Published:Updated:

மரச்செக்கு எண்ணெய்... மளமளவென குவியும் ஆர்டர்கள்!

மரச்செக்கு எண்ணெய்... மளமளவென குவியும் ஆர்டர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரச்செக்கு எண்ணெய்... மளமளவென குவியும் ஆர்டர்கள்!

இயற்கை உணவு

மரச்செக்கு எண்ணெய்... மளமளவென குவியும் ஆர்டர்கள்!

‘‘ஏழெட்டு வருஷம் முன்னால, இயற்கை விவசாயம் குறித்தும் ஆர்கானிக் உணவுப் பொருட்கள் குறித்தும் ‘பசுமை விகடன்’ல நிறையப் படிச்சோம். அப்போதான் அதைப் பத்திப் பரவலா மக்களுக்குத் தெரியத் தொடங்கிய நேரம்... ஆர்கானிக் காய்கறிகள், பழங்கள், அரிசி, செக்கு எண்ணெய் எல்லாம் தேடித் தேடி வாங்கி உபயோகிக்க ஆரம்பிச்சோம். சின்ன வயசில் சாப்பிட்ட உணவின் தரமும் சுவையும் அதில் தெரிஞ்சுது. ஆர்கானிக் உணவுப் பொருள் தயாரிப்பில் நாமும் ஏதாவது முயற்சி பண்ணலாமேனு அப்போதான் தோணுச்சு” என்கிற கங்காதரன் - ரமாதேவி தம்பதி தற்போது சென்னையில் உள்ள கரையான்சாவடியில் செக்கு எண்ணெய் தொழிலில் பிரகாசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

‘‘இதற்கான முயற்சிகள் அத்தனை சுலபமா இல்லை'' என்கிற முன்னுரையோடு பேசினார் கங்காதரன்...

‘‘செக்கு எண்ணெய் தொழில் பத்தின விவரங்களைச் சேகரிக்கலாம்னு பார்த்தால், அந்தத் தலைமுறையே அழியுற நிலைமையில இருந்தது. திருச்சி, நாமக்கல், ஈரோடுனு பல இடங்களுக்கு போய் பார்த்தப்ப, அந்த தொழிலுக்கான ரகசியத்தை சொல்ல மறுத்துட்டாங்க. இப்படியே தேடல் மூணு வருஷமா நீடிச்சது. இறுதியா இன்டர்நெட், நண்பர்கள் உதவியோட காஞ்சிபுரம் பக்கத்தில் கணபதிபுரத்தில் இருந்த எங்க இடத்தில் தொழிற்சாலையை ஆரம்பிச்சோம்’’ என்று தொழில் துவங்கிய கதையை விவரித்தார் கங்காதரன்.

‘‘முதலில் பழைய மரச்செக்கு ஒண்ணை வாங்கி, அதைச் செப்பனிடறதுக்கு ஆளைத் தேடிப் பிடிச்சோம். அந்தச் செக்கில் சோதனை முயற்சியாக எண்ணெய் ஆட்டிப் பார்த்தோம். சரியா வரல. முதல் முயற்சியே தோல்வி. தளராம முயற்சித்ததில் நல்லபடியா எண்ணெய் வந்தது. முதல் செக்கையே மாடலா வெச்சு மேலும் நாலு செக்கு உருவாக்கினோம். எல்லாம் செட் ஆகி வர்றதுக்கு ஒரு வருஷம் ஆச்சு. அதுக்கப்புறம்தான் முழுவீச்சில் உற்பத்தி, வியாபாரம் எல்லாம் ‘டேக் ஆஃப்’ ஆச்சு. இப்போ, கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூணும் செக்கில் ஆட்டி சப்ளை பண்றோம்’’ என்று புன்னகையுடன் சொல்லியவாறே, ஆர்டருக்கு அனுப்ப எண்ணெய் பாட்டில்களை அடுக்குகிறார் ரமாதேவி.

‘‘தொழிற்சாலையில் உற்பத்தியை நான் பார்த்துக்க, மார்க்கெட்டிங், ஆர்டர் எடுப்பது, சப்ளை செய்றது, பணம் வசூலிக்கிறது எல்லாத்தையும் இவங்க பார்த்துக்கிறாங்க. எங்க எண்ணெயை வாங்கிச் சமைச்சு சாப்பிட்ட பல வாடிக்கையாளர்கள், அவங்க வட்டத்துக்குள் சொன்னதன் மூலம் பரவிய வாய்வழி விளம்பரம்தாங்க எங்களுக்குப் பெரிய பலம்’’ என்று சொல்லும் கங்காதரனின் செக்கில் பனங்கருப்பட்டி, வெல்லம் சேர்த்து ஆட்டிய நல்லெண்ணெய் வாசம், நுரையீரல்வரை சென்று மணக்கிறது.

மரச்செக்கு எண்ணெய்... மளமளவென குவியும் ஆர்டர்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘நாங்க இப்போ மொத்தம் 6 செக்கு போட்டிருக்கோம். எள்ளை வாங்கி வெச்சிருந்து, கொஞ்ச நாட்கள் தாமதமானாலும் நல்லெண்ணெயில் வேறுவிதமான வாசம் வந்துடும். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்தா, 60 லிட்டர்தான் எண்ணெய் எடுக்கலாம். வேகமா ஆட்டினாலும் எண்ணெயின் தரம் போயிடும். அதனால, பார்த்துப் பதவிசா செக்கு பக்கத்திலேயே நின்னு, எண்ணெய் வித்துக்களைத் தள்ளிவிட்டு, எண்ணெயைப் பதமாப் பார்த்துப் பிரிச்செடுக்க வேண்டிய வேலை இது’’ என்கிற ரமாதேவிக்கு பேசிக்கொண்டிருக்கும்போதே போனில் ஆர்டர்கள் வந்தவண்ணம் உள்ளன.

‘‘இப்ப எல்லாம் மக்களோட கவனம் செக்கு எண்ணெய்கள் மேல திரும்பியிருக்கு. பெட் பாட்டில்கள்ல தரமான எண்ணெயை அடைச்சு அனுப்புறோம். எண்ணெயின் தரத்துக்கு, சீலிங், பாட்டில் எல்லாத்துக்குமே அக்மார்க் முத்திரை வாங்கி இருக்கோம். அதனால், மார்க்கெட்டில் கிடைக்கும் எண்ணெய்களைவிட 30% விலை (டோர் டெலிவரிக்கும் சேர்த்து) அதிகம்தான். ஆனா, காசைக் கொடுத்து நோயை வாங்கறதுக்கு, நல்ல பொருளை வாங்கிடலாமேனு நினைக்கிறாங்க மக்கள். கொஞ்சம் முன்னால பேசின ஒரு கஸ்டமர், ‘அருமையா இருக்கு. என் பொண்ணுக்கு பாம்பேக்கு அனுப்பணும்... எப்படி அனுப்புறது?’னு கேட்டாங்க’’ என்று பெருமைபொங்கச் சொல்லும் ரமாதேவிக்கு, மக்களுக்கு ஒரு நல்ல விஷயத்தைக் கொண்டு சேர்க்கிறோம் என்பதில் திருப்தி.

இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன். ‘‘அவங்களுக்கும் இந்தத் தொழிலில் ஆர்வம் இருக்கிறதால, வரும் தலைமுறைக்கும் செக்கு எண்ணெய் கிடைக்கும்’’ என்கிறார்கள் மகிழ்ச்சியுடன்!

- பிரேமா நாராயணன், படங்கள்: மீ.நிவேதன்