Published:Updated:

அவள் கிளாஸிக்ஸ்

அவள் கிளாஸிக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
அவள் கிளாஸிக்ஸ்

ஃப்ளாஷ்பேக்

அவள் கிளாஸிக்ஸ்

ஃப்ளாஷ்பேக்

Published:Updated:
அவள் கிளாஸிக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
அவள் கிளாஸிக்ஸ்
அவள் கிளாஸிக்ஸ்

எல்லாப் பெண்களுமே எழுத்தாளர்கள்தான்!  - ரமணி சந்திரன் - 1998

‘`சொன்னா நம்பமாட்டீங்க... நான் என் தங்கைக்கு எழுதின கடிதங்கள்தான் என்னை ஓர் எழுத்தாளராகவே ஆக்கியிருக்கு தெரியுமா..?

அப்போ நாங்க தஞ்சாவூர்ல இருந்தோம்... மெட்ராஸ்ல இருந்த என் தங்கை சந்திராவுக்கு. வீட்ல நானும் என் இரண்டு குழந்தைகளும் என்ன செஞ்சோம், ஏது செஞ்சோம்னு ஆரம்பிச்சு, எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் மரம் ஏன் பூ பூக்கலேங்கிற கவலை வரைக்கும் விலா வாரியா லெட்டர் எழுதுவேன்!

அவள் கிளாஸிக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘அடடா... நேர்ல பார்க்கிற மாதிரி என்ன அழகா விவரிச்சு எழுதியிருக்காங்க... உங்க அக்காகிட்டே நல்ல எழுத்துத் திறமையிருக்கு. எங்க பத்திரிகைக்கு கதை எழுதச் சொல்லு’னு தங்கை கணவர் சொல்லியிருக்கார். எழுதிப் பார்த்தப்போ எனக்கும் கோவையாக கதை எழுத வந்தது. சரின்னு எழுதி அனுப்பிட்டேன்.

‘ராணி’ பத்திரிகையின் ஆசிரியர் அ.மா.சாமிதான் தங்கையின் கணவர்!

வரிசையா இரண்டு சிறுகதைகள் எழுதித்தர, ’ராணி’யில் இரண்டுமே பிரசுரமாயிடுச்சு... சொந்தக்காரங்கனுதான் நாம எழுதினதையெல்லாம் பிரசுரிக்கிறாங்களோ’னு எனக்குச் சந்தேகம். நல்லவேளையா `ராணி’யில ஒரு சிறுகதைப் போட்டி வெச்சாங்க. என் எழுத்தோட தரத்தைச் சோதிக்கணும்னே நான் அந்தக் கதையை லட்சுமி சீனிவாசன்னு ஒரு லேடி பேர்ல எழுதினேன். அந்தப் போட்டியில் லட்சுமி சீனிவாசனுக்குத்தான் முதல் பரிசு! அப்புறம்தான் தன்னம்பிக்கையோட நாவல்கள் எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் பாருங்க... மாமாவே பாத்துட்டு, ‘’அட..! நம்ம ரமணிப் பொண்ணா இதெல்லாம் எழுதினது’னு ஆச்சர்யப்பட்டு போனார்! தமிழர் தந்தைனு பேர் வாங்கின ஒருத்தர்கிட்டேயிருந்து பாராட்டு வாங்கறதுனா சும்மாவா?

ஆமாம்... சி.பா.ஆதித்தனார்தான் என் தாய்மாமா!’’

நான் நடித்த சினிமாக்களை நானே பார்த்ததில்லை! - அஸ்வினி நாச்சப்பா - 1999

‘‘ஆமாம்...  என்னை நானே பார்த்து சகிக்க முடியாது என்பதால், என் சினிமாக்களைப் பார்ப்பதில்லை. இப்போது தடகளப் போட்டிகளில் கலந்துகொள்வது இல்லையே தவிர, ஆரோக்கியமாக இருக்கவும் கணவருக்கும் மகளுக்கும் கம்பெனி கொடுக்கவும் தினமும் 2 மணி நேரம் பாட்மின்டன் ஆடுகிறேன்.

அவள் கிளாஸிக்ஸ்

எனக்கு ஆத்மதிருப்தி தருவது என்பதால் மட்டுமல்ல... இது என் கடமை என்று உணர்ந்திருப்பதாலும் மனநலம் குன்றிய குழந்தைகளுக்காக என்னாலானதைச் செய்கிறேன். இந்தக் குழந்தைகளுக்கு இயல்பான வாழ்க்கையைக் கொடுக்க, அவர்களின் திறமையை வெளிப்படுத்த வைப்பதே ஒரே வழி. அவர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்க அதிகமான தள ஆர்வலர்கள் தேவை... நீங்களும் இணைந்துகொள்ளுங்களேன்.

இந்தியா முழுவதும் 35 ஆயிரம் மனநலம் குன்றிய குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களிடத்தில் அன்புக்குக் குறைவில்லை. போற்றத்தக்க குணங்கள் நிறைந்த இந்தக் குழந்தைகள் மனசிக்கல்கள், ஈகோ இல்லாத திறமைசாலிகள்!’’

ஹை தங்கச்சி பொம்மை! - ஜோதிகா - 2000

‘‘நந்திதாவை செல்லமா ‘நக்மா’னு கூப்பிடுவாங்க... ரொம்ப அமைதி. சின்னக்கா ராதிகா வாயாடி. அவ செல்லப் பேர் ஸ்வீட்டி. நான் புசுபுசுன்னு பூனைக்குட்டியாட்டமா இருப்பேனாம். அதனால நான் ‘க்யூட்டி’.

அவள் கிளாஸிக்ஸ்

நக்மாவுக்கும் எனக்கும் எட்டு வயசு வித்தியாசம். நான் பிறந்தப்ப, ‘ஹை என் தங்கச்சி பொம்மை’னு என்னை அள்ளி எடுத்துக்கிட்ட கை இன்னிக்கும் அதே கதகதப்போட என்னை அரவணைச்சுக்கிட்டே இருக்கு. அப்போ என்னை பார்த்துட்டுப் போக சொந்தக்காரங்க, ஃப்ரெண்ட்ஸ்னு நிறையபேர் வருவாங்களாம். ‘யாராச்சும் தூக்கிக்கிட்டுப் போயிடுவாங்களோ’னு பயந்து அக்காக்கள் ரெண்டு பேரும் என்னைச் சுத்தி பாடிகார்டுகளாட்டம் நின்னுப்பாங்களாம்.

ராதிகா என்னைவிட ஒரு வயசுதான் மூத்தவ. நாங்க அச்சுல வார்த்தாப்ல ஒரே மாதிரியிருப்போம். ஏழெட்டு வயசானதும் அவ நெடுநெடுன்னு வளர்ந்துட்டா. நான் கத்திரிக்காயாட்டம் குட்டையா குண்டாவேயிருந்தேன். இப்போ நக்மாக்கா, ராதிகாக்கா உயரத்தை எல்லாம் தாண்டி அஞ்சடி ஏழரை அங்குலம் நான்!

நான் நிஜமான ஒரு புல் தடுக்கி பயில்வான்ங்கறதை சொல்லியே ஆகணும். தடதடன்னு நடக்கும்போதே ஏதாவது கால்ல தட்டி தொப்புன்னு விழுவேன்!’’

சிரிப்பு என் டானிக்!  - சிநேகா - 2001

‘‘சினிமாவோட கொஞ்சம்கூட சம்பந்தமில்லாதது எங்க குடும்பம். பிறந்தது பாம்பேன்னாலும் வளர்ந்தது, படிச்சது துபாய். அங்கேயும் ஆசாரமான தமிழ்க் குடும்பம் மாதிரிதான் இருக்கும். நான் மினி ஸ்கர்ட்கூட போட்டதில்லை.

அவள் கிளாஸிக்ஸ்

நடிக்க வந்தது கனவு மாதிரி. மலையாள ஸ்டார் நைட் நிகழ்ச்சி பார்க்கப் போன இடத்துல நடிகையாகிட்டேன். ஆனா, நடனக் காட்சியில் சுற்றும்போது டமால்னு விழுந்துடுவேன். ‘பக்கத்தில் இருக்கிறவங்களை அடிக்காமல் ஆடணும்’னு பிரசாந்த் சொன்னார். இப்படி கூட நடிச்ச எல்லாரும் டிப்ஸ் கொடுத்தாங்க.

ஏதாவது ஒரு வழியில சாதிக்கணும்... சிநேகான்னா பத்துப் பேருக்குத் தெரியணும்னு ஆசை இருந்தது. ஆசைப்பட்டதைவிட சினிமா அதிகமான புகழ் கொடுத்திருக்கு.

‘வாயே வலிக்காதா? எப்ப பாரு சிரிச்சுகிட்டே இருக்கே’னு ஃப்ரெண்ட்ஸ் கேப்பாங்க. ஸ்கூல்லகூட (டாம் அண்ட்) ஜெர்ரின்னு கூப்பிடுவாங்க.

சிரிக்கிறது எனக்கு ரொம்பப் பிடிச்ச வேலை. சிரிப்பு எனக்கு டானிக் மாதிரி. சிரிச்சா கவலை, வலி எல்லாம் போயிடும். பலபேர் அதை பயன்படுத்தாம `உம்’முனு இருக்காங்களே... ஏன்?’’

எது நியூஸ்?  - ஷோபனா ரவி - 2002

‘‘உலகம் முழுவதையும் தவறுகளிலிருந்தும் அநியாயங்களில் இருந்தும் காப்பாற்ற ஏதாவது அதிசயம் நடந்தால், உண்மையிலேயே அதுதான் நியூஸ். என் காலத்துக்குள் அப்படி நடக்காதா என்றுதான் எதிர்பார்க்கிறேன்.

அவள் கிளாஸிக்ஸ்

பெண்கள் கொடுமைக்கு உள்ளாகிற செய்திகளைப் படிக்கும்போது குரலில் கோபம் தெறிக்கும். `ஏன் இப்படி? உடல், மனம் இரண்டிலும் ஆண்களுக்கு நிகரான பலம் நமக்கும் இருக்கிறது. பிறகு எதைச் சாதிக்க இந்த அடிமைத்தனம்? கணவன் அடித்தால் திருப்பி அடிக்க வேண்டியதுதானே? கொடுமைப்படுத்தினால் விலகிடலாமே? நாலுபேர் தூற்றுவார்களே என்று பயந்து ஒடுங்கும் பெண்களால்தான் சமுதாயமே ஆண்களின் பிடியில் சிக்கிச் சீரழிகிறது’ என்று மனசுக்குள் தர்க்கமே நடக்கும். `என்ன பயன்? குனியக் காத்திருக்கின்றனர் பெண்கள். குட்டுவதற்கு என்ன கஷ்டம்’ என்ற ஆதங்கத்தோடு அந்த மனப் போராட்டம் முடியும்!’’

நம்பிக்கை! - ஜெயலலிதா - 2003

``சுவிட்சர்லாந்தில் ஒரு பெண் இருந்தாள். அவளுடைய புகழ் ஐரோப்பா முழுவதும் பரவியிருந்தது. அப்படி அவள் என்ன சாதனை செய்தாள்? சிறந்த ஓவியராய் இருந்தாள். அவ்வளவுதானா? ஓவியத்தில் அவள் மேதையாக இருந்தாள். அதற்காகவா ஐரோப்பா முழுவதும் அவளைக் கொண்டாடியது. அவளுக்குப் பின்னல் வேலை மிக நன்றாகத்தெரியும். அவ்வளவுதானே? அவள் திறமையாகக் குதிரைச் சவாரி செய்வாள்.

அவள் கிளாஸிக்ஸ்

இந்த மூன்று திறமைகளுக்காகவா? இதில் சாதனை எங்கே வந்தது? இந்த மூன்றிலும் திறமை படைத்த அவள், ஒரு சாதாரண பெண்மணி அல்ல, சாதனைப் பெண்மணி... எப்படி?

அவளுக்குத்தான் இரண்டு கைகளே இல்லையே. இரண்டு கைகளும் இல்லாத அவள் கால்களால் ஓவியம் வரைந்தாள். அதில் மேதை ஆனாள். இரண்டு கைகளும் இல்லாத அவள் கால்களால் ஸ்வெட்டர் பின்னினாள். அதில் மாபெரும் திறமை பெற்றாள். இரண்டு கைகளும் இல்லாத அந்தப் பெண்மணி குதிரைச் சவாரி வீராங்கனையாகவும் விளங்கினார். உடல்குறைபாடு உள்பட, எந்தக் குறையிருந்தாலும் அது வெற்றிக்குத் தடை ஆகாது என்று அந்தப் பெண் நிரூபித்தாள்.

* உள்ளத்தில் உறுதி இருந்தால் கைகளைப் பற்றிய கவலையே வேண்டாம்.’’

- (மேடையில் கூறிய குட்டிக்கதை)

வாழ்க்கை என்பதும் சினிமா அல்ல! - வாசுகி - 2004

‘‘வாழ்க்கைச் சிக்கலை ஒரு மணி நேர தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தீர்க்க முடியுமா?  உலகமே பார்த்துக்கொண்டிருக்கும்போது அரை மணி நேரத்தில் குடும்பப் பிரச்னையைத் தீர்க்க முடியாது என்பதை, எந்தக் குடும்ப நல ஆலோசனை மையத்திடம் கேட்டாலும் சொல்வார்கள். பல சுற்று கவுன்சிலிங், அவர்கள் தேர்வு செய்வதற்கு உதவியான ஆலோசனைகள், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை விளக்குதல், தைரியம்/ தன்னம்பிக்கை அளித்தல், சமத்துவ மதிப்பீடுகளை அறிவுறுத்தல் போன்ற முயற்சிகளுக்குப் பிறகே முடிவெடுக்க முடியும். ஏனென்றால் வாழ்க்கை, சினிமாவைப் போல இரண்டரை மணி நேரத்தில் தொடங்கி முடிந்துவிடுவதில்லை.

அவள் கிளாஸிக்ஸ்

அப்படியானால் பாதிக்கப்பட்டவர்களை மீடியாவில் பேச வைக்கவே கூடாதா என்கிற கேள்வி எழும். சமூக அநீதிகள், பெண் ணுரிமை / மனித உரிமை மீறல் சம்பவங்களை அம்பலப்படுத்துவதோ, தைரியமாக அவற்றை எதிர்கொண்டவர்களைத் தட்டிக் கொடுத்து, ரோல் மாடலாக்குவதோ வேறு! மற்றபடி அந்தரங்கப் பிரச்னைகளில் மூக்கை மட்டுமல்ல, கேமராவை நுழைப்பதும் சரியல்ல!’’

மக்கள் சேவை! - டாக்டர் சாந்தா - 2005

‘‘நான் டாக்டருக்கு படித்து முடித்து, சென்னையில் ஹவுஸ் சர்ஜனாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அப்போதுதான் அம்மா (டாக்டர் முத்துலட்சுமி) எனக்கு அறிமுகம் ஆனார். அம்மாவுக்கு அப்போதே 60 வயது. இந்தியாவின் முதல் பெண் டாக்டர், மிகப்பெரிய சமூக சேவகி, அகில இந்திய மாதர் சங்க சேர்மன் என்று பல பெருமைகளுக்கு உரியவர். அம்மாவின் தங்கைக்கு கேன்சர் நோய் இருந்தது. அப்போது கேன்சர் சிகிச்சைக்கு சிறப்பான மருத்துவமனைகள் நம் ஊரில் இல்லாததால், எவ்வளவோ போராடியும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. ‘நம் தங்கையின் நிலை வேறு யாருக்கும் வரவே கூடாது’ என அப்போது முடிவெடுத்தார் அம்மா. பல அமைச்சர்களிடம் கேன்சருக்கென்று சிறப்பு மருத்துவமனை கட்ட கோரிக்கை வைத்தார். அமைச்சர்களோ கைவிரித்துவிட்டார்கள்.

அவள் கிளாஸிக்ஸ்

கடைசியில் அம்மாவே, 1952-ல் மருத்துவமனைக்காக இடம் வாங்கினார். முதலில் கட்டிய சிறுகட்டடத்தில் மருத்துவக் கருவிகளை வைக்க மட்டும்தான் இடம் இருந்தது. அருகிலேயே குடிசை போட்டு, அதில்தான் நோயாளிகளை தங்க வைத்தோம். சொல்ல முடியாத வேதனை, கஷ்டம் எல்லாம் இந்தக் கட்டடங்களுக்குள் மறைந்திருக்கின்றன...”

பாரதி சொன்ன பெண்மை! - செல்லம்மா பாரதி - 2006

‘‘பாரதியார் ஒரு புதுமைப் பித்தர். பெண்கள் ‘பர்தா’ வழக்கம் அவருக்குப் பிடிக்காது. ஆனால், பெண்கள் வரம்பு மீறி நாகரிகமென்று சொல்லிக்கொண்டு நடப்பதும் பிடிக்காது.

அவள் கிளாஸிக்ஸ்

‘வீட்டில் பெண்களைப் பூட்டி வைப்பதால் பிரயோஜனமில்லை. பெண்கள், மனதில் களங்கமின்றி ஆண் மக்களோடு பழக வேண்டும்.

அங்ஙனமே ஆடவர்களும் ஸ்திரீகளின் மத்தியில் உள்ளத்தில் மாசின்றி உறவாட வேண்டும். இப்படி ஜாக்கிரதையுடன் சிறிது காலம் நடந்தால், தனியே ஒவ்வொருவர் மனமும் பரிசுத்தமாகிவிடும். மூடி மூடி வைப்பதால் புருஷர்களுக்குப் பெண்களைப் பார்ப்பதில் ஆசை அதிகமாகி வரம்பு மீறவும் ஏது உண்டாகிறது’ என்ற கொள்கை உடையவர் பாரதியார்.

அவர் காதும் கண்ணும் மிகக் கூர்மை யுடையன. அவர் மனதிற்கு நாம் நடப்பதும் நினைப்பதும்கூடத் தெரிந்துவிடும்.

பெண்கள் யாருக்கும் அஞ்சித் தலையைக் கவிழ்க்கக் கூடாது. ‘யாரேனும் விடர்கள் கெட்ட ஹிருதயத்தோடு உன்னை நோக்கினால், நீ அவனை தைரியமாகப் பத்து நிமிஷம் உற்றுப்பார். அவன் வெட்கித் தலை குனிந்துவிடுவான். அல்லது அவன் முகத்தில் திடீரென்று உமிழ்ந்துவிட்டு அப்பால் செல்’ என்று குழந்தைகளுக்கு உபதேசம் செய்வார்...’’

(`பாரதியார் சரித்திரம்’ நூலில் இருந்து!)

அன்புதான் நிலைக்கும்! - சரோஜாதேவி - 2007

‘‘நான் மட்டுமல்ல... பப்பிம்மா, கே.ஆர்.விஜயானு பல நடிகைகளும் கல்யாணத்துக்குப் பிறகுதான் நிறைய படங்கள்ல நடிச்சிருக்கோம். நீங்க எப்படி ஆபீஸ் போய் வேலை பார்க்கறீங்களோ, அப்படித்தான் நடிப்பு எங்களுக்குத் தொழில்.

அவள் கிளாஸிக்ஸ்

எம்.ஜி.ஆர். ‘நாடோடி மன்னன்’ல என்னை தமிழ்த் திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தினவர் மட்டுமல்ல... பல நல்ல விஷயங்களை சொல்லித் தந்த ஆசானும்கூட! ஒருநாள் ஷூட்டிங்ல, அசிஸ்ட்டன்ட்டைக் கூப்பிட்டு ஃபேன் போடச் சொன்னேன். அதை எம்.ஜி.ஆர். பார்த்துக்கிட்டே இருந்தார். உடனே என்னைக் கூப்பிட்டு, ‘எல்லாத்துக்கும் அடுத்தவங்களையே எதிர்பார்க்கக் கூடாது. நம்மளால முடிஞ்ச வேலைய நாமதான் செய்யணும். இந்த வசதி, பணம், அந்தஸ்து எல்லாம் இன்னிக்கு இருக்கும்... நாளைக்குப் போய்டும். ஆனா, நம்மளைவிட குறைவான வசதியில இருக்கிறவங்களுக்கு நாம தர்ற மரியாதையும் அவங்க மேல காட்டுற அன்பும்தான் என்னிக்கும் நிலைச்சிருக்கும்’னு சொன்னாரு. இன்னிக்கு வரைக்கும் அவர் சொன்னதை வேதவாக்கா எடுத்துத்தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்.

அதே போல, ‘பாலும் பழமும்’ படத்துல ‘என்னை விட நீதான் நல்லா நடிச்சிருக்கே’னு  சிவாஜி சார் சொன்னப்ப எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா?!’’

15-ல் திருமணம்... 16-ல் எழுத்தாளர்... - ராஜம் கிருஷ்ணன் - 2008

‘‘1925-ல முசிறியில பிறந்தேன். அந்தக் காலத்துல பெண்கள் வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணி வெச்சுடுவாங்க.

அவள் கிளாஸிக்ஸ்

எனக்கும் 15 வயசுல பால்ய விவாகம்தான். 9 நாத்தனார், மாமியார், மாமனார்னு நான் வாழ்க்கைப்பட்டது பெரிய குடும்பம். ரொம்பவே கஷ்டப்பட்டோம். என் கணவர் கிருஷ்ணன், எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர். வீட்டில் நிறைய புத்தகங்கள் வாங்கிப் போடுவார். லைப்ரரிக்குப் போயும் நிறையப் படிப்பேன். 16 வயசுல கதைகள் எழுத ஆரம்பிச்சேன்.  நான் கதை எழுதும்போதெல்லாம் என் கணவர் பேனாவுக்கு மை போட்டுத் தருவார். என் துணிமணிகளை அயர்ன் பண்ணித் தருவதும் அவர்தான். 1970-ல் தூத்துக்குடி உப்பளத்துக்குப் போய் மீனவர்களை நேரடியாகச் சந்தித்தேன். அவர்களுக்குக் குடிக்கக்கூடத் தண்ணீர் கிடையாது. அந்த அவல நிலையை ‘கரிப்பு மணிகள்’ என்ற நாவலாக எழுதினேன். 1972-ல் பீகாரில் கொள்ளையர் அராஜகம் செய்து கொண்டிருந்த நேரம். அந்த கொள்ளைக்கூட்டத் தலைவன் ‘டாகுமான்சி’யை சந்தித்து பல மாதங்கள் அவர்களுடனே இருந்து, ‘முள்ளும் மலரும்’ என்ற தலைப்பில் எழுதினேன்.

பெண் சிசுக் கொலை, கோவா விடுதலை, சோவியத் நாடுகள் பற்றிய கட்டுரைத் தொடர்கள் என நான் எழுதாத விஷயங்களே இல்லை!’’

ஆச்சி சொல்லை தட்டாதே! - மனோரமா - 2009

‘‘சமீபத்துல ஒரு டிரஸ்ட்ல இருக்கற முந்நூறு குழந்தைகளையும் பார்த்து அதிர்ச்சியில உறைஞ்சு போயிட்டேன். அந்த பிஞ்சுக் குழந்தைங்க எல்லாருமே எய்ட்ஸ் நோயாளிகள்! தங்களுக்கு என்ன நோய், இது ஏன் வந்தது, இன்னும் எத்தனை நாள் இருப்போம்... இது எதுவும் தெரியாம, புரியாம வெள்ளந்தியா சிரிக்கற அந்த குழந்தைங்களப் பார்த்து தாங்கமுடியாம தரதரனு அழுதுட்டேன். இப்போ சொல்லுங்க... திருமணத்துக்கு முன்ன எய்ட்ஸ் பரிசோதனை சான்றிதழ் கேட்கறதுல எந்த மாற்றுக் கருத்தாச்சும் யாருக்கும் இருக்க முடியுமா?

அவள் கிளாஸிக்ஸ்

கறுப்பு ஆடுகளைக் கண்டுபிடிக்கறதுக்கும், அப்பாவிகளைக் காப்பாத்தறதுக்கும்தான் இந்த பரிசோதனைங்கறதால இதுல யாருக்கும் தயக்கம், வருத்தம், அவமானமும்னு எதுவும் தேவையில்ல.

இதையெல்லாம் சொல்ற நான், மெடிக்கல் சான்றிதழ்களைப் பரிமாறிக்க முன்வர பையனுக்குத்தான் என் பேத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன்; என்னோட பேரனுக்குத் திருமணம் செய்யப் போற பொண்ணுகிட்டயும் இதையே வலியுறுத்துவேன்!’’

பிங்க் பேபி! - த்ரிஷா - 2010

‘‘எங்க அம்மா பிங்க் கலர்னா அலறுவாங்க. ஏன்னா, நான் ஒரு பிங்க் பைத்தியம். நெயில் பாலிஷ்ல இருந்து பாத் டப் வரை எனக்கு எல்லாமே பிங்க் பிங்க் பிங்காதான் இருக்கணும். அதுலயும் என் ரூம்ல சுவர், டைல்ஸ், பெட், பெட்ஸ்ப்ரெட், பில்லோ, கர்ட்டென், கார்பெட்னு எல்லாமே பிங்க் மயம்தான். இப்போ சொல்லுங்க... எங்கம்மா அலறாம என்ன செய்வாங்க?!

அவள் கிளாஸிக்ஸ்

நீங்க எங்கிட்ட எவ்ளோ சாக்லேட்ஸ் கொடுத்தாலும், நான்ஸ்டாப்பா சாப்பிட்டுட்டே இருப்பேன். அதுலயும் சுவிஸ் சாக்லேட்ஸ்னா எனக்கு சாப்பாடுகூட வேண்டாம். என் ஃப்ரெண்ட்ஸ் அடிக்கடி ஆச்சர்யமா கேட்கற ஒரே விஷயம்... ‘இவ்ளோ சாக்லேட்ஸ் சாப்பிட்டும் எப்படிடா இவளோ ஸ்லிம்மா இருக்கே!’ கிரெடிட் கோஸ் டு காட்!

நான் படிச்சது சர்ச் பார்க்ல. ஸ்கூல் மெமரிஸ் நமக்கு எப்போவும் ஸ்வீட் மெமரிஸ். அப்புறம் ஸ்டெல்லா மாரீஸ் காலேஜ்ல படிச்சுட்டு இருந்தப்போதான் மாடலிங்ல பிஸி ஆனேன். ஸ்கூலா, காலேஜானு கேட்டா... ஸ்கூல்தான் என் ஹேப்பி டேஸ்! ஸ்கூல் பேட்ஜ், ரிப்போர்ட் கார்டு, யூனிஃபார்ம், ஷூஸ், ஸ்கர்ட்னு எல்லாத்தையும் இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன். நேரம் கிடைக்கிறப்ப எடுத்துப் பாத்து சிரிச்சுப்பேன். ஹைய்யோ... என் ஸ்கூல் டேஸை ஞாபகப்படுத்திட்டீங்களே!’’

உங்களில் ஒருத்தி! - அருணா சாய்ராம் - 2011

‘‘அப்பாவுக்குச் சொந்த ஊர் திருவாரூர். அம்மாவுக்கு திருச்சி. அப்பாவுக்கு பம்பாய் ரயில்வேயில் வேலை என்பதால், அங்கேதான் குடியிருந்தோம். அம்மாவும் சங்கீதம் பயின்றவர்.

அவள் கிளாஸிக்ஸ்

அதனால் வீட்டில் எப்போதுமே இசைப் பிரவாகம்தான். வீட்டில் நானும் என் அண்ணணும்தான். ஏழாவது வயதிலேயே எனக்கு இசையைப் போதிக்க ஆரம்பித்துவிட்டார் என் அம்மா. பத்து வயது வரை அவர்தான் குரு. அதன்பிறகு, நாய்னா பிள்ளையின் இசை வாரிசான பிருந்தா அம்மாவிடம் என்னுடைய 24 வயது வரை இசை பயின்றேன்...

இப்போதுகூட சங்கீதத்தைக் கற்றுக் கொண்டேதான் இருக்கிறேன். பாலமுரளி சாரை சந்திக்கும்போதெல்லாம், கிடைக்கின்ற சில நிமிடங்களைக்கூட வீணாக்காமல் சங்கீத நுணுக்கங்களைக் கற்று வருகிறேன்...

பாடகி என்பதற்காக மனைவி, அம்மா என்கிற ஸ்தானங்களை எல்லாம் மறுத்துவிட முடியுமா என்ன? மேடை மட்டுமே வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டு, முழுக்க முழுக்க அதை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால்... அதன் காரணமாக ஏற்படும் சூன்யம், அவர்களுடைய சங்கீதத்திலேயே வெளிப்பட்டுவிடும். அதனால், நான் எப்போதும் மக்களோடு மக்களாக... அவர்களில் ஒருத்தியாகவே என்னை உணர்கிறேன்... அப்படியே இருக்க ஆசைப்படுகிறேன்!’’

ஆங்கிலம் என்பது பூதம் அல்ல! - கௌரி ஷிண்டே - 2012

‘‘பூர்வீகம் மும்பை. படித்தது, வளர்ந்தது புனேவில். வாழ்க்கைப்பட்டிருப்பது தமிழ்க் குடும்பத்தில். என் கணவர் பால்கி, அமிதாப் பச்சனின் ‘சீனி கம்’, ‘பா’ ஆகிய படங்களை இயக்கியவர். இசைஞானியின் மகா காதலர். நானும் பால்கியும் விளம்பரத் துறையில் இருந்ததால், எங்களுக்கு இடையில் நிகழ்ந்த ஓர் ஆச்சர்யமான சந்திப்பு... நட்பாக பூத்து, காதலாக காய்த்து, கல்யாணத்தில் கனிந்தது.

அவள் கிளாஸிக்ஸ்

2003-ல் ‘ஓ.. மேன்!’ என்ற குறும்படம் ஒன்றை இயக்கினேன். இந்திய சமூகத்தில் ஆணாதிக்கம் எப்படி தலைவிரித்தாடுகிறது என்பதுதான் கரு.  பெண் குழந்தைகள் மீது ஏவப்படும் வக்கிரங்கள் பற்றி ‘ஒய் நாட்’ என்ற இன்னொரு குறும்படமும் எடுத்தேன்.

ஒருமுறை நியூயார்க் போய் இருந்தேன். தூக்கம் தொலைத்த ஒரு தனிமை இரவில், ‘இங்கிலீஷ்  தெரியாமல் இந்திய நடுத்தர குடும்பத்துப் பெண், நியூயார்க்கில் தட்டுத் தடுமாறி வாழ்க்கை நடத்துகிறாள்’ என்ற ஒற்றை வரி ஸ்பார்க் ஆனது. அதுதான் இங்கிலீஷ் விங்கிலீஷ்... இது நம் இந்திய இல்லத்தரசிகள் அனைவரின் பொதுக்கதை. ஆங்கிலம் என்ற மொழி தெரியாமல் தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தடுமாறி, இந்தியாவில் எத்தனையோ பெண்களும் ஆண்களும் வாழ்க்கையையே கோட்டைவிடுகிறார்கள். ஆங்கிலம் என்பது பூதம் அல்ல, அழகான மொழி. முயன்றால் யாரும் பேசலாம்!’’

டீன் ஏஜ் பொண்ணுங்களே! - ராதா - 2013

‘டீன் ஏஜ்ல என்னென்னவெல்லாம் நான் இழந்தேனோ... அது எதையும் கார்த்திகா, துளசி ரெண்டு பேருமே மிஸ் பண்ணக் கூடாதுங்கறதுல ரொம்பத் தெளிவா இருக் கேன். சினிமா புகழ்ல சிக்கி மத்த எதையும் அவங்க இழந்துடக் கூடாது... யதார்த்த வாழ்க்கையோட நிதர்சனம் புரியணும்னுதான், எல்லா இடங்களுக்கும் தவறாம அழைச்சுட்டு போறேன்.

அவள் கிளாஸிக்ஸ்

முன்னயெல்லாம் பெரும்பாலான அம்மாக்கள் பொண்ணுங்கள தூரத்துல வெச்சுதான் பார்ப்பாங்க. அந்தச் சூழல் இப்போ மாறிட்டிருக்கு. அம்மா மட்டுமல்ல, அப்பாவும் பொண்ணுங்கள ஃப்ரெண்ட்ஸ் மாதிரி நடத்துறது அதிகரிச்சுட்டு வருது. ஓப்பனா பழகுற அப்பா, அம்மாகிட்ட டீன் ஏஜ் பொண்ணுங்களும் மனம்விட்டு பேசறாங்க...

டீன் ஏஜ் பொண்ணுங்களே... 16 வயசுலயே காலம்பூராவும் இருப்போம்னு கனவு காணா தீங்க. கண்மூடி திறக்கறதுக்குள்ளே... அஞ்சு வருஷம் காணாமப் போயிடும். மனைவி, அம்மா, பாட்டினு ஏகப்பட்ட பருவங்கள் இருக்குங்கறத எப்பவும் மனசுக்குள்ள நினைச்சுட்டே இருக்கணும்.
டீன் வயசுல கரெக்ட்டா இருக்கற பொண்ணுங்க பிற்காலத்துல கணவனுக்கு நல்ல மனைவியா, மகளுக்கு நல்ல அம்மாவா, பேத்திக்கு நல்ல பாட்டியா இருப்பாங்க!’’

கண்மணி அன்போடு...  - கெளதமி - 2014

``நடிகைனா, அவங்க வேற ஏதோ ஒரு லோகத்தில் இருக்கறது போல ஒரு பிரமை வந்துடுது இங்கே! நிஜம் அப்படியில்லை. எல்லாருக்கும் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள் எனக்கும் உண்டு. எல்லாரும் அனுபவிக்கிற சுக துக்கங்களை நானும் அனுபவிக்கிறேன். ஒரு விலைவாசி உயர்வோ, மழை, வெள்ளமோ, நல்லது கெட்டதோ... எதுவா இருந்தாலும், அதோட பாதிப்பு எனக்கும் இருக்கு!

அவள் கிளாஸிக்ஸ்

ன் வாழ்க்கையில் சவால்களைச் சந்திக்கும்போதும், மிகப்பெரிய வெற்றிகளைத் தலைக்குக் கொண்டுபோயிடாம கையாளும்போதும், எனக்கு உத்வேகமும் ஊக்கமும் ஆறுதலும் கிடைச்சுது, என்னைச் சுற்றி இருந்த பலரின் கதைகள்ல இருந்துதான்!

‘எப்படி இவ்வளவு ஓப்பனா உன்னோட கேன்சர் பத்திப் பேசறே?’னு பலரும் கேட்பாங்க. இதில் கூச்சப்படுறதுக்கோ, மறைக்கிறதுக்கோ என்ன இருக்கு? எனக்கு முன்ன ரொம்பத் துணிச்சலோட அவங்க அனுபவங்களைப் பத்திப் பேசின பலரால, நான் எவ்வளவோ பலன் அடைஞ்சிருக்கேன். அதே வழியில் நானும் என் அனுபவத்தைச் சொல்றப்போ, என்னால சில பேருக்கு தெளிவும் நம்பிக்கையும் கிடைக்குமே! இதன் மூலமா யாராவது ஒருத்தரோட வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டாகூட, அதுவே எனக்குப் போதும்!’’

யாருக்காச்சும் உதவணும்! - ஹன்சிகா - 2015

‘‘எல்லோரும் நினைக்கிற மாதிரி ஹீரோயினா இருக்கிறது சொகுசானது இல்லை. அதுவும் ஒரு வேலைதான். தூங்க, சாப்பிடக்கூட நேரமில்லாம ஃப்ளைட்ல பறக்க வேண்டியிருக்கும்.

அவள் கிளாஸிக்ஸ்

றக்க முடியாதது, ஒரு தெலுங்குப் படத்துக்கு தொடர்ந்து மூணு நாட்கள் நடந்த ஷூட்டிங்... அந்த ஏரியாவில் ஹோட்டல்கள் எதுவும் இல்ல; ரெஸ்ட் எடுக்க கேரவனும் கிடையாது. கார்லயே கொஞ்சம் ரெஸ்ட், மறுபடியும் ஷூட்டிங்னு துளிகூட தூக்கமில்லாம ஓடினதில், மூணாவது நாள் ஷூட்டிங் முடிச்சப்போ என்னால எழுந்து நடக்கக்கூட முடியல. காய்ச்சல் வந்து, உடம்பு நெருப்பா கொதிச்சது. அப்பவும், ‘ஏண்டா இந்த சினிமாவுக்கு வந்தோம்’னு நினைக்கல. சினிமா கொடுக்கும் பணமும், ஹைடெக் வாழ்க்கையும், புகழும் சந்தோஷமா இருக்கும்போது, அது தர்ற கஷ்டத்தையும் பொறுத்துக்கத்தானே வேணும்!

எனக்கு ஆறு வயசு இருக்கும் போது, என் வயதுள்ள ரெண்டு குழந்தை களைத் தத்தெடுத்து,வேண்டிய உதவிகளைச் செய்தாங்க எங்கம்மா. நான் பார்ன் வித் சில்வர் ஸ்பூன் டைப் இல்லைன்னாலும், கஷ்டம் தெரியாமதான் வளர்ந் தேன். இருந்தாலும், நானும் எதிர் காலத்தில் இப்படி யாருக்காச்சும் உதவணும்னு தோணும். இப்போ 30 குழந்தைகளைத் தத்தெடுத்து ஒரு இல்லத்துல வளர்க்கிறேன். இது ஏதோ விளம்பரத்துக்குச் செய்றதில்ல.

சினிமாவுக்குத்தான் மேக்கப் எல்லாம், என் மனசுக்கு பவுடர் தேவையில்லை. ஏன்னா, இயல்பி லேயே எனக்கு அழகான மனசு!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism