
‘‘அவங்க வயசான தம்பதி. கணவருக்கு உணவுக் குழாய்ல புற்றுநோய். மனைவிக்கு பார்க்கின்சன் டிசீஸ்னு சொல்லப்படும் நரம்புக் கோளாறு. ஒரே மகன் விபத்துல தவறிட்டார். மகள் கல்யாணமாகி வெளிநாட்ல செட்டிலாகிட்டாங்க. வயசான காலத்துல தங்களைப் பார்த்துக்க ஆளில்லாம, அதுவும் நோயோட வாழற கொடுமையைவிட வேற சித்ரவதை இருக்குமா? பணம் இருந்தாலும் அதை வெச்சுக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியாத நிலைமையிலதான் என்கிட்ட வந்தாங்க. அந்த முதியவர் மூக்குல குழாய்போட்டு அதன் மூலமா சாப்பிட்டுக்கிட்டிருந்தார். இன்னைக்கு வாய் வழியா சாப்பிடறார்.
‘மகனும் போயிட்டான்... மகளாலயும் வர முடியாத நிலைமையில நாங்க வாழ்ந்து என்ன பயன்னு விரக்தியா இருந்தோம். இப்போ ஒரு குடும்பமே பக்கத்துல இருக்கிற உணர்வைக் கொடுத்துட்டீங்க.. லவ் யூ ஆல்’னு சொல்லி, அந்தம்மா எங்களுக்கு முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தறாங்க.
இது மாதிரி தினம் தினம் விதம் விதமான மனிதர்கள்.... வித்தியாசமான உணர்வுகள்...’’ - உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேச ஆரம்பிக்கிறார் டாக்டர் ரிபப்ளிகா. பேலியேட்டிவ் கேர் எனப்படுகிற வலி ஆதரவு சிகிச்சைக்காக சென்னை, திருவள்ளூர் மற்றும் பெரும்புதூரில் இலவச மருத்துவச் சேவை செய்து வருபவர்.
``புற்றுநோய் போன்ற நோய்களுக் குக் கொடுக்கப்படற சிகிச்சைகள் கிட்டத்தட்ட மரண வலிக்குச் சமம். அந்த வலியை சகிச்சுக்கிட்டு வாழறது ரொம்பவே கொடுமை. குடும்பத்தாருக்கும் அவங்களை எப்படிப் பார்த்துக்கிறதுனு கவலை... இந்த இடத்துலதான் பேலியேட்டிவ் கேர் தேவைப்படுது. இந்த சிகிச்சை மூலமா சம்பந்தப்பட்ட நோயாளிகளை வலிகள் இல்லாம மிச்ச வாழ்க்கையைக் கடக்க உதவ முடியும். மோசமான நிலையில இருக்கற நோயாளிகளைக் கூட்டிட்டு வந்து சிகிச்சை கொடுத்து கவனிச்சுக்கறோம். எல்லாத்தையும்விட வலியை நீக்கற மருந்துகள் கொடுத்து அவங்களை நிம்மதியா வாழச் செய்றோம்...’’ என்கிறார் ரிபப்ளிகா.
`சாகிற நாள் தெரிஞ்சுட்டா வாழற நாள் நரகமாயிடும்’ என்கிற ரஜினி பன்ச்சை மாற்றி, சாகிற நாள் தெரிந்த வர்களுக்கும் வாழும் நாட்களை நல்லனவாக அமைத்துக் கொடுக்கிறார் இந்த மாண்புமிகு மருத்துவர்!