Published:Updated:

``நம்மைப் படைச்ச கடவுளை, நாம படைக்கறது... பாக்கியம்!''

``நம்மைப் படைச்ச கடவுளை,  நாம படைக்கறது... பாக்கியம்!''
பிரீமியம் ஸ்டோரி
News
``நம்மைப் படைச்ச கடவுளை, நாம படைக்கறது... பாக்கியம்!''

- 50 வருடங்களாக விநாயகர் சிலை செய்யும் மல்லிகா...கைத்தொழில்

‘‘இந்தக் களிமண்ணுதான் என் வாழ்க்கைக்கு வெளிச்சம் காட்டிச்சு. என் ரெண்டு பிள்ளைகளையும் படிக்கவெச்சு, பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுக்க பிள்ளையார் சிலை செய்ற இந்தத் தொழில்தான் எனக்குக் கைகொடுத்துச்சு!’’ என்று நெகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறார், சென்னையைச் சேர்ந்த மல்லிகா பாட்டி... மூன்று தலைமுறையாக களிமண்ணில் விநாயகர் சிலை செய்யும் தொழிலில் இருப்பவர்.

‘‘ஒவ்வொரு வருஷமும் விநாயகர் சதுர்த்தி வந்துட்டா எங்க குடும்பத்துக்குப் புதுத் தெம்பு வந்துரும். முன்னாடியெல்லாம் களிமண் எல்லா இடத்துலயும் கிடைக்கும். ஆனா ஏரி, குளம், குட்டைனு எல்லா எடத்துலயும் கட்டடத்தக் கட்டிட்டதால, களிமண்ணைக்கூட இப்போ விலைக்கு வாங்க வேண்டிய நிலைமைக்கு வந்துட்டோம். அதுனாலேயே நிறைய பேர் இந்தத் தொழிலை விட்டுட்டு வேறவேற தொழில்களைப் பார்க்கப் போயிட்டாங்க.

``நம்மைப் படைச்ச கடவுளை,  நாம படைக்கறது... பாக்கியம்!''

என் பசங்களும் படிச்சு நல்ல நிலைக்கு வந்ததும் சிலை செய்யத் தயக்கம் காட்டி னாங்க. என் காலத்தோட இந்தத் தொழில் போயிருமோனு நான் நினைச்சப்போ, என் மருமகள்கள் ரெண்டு பேரும் எனக்குத் துணையா கைகொடுத்துட்டாங்க. படிச்ச பொண்ணுங்களா இருந்தாலும் எந்தத் தயக்கமும் இல்லாம எங்கிட்ட தொழில் கத்துக்கிட்டாங்க’’ என்றவர் சிலை செய்வது பற்றிச் சொன்னார்...

‘‘சிலை செய்றதுக்குன்னு சில சாஸ்திரங்கள், முறைகள் இருக்கு. விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி வர்ற பௌர்ணமி அன்னிக்கு மண்ணை ஊறவெச்சு, தொழில் நல்லபடியா நடக்கணும்னு விநாயகருக்கு பூஜை செஞ்சுட்டு வேலைகளை ஆரம்பிச்சிடுவோம். மண்ணு குறைஞ்சது ஒரு வாரம் ஊறணும். அப்புறம் நல்லா மிதிச்சு பக்குவப்படுத்துவோம். அடுத்ததா, மண்ணோட சாம்பலைக் கலந்து நல்லா பிசைஞ்சு அச்சில் பதிக்கணும். அச்சில் இருந்து சிலையை வெளியே எடுக்கும்போது வெறும் வடிவமா மட்டும்தான் இருக்கும். அதுல கண், தும்பிக்கையெல்லாம் வெச்சு உருவம் கொடுப்போம். ஒரு சிலை செய்ய குறைஞ்சது ரெண்டு மணி நேரமாவது ஆகும். ஒரு மாசத்துக்கு குறைந்தது 2,000 சிலைகளாவது செஞ்சிருவோம். அப்புறம், விரிசல் விழாம இருக்க சிலைகளை காயவெப்போம். காய்ஞ்சதும் வண்ணம் தீட்டி, அலங்காரம் செஞ்சுனு நிறைய வேலைகள் இருக்கும்.

அலங்காரம், அளவுக்கு ஏற்ப சிலைகளோட விலை இருக்கும். சதுர்த்திக்கு ஒரு சில நாட்கள் முன்பிருந்து, நாங்களே கடைவிரிச்சு சிலைகளை விற்க ஆரம்பிப்போம். ஒரு மாச காலம் ஓய்வு, உறக்கம், பசி, ருசினு எதுவும் பார்க்காம நாங்க உழைச்ச உழைப்புக்கு, எல்லா சிலைகளும் நல்லபடியா வித்தா கூலி கிடைச்சிடும். அந்தப் பணம் நாலு மாச சாப்பாட்டுச் செலவுக்கு வரும். அதைவிட, பாரம்பர்யம் விட்டுப்போகாம பார்த்துக்கிறது... மனசுக்கு நிறைவா இருக்கும்.

நான் 50 வருஷமா விநாயகர் சிலைகள் செஞ்சுட்டு வர்றேன். ஒவ்வொரு வருஷமும் முதல் முறை செய்ய ஆரம்பிச்ச பக்தி, ஆர்வம், அர்ப்பணிப்போடதான் செய்வேன். நம்மைப் படைச்ச கடவுளை நாம படைக்கிற பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்கிறதா என்ன?!’’ என்ற மல்லிகாவைத் தொடர்ந்து பேசினார்கள் அவர் மருமகள்கள் ரேகா, மாலதி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
``நம்மைப் படைச்ச கடவுளை,  நாம படைக்கறது... பாக்கியம்!''

‘‘சில சமயம் கொஞ்சம் சிலைகள் விற்காம போயிரும். `ஆண்டவன் இந்த வருஷம் நமக்கு அளந்தது இவ்வளவுதான்'னு மனசை தேத்திக்கிட்டு, சிலையை மறுபடியும் மண்ணாக்கி அடுத்த வருஷத்துக்கு எடுத்துவெச்சிடுவோம். சிலையை வாங்குற சிலர், நாங்க நொந்துபோற அளவுக்கு பேரம் பேசுவாங்க. இதுல எங்களுக்குக் கிடைக்கிறதே அஞ்சு, பத்துதான். இவ்வளவு கறாரா விலை கேட்கிறாங்களேனு கஷ்டமா இருக்கும்.

நீங்க வாங்குற ஒவ்வொரு சிலைக்குப் பின்னாடியும், எத்தனையோ தொழிலாளிங்களோட உழைப்பு இருக்கு. அதுக்கு உரிய ஊதியம் அவங்களுக்கு கிடைக்கச் செய்யுங்க. பாரம்பர்யத் தொழில்கள் அழிஞ்சுட்டு வராம காப்பாத்துறது, மக்கள் கையிலயும்தான் இருக்கு!’’ என்றார்கள் வேண்டுகோளாக!

கைத்தொழிலுக்குக் கைகொடுப்போம்!

 சு.சூர்யா கோமதி, படங்கள்: ரா.வருண் பிரசாத்