Published:Updated:

அம்மாக்கள் - மகள்கள் இணைந்து அசத்தும் பஜனை டீம்!

அம்மாக்கள் - மகள்கள்  இணைந்து அசத்தும் பஜனை டீம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அம்மாக்கள் - மகள்கள் இணைந்து அசத்தும் பஜனை டீம்!

இனிய கானம்

அம்மாக்கள் - மகள்கள்  இணைந்து அசத்தும் பஜனை டீம்!

‘பழநி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத் தேரினிலே’, ‘அயிகிரி நந்தினி’ பாடல்கள், ராமநாம சங்கீர்த்தனம், நரசிம்ம ஸ்தோத்திரம் என காதுகளையும் மனதையும் நிறைத்தன அந்த கோரஸ் குரல்கள். மைக் இல்லாமலேயே சுற்றுவட்டாரம் முழுதும் கேட்கும் அளவுக்கு குரலில் காத்திரம், தெளிவு, இனிமை! பாடியது ஒருவர், இருவரல்ல; ஒன்பது மாணவிகள். சென்னையில் வேறு வேறு பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள்!

செவிக்கினிய கீதாம்ருதம் வழங்கிய அந்தக் குழுவின் பெயர் ‘நவ கான பஜன் மண்டலி’. எஸ்.ரட்சனா, ஆர்.மனஸ்வினி, ஆர். வர்ஷா, எஸ்.லாவண்யா, ஏ.சௌந்தர்ய லக்ஷ்மி, ஜே. ஸிம்ருதாஸ்ரீ, எஸ்.வைஷ்ணவி, எஸ்.ஸ்ரீஜனனி, ஹெச்.சாய் அனுஷா - இந்த நவ கன்னிகை கள்தான் அந்த பஜனை மண்டலியின் ஆதார சுருதி. 2011-ம் ஆண்டில் முழுக்க முழுக்க பெற்றோர்களால் தொடங்கப்பட்டு, 5 ஆண்டுகளாக தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளிநாடு என நாம சங்கீர்த்தனம் செய்து அசத்தி வருகின்றனர் இந்தக் குழுவினர். குழுவுக்குத் தலைவியும், பாட்டு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியையுமான, ரட்சனாவின் தாயார் வீணா ராஜேஷ், இக்குழு துவங்கிய விதத்தை விளக்கினார்.

‘‘இந்தப் பசங்க எல்லோருமே சின்ன வயசிலருந்து பாட்டுக் கத்துக்கிட்டிருந்தாங்க. இவங்க படிக்கிற ஸ்கூலின் சார்பாக, 2011-ல் சென்னையில் ஒரு தனியார் அமைப்பு நடத்திய போட்டியில் கலந்துகிட்டுப் பாடினாங்க. அப்போ இவங்க 6-ம் வகுப்புதான் படிச்சிட்டிருந்தாங்க. ‘பக்கவாத்தியம் இல்லாமலேயே இவ்வளவு நல்லா பாடறாங்களே! இன்னும் நல்லா பயிற்சி கொடுத்து, பக்கவாத்தியமும் இருந்தால் இன்னும் சிறப்பாகப் பாடுவாங்க’ன்னு அம்மாக்கள் நாங்க எங்களுக்குள் பேசிட்டிருந்தோம்.

அம்மாக்கள் - மகள்கள்  இணைந்து அசத்தும் பஜனை டீம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போ, எங்களுக்குப் பின்னால் உட்கார்ந் திருந்த ஒரு பெண்மணி நாங்க பேசிட்டிருந்ததைக் கேட்டுட்டு, ‘பக்க வாத்தியத்தை வெளியிலருந்து அழைச்சுகிட்டு வந்து நீங்க பாடற மாதிரி ‘தாச ஸாஹித்யா’ன்னு ஒரு அமைப்பு இருக்கு. அதில் சேர்ந்து பாட வைக்கிறீங்களா?’ என்று கேட்டாங்க. அவங்கதான் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாந்தி சர்வோத்தமன்.

ஆனால், அதற்கு ஒரு குழுவாக இருக்கணும் என்பதால், பள்ளியில் மத்த பெற்றோர்கள்கிட்டே பேசினோம். எட்டு பேர் தங்கள் பெண்களை இந்தக் குழுவில் சேர்க்கச் சம்மதிச்சாங்க. அப்புறம் தபலா, கீபோர்டு, வயலின்... இப்படி பக்கவாத்தியம் வாசிக்கிற பசங்களும் சேர்ந்தாங்க. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த பஜனைக் குழு.

‘தாச ஸாஹித்யா’வின் தலைவரும் திருப்பதி தேவஸ்தானத்தின் அலுவலருமான ஸ்ரீ பகடால் ஆனந்ததீர்த்தாச்சாருக்கு நாங்க நன்றி சொல்லணும். நாம சங்கீர்த்தனம் வளரணும்னு, 2011-ல் இருந்து வருஷா வருஷம் திருப்பதி பிரம்மோற்சவத்தில் இவங்க பாடும் பெரும் வாய்ப்பை அவர்தான் ஏற்படுத்திக் கொடுத்தார். தவிர, பல கோயில்களில் உற்சவங்கள், மடங்கள், கல்யாணம், நினைவு தினங்கள்... இந்த மாதிரி பல நிகழ்ச்சிகளில் பாடறாங்க!’’ என்றார் வீணா.

தமிழகத்தின் பல நகரங்களிலும் வட இந்தியாவில் பாகவதம் எழுதப்பட்ட ஸ்தலமான நைமிசாரண்யம் போன்ற புனிதத் தலங்களிலும் இவர்கள் பாடியிருக்கிறார்கள். இவர்களின் இசையால் ஈர்க்கப்பட்ட, பிரபல எலும்பு நோய் நிபுணர் டாக்டர் சடையவேல் கைலாசம் (கவிஞர் சௌந்தரா கைலாசத்தின் மகன்), இவர்களை மலேசியாவுக்கு அழைத்துச் சென்று அங்கே பல இடங்களில் பாட உதவியதை நன்றியுடன் நினைவுகூர்கிறார் வீணா.

இதுவரை 300 நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியிருக்கும் இந்த பஜனை மண்டலியின் சிறப்பம்சம், இவர்கள் எங்கே நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி நடத்தினாலும் கட்டணம் எதுவும் பெறுவதில்லை. தொலைதூர ஊர்களென்றால், போக்குவரத்துக்கான செலவை மட்டும் பெற்றுக்கொள்கிறார்கள். மற்றபடி அமைப்பாளர்கள் விரும்பி, குழந்தைகளுக்கு என்ன செய்கிறார்களோ அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.

அம்மாக்கள் - மகள்கள்  இணைந்து அசத்தும் பஜனை டீம்!

‘படிப்பையும் சங்கீதத்தையும் எப்படிச் சமாளிக்கிறீர்கள்?’ என்றோம் மாணவிகளிடம்.

‘‘பரீட்சை சமயமா இருந்தாலும் பாட்டு கிளாஸை மிஸ் பண்றதில்லை... அந்த அளவுக்கு இதில் ஆர்வமா இருக்கோம். வாரத்தில் ரெண்டு நாள்தான் கிளாஸ். அதுவும் எங்களுக்கு வசதியான நேரத்தில்தான் வைக்கிறாங்க’’ என்ற இந்தச் சிறுமிகள், தங்கள் பஜனை மண்டலியின் நோக்கம் குறித்துப் பேசும்போது அவ்வளவு முதிர்ச்சி அவர்கள் வார்த்தைகளில்!

‘‘நாம சங்கீர்த்தனம் மூலமா பக்தர்கள், பாமரர்கள்னு எல்லோரும் இறைவனை நேரடியா நெருங்கலாம். அதுக்கு எந்தவிதமான பூஜை, புனஸ்காரமும் தேவையில்லை. கோயிலுக்குப் போனால் குருக்கள் மூலமாத்தான் இறைவனை அணுக முடியும். அதுவே பகவானின் நாமத்தைச் சொல்லி நாலு பாட்டுப் பாடினா, நாமே நேரடியா அவர்கிட்டே அணுகலாம். நாங்க ஒரு மண்டபத்தில் பாடறப்போ, தெருவில் போற ஒருத்தர் ரெண்டு பேர் ஒரு நிமிஷம் நின்னு, பாடலைக் கேட்டு, அதை ஒருமுறை திருப்பிப் பாடினாலே, அது எங்க நோக்கத்துக்குக் கிடைச்ச வெற்றிதான்!’’ என்கிறார்கள் அழகாக.

அப்ளாஸ்!

- பிரேமா நாராயணன், படங்கள்: மீ.நிவேதன்