Published:Updated:

பிள்ளைகளுக்கு தரவேண்டிய முக்கியப் பரிசு!

பிள்ளைகளுக்கு தரவேண்டிய முக்கியப் பரிசு!
பிரீமியம் ஸ்டோரி
News
பிள்ளைகளுக்கு தரவேண்டிய முக்கியப் பரிசு!

உங்கள் கவனத்துக்கு...

பிள்ளைகளுக்கு தரவேண்டிய முக்கியப் பரிசு!

‘‘என் பெண்கள் இருவரும் சாஃப்ட்வேர் படிப்பு முடித்தவர்கள். அமெரிக்காவில் பணிபுரியும் மூத்த பெண் தொலைபேசும்போது, ‘அம்மா, நாங்க உங்களைவிட நிறைய சம்பாதிக்கிறோம். ஆனா, வேலைக்குப் போகும்போதும் வீடு திரும்பும்போதும் உங்ககிட்ட இருக்கிற சந்தோஷம், திருப்தி எங்களுக்கு இல்ல’ என்பார். அந்த அளவுக்கு ஆசிரியர் பணியை நான் விரும்பிச் செய்கிறேன். அதுவே என் வாழ்க்கையை அழகாக்குகிறது’’ என்று சாந்தி மோகன் சொல்லும்போது, அந்த வார்த்தைகளில் உள்ள நேர்மை அவர் குரலை மேலும் கம்பீரமாக்குகிறது.

மதுரை,  லமி ஐசிஎஸ்இ பள்ளியின் முதல்வரான சாந்தி, மத்திய அரசின் ‘நல்லாசிரியர்’ விருது பெற்றவர். 34 ஆண்டுகளாக கற்பித்தல் பணியில் இருக்கும் இவர், ஆசிரியர்களுக்காக நூற்றுக்கணக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளார். கிராமப்புற மாணவர்களுக்கான தன்னம்பிக்கை வகுப்புகள் மற்றும் பாடப் பயிற்சிகளை ஒருங்கிணைக்கும் இவர், 1 முதல் 8-ம் வகுப்பு மெட்ரிக் ஆங்கிலப் பாடப் புத்தகங்களை, தன் தோழி சீதா கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து எழுதியுள்ளார். சாந்தியின் கணவர் அருண் ராமச்சந்திர மோகன், ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர். சாந்தி பகிரும் கருத்துகள் கற்பதைக் கற்கண்டாக மாற்றத்தக்கவை!

ஆசிரியர்தான் கருவி!

மாணவர்களுக்குப் பாடம் பிடிக்க வேண்டுமானால், அதை நடத்தும் ஆசிரியரை முதலில் பிடிக்க வேண்டும். இது அடிப்படை உளவியல். எனவே, நேர்த்தியாக ஆடை அணி யுங்கள் என்பது, பொதுவாக நான் ஆசிரியர்களுக்குத் தரும் முதல் பரிந்துரை. கண்டிப்பு காட்டும்போது,  மாணவர்கள் காயப்படுவதைவிட, ‘நமக்குப் பிடிச்ச டீச்சர்கிட்ட கெட்ட பெயர் வாங்கிட்டோமே’ என்று வருந்த வைக்கும் ஆசிரியரால், எந்த மாணவரையும் படிக்கவைக்க முடியும்.

அரசுப் பள்ளிகள் பலவற்றில் ஆசிரியர்கள் கணிதத்தையும் சமன்பாடுகளையும் புதுமையாக கற்பிப்பதை `யூடியூப்'பில் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அந்த அர்ப்பணிப்பு அவர்களுக்கான அடையாளம் மட்டுமல்ல, பல நூறு குழந்தைகளுக்கான வெளிச்சம். இப்படியாக கற்பிக்கும் முறைகளில் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் ஆசிரியரே, இன்றைய குழந்தைகளின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியும்.

எனக்கு பதவி உயர்வு அளிக்கப்படும்போதெல்லாம் நான் வைக்கிற கோரிக்கை, ‘குறைந்தபட்சம் ஒரு வகுப்புக்காவது நான் பாடமெடுக்க வேண்டும்’ என்பதே. பள்ளி, கல்லூரி என நம் வாழ்க்கையில் எத்தனையோ ஆசிரியர்களைக் கடந்து வந்திருப்போம். இன்று சிலரின் பெயர்கள் மட்டுமே நினைவில் இருக்கும். அப்படியான ஓர் ஆசிரியராக உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் ஆவது, இந்தப் பணியில் உங்கள் இலக்காக இருக்கட்டும்.

பெற்றோர் தரும் முக்கியப் பரிசு!

 பல்வேறு பள்ளிகளில் இருந்தும் குழுமியிருந்த மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை அது. ‘ஒருவேளை நீங்க உங்க வீட்டுல, ‘இன்னைக்கே எனக்கு ஒரு லேப்டாப் வேணும்’னு கேட்டீங்கன்னா, எத்தனை பேரோட பேரன்ட்ஸ் அதை வாங்கிக் கொடுப்பாங்க'? என்று கேட்டேன். அங்கிருந்த 30 மாணவர்களில் 27 பேர் கை உயர்த்தினர். இது அதிர்ச்சி அல்ல... அன்றாடமாகிவிட்டது. தாங்கள் கேட்பது எதுவாக இருந்தாலும் ‘இல்லை’ என்ற பதில் பெறாத... ஏக்கம், ஏமாற்றம் அறியாத ஒரு தலைமுறையை பெற்றோர் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி வளரும் மாணவர்கள் பின்னாளில் பணிச்சூழலில், குடும்ப அமைப்பில் தடைகள் தாண்டி நீடித்து நிற்கும் திடம் இல்லாதவர்களாகி விடுவார்கள்.

நாளை உங்கள் பிள்ளைகள் குழந்தைப் பருவம் பற்றி நினைத்துப் பார்க்கும்போது, காலையில் அவசரமாகக் கிளப்பப்பட்டு ஸ்கூல் வேனில் அடைக்கப்பட்டதும், மாலையில் வீடு திரும்பியதும் வரிசையாக துரத்தப்பட்ட வகுப்புகளும் மட்டுமே நினைவில் வருவது போன்ற பால்யத்தைத் தராதீர்கள். உங்கள் நேரத்தை அவர்களுக்குக் கொடுங்கள். அதைவிடச் சிறந்த பரிசு, அவர்களுக்கு வேறில்லை!

 ஜெ.எம்.ஜனனி, படங்கள்: வி.சதிஷ்குமார்