Published:Updated:

உதைக்க உதைக்க உயரம்! - கால்பந்தில் கலக்கும் விஜயகுமாரி...

உதைக்க  உதைக்க உயரம்! - கால்பந்தில் கலக்கும் விஜயகுமாரி...
பிரீமியம் ஸ்டோரி
News
உதைக்க உதைக்க உயரம்! - கால்பந்தில் கலக்கும் விஜயகுமாரி...

அவள் 16

‘‘முயற்சி செஞ்சா முடியாதது எதுவும் இல்லை. அப்படி தொடர்ந்து முயற்சி செய்றவங்களுக்கு சாதனைங்கிறது பெரிய விஷயமா தெரியாது’’ என்று சேலம் மாவட்டம் செல்லியம்பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமாரி சொல்லும்போது, நம் மனதிலும் நம்பிக்கை பிறக்கிறது. ஈரோடு, வேளாளர் கல்லூரி மாணவி விஜயகுமாரி. இவர், தற்போது தமிழ்நாடு கால்பந்து அணியின் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக இவர் இரண்டு முறை தமிழ்நாடு கால்பந்து அணித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உதைக்க  உதைக்க உயரம்! - கால்பந்தில் கலக்கும் விஜயகுமாரி...

‘‘எங்கப்பா கார் டிரைவர். அம்மா மில்லில் வேலை பார்க்கிறாங்க...’’ என்று தன் எளிய பின்புலத்தைபோலவே எளிமையாகப் பேச ஆரம்பிக்கும் விஜயகுமாரி, `‘ஐந்தாம் வகுப்புவரை சென்னையில படிச்சேன். அப்புறம் குடும்பத்தோட சேலம் வந்துவிட்டோம். மங்கலத்துல இருக்கிற செயின்ட் மேரி மேல்நிலைப் பள்ளியில ஆறாவது படிக்கும்போது, ஸ்கூல்ல சீனியர் அக்காங்க எல்லாம் விளையாடுறதைப் பார்த்து கால்பந்து விளையாட்டில் ஆர்வம் வந்தது. எங்க `பி.இ.டி' சார் சாமுவேல்கிட்ட சொன்னதும், அவர் எனக்குப் பயிற்சி கொடுத்தார். நல்லா விளையாடுறதைப் பார்த்து, நான் ஏழாவது படிக்கும்போதே சீனியர் அக்காங்ககூட மாநில அளவிலான போட்டியில் விளையாடுற வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார்.அதில் பரிசும் வாங்கினேன். அப்புறம் நான் கலந்துக்கிட்ட எல்லா போட்டிகளிலும் பரிசோட திரும்ப ஆரம்பிச்சேன்’’ என்று சொல்லும் விஜயகுமாரியின் புரொஃபைலில், அதற்கடுத்த கட்டங்கள் எல்லாம் ஏறுமுகம்தான்.

2010-ம் ஆண்டு, 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றவர், 2015 வரை மாநில அளவிலான அனைத்து கால்பந்து போட்டிகளிலும் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார். 2013-ம் ஆண்டு ‘பெஸ்ட் பிளேயர்’ விருது வாங்கியவர், 2014-ல் ஒடிசா, டெல்லி, புனே, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் விளையாடியதுடன், 2015-ல் மத்தியப்பிரதேசத்தில் தேசிய அளவிலான கால்பந்து போட்டியிலும் கலந்துகொண்டுள்ளார். 2016-ல் ஒடிசாவில் நடந்த தேசிய அளவிலான கால்பந்துப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றதோடு, தமிழ்நாடு கால்பந்து அணிக்கும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

‘‘பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சப்போ, கல்லூரிப் படிப்புச் செலவுக்கு என்ன செய்றதுனு யோசிக்கிற அளவுக்கு இருந்தது எங்க வீட்டு நிலைமை. அப்போதான், ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரில ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஸீட் கிடைச்சது. என்னோட படிப்பு செலவுல இருந்து பயிற்குத் தேவையான உபகரணங்கள் வரை ஆகுற எல்லா செலவுகளையும் கல்லூரி நிர்வாகம் எனக்கு இலவசமா செஞ்சு தராங்க.  இப்போ செகண்ட் இயர் கணிதம் படிக்கிறேன். கல்லூரித் தலைவர் கந்தசாமி, செயலாளர் சந்திரசேகர், முதல்வர் கமலவேணி, உடற்கல்வி இயக்குநர் மாலதி எல்லோருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன். தொடர்ந்து எங்க ஊருக்கும், நம்ம மாநிலத்துக்கும், தேசத்துக்கும் பெருமை சேர்க்கும்விதமான வெற்றிகளைக் குவிக்கணும்!’’

- தன் லட்சியம் சொல்லும் அந்தக் கிராமத்துப் பெண்ணுடன் கைகுலுக்கினோம்!

- நா.மகாலட்சுமி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz