Published:Updated:

தாய்ப்பால்... உயிர்ப்பால்... குழந்தைக்கு மட்டுமல்ல!

தாய்ப்பால்... உயிர்ப்பால்... குழந்தைக்கு மட்டுமல்ல!
பிரீமியம் ஸ்டோரி
News
தாய்ப்பால்... உயிர்ப்பால்... குழந்தைக்கு மட்டுமல்ல!

விழிப்பு உணர்வு

தாய்ப்பால்... உயிர்ப்பால்... குழந்தைக்கு மட்டுமல்ல!

தாய்ப்பால்... ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் உணவு. இணையற்ற சிறப்பு உணவு. தாய்ப்பாலின் சிறப்புகளை தாய்மார்கள் அறியச்செய்யும் விதமாகவும், அவர்களை குழந்தைகளுக்கு அதிக நாட்கள் தாய்ப்பால் கொடுக்க வலியுறுத்தும் விதமாகவும், ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரத்தை ‘தாய்ப்பால் வாரம்’ ஆகக் கொண்டாடுகிறது யுனிசெஃப் மற்றும் உலக சுகாதார நிறுவனம். அதற்கு வலுசேர்க்கும் விதமாக, தாய்ப்பாலின் மகத்துவங்களை முழுமையாக இங்கு விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மனு லட்சுமி.

சீம்பால்... அருமருந்து!

குழந்தை கருவில் இருக்கும் காலத்திலேயே, தாய்க்கு பால் சுரப்பு தொடங்கிவிடும். ‘கொலஸ்ட்ரம்’ என்னும் சத்து, குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் முதல் பாலில் மிக அதிகளவு இருக்கும். குழந்தைக்குத் தேவையான முதல் சத்து இதுதான். பிரசவத்துக்குப் பின்னர் மூன்று நாட்கள் வரையில் சுரக்கும் இந்தப் பால் அடர்த்தியான மஞ்சள் நிற திரவமாக இருக்கும். இதைத்தான் ‘சீம்பால்’ என்பார்கள். இந்தப் பால் குழந்தைக்குக் கட்டாயமாகப் புகட்டப்பட வேண்டும். குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும், நோய் எதிர்ப்புச் சக்தியும், ஆற்றலும் தரவல்லது இந்த சீம்பால். சுகப்பிரசவம் எனில் குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள்ளும், சிசேரியன் பிரசவம் எனில் இரண்டு மணி நேரத்தில் இருந்தும் இந்த சீம்பால் குழந்தைக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

பால் சுரப்பு.. எல்லா அம்மாக்களுக்கும் இருக்கும்!

தாய்ப்பால்... உயிர்ப்பால்... குழந்தைக்கு மட்டுமல்ல!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quizசில பெண்கள், தங்களுக்குப் பால் சுரப்பு இல்லை என்று கவலைப்படுவார்கள். சின்ன மார்பகங்கள், ஒல்லி உடல்வாகு போன்றவற்றுக்கும் பால் சுரப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எல்லா அம்மாக்களுக்குமே அவள் குழந்தைக்குத் தேவையான பால் நிச்சயம் சுரக்கும். குழந்தையின் சிரிப்பு, அழுகை, ஸ்பரிசம் போன்றவற்றை அம்மா அனுபவித்து உள்வாங்கும்போது, அந்தத் தாய்மை உணர்வால் தூண்டப்படும் ஹார்மோன்கள்தான் பால் சுரப்பை அதிகரிக்கும்.

நீண்ட நாட்கள் கொடுக்க வேண்டும்!


சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, 7 வயது வரையிலும் தாய்ப்பால் கொடுத்த அம்மாக்கள் இருந்தார்கள். பள்ளி செல்லும் குழந்தைகள் மதிய இடைவேளையில் அம்மாவிடம் வந்து பால்குடித்துவிட்டுச் செல்லும் காட்சிகள் சகஜமானவை. இன்றைய சூழ்நிலையில், குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம். இந்த காலகட்டத்தில் தண்ணீர்கூட கொடுக்கத் தேவையில்லை, தாய்ப்பால் மட்டுமே போதும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, குழந்தையின் உடல் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் மட்டுமே போதாது என்பதால், இணை உணவுகளைப் பழக்க ஆரம்பிக்க வேண்டும். எனினும், அவற்றுடன் தாய்ப்பாலும் தொடர்ந்து கொடுத்துவரும்போது குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். அதிகபட்சமாக, தாய்க்கு பால் சுரப்பு இருக்கும்வரை ஒரு வயது வரையிலோ, இரண்டு வயது வரையிலோகூட தாய்ப்பால் கொடுக்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள், தாய்ப்பாலை சேகரித்துவைத்து குழந்தைக்குப் பால்புகட்டக் கைகொடுக்கும் புட்டிகள் இப்போது வந்துவிட்டன. மருத்துவரின் வழிகாட்டுதலோடு அதைப் பயன்படுத்தலாம். என்றாலும், பால் புகட்டும்போது அரவணைப்பு, கதகதப்பு, ஸ்பரிசம் என தாயிடம் கிடைக்கக்கூடிய பாதுகாப்பு உணர்வு குழந்தைக்கு மிகத் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்ப்பால்... இணையற்ற உணவு!

புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், `விட்டமின் கே மற்றும் ஏ' சத்துக்கள் நிறைந்தது தாய்ப்பால். கருவில் தாயிடமிருந்து சத்துக்கள் பெறும் குழந்தை, பிறந்ததும் நேரடியாக உணவை எடுத்துக்கொள்ளும்போது, அந்த முதல் உணவு அதற்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். பசும்பால், பால் பவுடர்களில் 100% பாதுகாப்பும், சத்தும் கிடைக்காது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே எளிதாக, இயற்கையாகச் செரிமானம் ஆகும். மலம் சீராக வெளிப்பட்டு, குழந்தையின் உடல் இயக்கம் தடையின்றி இருக்கும். சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கும்.

குழந்தை தன் தாயின் கருவறை விடுத்து வெளிவரும்போது, புதிய சூழலுடன் அதற்கு முதலில் ஏற்படும் பிரச்னை, ஒவ்வாமை. சரும ஒவ்வாமை மற்றும் இதர ஒவ்வாமைகளால் பாதிக்கப்படும். ஆனால், தாய்ப்பால் கொடுக்கப் படும் குழந்தைக்கு அலர்ஜி உண்டாகாமல் தடுக்கப்படுகிறது. தாய்ப்பால் தரும் இணையற்ற நோய் எதிர்ப்புச் சக்தி... தொற்று, வயிற்றுப்போக்கு, நிமோனியா காய்ச்சல், நுரையீரல் பாதிப்புகளில் இருந்து குழந்தையைக் காக்க வல்லது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மிகவும் துறுதுறுவென இருப்பர். அவர்களின் மூளை வளர்ச்சி, ஐக்யூ பவர், புட்டிப்பால் குடித்து வளரும் குழந்தைகளைவிட 3 மடங்கு அதிகமாக இருக்கும் என்பதை, தாய்மார்கள் தயவுசெய்து கவனிக்கவும்’’ என்று அறிவுறுத்தி முடித்தார் டாக்டர் மனு லட்சுமி.

ஆரோக்கியமும் அறிவுக்கூறும் குழந்தைக்குக் கிடைக்கச் செய்யும் உயிர்ப்பாலான தாய்ப்பால், ஒவ்வொரு குழந்தையின் உரிமை; ஒவ்வொரு தாயின் கடமை!

கே.அபிநயா, படங்கள்: ப.சரவணகுமார்

தாய்க்கும் கவசம் தாய்ப்பால்!

தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்குக் கிடைக்கக்கூடிய பலன்களும் அதிகம். தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு, கேன்சர் செல்கள்  40% அதிகரிக்க வாய்ப்பு அதிகம். மேலும்  சினைப்பை புற்றுநோய் வர 27% வாய்ப்புகளும் உண்டு. தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் ஆஸ்ட்ரியோபொரோசிஸ் எனப்படும் எலும்புத் தேய்மானம் வருவதற்கான வாய்ப்புகளும் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, தாய்ப்பால் புகட்டுவது தாயின் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

உலக சுகாதார நிறுவனத்தின் தாய்ப்பால் அறிக்கை!

சமீப காலமாக தாய்ப்பால் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வருவது, ஆக்கபூர்வ மாற்றம். உலகளவில், பிறந்த குழந்தைக்கு, ஒரு மணி நேரத்துக்குள் பால் புகட்டும் பெண்களின் எண்ணிக்கை 44%, 6 மாதம் வரையிலும் முழுமையாக பால் புகட்டும் பெண்களின் எண்ணிக்கை 46% மற்றும் ஒரு வருடம் வரை பால் புகட்டும் பெண்களின் எண்ணிக்கை 88% என உலக சுகாதார நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.

‘‘அப்பாவின் பங்கு!’’

தாய்ப்பால்... உயிர்ப்பால்... குழந்தைக்கு மட்டுமல்ல!பாலூட்டும் பெண்ணுக்கு அவர் கணவர் எந்த வகைகளில் அனுசரணையாக இருக்கலாம் என்பது பற்றிச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் ராஜமீனாட்சி.

‘‘பாலூட்டும் நேரத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், பெண்களின் மனநிலையும் உடல்நிலையும் சீராக இருக்காது. பிரசவித்த உடல் சிரமங்கள், சோர்வு ஒரு பக்கம், 24 மணி நேரமும் குழந்தையைக் கவனித்துகொள்ளும் ஓய்வற்ற பொறுப்பு ஒருபக்கம் என இவையெல்லாம் மன அழுத்தத்தை உண்டாக்கும். நடு இரவில் குழந்தை அழும்போது எழுந்து பாலூட்டும்போதும், தூங்கவைக்கும்போது, சௌகரியமாகத் தூங்கிக் கொண்டிருக்கும் தன் கணவரைப் பார்க்கும்போது, ‘நான் மட்டும் கஷ்டப்படுறேன்’ என்ற கழிவிரக்கம் ஏற்படும்.

தாய்மை அடைந்திருக்கும் பெண்ணின் சுமைகளைப் புரிந்து, அவள் கணவனும் குழந்தை வளர்ப்பில் உதவ வேண்டும். குழந்தையைக் கொஞ்சுவது மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதோடு மட்டும் தன் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கக்கூடாது. குழந்தையை உறங்கவைக்க வைப்பது, சிறுநீர், மலம் கழித்தால் சுத்தப்படுத்துவது, அதனுடன் விளையாடுவது என்று, தாய் அந்த நேரங்களில் ஓய்வெடுத்துக்கொள்ளும் சூழலை உருவாக்கித் தர வேண்டும்’’ என்றார் ராஜமீனாட்சி.

தவறான நம்பிக்கைகள் தவிர்ப்போம்!

தாய்ப்பால்... உயிர்ப்பால்... குழந்தைக்கு மட்டுமல்ல!

* எவ்வளவு அதிகமாகச் சாப்பிடுகிறோமோ அவ்வளவு அதிகமாகப் பால் சுரக்கும் என்பது தவறான எண்ணம். பால் புகட்டும் பெண்கள், தாங்கள் இயல்பாகச் சாப்பிடும் அளவைவிட 500 கலோரி மட்டும் அதிகம் எடுத்துக்கொண்டால் போதும். பச்சைக் காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை போன்ற புரதச் சத்து உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.

* குழந்தை மார்புக் காம்பில் வாயை வைத்துவிட்டு அழுதால், பால் இல்லை என்று அழுகிறது என்பதில்லை. அதற்கு ஆரம்பத்தில் காம்பில் வாய்வைத்து குடிக்கத் தெரியாது என்பதால் அழும். தொடர்ந்து, சரியான பொசிஷனில் குழந்தைக்குப் பால்புகட்டிவரும்போது அது பழக்கத்துக்கு வரும். குழந்தை பால் அருந்த அருந்தத்தான், ஹார்மோன் தூண்டப்பட்டு பால் சுரப்பிகள் சீராகச் செயல்படத் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* குழந்தை அழுதாலே, பால் குடிக்க அழுகிறது அல்லது பால் போதவில்லை என்று அழுகிறது என எண்ணக்கூடாது. குழந்தைக்கு ஏற்படும் அசௌகரியங்கள், காற்றோட்டம் உள்ளிட்ட பிற தேவைகள் என எதையும் அது அழுது மட்டுமே வெளிப்படுத்த முடியும் என்பதைப் புரிந்துகொள்ளவும். ஒரு நாளைக்கு 6 முதல் 7 முறை சிறுநீர் கழிப்பது மற்றும் உடல் எடை மாதத்துக்கு குறைந்தபட்சம் அரை கிலோ வரை அதிகரிப்பது இவற்றின் மூலம், அக்குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

* சீம்பால் கொடுத்தால், குழந்தைக்கு வயிற்றுக்குச் சேராது என்ற மூடநம்பிக்கை உள்ளது. குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கக்கூடியது அந்த சீம்பால்தான்.

* பால் கொடுப்பதால் தங்களின் அழகு குறைந்துவிடும் என்ற பெண்களின் எண்ணமும் தவறானது. இயற்கையாக நடக்க வேண்டிய ஒரு நிகழ்வை, உடல் தகவமைப்பைத் தடுக்கும்போது, அது நிச்சயம் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.

* பாலூட்டும் அம்மாவுக்கு காய்ச்சல் இருக்கும்போது, பாலூட்டுவதால் அது குழந்தையைப் பாதிக்காது என்பதால் பால் புகட்டலாம். சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் இருக்கும்போது, மூச்சுக்காற்றின் வழியாக குழந்தைக்குத் தொற்று ஏற்பாடாத வண்ணம் மூக்கில் கர்சீஃப் வைத்து மூடியபடி பாலூட்டலாம்.

* சில பெண்கள் பிரசவமான சில மாதங்களிலேயே மீண்டும் கருத்தரித்துவிட நேரிடலாம். அப்படி கர்ப்பமாக இருக்கும் சமயத்திலும், குழந்தைக்குப் பால் கொடுக்கலாம். அதனால் கருவில் உள்ள குழந்தைக்கு எந்த பாதிப்பும் நேராது.

* பிறந்த குழந்தைக்கு முதன்தலில் நாக்கில் தேன், சர்க்கரை தண்ணீர் கொடுக்கும் பழக்கம் தவறானது. அது நோய்த் தொற்றை ஏற்படுத்தலாம்.