Published:Updated:

ஆட்டிஸக் குழந்தைகளுக்கு இசை சிகிச்சை!

ஆட்டிஸக் குழந்தைகளுக்கு இசை சிகிச்சை!
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டிஸக் குழந்தைகளுக்கு இசை சிகிச்சை!

புதுமைபிரேமா நாராயணன், படங்கள்: தி.குமரகுருபரன்

ஆட்டிஸக் குழந்தைகளுக்கு இசை சிகிச்சை!

புதுமைபிரேமா நாராயணன், படங்கள்: தி.குமரகுருபரன்

Published:Updated:
ஆட்டிஸக் குழந்தைகளுக்கு இசை சிகிச்சை!
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டிஸக் குழந்தைகளுக்கு இசை சிகிச்சை!
ஆட்டிஸக் குழந்தைகளுக்கு இசை சிகிச்சை!

‘ஆட்டிஸம்’ என்ற மனவளர்ச்சித் தடை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 12 ஆண்டுகளாக இசை வகுப்புகள் நடத்துகிறார், கர்னாடக இசைக் கலைஞர் லக்ஷ்மி மோகன். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் லக்ஷ்மியின் இல்லத்தில் ஓர் அறையில் மாலை 4 மணிக்கு குழுமிவிடுகிறார்கள் ஆட்டிஸ குழந்தைகள். தங்கள் இயல்புக்கு மாறாக, மந்திரத்துக்குக் கட்டுண்டதுபோல சமர்த்தாக அமர்கிறார்கள், இசையை ரசிக்கிறார்கள், பாடுகிறார்கள்!

‘‘எனக்குச் சொந்த ஊர் நிலக்கோட்டை. படிச்சது பி.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி. சின்ன வயசுலேயே பாட்டு கத்துக்க ஆரம்பிச்சேன். திருமணமாகி சென்னை வந்த பிறகு, இங்கே ஒரு குருவிடம் இசை படிச்சேன்.  2002 - 2003ல் இன்டர்நெட் பார்க்கப் பழகினப்போ, இசை பற்றி நிறையப் படிச்சேன். குறிப்பிட்ட சில ராகங்கள், ஆட்டிஸ மனநிலையை சாந்தப்படுத்த உதவும்னு தெரிஞ்சுக்கிட்டேன். ‘அப்போ நாம அவங்களுக்கு உதவலாமே’ என்கிற எண்ணம்தான், என் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை.

ஒரு தேடல் தீவிரமாகவும் ஆத்மார்த்தமாக வும் இருந்தால், நிச்சயம் அதற்கான விடை கிடைக்கும். என் தேடலுக்கும் விடை கிடைச்சது. எங்க ஏரியாவிலேயே ஒரு ஸ்பெஷல் ஸ்கூல் இருக்கிறதைப் பார்த்தேன். அதன் இயக்குநர்கிட்ட விவரத்தைச் சொல்லி, அங்கே இருக்கிற குழந்தைகளுக்காக வாரம் ரெண்டு நாள் வந்து பாடலாமானு கேட்டேன். அவங்களும் சம்மதிச்சாங்க.

அங்கே ஆட்டிஸம் குழந்தைங்க யாரும் உட்காரக்கூட மாட்டாங்க. ஒருநாளும் நான் பாடறதைத் திரும்பிக்கூடப் பார்த்ததில்ல. கொஞ்சம்  கவலை இருந்தாலும், பாடறதை நிறுத்தல. இடையில் எனக்கு உடம்பு சரியில்லேன்னு சில நாட்கள் கழிச்சு ஸ்கூலுக்குப் போனப்போ, ஒரு டீச்சர் என்னிடம், ‘மேடம்... நீங்க வராத நாட்களில் இந்தப் பையன் வாசல் கதவுகிட்டேயே போய் நின்னான். எங்களுக்கு ஏன்னு புரியல. கையைப் பிடிச்சு உள்ளே அழைச்சுக்கிட்டு வந்தபிறகு, நீங்க பாடின வரிகளைப் பாடினான். அப்போதான், உங்களைத்தான் அவன் தேடறான்னு புரிஞ்சுது’னு சொன்னாங்க. அந்த நிமிஷத்தில் எனக்குள் ஏற்பட்ட உணர்ச்சிகளை வார்த்தைகளால சொல்ல முடியாது. ஆட்டிஸத்துக்கும் இசைக்கும் நிச்சயமா ஏதோ ஒரு தொடர்பு இருக்குன்னு புரிஞ்சுது.  இனி அவங்களுக்காக மட்டுமே என் பாட்டு’னு முடிவெடுத்தேன். அப்போ ஆரம்பிச்சது இந்தப் பயணம்’’ என்கிற லக்ஷ்மியின் வகுப்பில், இப்போது இரண்டரை வயது குழந்தை முதல் 40 வயது பெரியவர் வரை இருக்கிறார்கள்.

ஆட்டிஸக் குழந்தைகளுக்கு இசை சிகிச்சை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘99.9% ஆட்டிஸ நிலையாளர்களுக்கு இசையில் ஆர்வம் உண்டு. பேசாத குழந்தைங்க பேசறதுக்கும், ஏற்கெனவே பேசும் குழந்தைங்க இன்னும் தெளிவாகப் பேசறதுக்கும் பாட்டு ரொம்பவே உதவும். ஆட்டிஸக் குழந்தைகளுக்கு ஓரிடத்தில் உட்காரும் அளவுக்கு பொறுமையே இருக்காது. கண் பார்த்துப் பேச மாட்டாங்க. இதையும் இசையால் கொண்டு வர முடியும். இந்தக் குழந்தைகளுக்கு ஆழ்ந்த உறக்கம் இருக்காது. மாத்திரை இல்லாம இசையாலேயே நல்லா தூங்க வைக்க முடியும். இதுக்காக ‘நித்ரா’ன்னு ஒரு சிடி வெளியிட்டிருக்கேன். இன்னும், கவன ஒருங்கிணைப்பு, ஞாபகசக்தி, ஃபோகஸிங்  எல்லாத்துக்குமே மியூஸிக் தெரபி ரொம்பவே உதவும். பாட்டு கத்துக்கிட்ட பிறகான இவங்க வாழ்க்கையில் நிச்சயமா ஒரு மாபெரும் மாறுதல் இருக்கும். அனுபவித்த பெற்றோர்களுக்கு அது புரியும்!’’ என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் லக்ஷ்மி.

ஆட்டிஸக் குழந்தைகளுக்கு இசை சிகிச்சை!

லக்ஷ்மியுடைய முயற்சியின் வெற்றி, சாதனை மாணவர் கிருஷ்ணா. 40 வயதான ஆட்டிஸ நிலையாளர். இப்போது ஒன்றரை மணி நேரம் கச்சேரியே செய்யுமளவுக்கு முன்னேறி இருக்கிறார்.

சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கு மாதத்தில் ஒரு நாள் இலவச இசை வகுப்பும் எடுக்கிறார் லக்ஷ்மி, ‘‘இந்த பாட்டு  கிளாஸ்  அவங்களுக்கு ஒரு ரெஜுவினேஷன். பேரன்ட்ஸ் செஷனுக்கு வந்த ஒரு அம்மா, ‘10 வருஷம் கழிச்சு இப்பதாங்க வாயையே திறந்திருக்கேன்’னு சொல்லி கதறினாங்க. அந்த அளவுக்கு ஸ்ட்ரெஸ் அவங்களுக்கு’’ என்றவாறே, அன்றைய வகுப்புக்குத் தயாராகிறார்...

‘‘ரெங்கா விட்டலா... ரெங்கா விட்டலா...’’ - சுருதி தவறாத தாள லயத்துடன் லக்ஷ்மியும் அந்தக் குழந்தைகளும் பாட, மனம் கனிந்து கண்கள் கசியக் கிளம்பினோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism