Published:Updated:

மனுஷி - புதிய தொடர்

மனுஷி - புதிய தொடர்
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - புதிய தொடர்

சுபா கண்ணன், ஓவியம் : மணியம் செல்வன்

மனுஷி - புதிய தொடர்

சுபா கண்ணன், ஓவியம் : மணியம் செல்வன்

Published:Updated:
மனுஷி - புதிய தொடர்
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - புதிய தொடர்
மனுஷி - புதிய தொடர்

மங்கைய ராகப் பிறப்பதற்கே – நல்ல
    மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப்
    பாரில் அறங்கள் வளரும், அம்மா!

- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

மீபத்தில், பிரசவத்துக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த என் தோழியைப் பார்த்து வரப் போயிருந்தேன். சுகப்பிரசவத்தில் லட்டு மாதிரி இரட்டைக் குழந்தைகள். ஒன்று ஆண்; மற்றது பெண். இரு குழந்தைகளும் அவளின் கட்டிலுக்கு இரு பக்கத்திலும் ஆளுக்கொரு தொட்டிலில் ரோஜாப் பூக்குவியல் போல் ஹாயாகப் படுத்திருந்தன.

முகத்தில் தாய்மை விகசிக்க, களைப்புடன் படுத்திருந்தாள் என் தோழி. என்னைக் கண்டதும், வறண்டிருந்த உதடுகளால் பலவீனமாகச் சிரித்த அவளின் கரம் பற்றி மெலிதாகக் குலுக்கி, வாழ்த்து சொன்னேன். “பிறக்கப் போறது பையனா, பொண்ணானு நீயும் உன் ஹஸ்பெண்டும் பெட் கட்டியிருப்பீங் கதானே? யாரு ஜெயிச்சது?” என்று அவள் வாயைப் பிடுங்கினேன். “பந்தயம்தான் டிராவில் முடிஞ் சுடுச்சே!” என்று ஒரு வெட்கப் புன்னகையை உதிர்த்தார், அருகில் நின்றிருந்த அவளின் கணவர்.

இரட்டைக் குழந்தைகள் என்றாலும், ஆண் குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகே பெண் குழந்தை பிறந்ததாகச் சொன்னார் அவர். ஆயினும், பெண் குழந்தை கருந்திராட்சை போன்ற கண்களைக் கொட்டக்கொட்ட விழித்து அனை வரையும் பார்த்துக் கொண்டிருக்க, ஆண் குழந்தை கூசும் வெளிச்சத்தில் கண்களைத் திறக்க முடியாமல் அழுதுகொண்டே இருந்தது. இது அங்கிருந்த அனை வரையுமே வியப்பில் ஆழ்த்தியது.

உண்மையில், இதில் வியக்க ஒன்றுமில்லை. தகவமைத்துக்கொள்ளல், அதாவது சூழ்நிலைக் கேற்பத் தன்னைப் பொருத்திக் கொள்ளுதல்- தன்னைத் தகுதியாக்கிக்கொள்ளுதல் என்னும் குணம் அனைத்து ஜீவராசி களிலும் பெண் இனத்திலேயே அதிகமாகக் காணப்படுகிறது.

பிறந்ததும் கண் விழித்துப் பார்ப்பது, குப்புறக் கவிழ்வது, தரையில் நீந்துவது, தவழ்வது, பேசுவது, உட்காருவது, நடப்பது எல்லாம் பெரும்பாலும் ஆண் குழந்தையை விட பெண் குழந்தைக்கே சீக்கிரம் வசமாகும். ஆண் குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் சின்னச் சின்ன நோய்கள் பெண் குழந்தைகளை அதிகம் தாக்குவதில்லை.

பிரசவம் என்பது பெண்களுக்கு மறுஜென்மம்! ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் அதன் தாயும் மீண்டும் பிறப்பெடுக்கிறாள்.

பிரசவத்தின்போது அவளின் கணவனை உடன் இருக்கச் சொல் வார்களாம் வெளிநாடுகளில். “இங்கு ஏன் அப்படி இல்லை?” என மகப்பேறு மருத்துவரிடம் கேட்டதற்கு, “நம்முடைய ஆண்களுக்குப் பிரசவத்தை நேரில் காணும் துணிவு இருப்பதில்லை. அந்த நேரத்தில் பதற்றமாகி, மயக்கம் போட்டுக் கீழே விழுந்த கேஸ்களும் உண்டு. பொது வாக, பிரசவ நேரத்தில் கணவனும் அருகில் இருப்பது நல்லதுதான். மனைவிக்கு ஒருவிதமான ஆத்ம பலத்தை அது தரும் என்பதோடு, மனைவியின் உச்சபட்ச வலியையும் வேதனையையும் கணவன் கண்கூடா
கப் பார்ப்பதால், அவள் மீது அவ னுக்கு முன்பைவிட அன்பும் அனுசரணையும் இறுக்கமான பிடிப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு!” என்றார்.

ஆதிகாலத்தில், வேட்டையாடி உணவைக் கொண்டுவருவது ஆணின் வேலையாக இருந்தது. அதனைச் சேமிப்பது, பத்திரப்படுத்துவது, பதப்படுத்துவது, பகிர்ந்தளிப்பது, வம்சத்தை விருத்தி செய்வது யாவும் பெண்ணின் வேலைகளாக இருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனுஷி - புதிய தொடர்

இத்தனைக்கும் மத்தியில் தன் பிள்ளைகளைக் காப்பாற்றும் பொருட்டோ, அடுத்த ஆணிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவோ, ஏன்… ஒரு கூட்டத்தை வழிநடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டாலும்கூட போர் புரியவும் தெரிந்து வைத்திருந்தாள் பெண். அதனால்தானோ என்னவோ, இயற்கையும்கூட மெல்லிய, ஆனால் உறுதியான உடலமைப்பைப் பெண் களுக்கு வழங்கியிருக்கிறது.

இன்றைய நவீன யுகத்திலும், பெண் குழந்தைக்குத் தலைபின்னியபடி, அடுக்களை குக்கரின் விசிலையும் எண்ணிக்கொண்டு, பையனுக்கு கர்ஸிவ் ரைட்டிங்கோ, கணக்கோ சொல்லி எழுதவைத்து, துண்டு எடுத்துக்கொள்ளாமல் குளிக்கச் சென்றுவிட்ட கணவனுக்கு டவல் எடுத்துக் கொடுத்து, பாத்திரம் தேய்க்கும் அம்மாளுக்கு உத்தரவுகள் பிறப்பித்து, மாமியாருக்குத் தேவையான கஞ்சி ரெடி செய்து கொடுத்து, தானும் ஒரு வாய் அள்ளிப் போட்டுக்கொண்டு, பரபரவென உடுத்திக்கொண்டு, அலுவலகம் கிளம்பி… தினம் தினம் இப்படி மல்ட்டி டாஸ்க்கிங் ஸ்கில்ஸோடு எத்தனை எத்தனை பெண்கள் அஷ்டாவதானிகளாக மாறி, பம்பரமாகச் சுழல்வதைப் பார்க்கிறோம்! இதெல்லாம் ஒரே நாளில் வந்துவிடுமா என்ன?

ஆனாலும், ஆண்களின் உடற்கூறைவிடச் சிக்கலான உடற்கூறு கொண்டவள் பெண். குழந்தைப் பருவத்தில்தான் கிட்டத்தட்ட இருவரின் உடலமைப்பும் ஒன்று போல் உள்ளது. பெண் குழந்தை வளர வளர, அதனிடத்தில் வேகமான மாற்றங்கள் நிகழ்கின்றன. சிறுமி, பூப்படைந்த மங்கை, திருமண வயதில் கன்னி, திருமணமான இளம்பெண், கர்ப்பிணி, பாலூட்டும் தாய், மெனோபாஸ் வயதான பெண்மணி… இப் படிப் பல நுண்ணிய, உளவியலாக நிறைய ‘மூட் ஸ்விங்ஸ்’ ஏற்படுத்தும் மாற்றங்களை உள்ளடக்கியதே பெண்களின் வாழ்க்கை.

தன் உடல் சார்ந்த புதிர்கள், குழப்பங்கள் மற்றும் வலிகளுடனேதான் பெண்ணானவள் குடும்ப மற்றும் சமூக உறவுகளை மேம்படுத்துகிறாள்.

சாதாரண விஷயத்துக்கெல்லாம் டென் ஷன் ஆவது ஆண்களின் சுபாவம். அதே நேரம், இயல்பிலேயே உடலில், மனதளவில் ஏற்படும் மாற்றங்களைக்கூட ஜஸ்ட் லைக் தட் கடந்து செல்லும் தைரியம் கொண்டவளாக இருக்கிறாள் பெண். இந்தத் தைரியம் அவளுக்கு எங்கிருந்து கிடைக்கிறது?

புராண மாந்தர்கள், மேதைகள், பெரியவர்கள், இளைஞர்கள், கவிஞர்கள் என அனைவருமே பெண்களைப் போற்றுகிறார்கள். குழந்தைகள்கூட பெண்களிடம்தான் சட்டென்று ஒட்டிக் கொள்கின்றன. அன்பான தாயாக, பாசமுள்ள தமக்கையாக, குறும்புக்காரத் தங்கையாக, தலையில் குட்டும் தோழியாக, வழிநடத்தும் ஆசிரியையாக… இன்னும் பலப்பல குணச்சித்திரங்களிலும் தன் ஆளுமையைத் திறம்படப் பதிக்கும் பெண் தன்னை எப்படி உணர்கிறாள்?

தெரிந்துகொள்வது வேறு; உணர்வது வேறு. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

பெண் என்பவள் போற்றப்பட வேண்டியவள். தெரியும். ஆனால், பெண்களிலேயே இதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்? பெண் என்பவள் பராசக்தியின் அம்சம். ஆமாம். தெரியுமே! சரி, அது யார்? யாரோ! அம்மாவோ, அத்தையோ, பாட்டியோ அல்லது என் மனம் கவர்ந்த யாரோ ஒரு ரோல் மாடல். யாரோ ஒரு எக்ஸ். ஆனால், அது நானல்ல!

பெண்களின் சிறப்பை வெளிச்சமிட்டுக் காட்டவும், அவர்களிடம் நிரம்பியிருக்கும் தெய்விகத் தன்மையைப் பலருக்கும் உணர்த்தவும் நமது சமுதாயம் நேரடியாகவும் மறைமுகமாகவும் எத்தனை  எத்தனை முறை பரீட்சை வைக்கிறது! ஒவ்வொன்றையும் அநாயாசமாக எதிர்கொண்டு, வெற்றிகர மாகப் பதக்கம் வாங்கிய பிறகும்… அது நானல்ல; யாரோ! 

“இன்று நீ வைத்திருக்கும் வெங்காய சாம்பார் ஏ கிளாஸ்!” என்று கணவன் பாராட்டி னால், “தேங்க்ஸ்” என்று அதை வரவேற்கும், அங்கீகரிக்கும் பெண்கள் எத்தனை பேர்? எனக்குத் தெரிந்த வரையில் நூற்றுக்குத் தொண்ணூறு பெண்கள் உடனே அதற்கு, “வழக்கமான பருப்புதான், புளிதானே போட்டேன். என்னவோ இன்னிக்கு ஒரு படி தூக்கலா அமைஞ்சுடுச்சாக்கும்!” என்றுதான் ரியாக்ட் செய்கிறார்கள். தனக்கான பாராட்டைக்கூட முழு மனதோடு ஏற்கத் தெரியவில்லை அவர்களுக்கு.

அனுமனுக்குத் தன் பலம் தெரியாது என்பது போல, பெண்களில் பலருக்குத் தனது தகுதிகள் தெரிந்திருக்கவில்லை என்பதே நிஜம். ‘ஃபீல் இட் அண்ட் பிலீவ் இட்’ என்பார்கள். அதுபோல, தன்னைப் பற்றித் தான் அறிவதும், அறிந்தவற்றை உணர்வதும், உணர்ந்து நம்புவதும் நல்லதொரு மனநிறைவைக் கொடுக்கும்.

அதை நோக்கிய பயணமே இது!

(இன்னும் உணர்வோம்)

மனுஷி - புதிய தொடர்

ஆளுமைக் கோளாறு

சி
லர் எப்போதும் தங்களைப் பற்றியே பேசிக்கொண்டு இருப்பார்கள். தங்கள் நலனைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருப்பார்கள். மற்றவர்களின் இருப்பைப் பற்றியோ, நிலையைப் பற்றியோ சற்றும் கவலைப்பட மாட்டார்கள். தற்புகழ்ச்சி, தன்னலம், மற்றவர்கள் மீது அதீதமான அதிகாரம் செலுத்துவது, மற்றவர்களை எள்ளிநகையாடுவது, மட்டமாக நினைப்பது, அவமானப்படுத்துவது, உதாசீனப்படுத்துவது, மற்றவர்களுக்கு முறையான அங்கீகாரம் தராமல் எங்கும் எப்போதும் தன்னை மையப்படுத்தியே பேசுவது, தன் செயல் தவறாக இருந்தாலும், அதை எல்லோரும் அங்கீகரிக்க வேண்டும் என்று எண்ணுவது போன்ற குணநலன்கள் இவர்களுக்கு இருக்கும். இதனால் மற்றவர்களுடன் அனுசரித்துப் போகவோ, இணைந்து செயலாற்றவோ இவர்களால் முடியாது. இப்படியானவர்களை ‘நார்சிஸ்டிக் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்’ எனும் ஆளுமைக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் என்று வர்ணிக்கிறது மருத்துவ உலகம். பெரும்பாலும் ஆண்கள்தான் இந்த உளச்சிக்கலால் பாதிக்கப்படுகிறார்கள். உலக அளவில் இந்தப் பிரச்னை உள்ளவர்கள் 1 சதவிகிதம் பேர் என்றால், அப்படி பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவிகிதம் பேர் ஆண்கள் என்கிறது ஓர் ஆய்வு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism