Published:Updated:

‘‘‘பிள்ளையார் என் வழித்துணை!'' - நெகிழ்கிறார் நித்யஸ்ரீ

‘‘‘பிள்ளையார் என் வழித்துணை!'' - நெகிழ்கிறார் நித்யஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
News
‘‘‘பிள்ளையார் என் வழித்துணை!'' - நெகிழ்கிறார் நித்யஸ்ரீ

விநாயகர் கலெக்‌ஷன்

‘‘‘பிள்ளையார் என் வழித்துணை!'' - நெகிழ்கிறார் நித்யஸ்ரீ

‘‘என் பாட்டி டி.கே.பட்டம்மாள், சிறந்த விநாயகர் பக்தை. வீட்டுல அவங்க ஒரு பெரிய விநாயகர் சிலை வெச்சிருந்தாங்க. வெளியே கிளம்பும்போதெல்லாம், அந்த விநாயகரோட கன்னங்களைப் பிடிச்சு ‘போயிட்டு வர்றேன்’னு சொல்லிட்டுதான் கிளம்பு வாங்க. வீட்டுக்கு வந்ததும் அதை கொஞ்சுற தோட, அந்த சிலைகூட அடிக்கடி பேசிட்டு இருப்பாங்க. அதைப் பார்த்து வளர்ந்த எனக்கும், சின்ன வயசுல இருந்தே விநாயகர் இஷ்ட தெய்வம் ஆகிட்டார்!’’

- ஜீவன் ததும்புகிறது நித்யஸ்ரீ மகாதேவனின் குரலில். பாட்டியைப் போலவே நித்யஸ்ரீயும் சிறந்த விநாயகர் பக்தை. கடந்த எட்டு வருடங்களாக இவர் சேகரித்துவரும் விநாயகர் சிலை கலெக்‌ஷன்கள், அவர் வீடெங்கும் வீற்றிருக்கின்றன.

‘‘1991-ல நான் காலேஜ்ல படிச்சுட்டு இருந்த சமயத்துல, எனக்குக் கிடைச்ச முதல் இசை வாய்ப்பு, ஒரு நிறுவனத்துக்காக நான் பாடிக்கொடுத்த விநாயகர் கீர்த்தனைகள் அடங்கிய சி.டி. அதில் இருந்து ஒவ்வொரு கச்சேரிக்குப் போகும்போதும் வீட்டில் விநாயகருக்கு பூஜை செய்துட்டுதான் கிளம்புவேன். எனக்குத் திருமணமான சமயத்தில் என் மாமியார், அவங்க மாமியார் அவங்களுக்குக் கொடுத்த விநாயகர் சிலையை எனக்குக் கொடுத்தாங்க. அது இன்றும் எங்க பூஜை அறையில் பிரதானமா இருக்கு. 15 வருஷத்துக்கு முன்னாடி, ராஜ கணபதி சிலை அரிதாதான் கிடைக்கும். அதை வாங்கி வழிபடணும்னு நான் நினைச்ச சில தினங்களிலேயே, என் நண்பர் ஒருத்தர் பரிசா அதை எனக்குக் கொடுத்தார். அந்தச் சிலையை பூஜை அறையில் ஒரு சின்ன ஊஞ்சல்ல அமர வெச்சு வழிபட ஆரம்பிச்சேன்.

‘‘‘பிள்ளையார் என் வழித்துணை!'' - நெகிழ்கிறார் நித்யஸ்ரீ

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோயம்புத்தூர்ல இருக்கிற, என் அப்பா ஸ்தானத்துல நான் மதிக்கிற உறவினர் ஒருத்தர், எனக்குக் குழந்தை பிறந்ததும் அங்க புலியகுளம் பகுதியில இருக்கிற, ஆசியாவுலயே பெரிய ஸ்ரீமுந்தி விநாயகருக்கு அபிஷேகம் செய்றதா வேண்டியிருக்க, என் முதல் பொண்ணு பிறந்த உடனே குடும்பத்தோடு அங்கே போனோம். என் மாமியாரோட சொந்த ஊரான திருச்சிக்குப் போறப்போ எல்லாம் உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர் கோயிலுக்குப் போயிட்டுதான் வருவேன். நான் வசிக்கிற கோட்டூர்புரம் மற்றும் என் பெற்றோர் வீடு இருக்குற மயிலாப்பூர்ல இருக்குற விநாயகர் கோயில்களுக்கு அடிக்கடி போவேன்.

இப்படி விநாயகர் வழிநெடுக என் துணையா வந்துட்டுதான் இருக்கார். என்னோட விநாயகர் பக்தி தெரிஞ்சு, ஒருகட்டத்தில், நண்பர்கள் எனக்கு அளிக்கிற பரிசுகள் எல்லாம் பெரும்பாலும் விநாயகரா இருக்கிறதோட, வெளியூர்களுக்குப் போகும்போது என் கண்ணில் படும் வித்தியாச விநாயகர் சிலைகளையும் வாங்கிட்டு வர ஆரம்பிச்சேன். அப்படி கடந்த எட்டு வருஷமா தம்புரா விநாயகர், மிருதங்க விநாயகர், கல்கி கணபதினு வித்தியாசமான விநாயகர் சிலைகள் சேகரிக்க ஆரம்பிச்சு, இப்போ என் வீட்டில் நூத்துக்கணக்கான விநாயகர்கள் இருக்கிறாங்க’’ என்றவர், தன் கணவர் மகாதேவனின் நினைவுகளைப் பகிர்ந்தார்.

‘‘‘பிள்ளையார் என் வழித்துணை!'' - நெகிழ்கிறார் நித்யஸ்ரீ

‘‘2012-ம் வருஷம் டிசம்பர் மாசம்... அவரோட மறைவு என்னை நிலைகுலைய செய்துடுச்சு. என் பலத்தை இழந்த மாதிரி இருந்துச்சு. என் பெண்கள் தனுஜாஸ்ரீ, தேஜாஸ்ரீக்காக கொஞ்சம் கொஞ்சமா என்னை நான் மீட்டேன். என் குழந்தைகள், உறவுகள், நண்பர்கள், சக இசைக் கலைஞர்கள், ரசிகர்கள்னு எல்லோரும் அதுக்கு உறுதுணையா இருந்தாங்க. சில காலம் கழிச்சு பாட ஆரம்பிச்சேன். 2013-ம் வருஷம் பிப்ரவரி மாசத்துல ஒரு கச்சேரியில நான் பாடினப்போ, சபா முழுக்க ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவங்க காட்டிய அன்பும், கூறிய ஆறுதல் வார்த்தைகளும் என்னையே அறியாமல் கண்ணீரை வரவழைச்சுது. இப்போ தொடர்ந்து கச்சேரிகள்ல பாடிட்டு இருக்கிறதோட, கடலளவு உள்ள இசைத்துறையில இன்னும் இசை கத்துக்கிட்டு இருக்கேன். குழப்பங்கள், கஷ்டங்கள் வரும்போது, ‘பிள்ளையாரப்பா... நீ பார்த்துக்கோ’னு ஒப்படைச் சிடுவேன். பிரச்னைகளும் சரியாகிடும்!’’ நித்யஸ்ரீ முடிக்க, காற்று அசைக்கும் அந்தக் குட்டி ஊஞ்சலில் ஆடுகிறார் அவர் வீட்டு விநாயகர்!

 கு.ஆனந்தராஜ், படங்கள்: எம்.உசேன்