
“ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் எனும் நோக்கத்தை, ஒரு நாடகம் மாற்றிவிட்டது” என்று பீடிகையோடு ஆரம்பித்தார் அழகேஸ்வரி. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் இவர் நடத்திவரும் பசுமை நூலகத்தில் இருப்பவை புத்தகங்கள் மட்டுமல்ல... விதைகள், செடிகள் என அந்தப் பகுதியையே பசுமையாக்கும் வித்தைகளைக் கற்றுத்தரக்கூடியவை.
“படித்து முடித்ததும் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் என்பதே என் நோக்கமாக இருந்தது. இயற்கை நலன் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோது நம்மாழ்வார் ஐயாவைப் பார்த்தேன். அதன்பிறகே, ‘பணம் ஒரு பொருட்டல்ல; இயற்கையோடு இணைந்து வாழ்தலே சரியானது’ எனப் புரிந்துகொண்டேன். நம்மாழ்வார் சொல்வதுபோல, அரைக்காணி நிலத்தை வைத்து நிம்மதியான சுயசார்பு வாழ்க்கையை வாழலாம் என்கிற தெளிவு பிறந்தது.
ஊத்துக்குளி பள்ளியில் ஒருமுறை நாடகம் நடத்தும் ஆசிரியர் வராமல்போக, அந்தப் பொறுப்பை நான் எடுத்துக் கொண்டேன். பலரும் பாராட்டினார்கள். அடுத்த நாளே அந்தப் பள்ளி மாணவர்கள் வீடு தேடி வந்து பேசினார்கள். இதன் தொடர்ச்சியாக, ஆர்வமிக்க அந்த மாணவர்களோடு சேர்ந்து என்ன செய்வது என யோசித்து, முடிவில் நர்சரி தோட்டம் வைத்தோம். அதற்காக விதைகளைத் தேடி அலைந்தபோது, நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். விதைகள் செடிகளாக வளர்ந்ததும், அதை ஊரில் உள்ளவர்களிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னோம். ஆனால், புங்கன், இலுப்பை போன்ற மரங்களை மூடநம்பிக்கையால் வளர்க்க மறுத்தார்கள். பிறகு, அந்த மரங்கள் பற்றி விளக்கிச் சொல்ல, புரிந்துகொண்டு வளர்க்க ஆரம்பித்தனர். புத்தகங்களோடு, பறவைக் கூடுகளும் மண்ணால் செய்த விளையாட்டுப் பொருட்களுமாக அழகாக இருக்கும் இந்த நூலகத்தை குழந்தைகள் சந்திக்கும் இடமாக வைத்திருக்கிறோம். நம்மாழ்வார் ஐயாதான் திறந்துவைத்தார்.
இங்கு, நல்ல பழக்கங்களை உருவாக்குவது குறித்தும் உரையோடு வோம். இப்போது குழந்தைகள் ‘பேஸ்ட் வேண்டாம்’ என வேப்பங்குச்சி வைத்தே பல் துலக்குகிறார்கள். ‘நல்ல விஷயத்தை பெரியவர்களிடம் சொல்லி மாற்றுவதைவிட, குழந்தை களிடமிருந்தே மாற்றத்தை ஆரம்பிக்க லாம்’ என்கிற எங்கள் திட்டத்துக்கு வெற்றி கிடைத் திருக்கிறது!”