திகிலாக இருக்கிறதுதானே?!

தன்னை ஒருதலையாகக் காதலித்த ஒருவனால் கொலைவெறி தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு, அந்தக் கொடும் சம்பவத்திலிருந்து மீண்டு உயிர்பிழைத்து இன்று... மருத்துவம், மாடலிங், சினிமா, சமூக சேவை என பலதுறைகளிலும் சாதித்து வருகிறார் ரேச்சல் ரெபெக்கா. ஸ்வாதி, வினுப்பிரியா என வன்முறைகளால் பெண்கள் பலியாகி அச்சம் உறைந்துள்ள இச்சூழலில், கண்களில் தேங்கும் கண்ணீரை விழவிடாமல் அசாத்திய தன்னம்பிக்கையுடன் ரெபெக்கா பேசும்போது அவர் தைரியம் போற்ற வைக்கிறது. சென்னை, தி.நகரில் உள்ள அவரது ‘பிரயத்னா’ ஆயுர்வேத மருத்துவமனையில் அவரைச் சந்தித்தோம்.

‘‘எனக்கு சொந்த ஊர் வேலூர். அப்பா சமூக ஆர்வலர். அம்மா இல்லத்தரசி. நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. ஸ்ரீபெரும்புதூர், தர்மா ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரியில இளங்கலை ஐந்தரை வருஷமும், அதுக்கப்புறம் கர்நாடகாவுல முதுகலையும் படிச்சேன். நான் படிச்சுட்டு இருந்த சமயத்துல, எங்க ஊர்க்காரர் ஒருத்தர் என்னை லவ் பண்றதா சொல்லி மூணு வருஷமா டார்ச்சர் பண்ணினார். பலமுறை என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார், ஒருமுறை என்னை நடுரோட்ல அடிச்சார். அந்த 19 வயசுல தைரியத்தைவிட பயம்தான் அதிகமா இருந்தது. அப்பாகிட்ட சொன்னேன். அவங்க எனக்கு தைரியம் சொன்னாங்க. ஆனா, இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும்னு நாங்க எதிர்பார்க்கல’’ என்றவர், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்...

‘‘2008-ம் வருஷம், ஏப்ரல் 8-ம் தேதி. அப்பா எனக்கு வாங்கிக்கொடுத் திருந்த புது செல்போனை வெச்சு, சந்தோஷமா பார்த்துட்டு இருந்தேன்.

அப்பா வீட்டை விட்டுக் கிளம்பின பிறகு வீட்டுக்குள்ள வந்த அவர், என் கையில இருந்த போனை டக்குனு பிடுங்கிட்டுப் போயிட்டார். என்ன இது டார்ச்சர்னு செத்துடலாம் போல இருந்துச்சு. ஆயுர்வேதம் படிச்சதால, விஷத்தன்மையுள்ள விதைகளை சாப்பிட்டா செத்துடலாம்னு தெரியும். கொஞ்சம் விதைகளை எடுத்து அரைச்சு, அதை விழுங்குறதுக்கு முன்னாடி மேரி மாதாகிட்ட பிரேயர் பண்ணேன். அந்த நொடி, ‘இவருக்காக நாம ஏன் சாகணும்?’னு தோணுச்சு. தற்கொலை முடிவைக் கைவிட்டேன். ஆனா, மறுநாளே அந்தக் கத்திக்குத்து சம்பவம் நடந்திருச்சு’’ என்றவர், அதன் பின் வலிமையை வளர்த்தெடுத்த அத்தியாயம், அசாத்தியம்.

‘‘ஆஸ்பத்திரியில, நான் மடக்கி வெச்சிருந்த காலை நீட்டினப்போ, அதுவரை உள்ள கட்டுப்படுத்தி வெச்சிருந்த ரத்தம், குபுகுபுன்னு கொட்ட ஆரம்பிச்சது. ‘இது ரொம்ப சீரியஸ் கேஸ், நீங்க சி.எம்.சி ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போங்க’னு சொல்லிட்டாங்க. அங்க போனோம். நான் மருத்துவமனையில இருந்த சமயம், நிறைய பேர் எனக்கு ரத்ததானம் கொடுத்ததா சொன்னாங்க. அந்த நல்லவர்களுக்காக நான் வாழணும், சாதிக்கணும்னு மனசுக்குள்ள வைராக்கியத்தை விதைச்சுக்கிட்டேன். முழு நம்பிக்கையோட, தைரியத்தோட சிகிச்சையை மேற்கொண்டேன்.

கிட்டத்தட்ட எனக்கு அது யுத்தகாலம் மாதிரி. இந்த சம்பவத்துக்குப் பிறகு எனக்கு நல்ல வாழ்க்கைத் துணைவரும் கிடைச்சார்.

ரத்த வெள்ளத்தில் அன்று... மருத்துவராக இன்று!

என்னைக் கத்தியால் குத்தினவர் மேல வழக்கு போட்டோம். அஞ்சு வருஷம் கேஸ் நடந்துச்சு. அப்புறம், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்னு சொல்லி விடுதலை பண்ணிட்டாங்க. அவருக்கு தண்டனை கிடைக்கணும்னு மனசு ஒரு பக்கம் நினைச்சாலும், சமயங்களில், என் வாழ்க்கையில அந்த சம்பவத்துக்குப் பிறகு நடந்த எல்லா நல்ல விஷயங்களுக்கும் அந்த மோசமான காயம்தான் காரணம்னு தோணும். இயல்பான வாழ்க்கையைவிட அதிக வேகத்தையும் வைராக்கியத்தையும் தைரியத்தையும் நான் கைகொள்ள, அந்த துர்சம்பவம்தான் காரணமா அமைஞ்சது. காயங்களை எல்லாம் கடந்து படிப்பை முடிச்சு ஆயுர்வேத மருத்துவரா இருக்கேன். கறுப்பு, அழகுக்குத் தடையில்லைனு பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்க, கறுப்பா இருக்கும் நான் மாடலிங் பண்றேன். உள்ளூர் விளம்பரங்கள் முதல் வெளியூர் விளம்பரங்கள்வரை நடிச்சிருக்கேன். இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கிற அவரோட ‘மின்மினி’ படத்தில் டீச்சர் ரோலில் நடிச்சிருக்கேன்.

எனக்கு நடந்த அநியாயம்போல நிறையப் பெண்களுக்கு இன்னும் கொடுமைகள் நடந்துட்டுதான் இருக்கு. அப்படி பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள், பாலியல் தொழிலாளிகள், ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், திருநங்கைகள் இவங்களுக்கு எல்லாம் உதவ ‘ஊக்கம்’ என்ற அறக்கட்டளையை நடத்திட்டு வர்றேன். சாவை அருகில் சென்று பார்த்ததால, இப்போ என் வாழ்க்கையில் பயம் என்பதே இல்லை. மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கை வாழணும் என்பதுதான் மனசெல்லாம் நிறைஞ்சிருக்கு.

என் வயிற்றில் உள்ள கத்திக்குத்து தழும்புகளையே, பெண்களுக்குத் தேவையான துணிச்சலாக, விழிப்பு உணர்வாகக் கடத்த, அதை முன்னிறுத்தி மாடலிங் புகைப்படங்கள் எடுத்திருக்கேன். அதுவே, தன்னம்பிக்கைக்காக பல விருதுகள் நான் பெறக் காரணமா அமைஞ்சது. எல்லா காயங்களையும், துன்பங்களையும் கரைக்கும் ஆற்றல் காலத்துக்கு உண்டு. தைரியத்தோட வாழ்க்கையை எதிர்கொள்ளணும்!’’

ரேச்சலின் துணிச்சலும் தன்னம்பிக்கையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம் தேவை!

பொன்.விமலா, படங்கள்:  பா.காளிமுத்து

ரத்த வெள்ளத்தில் அன்று... மருத்துவராக இன்று!

ரேச்சல் ரெபெக்காவின்  நெகிழ்சியான பேட்டியின் வீடியோவைக் காண http://bit.ly/rachelrebecca என்ற லிங்கை கிளிக் செய்யவும் அல்லது இங்குள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்யவும்.