தன்னம்பிக்கை
Published:Updated:

நடிப்பு... நாட்டியம்... ஓவியம்! - 68 வயதிலும் ஆக்டிவ் நிர்மலா

நடிப்பு... நாட்டியம்... ஓவியம்! - 68 வயதிலும் ஆக்டிவ் நிர்மலா
பிரீமியம் ஸ்டோரி
News
நடிப்பு... நாட்டியம்... ஓவியம்! - 68 வயதிலும் ஆக்டிவ் நிர்மலா

கலைப்பயணம்

நடிப்பு... நாட்டியம்... ஓவியம்! - 68 வயதிலும் ஆக்டிவ் நிர்மலா

டிப்பு, நாட்டியப் பயிற்சிப் பள்ளி ஆசிரியை,  ஓவியக் கலைஞர் என தன் 68 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார் ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா. ‘வெண்ணிற ஆடை’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என 400-க்கும் அதிகமான படங்களில் நடித்த சூப்பர் சீனியர் நடிகை.

இப்போது தன் நாட்டியத்தை மேடையேற்றுவதுடன் ‘நிர்மலாஸ் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்’ என்ற தனது நடனப் பள்ளி மூலம் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் நாட்டியம் பயிற்றுவித்து வருகிறார். இதற்கிடையில் சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘தெய்வமகள்’ சீரியலிலும் நடித்து வருகிறார். நாட்டியம், நடிப்பு போக மற்ற நேரங்களில் ஓவியம், கதை எழுதுதல் என தன் நேரத்தை எப்போதும் பிஸியாக வைத்திருக்கும் நிர்மலாவைச் சந்தித்தோம். மலரும் நினைவுகளை தெளிந்த உச்சரிப்பில் அழகாகப் பேசத் துவங்கினார்...

‘‘நான் சினிமாவுக்கு வந்ததை இப்போ நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கு. கும்பகோணத்துல அரண்மனைக் குடும்பத்தில் பிறந்தவள் நான். ரொம்பக் கட்டுக்கோப்பான வளர்ப்பு. ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு ஆசிரியர் வீட்டுக்கே வந்து சொல்லிக் கொடுப்பாங்க. அப்படி ஒரு சூழலில், என்னை நாட்டியம் கத்துக்க அப்பா அனுமதிச்சதே பெரிய விஷயம். உறவினர்களும் அப்பாவோட நண்பர்களும் ‘இதெல்லாம் வேண்டாம்’னு  சொல்லியும், அதையெல்லாம் புறக்கணிச்சு, நான் நாட்டியத்துல பேர் வாங்க அப்பா விரும்பினார்.

நடிப்பு... நாட்டியம்... ஓவியம்! - 68 வயதிலும் ஆக்டிவ் நிர்மலா

அந்த நேரத்துல, ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அதில் வரும் ‘அனுபவம் புதுமை’ பாட்டுக்கு நடனம் ஆடுறப்போ, தேவையான எக்ஸ்பிரஷனை என்னால கொடுக்க முடியலை. அதனால அந்தப் படத்துல இருந்து விலகிட்டேன். அதுக்கப்புறம்தான் ‘வெண்ணிற ஆடை’ பட வாய்ப்பு வந்தது. தியேட்டர்ல அந்தப் படத்தைப் பார்த்தப்போ, என்னோட நடிப்பு எனக்கு திருப்தியா இல்ல. நாட்டியம் தெரிஞ்ச அளவுக்கு நடிப்பு எனக்கு வரலைன்னு உணர முடிஞ்சது. அதனால, இனிமே படத்துலயே நடிக்கக் கூடாதுன்னு முடிவுக்கு வந்தேன்’’ என்று தன் குறைகளை சீர்தூக்கிப் பார்த்ததை சொன்னவர், தொடர்ந்து பேசினார்...

‘‘நடிப்பு வேண்டாம்னு நான் முடிவெடுத்த நேரத்தில்தான் மலையாளத் தயாரிப்பாளர் குஞ்சக்கோ, அவரோட படத்துல நடிக்கச் சொல்லி என்னைக் கேட்டார். நான் மறுத்தேன். ‘உன் குறைகளை சரிசெஞ்சு உன்னை நல்ல நடிகை ஆக்கறது என் பொறுப்பு’னு அவர் சொல்ல,

நடிப்பு... நாட்டியம்... ஓவியம்! - 68 வயதிலும் ஆக்டிவ் நிர்மலா

`இவ்வளவு பெரிய தயாரிப்பாளர் சொல்லும்போது அதை ஏன் மறுக்கணும்?'னு தோணுச்சு. ஒப்புக்கிட்டேன். எனக்காக மட்டும் மூணு உதவி இயக்குர் களை நியமிச்சிருந்தார். அடிக்கடி கூன் போடுறது, உதட்டை ஈரப்படுத்துறதுனு நான் செய்த தவறுகளை எல்லாம் அவங்க சுட்டிக்காட்டிக்கிட்டே இருப் பாங்க. அதையெல்லாம் நான் சரி பண்ணிக்கிட்டேன். அவரோட படமான ‘காட்டுத்துளசி’ சூப்பர் ஹிட் ஆகி,  எனக்கு மலையாளத்தில் நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. தொடர்ந்து மலையாளப் படங்களில் நடிச்சேன்.

எம்.ஜி.ஆரோட ‘ரகசியப் போலீஸ் 115’, சிவாஜியோட ‘லட்சுமி கல்யாணம்’னு தமிழின் முன்னணி நடிகர்களோட நடிக்கிற வாய்ப்பு, தொடர்ந்து கிடைச்சது. நிறைய படங்களில் நடிச்சதும், ஓய்வு தேவைப்பட்டது. நடிப்புக்கு ஓய்வு கொடுத்தாலும், தொடர்ந்து மேடைகள்ல நாட்டிய நிகழ்ச்சிகள் பண்ணணும்னு தோணுச்சு. இப்ப வரைக்கும் அது நடந்திட்டும் இருக்கு. இப்போ சினிமா வாய்ப்புகள் வந்தாலும்கூட, நான்  விரும்பும் கதாபாத்திரங்கள் அமையாததால மறுத்துடறேன்’’ என்றவர் சின்னத்திரை அறிமுகம் குறித்துப் பேசினார்.

நடிப்பு... நாட்டியம்... ஓவியம்! - 68 வயதிலும் ஆக்டிவ் நிர்மலா

‘‘சீரியல்கள்னாலே பக்கம் பக்கமா டயலாக் இருக்கும், ஒரு நாள் முழுக்க நடிக்கச் சொல்வாங்கனு அதிலிருந்து தூரமா இருந்தேன். அப்போதான் ‘தெய்வமகள்’ சீரியல் இயக்குநர் குமரன் என்னை சந்திச்சார். ‘உங்க குடும்ப உறுப்பினர்கள்கிட்ட எப்படி பழகுவீங்களோ அதே உரிமையோட பழகுற அனுபவம் கிடைக்கும்’னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே இந்த சீரியல்ல நடிக்கிறது எனக்கு வேலைப்பளுவாவே தெரியல. ரொம்ப ஜாலியா நடிக்கிறேன்; உண்மையில் இந்த டீம் சொந்தக் குடும்பம் மாதிரிதான் எங்கிட்ட பழகுது’’ என்றவரிடம் அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டதை குறித்து கேட்டோம்.

“சமீபத்துல அ.தி.மு.க  கட்சியில உறுப்பினரா இணைஞ்சேன். இதுக்கும் முன்னாடியே எம்.ஜி.ஆர் இருந்த சமயத்துலயே அவர் கைப்பட விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து என்னை அ.தி.மு.க கட்சி உறுப்பினரா சேர்த்திருந்தார். ஒரு கட்டத்துல ஒதுங்கி இருந்தேன். தனி ஒரு பெண்ணாக இருந்துகொண்டு அரசியலில் சாதித்துக்கொண்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான அன்பாலும் மரியாதையின் காரண மாகவும் திரும்பவும் அவங்களோட முன்னிலையில அ.தி.மு.க-வுல இணைஞ்சிருக்கேன். நட்சத்திரப் பேச்சாளராகவும் இருக்கேன்’’என்றவர்,

நடிப்பு... நாட்டியம்... ஓவியம்! - 68 வயதிலும் ஆக்டிவ் நிர்மலா

‘‘நடிப்பு போக மற்ற நேரங்கள்ல, நாட்டியப் பள்ளியில் இருப்பேன். திருவள்ளூர் நாட்டியப் பள்ளிக்கு வர்ற மாணவிகள், பெரும்பாலும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. அவங்களோட கலையார்வம் ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கும். அறுவடைக் காலங்கள்ல அவங்க பெற்றோர்கள் எல்லோரும் வயல் வேலைகளில் இருக்க, இவங்க தனியா கிளாஸுக்குக் கிளம்பி வந்திருப்பாங்க. அந்த ஆர்வம்தான், என் கால்ல அடிபட்டிருந்தாலும் அவங்களுக்கு நாட்டியம் கற்றுத்தர ஒரு உந்து சக்தியைக் கொடுக்குது. அப்புறம் நாட்டியப்பயிற்சி புத்தகம் ஒன்றையும் தயார் பண்ணி இருக்கேன். கூடிய சீக்கிரம் அது வெளிவரும்’’ என்றவரிடம் அவரின் ஃபிட்னஸ் சீக்ரெட் கேட்டோம்.

‘‘சின்ன வயசுல தினமும் யோகா பண்ணுவேன்; ரொம்ப தூரம் ஓடுவேன். அதெல்லாம்தான் இப்போ என் ஆரோக்கியத்துக்குக் கைகொடுக்குது. எல்லாத்துக்கும் மேல, நாட்டியத்தைவிட பெரிய உடற்பயிற்சி தேவையில்லைனு நினைக்கிறேன். அதை இப்பவும் தொடர்ந்து செய்யுறதாலதான் இந்த வயசுலயும் ஃபிட்னஸோடு இருக்க முடியுது. உடலுக்கு மட்டுமல்ல, மனசுக்கும் பயிற்சி அவசியம்னு, ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் ஓவியம் வரைவேன்; கதை எழுதுவேன்’’ என்ற நிர்மலா, தான் வரைந்த ஓர் ஓவியத்தை நம்மிடம் காட்டினார்.

அவரைப்போலவே மலர்ச்சியாக இருந்தது!

பொன்.விமலா   படங்கள் :மீ.நிவேதன், சு.ஷரண் சந்தர்  படம் உதவி: ஞானம்

வெண்ணிற ஆடை நிர்மலாவின் மலரும் நினைவுகளையும் அவர் நாட்டியத்தையும் கண்டுகளிக்க http://bit.ly/venniraadainirmala என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள். அல்லது  இங்குள்ள QR code-ஐ ஸ்கேன் செய்யுங்கள்!

நடிப்பு... நாட்டியம்... ஓவியம்! - 68 வயதிலும் ஆக்டிவ் நிர்மலா