இனி வரப்போகிற மாதங்கள் எல்லாம் பண்டிகை காலம் என்பதால் வீட்டு உபயோக பொருட்களில் ஆரம்பித்து லேப்டாப், கார் வரை அத்தனை பொருட்களின் விற்பனையும் நம்மை கவர ஆரம்பிக்கும். ஆஃபர்கள் வசீகரிக்கும், அதிலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களுக்கு கேட்கவே வேண்டாம். உண்மையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் நடப்பது என்ன? பொருட்களை ஆஃபரில் வாங்குவது லாபமா... நஷ்டமா? தெரிந்து கொள்ளலாம்!

1. எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் ப்ளஸ் என்ன?

கையில் இருந்து செலவழிக்கும் தொகை குறையும். நீங்கள் வாங்க விரும்புகிற பொருளை குறைவான விலையில் வாங்கவும், விற்க நினைக்கிற பொருளையும் நல்ல விலையில் விற்கவும் முடியும்.

2. உங்கள் சாய்ஸ்

உங்களுடைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்வது என்று முடிவெடுத்தால் நேரடியாக விற்பது, ஆன்லைன் மூலம் விற்பது என இரண்டு வகைகள் இருக்கின்றன. எதில் அதிக லாபம் கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்டு பிறகு உள்ளே இறங்குங்கள்.

3. புது மாடல் தவிர்க்கவும்

சந்தையில் புதிதாக வந்திருக்கும் மாடலை எக்ஸ் சேஞ்சில் வாங்குவதைத் தவிர்க்கவும். ஒருவேளை, அதன் பயன்பாடு அத்தனை சிறப்பாக இல்லையென்றால் சந்தையில் அதன் விலை பெருமளவில் குறையும். எனவே, தொடர் கண்காணிப்பு அவசியம்.

4. டேட்டாவை  அழியுங்கள்

மொபைல், கேமரா போன்றவற்றை எக்ஸ்சேஞ்ச் செய்வதற்கு முன்பு அவற்றில் உள்ள மெமரி கார்டை எடுத்துவிடவும். மொபைலில் உள்ள கான்டாக்ட்ஸ் மற்றும் போட்டோக்களை பேக்கப் எடுத்துவிட்டு சம்பந்தப்பட்ட பொருளில் உள்ள டேட்டாக்களை முற்றிலும் அழித்துவிடுங்கள். இல்லையென்றால், வாங்குபவர் உங்கள் டேட்டாவை மிஸ்யூஸ் செய்யும் அபாயம் உண்டு.

ஒரு டஜன் யோசனைகள்

5. பிராண்ட் கவனம்

நீங்கள் வைத்திருக்கும் பொருளுக்கான பிராண்டிலேயே, எக்ஸ்சேஞ்ச் மூலம் வேறு பொருளை வாங்க விரும்புகிறீர்கள் என்றால் உங்கள் பழைய பொருளுக்கு அதிக விலை கிடைக்கும். அதைவிடுத்து வேறு ஒரு பிராண்டில் எக்ஸ்சேஞ்ச் செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு லாபம் குறைவாகவே கிடைக்கும். இந்த நுட்பம் தெரிந்த பிறகு எக்ஸ்சேஞ்சில் இறங்குங்கள்.

6. ஃபெஸ்டிவல் ஆஃபர்... அவசரம் காட்டாதே!

ஃபெஸ்டிவல் நேரங்களில் நல்ல எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கும் என காத்திருப்பவர்கள், அந்த சமயத்தில் நீங்கள் வாங்க நினைக்கும் பொருளின் விலை மாற்றங்களை மூன்று மாதம் முன்பிருந்தே கவனித்து வாருங்கள். ஒரு மிக்ஸி இரண்டாயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்சுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றால், பண்டிகை காலங்களில் அதே மிக்ஸி 1,500 ரூபாய்க்குத்தான் ஆஃபரில் எடுத்துக்கொள்ளப்படும். அதேபோல், உங்களிடம் இருக்கும் பொருளின் தற்போதைய சந்தை மதிப்பு எப்படி இருக்கிறது என்பதையும் கவனத்தில்கொண்டு பிறகு ஆஃபர் பக்கம் செல்லுங்கள்.

7. அதிகாரபூர்வ விற்பனையாளர்களிடம் வாங்குங்கள்

ஆன்லைன் மூலம் வாங்குவதாக இருந்தாலும் சரி, நேரடியாக வாங்கு வதாக இருந்தாலும் சரி... பொருளை மாற்ற அதிகாரபூர்வ டீலர்களிடம் மட்டும் எக்ஸ்சேஞ்ச் செய்யுங்கள். இல்லை
என்றால் வாரன்டி, கேரன்டி, சர்வீஸ் போன்றவை உங்களுக்கு கிடைக்காமலும் போகலாம். அதில் அநேகமான குளறுபடி களும் ஏற்படலாம்.

8. மற்ற ஆஃபர்களை இழக்காதீர்கள்


இ - காமர்ஸ் முறையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் பொருட்களை வாங்கும்போது சில தள்ளுபடிகள் கிடையாது என கண்டிஷன் வைத்திருப்பார்கள். உதாரணமாக, பத்தாயிரம் ருபாய் மதிப்புள்ள பொருளை ஒரு குறிப்பிட்ட வங்கி டெபிட்/கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் 15% தள்ளுபடி என அறிவித்திருப்பார்கள். இதன் மூலம் 1,500 ரூபாய் சேமிக்க முடியும். அதே டி.வி.யை எக்ஸ்சேஞ்ச் மூலம் 8,000 ரூபாய்க்கு வாங்கும்போது, ஆஃபர் செல்லுபடியாகாமல் போகலாம். இதுபோன்ற வேளைகளில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை தேர்ந்தெடுப்பதா வேண்டாமா என நன்றாக யோசித்து முடிவெடுங்கள்.

9. தேய்மானம்... கணக்கு பாருங்கள்

கார் போன்றவற்றை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது அந்த கார் வாங்கிய தேதியைப் பார்க்க வேண்டாம். காரின் தேய்மானத்தை கணக்கில் கொள்ளுங்கள். அப்போதுதான் அந்த பொருளின் தரம் மற்றும் விலையை நீங்கள் கணக்கில்கொள்ள முடியும்.

10. விளக்கப்பட்டியலை கவனிக்கவும்

ஷோரூமில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் நீங்கள் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் வாங்கிவிட முடியாது. நீங்கள் ஆஃபரில் வாங்க நினைக்கும் பொருளுக்கான தரம், அவர்கள் சொல்லும் விலை, கேரன்டி, விளக்கப்பட்டியல் போன்றவற்றை கேட்டுக் கொள்ளுங்கள். மற்ற கடைகளிலும் அந்த பொருளின் தரம் முதற்கொண்டு விலை வரை அனைத்தையும் சரிபார்த்துவிடுங்கள். அப்போதுதான் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உங்களுக்கு கைக்கொடுக்கும்.

11. எக்ஸ்சேஞ்ச் + இ.எம்.ஐ = என்ன நடக்கும்?

ஒரு பொருளை நீங்கள் ஈ.எம்.ஐ முறையில் வாங்க விரும்பி, அதே நேரம் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் அனுபவிக்க விரும்பினால் கவனமாக இருப்பது அவசியம். சில நிறுவனங்கள் ஃபைனான்ஸ் நிறுவனங்களோடு சேர்ந்துகொண்டு, வழக்கமான வட்டித்தொகையை காட்டிலும் அதிக வட்டி விகிதத்தில் இ.எம்.ஐ. மற்றும் பிராசஸிங் கட்டணத்தோடு தொகையை நம் தலையில் கட்டிவிடுவார்கள். இ.எம்.ஐ-யில் வாங்குவதற்கு முன்பு அதன் வட்டிவிகிதத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

12. உங்களுக்குத் தேவைதானா?

நீங்கள் வாங்கும் பொருள் உங்களுக்கு அவசியம் தேவைப்படுகிறதா...அல்லது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் என்ற காரணத்துக்காக மட்டுமே ஒரு பொருளை வாங்குகிறீர்களா? எக்ஸ்சேஞ்ச் இல்லாமல் உங்களால்  நீங்கள் விரும்பிய பொருளை வாங்க முடியுமா? நன்றாக இருக்கும் பொருளை எக்ஸ்சேஞ்சில் மாற்றுகிறீர்களா? மேலும் உங்களிடம் இருக்கும் பொருளுக்கு எக்ஸ்சேஞ்சில் உரிய விலை கிடைக்கிறதா?

க்ஸ்சேஞ்ச் முறையில் பொருட்களை வாங்குவதற்கு முன்பு இந்தக் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இதற்கான நேர்மையான பதிலைப் பொறுத்து எக்ஸ்சேஞ்சில் பொருளை வாங்கலாமா வேண்டாமா என முடிவு செய்யுங்கள்.

ஹேப்பி ஷாப்பிங்!

-  பு.விவேக் ஆனந்த்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism