Published:Updated:

சேமிப்புப் பழக்கம்... மகிழ்ச்சியான எதிர்காலம்!

சேமிப்புப் பழக்கம்... மகிழ்ச்சியான எதிர்காலம்!
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்புப் பழக்கம்... மகிழ்ச்சியான எதிர்காலம்!

சேவிங்ஸ்

சேமிப்புப் பழக்கம்... மகிழ்ச்சியான எதிர்காலம்!

சேவிங்ஸ்

Published:Updated:
சேமிப்புப் பழக்கம்... மகிழ்ச்சியான எதிர்காலம்!
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்புப் பழக்கம்... மகிழ்ச்சியான எதிர்காலம்!

ப்சோஸ் மோரி’ என்ற உலகளாவிய வர்த்தக நிறுவனம், இந்தியா உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம், அவர்களின் ஓய்வுகால வாழ்க்கைக்கான சேமிப்புப் பழக்கம் குறித்து சமீபத்தில் ஓர் ஆய்வினை நடத்தியது. ஆய்வின் முடிவில் 47% இந்தியர்கள் ஓய்வு கால வாழ்க்கைக்கான தேவைகளுக்கு இன்னும் சேமிக்கவே இல்லை எனவும், 44% இந்தியர்கள் சேமிப்பைத் தொடங்கி பாதியில் நிறுத்தி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

`சேமிப்புப் பழக்கத்துக்கு தடையாக இருப்பது என்ன... எந்தெந்த முறைகளில் சேமிப்பது சாமர்த்தியமாக இருக்கும்... சேமிப்பை சிலர் பாதியில் கைவிடுவது ஏன்?'

- இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகரும், ஃபார்ச்சூன் பிளானர்ஸ் இன்வெஸ்ட்மென்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் (Fortune Planners Investment Service (p) Ltd) நிறுவனத்தின் நிறுவனருமான பா.பத்மநாபன்.

சேமிப்புப் பழக்கம்... மகிழ்ச்சியான எதிர்காலம்!

ஏன் சேமிக்க வேண்டும்?

``இன்றைய சம்பாத்தியத்தில், அந்தந்த மாதத்துக்கான செலவுகள் பெரும்பாலும் திண்டாட்டமில்லாமல் செல்கின்றன. ஆனால், பிள்ளைகளின் மேற்படிப்பு, திருமணம், திடீர் விபத்து, உடல்நலக் குறைவு போன்ற செலவுகளைச் சந்திக்க நேரும்போது கடனாளி ஆவதுடன், அந்தக் கடனுக்கான வட்டி என பணம் விரயமாகி, அதனால் மாத வருமானம் பற்றாக்குறையாகி நிதி நெருக்கடிக்குத் தள்ளப்படுகிறோம். முன்கூட்டியே திட்டமிட்டு மாதச் சம்பளத்தில் ஒரு சிறு தொகையை சேமித்து வந்திருந்தால், இந்நிலை ஏற்படாது என்பதோடு, சேமிப்பால் ஓய்வு வாழ்க்கையையும் சிரமமின்றி எதிர்கொள்ள முடியும்.

போன வருடம் உங்களின் ஒரு மாதக் குடும்பச் செலவு ரூபாய் 20,000 ரூபாய் ஆக இருந்தால், இந்த வருடத்தில் ஒரு மாதக் குடும்பச் செலவு 22,000 - 23,000 ஆயிரம் ரூபாயாக அதிகமாகியிருக்கும். கிட்டத்தட்ட 10% - 12% அளவிலான இந்த விலைவாசி உயர்வைத்தான், பணவீக்கம் என்கிறோம். விலைவாசி அதிகரிப்பு என்பது 10 வருடங்கள் கழித்து, இன்னும் பலமடங்கு அதிகமாகியிருக்கும். எனில், வருமானம் குறைந்து போகும் அல்லது வருமானமே நின்றுபோகும் உங்களின் ஓய்வுக் காலத்தில், செலவுகளையும், பணவீக்கத்தையும் எப்படிச் சமாளிப்பீர்கள்?
2004-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்பவர்களுக்கு பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு ரத்துசெய்துவிட்ட பிறகு, சேமிப்புப் பழக்கம் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. பெரும்பாலான நிறுவனங்களில் பி.எஃப் (provident fund) தொகை பிடித்தம் செய்யப்பட்டாலும், ஊழியர்கள் தங்களின் அவசரத் தேவைக்கு அந்தப் பணத்தை பெற்றுக்கொள்வதால், அந்தச் சேமிப்பு முழுமை பெறுவதில்லை.  எனவே, வருமானத்தில் மாதம் தோறும் சேமிப்புக்கு என ஒரு தொகையை ஒதுக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

சேமிக்கத் தடை எது?

மக்களை சேமிப்பு பற்றி யோசிக்கவிடாமல் செய்வது, அல்லது விரும்பினாலும் அதைச் செயல்படுத்தவிடாமல் செய் வது, ஆடம்பரச் செலவுகள்தான். நம் தேவைக்கு செலவு செய்த காலம் மாறி, இன்று ஆசைக்கு செலவு செய்து வருகிறோம். ‘நல்லா சம்பாதிக்கிறோம், நல்லா செலவழிக்கிறோம். இது தப்பா?’ என்பதுதான் இன்றைய தலைமுறையினரின் கேள்வியாக உள்ளது. தவறுதான். சேமிப்பில்லாத வருமானமும், செலவுகளும் அர்த்தமற்றவை. பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் மாட்டிக்கொள்ளும் விஷயம், `இஎம்ஐ' (Equated monthly installment). சம்பாத்தியத்துக்கு மீறிய ஆடம்பரங்களை `இஎம்ஐ' மூலமாக அடையும்போது, அதற்கான வட்டிக்கே பெரும் தொகை செலவிடப்படுவதால், சேமிப்பு என்பதை அது யோசிக்கவிடாமல் செய்கிறது.

கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில் இருவரின் வருமானமும் சேர்ந்து 60 ஆயிரம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தத் தொகையில் 10% ஆன ஆறாயிரம் ரூபாய் என்பது, அவர்களின் மற்ற அநாவசியச் செலவுகளுடன் ஒப்பிடும்போது சிறிய தொகைதான். அதை மாதம்தோறும் நிரந்தர சேமிப்பாக சேமிக்கத் தொடங்கலாம். 10% முடியாத பட்சத்தில் மாதச் சம்பளத்தில் குறைந்தபட்சம் 5 % தொகையை யாவது சேமிக்கப் பழகுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேமிப்புப் பழக்கம்... மகிழ்ச்சியான எதிர்காலம்!

எப்படி சேமிப்பது?

வங்கிஃ பிக்ஸட் டெபாசிட்டில் (எஃப்டி) சேமிக்கும்போது 7% - 8% வட்டி கிடைக்கும். உதாரணத்துக்கு, வங்கியில் 100 ரூபாய் சேமிக்கும் பட்சத்தில், ஒரு வருடம் கழித்து வட்டியுடன் 107 ரூபாய்  கிடைக்கும். 110 ரூபாய் கிடைத்தால்தான் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியும். எனவே, வங்கியில் சேமிப்பதால் 3% பற்றாக்குறை ஏற்படும். அதேபோல உங்களது சேமிப்புக் கணக்கில் (Savings account) மாதச் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை எடுக்காமல் அப்படியே சேமித்து வந்தால்,  4 சதவிகித  வட்டிதான் கிடைக்கும். அதனால், வங்கியில் பணத்தை சேமிப்பது நீண்டகால முதலீட்டுக்கு புத்திசாலித்தன மானது இல்லை.

வாங்கும்போது ஒரு விலை, விற்கப்போனால் ஒரு விலை என நிலையற்ற விலை மதிப்பினால், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் சேமிப்பது உத்தரவாதமான ரிட்டர்ன்ஸ் கொடுக்காது. மேலும், இவற்றில் முதலீடு செய்ய பெரிய தொகை தேவை அல்லது கடன் வாங்கித்தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதால், மாதாந்தர சிறுசேமிப்புத் தொகை இந்தச் சேமிப்புகளுக்கு உதவாது. குறுகியகால முதலீடாக வேண்டுமானால் தங்கம், தபால் நிலைய ரெக்கரிங் டெபாசிட் (ஆர்.டி), வங்கி ஆகியவற்றில் சேமிக்கலாம்.

நீண்டகால சேமிப்புக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு நல்ல சாய்ஸ். ‘மியூச்சுவல் ஃபண்ட் பங்குச் சந்தையுடன் தொடர்புடையது என்பதால் இதில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்குமே?’ என்ற கேள்வி பலருக்கும் எழும். மியூச்சுவல் ஃபண்ட் பற்றி நன்கு தெரிந்தவர்களையோ, நம்பிக்கைக்குரிய, சிறந்த நிதி ஆலோசகரையோ அணுகி, முழுமையாக தெரிந்துகொண்டு, மாதம்தோறும் சேமிக்கலாம். 25 வயதில் வேலைக்கு சேர்ந்த ஒருவர், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில்  மாதம் ஆயிரம் ரூபாயை சேமித்து, நியாயமான வருமானத்தை (ஆண்டுக்கு 12-14%) மட்டும் எதிர்பார்த்து செயல்பட்டால், சுமார் 35 ஆண்டுகளின் முடிவில் (பணி ஓய்வின்போது)  சேமிப்புத் தொகை 70 லட்சங்களில் இருந்து ஒரு கோடி வரை உயர்ந்திருக்கும்.  பல மியூச்சுவல் ஃபண்ட்கள் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு 12 முதல் 20% வரை வருமானம் தந்திருக்கின்றன. நீண்ட கால முதலீடாக பங்குச் சந்தையிலும்  சேமிக்கலாம். இந்த சேமிப்பில் ரிட்டர்ன் அதிகம் என்பதுபோல, ரிஸ்க்கும் அதிகம்.

‘‘மொத்தத்தில், ஆடம்பரச் செலவுகள் நிகழ்காலத்தில் சந்தோஷம் தருவதாக இருக்கலாம். ஆனால், எதிர்கால பாதுகாப்புக்கும், நிம்மதிக்கும் முறையான சேமிப்பே வழிவகுக்கும்’’ என்று நிறைவுசெய்தார் பத்மநாபன்.

  - கு.ஆனந்தராஜ்

சேமிப்பை பாதியில் கைவிடக் காரணங்கள்!

தாங்கள் சேமிக்கும் திட்டம் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமலும், புரிந்துகொள்ளாமலும் சேமிப்புப் பழக்கத்தை மேற்கொள்ளும்போது, இறுதிவரை ஆர்வத்துடன் கொண்டுசெல்ல முடியாது.

பைக், கார், நகை என ஏதாவது ஒரு பொருளை வாங்க, குறுகிய காலத்திலேயே சேமிப்புப் பணத்தை எடுத்துப் பயன்படுத்தும்போதும், அதையே தொடர்ந்து செய்யும்போதும் முழுமையாகவும் முறையாகவும் சேமிப்பைத் தொடர முடியாது.

மு
தலீடு செய்த திட்டத்தில் ஆரம்பத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை எனும்போது, உடனே சிலர் அதைப் பாதியில் கைவிடுகிறார்கள். சிலர் அடிக்கடி முதலீட்டு திட்டங்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். சிறப்பான பலன் பெற, நீண்ட கால சேமிப்பும், பொறுமையும், காத்திருப்பும் அவசியம்!

சேமிப்புப் பழக்கம்... மகிழ்ச்சியான எதிர்காலம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism