Published:Updated:

இரவுப் பயணம் இனிதாகுமா இனி?

இரவுப் பயணம் இனிதாகுமா இனி?
பிரீமியம் ஸ்டோரி
News
இரவுப் பயணம் இனிதாகுமா இனி?

பயணம் எனும் பயம்

இரவுப் பயணம் இனிதாகுமா இனி?

ருள் மங்கிய இரவு வேளையில் பிடித்த பாடலைக் கேட்டுக்கொண்டே பஸ்ஸில் பயணிப்பது மனதுக்கு இதம். ஆனால், நிஜத்தில்..? நள்ளிரவு தாண்டிய, பெண்ணின் தனிவழிப் பயணம் அத்தனை சிறப்பாக அமைந்து விடுகிறதா? நிச்சயம் இல்லை என்கிற பதில்தான் கிடைக்கும். இரவு நேரத்தில் பெண்களின் பயணத்தைப் பாதுகாப்பானதாக்க, இப்போது கேரள அரசு ஓர் அதிரடி உத்தரவு பிறப்பித்து மற்ற மாநிலங்களை திரும்பிப் பார்க்க வைத்திருக் கிறது. `ஆறரை மணிக்கு மேல் பெண்கள் பயணிக்கும் போது, அவர்கள் சொல்கிற இடத்தில் பேருந்து நிறுத்தப்பட வேண்டும்' என்பதுதான் அது!

`மாலை 6.30 மணி முதல் காலை 6.30 மணி வரை பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள், அவர்கள் விரும்புகிற இடத்தில் இறங்கிக் கொள்ளலாம். அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் புகார் கொடுத்தால், அதை வாங்கி அருகில் உள்ள காவல் நிலையங்களில் அளிக்க வேண்டும். அனைத்துப் பேருந்துகளிலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உதவி மையம், அது சம்பந்தமான தொலைபேசி எண்கள், வட்டார போக்குவரத்து அதிகாரியின் தொடர்பு எண்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்' என்கிற சூப்பர் உத்தரவை நடைமுறைப்படுத்தி, பெண்களை மதிக்கும் முன்மாதிரி மாநிலமாக திகழ ஆரம்பித்துவிட்டது கேரளா!

அண்டை மாநிலமான கேரளாவில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் புதிய உத்தரவுகள் போல, தமிழ்நாட்டில் என்னென்ன புதிய விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று சிலரிடம் கேட்டோம்.

இரவுப் பயணம் இனிதாகுமா இனி?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உமா மகேஸ்வரி, எல்.ஐ.சி. மகளிர் குழு பொறுப்பாளர், சென்னை.

``தமிழ்நாட்டில் இரவு இயக்கப்படும் பேருந்துகள் அதற்கான ஸ்டாப்புகளில் பெண்களை ஏற்றவோ, இறக்கவோ செய்வதில்லை என்பதே பெரும் வேதனை. முக்கியமாக ஓட்டுநர், நடத்துநர்கள் மது அருந்தி இருக்கிறார்களா என்பதை பேருந்தை இயக்குவதற்கு முன்பே சோதித்து இயக்கச் சொல்ல வேண்டும். பெரும்பாலான பேருந்துகளில் இரவு நேரப் பயணங்களில் ஒளிபரப்ப 2 சி.டி.க்களை வைத்திருக்கிறார்கள். அதில் முழுக்க முழுக்க ஆபாசமான வார்த்தைகள் கொண்ட திரை இசைப் பாடல்களே நிரம்பியிருக் கின்றன. சும்மா இருப்பவர்கள்கூட இதுபோன்ற பாடல்களால் தவறான பாதைக்கு திசை திருப்பப்படுகிறார்கள்" என்றார் ஆதங்கத்தோடு.

சம்யுக்தா, காலேஜ் ஸ்டூடன்ட், கோவை.

``என் போட்டோ வேண்டாம் ப்ளீஸ்'' என்றபடியே பேசினார் சம்யுக்தா. ``ஒரு நாள் இரவு, பெற்றோருடன் ஊரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். திடீரென பின்னால் இருந்து யாரோ என் கையைப் பிடிப்பது போல இருக்க... திரும்பிப் பார்த்தபோது ஒன்றும் தெரியவில்லை. மறுபடியும் என் பின்னால் இருந்தவன் அப்படியே செய்ய, பெற்றோரிடம் சொன்னேன். அவர்கள் எழுந்து சத்தமாக மிரட்ட, பிரச்னை ஓய்ந்தது. ஆனாலும், அந்தப் பயணம் அதன் பிறகு அத்தனை நிம்மதியாக இல்லை. இப்போ தெல்லாம் இரவு நேரப் பயணம் என்றாலே அந்தச் சம்பவம் மனதில் வந்து போகிறது" என்கிறவரின் கண்களில் அந்நாள் மிரட்சி வந்து போகிறது.

கவிதா, சென்னை.


``சொந்த விஷயமாக பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் வலதுபுற பக்கவாட்டில் தனியாக அமர்ந்திருந்த ஆண், அவர் முன்னால் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் மீது கை வைப்பதைப் பார்த்தேன். மதுவாடை காற்றில் கலந்து குமட்டிக் கொண் டிருந்தது. நான் பார்த்ததைக் கவனித்தவுடன் சட்டென கையை எடுத்துக் கொண்டார். சில நிமிடங்களில், அடுத்தகட்ட மீறல்களைப் பார்த்து பொறுக்க முடியாமல் `கையை எடு' என்று எழுந்து சத்தம் போட்டேன். `நீ என்ன பெரிய ஜான்சி ராணியா?' என்று என்னை அவன் திமிராக கேட்டதும், சட்டென ஒரு அறை விட்டேன். கெட்ட வார்த்தைகளால் என்னை அர்ச்சிக்க ஆரம்பித்தான். கண்டக்டரிடம் சொன்னேன். எனக்காக யாரும் குரல் கொடுக்க முன்வராத எரிச்சல் வேறு. 'உங்க வீட்டுப் பொண்ணுக்கு இப்படி நடந்திருந்தா சும்மா இருப்பீங்களா?' என்று கோபத்துடன் கேட்ட பிறகே எல்லோரும் என் பக்கம் சேர ஆரம்பித்தார்கள். ஒருவழியாக அவனை பாதி வழியில் இறக்கிவிட்டார் கண்டக்டர். இதுபோன்ற சம்பவங்களில் வார்த்தைகளைப் பற்றி கவலைப்படாமல் துணிச்சலாக நடக்கும் பெண்கள் தப்பி விடுகிறார்கள்'' என்று அட்வைஸோடு முடித்தார் கவிதா.

இரவுப் பயணம் இனிதாகுமா இனி?

இரவு நேரத்தில் பயணிக்கும் பெண்களுக்கு ஏற்படும் சிரமங்களை களைய என்ன செய்யலாம்? மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் ராதிகாவிடம் கேட்டோம்.

``கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு வேலைக்குச் ்சென்று வருபவர்களாக இருக்கட்டும்... இரவு 9, 10 மணிவாக்கில் வேலை முடித்து வீடு திரும்பும் மாடர்ன் பெண்களாகட்டும்... எல்லோருக்குமே இரவு நேரப் பயணம் சிக்கல் தருவதாகவே அமைகிறது. இப்போதெல்லாம் எல்லோருமே செல்போன் வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள். ரயிலில் பயணம் செய்யும் போது பிரச்னைகள் ஏற்பட்டால் புகார் கொடுக்க ஒவ்வொரு கம்பார்ட்மென்டிலும் புகார் எண் எழுதி வைத்திருப்பார்கள். அதே போல பஸ்ஸில் பயணிப்பவர்களின் குறைகளை எந்த நேரமாக இருந்தாலும் கேட்க மையங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். பஸ்ஸில் பெண்களுக்கு பிரச்னைகள் ஏற்படும்போதெல்லாம் மெளனமாக கவனிக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு பிரச்னையை எப்படி கையாள வேண்டும் என்பதோடு, பாலின சமத்துவம் பற்றியும் சொல்லித்தர வேண்டும்" என்று பிராக்டிகலாக சொல்லி முடித்தார் ராதிகா.

பேருந்துப் பயணம் என்பது பயணமாக அமையட்டும்... பயமாக அல்ல!

- ச.ஜெ.ரவி, கே.புவனேஸ்வரி, கோ.ப.இலக்கியா

படங்கள்: தி.விஜய்

சட்டம் என்ன சொல்கிறது ?

ரவு நேரப் பேருந்து பயணத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க சட்டம் என்ன வழிவகை வகுத்திருக்கிறது என்று பேசினார் வழக்கறிஞர் அஜிதா. 

இரவுப் பயணம் இனிதாகுமா இனி?

``1989-ல் ஈவ் டீசிங்கால் சரிகாஷா மரணமடைந்த போது ஈவ் டீசிங் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் ஒரு பிரிவை உருவாக்கி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கொண்டுவந்தனர். பொது இடங்களான சாலை, பொது போக்குவரத்து உள்ளிட்ட இடங்களில் அச்சம், பயம், அருவருப்பு, பாதுகாப்பின்மை தரும் செயல்கள் செய்வோரை தண்டிக்கும் வழிவகை இச்சட்டத்தில் உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 354-வது பிரிவின் மற்றொரு சேர்க்கையாக 354A பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் அதற்கான தண்டனையை வரையறுக்கிறது. பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக உள்ள அனைத்து பாலியல் துன்புறுத்தலுக்கும் 3 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்கிறது சட்டம்.

பேருந்தில் உங்களுக்கு விரும்பத்தகாத செயல்கள் நடந்தால், உடனடியாக பேருந்தை அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு விடச் சொல்லுங்கள். அதைச் செய்யாத நடத்துநர், ஓட்டுநர் மீதும் புகார் பதிவு செய்யலாம். காவல் நிலையத்தில் உங்களுக்கு என்ன நடந்ததோ அதை புகாராக கொடுக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த தகவல்களை எல்லா பேருந்துகளிலும் முதலில் எழுதி வைக்க வேண்டும்'' என்று ஷார்ப்பாக சொல்லி முடித்தார் வழக்கறிஞர் அஜிதா.