Published:Updated:

முடிவெடுப்பது அவர்களது சுதந்திரம்! - பாடலாசிரியர் உமாதேவி

முடிவெடுப்பது அவர்களது சுதந்திரம்! - பாடலாசிரியர் உமாதேவி
பிரீமியம் ஸ்டோரி
முடிவெடுப்பது அவர்களது சுதந்திரம்! - பாடலாசிரியர் உமாதேவி

வாழ்வை மாற்றிய புத்தகம்ஆர்.வைதேகி, படங்கள்: எம்.உசேன்

முடிவெடுப்பது அவர்களது சுதந்திரம்! - பாடலாசிரியர் உமாதேவி

வாழ்வை மாற்றிய புத்தகம்ஆர்.வைதேகி, படங்கள்: எம்.உசேன்

Published:Updated:
முடிவெடுப்பது அவர்களது சுதந்திரம்! - பாடலாசிரியர் உமாதேவி
பிரீமியம் ஸ்டோரி
முடிவெடுப்பது அவர்களது சுதந்திரம்! - பாடலாசிரியர் உமாதேவி
முடிவெடுப்பது அவர்களது சுதந்திரம்! - பாடலாசிரியர் உமாதேவி

“செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்துக்கொண் டிருந்த காலம்... ஔவையாரின் கவிதைகளும் இலக்கியப் புத்தகங் களும் அப்போதுதான் எனக்கு அறிமுகமாகத் தொடங்கியிருந்தன. பேராசிரியர் அமைதி அரசு ஒரு படைப்பை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை அத்தனை அழகாகக் கற்றுத்தருவார்.சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., தமிழ் இலக்கியம் படிக்க வந்த பிறகு பேராசிரியர் சொல்லித் தந்த விஷயங்களை நடைமுறையில் உணர்ந்தேன். ஒரு விஷயத்தை ‘நீ இப்படிப் பார்... இப்படிச் செய்...’ எனச் சொல்வது வெறும் சத்தங்களாகவே இருக்கும்.

அதே விஷயங்கள் நம் கண்முன் நிற்கும்போது ஒரு பாதை தெரியும். அப்படி பாதைக்கும் சத்தத்துக்கு மான வித்தியாசத்தை எனக்கு உணர வைத்த புத்தகம் அம்பேத்கர் எழுதிய ‘புத்தரும் அவர் தம்மமும்’.

நாம் இதுவரை அறிந்த புத்தரின் வாழ்க்கைக்கும் இந்தப் புத்தகத்தில் நான் படித்த அவரது வாழ்க்கைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனேன்.

கைக்குழந்தையுடன் மனைவி யசோதரையை விட்டுவிட்டு புத்தர் துறவறம் போனதை மிகப்பெரிய துரோகச் செயல் என்கிற பேச்சாடல்கள் இன்றும் உண்டு. ஒரு மரணத்தையும் ஒரு நோயாளியையும் ஒரு வயதானவரையும் பார்த்துதான் துறவற முடிவை எடுத்ததாகப் படித்திருப்போம். ஒரு மனிதனைத் துறவறம் பற்றி யோசிக்க வைக்க இந்த மூன்று மட்டுமே காரணங்கள் ஆகிவிடாது என்கிற அம்பேத்கர், அவற்றை ஆழமாக அலசுகிறார். புத்தர் சித்தார்த்தனாக இருந்த குழந்தைப் பருவத்தில் இருந்தே அவர் பார்த்த, அவரைப் பாதித்த பல விஷயங்களை அவரது துறவறத்தின் பின்னணியில் குறிப்பிடுகிறார்.

அப்போது சாக்கியர்கள், கோலியர்கள் என இரு   இனக்குழுக்கள் இருந்தன. புத்தரின் அம்மா கோலியர் இனத்தைச் சேர்ந்தவர். அப்பா சாக்கியர் இனத்தைச் சேர்ந்தவர். இன்று காவிரிக்காக நாம் அடித்துக் கொள்கிற மாதிரி அன்று ரோகிணி நதிக்காக சண்டை போட்டனர். அன்றும் நதிநீர் பங்கீடுதான் பிரச்னை.

சாக்கியர் இனக்குழுவினருக்கு ஒரு சங்கம் இருந்தது. அரசனும் அதற்குக் கட்டுப்பட்டவன். 20 வயதுக்கு மேலான ஆண்கள் அனைவரும் அதில் உறுப்பினர்களாக வேண்டும்.  உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ரோகிணி நதி தொடர்பான விவாதம் சங்கத்தில்
நடக்கிறது. தண்ணீர் தர மறுக்கும் கோலியரை எதிர்த்து போர் தொடுப்பது என சங்கம் முடிவு செய்கிறது. இம்முடிவுக்குக் கட்டுப்படாத வர்களுக்கு நாடு கடத்துதல், சொத்துகளைப் பறிமுதல் செய்தல், மரணதண்டனை வழங்குதல் என இம்மூன்றில் ஒரு தண்டனை நிச்சயம்.

முடிவெடுப்பது அவர்களது சுதந்திரம்! - பாடலாசிரியர் உமாதேவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஒரு போர் இன்னொரு போரையே உருவாக்கும்... நீதிக்கோ, அன்புக்கோ வழிவகுக்காது’ என்கிறான் சித்தார்த்தன். அந்த வரிகள் என் வாழ்க்கையை திசை திருப்பியவை. தமிழ் இலக்கியப் படிப்புக்காக சங்க இலக்கியங்களை வாசித்துக்கொண்டிருந்த நேரம் அது.  சங்க இலக்கியங்களில் போரில் வெல்கிறவன், தோற்றவர்களின் மனைவிகளை, மகள்களை கொண்டுவந்து அந்தப்புரத்தில் அடைத்து வைப்பது பற்றிப் படித்த எனக்கு சித்தார்த்தனின் போர் மறுப்பு தத்துவம் மனதைப் பாதிக்கிறது. போர் என்பது ஒரு பெண்ணுக்கு எத்தனை பெரிய இழப்பு என்பதை சித்தார்த்தனின் வரிகள் சொல்கின்றன. போரில் தன் வீட்டு ஆணை இழக்கிற பெண் அதற்குப் பிறகு எப்படி எல்லாவற்றையும் இழந்து நிற்கிறாள் என சித்தார்த்தன் கவலைகொள்கிறான். ‘போருக்கு உடன்பட மாட்டேன்’ என்கிறான். அப்படிஎன்றால் 3 விஷயங்களில் ஒன்றுக்கு அவன் உடன்பட்டாக வேண்டும்.

‘நான் ஏன் இறக்க வேண்டும்? உயிர் என்பது விலை மதிக்க முடியாதது’ என்கிறான் சித்தார்த்தனாகிய புத்தன். சொத்துகளை இழக்கவும் தயாராக இல்லை. பெண்களுக்கும் வயதான பெற்றோருக்கும் அது அவசியம் என்கிறான். கணவரின் முடிவைக் கேட்டு அவனை வாரி அணைத்து அத்தனை முத்தங்களை அள்ளிக் கொடுக்கிறாள் யசோதரை.

அப்போது நாடு கடத்தப்படுவது மட்டும்தான் ஒரே வழி என்கிற முடிவுக்கு வருகிறான். அதில் யசோதரைக்கு வருத்தமே...  ஆனாலும், ‘அப்படியொரு விதியை முன்வைத்த மனிதர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என புத்தி சொல்லக்கூடிய ஞானத்தைப் பெற்று தேர்ந்த புத்தனாக திரும்பி வா’ என இரும்பு மனுஷியாக கம்பீரக் காதலுடன் கணவனை வழியனுப்புகிறாள்.

முடிவெடுப்பது அவர்களது சுதந்திரம்! - பாடலாசிரியர் உமாதேவி

அக்காலத்தில் துறவுநிலைக்கு மிஞ்சிய கவுரவம் வேறில்லை. துறவறத்துக்குக் கிளம்புகிற புத்தர் தன் நண்பர்களுடன் கடவுளைப் பார்க்கப் புறப்படுகிறார். முதலில் எதிர்கொள்பவர் கபிலன். தியானத்தில் இருந்தால் கடவுளைப் பார்க்கலாம் என்கிற கபிலரின் பேச்சைக் கேட்டு அப்படியே இருக்கிறார். வயிறு ஒட்டி, பலவீனமானதுதான் மிச்சம். கடவுள் வரவில்லை. கண்களைத் திறந்து, ‘கடவுள் வரமாட்டார், அவருக்காகக் காத்திருப்பது முட்டாள்தனம்’ என நினைத்துப் புறப்படுகிறார். பலவீனமடைந்து ஒரு அரசமரத்தடியில் களைப்புடன் படுத்துவிடுகிறார். சிறுதெய்வ வழிபாட்டுக்காக அங்கே வருகிற சுஜாதை என்கிற பெண், அரசமரத்தடி சாமிக்கு உணவு வைக்கும்போது புத்தருக்கும் தருகிறார்.  `அமர்ந்த நிலையில் அடைவது மட்டும் ஞானமில்லை... யாரோ ஒருவருக்கு யாரோ ஒருவர் உணவளிப்பதுதான் உண்மையான ஞானம்’ என உணர்கிறார் புத்தர்.

பெண்ணியத்துக்கான புத்தரின் குரலையும் நான் இந்தப் புத்தகத்தில் பார்த்தேன். பிறந்த 5-வது நாள் தன் அம்மா மகா மாயாவை இழந்து விடுகிற புத்தர், சித்தி கவுதமியிடம் வளர்கிறார். அவர்களது குல வழக்கப்படி புத்தரை வேட்டைக்குப் போகச் சொல்கிறார் சித்தி.  மறுக்கும் புத்தரிடம், ‘வேட்டைக்குப் போகாவிட்டால் நீ சத்ரியனே இல்லை’ என்கிறார். அதைக் கேட்டு தன் குலத்தையே தூக்கிப் போட்டவர் புத்தர். பின்னாளில் புத்தர் துறவியானதும் அதே சித்தி தன்னையும் அவருடன் இணைத்துக்கொள்ளக் கேட்டு தினமும் கெஞ்சுகிறார். புத்தரோ செவிமடுக்கவில்லை. புத்தரின் நெருங்கிய நண்பன் ஆனந்தன், ‘நீ செய்வது சரியா... ஆமாம், இல்லை என ஏதேனும் ஒரு பதிலைச் சொல்ல வேண்டாமா’ எனக் கேட்கிறார்.

‘அவரை துறவுக்கு வரச் சொல்ல நான் யார்? பெண் என்பவள் ஓர் ஆணைக்காக காத்திருக்கக்கூடாது. முடிவெடுப்பது அவர்களது சுதந்திரம்’ என்ற புத்தரின் வார்த்தைகளில் பெண்ணிய ஆதரவுக்கான குரலைப் பார்த்தேன்.

இப்படி இன்னும் இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் எனக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிதலை விசாலப்படுத்தியது என்றே சொல்லலாம். பதினோராம் வகுப்பு படித்தபோது நான் வாசித்த பெரியார் சிந்தனை நூலை அடிக்கடி நினைவுபடுத்திய புத்தகமும்கூட இது.  இன்று சிங்களவர் பேசும் பவுத்தத்துக்கு எதிரான கருத்துகளை நான் முன் வைக்கக் காரணமாக அமைந்ததும் இந்தப் புத்தகம்தான். புத்தருக்கு போதி மரம் மாதிரி எனக்கு இந்தப் புத்தகம்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism