Published:Updated:

ஐப்பசி குளிரும் விளக்கெண்ணெய் தோசையும்!

ஐப்பசி குளிரும் விளக்கெண்ணெய் தோசையும்!
பிரீமியம் ஸ்டோரி
ஐப்பசி குளிரும் விளக்கெண்ணெய் தோசையும்!

தீபாவளி நினைவுகள்பாரத தேவி, படம்: எம்.சசிக்குமார்

ஐப்பசி குளிரும் விளக்கெண்ணெய் தோசையும்!

தீபாவளி நினைவுகள்பாரத தேவி, படம்: எம்.சசிக்குமார்

Published:Updated:
ஐப்பசி குளிரும் விளக்கெண்ணெய் தோசையும்!
பிரீமியம் ஸ்டோரி
ஐப்பசி குளிரும் விளக்கெண்ணெய் தோசையும்!

தீபாவளி... வண்ண வண்ண மத்தாப்புகளும், வயிற்றை நிறைக்கும் பலகாரங்களுமாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நீங்காத நினைவுகளைத் தந்து செல்லும் ஒரு பண்டிகை. 20 வருடங்களுக்கு முன் தான் கொண்டாடிய தீபாவளி பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர் பாரததேவி.

ஐப்பசி குளிரும் விளக்கெண்ணெய் தோசையும்!

“நான் பிறந்து, வளர்ந்ததெல்லாம் ஒரு சின்ன கிராமம். ஒருபக்கம் கூரை வீடுகள், இன்னொரு பக்கம் தகரம் வேய்ந்த வீடுகள். எங்களுக்கெல்லாம் ஒரு வாரத்துக்கு முன்பாகவே தீபாவளி வந்துவிடும். குழந்தைகள் என்பதால் ண்டாட்டத்துக்கும் குறைவிருக் காது. என்றாலும், இன்றைய மகிழ்ச்சிக் கும், அன்றைய குதூகலத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

`அரிசிச்சோறு’ என்பதே எங்களுக் கெல்லாம் அப்போது அரிய பொக்கிஷம். தீபாவளி, பொங்கல் போன்ற திருநாள் தினங்களில் மட்டும்தான் நெல்லுச் சோற்றைக் கண்ணால் பார்க்க முடியும். மற்ற நாட்களில் எல்லாம் கம்மஞ்சோறும் சோளச்சோறும்தான் உணவு. கூடவே வெஞ்சணமாக, வெங்காயம். தினமும் இதையே சாப்பிட்டு வளரும் குழந்தைகளுக்கு தீபாவளி அன்றுதான் தோசை, சாதம், கறிக்குழம்பு... கூடவே பணியாரம், எள்ளுருண்டை என்று எல்லாம் கிடைக்கும். அதனாலேயே நாங்கள் தீபாவளி எப்போதடா வருமென்று நாட்களை எண்ணிக்கொண்டே இருப்போம். இன்னொருபக்கம் வருடத்துக்கொரு முறை கிடைக்கும் துணிகளுக்காகவே தீபாவளி எங்களுக்கு மேலும் அழகாகும்.

கூலிவேலை, காட்டு வேலை, உழவு வேலைக்காக தினசரி வெளியில் சென்றுவிடும் பெற்றோர், குடும்பத்தினர் என எல்லோரும் அன்று மட்டுமே வீட்டில் ஒன்றாக இருப் பார்கள். அதுவே குழந்தைகளுக்கு பெரு மகிழ்ச்சியாக இருக்கும். தீபாவளிக்கு முதல் நாள் வீட்டுப் பெண்கள் எல்லோரும் சேர்ந்து கம்பு, சோளம், நெல் ஆகியவற்றை உரலில் குத்தி, ஊறப்போட்டுவிடுவார்கள். பின்னர், அவற்றை ஆட்டுக்கல்லில் அரைத்து தோசைக்கும் பணியாரத்துக்கும் மாவாக்குவார்கள். அப்போதெல்லாம் இட்லி என்பதே பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. தோலில்லாத வெள்ளை உளுந்து புழக்கம் கிராமப்பகுதிகளில் கிடையாது.

அடுத்ததாக வீடு சுத்தப்படுத்துதல். இன்றைக்கு போல டி.வி, மிக்ஸி, கிரைண்டர் என்று இடத்தை அடைக்கும் பொருட்கள் இல்லாததால் அது எளிதான காரியமாகத்தான் இருந்தது. ஓலைப்பெட்டிகளும் மண்கலயங்களும்தான் வீடுகளில் அதிகமாக புழக்கத்தில் இருக்கும். கூடவே நல்ல நாட்களுக்கு உபயோகிக்கும் பித்தளைப் பாத்திரங்கள். அவற்றை புளி, செங்கல் பொடி போட்டு தேய்த்து, பசுஞ்சாணியால் வீடு மெழுகி, சுண்ணாம்புக் கப்பியால் (சுண்ணாம்பு மிச்சம்) கோலமிடுவார்கள். பாத்திரங் களெல்லாம் சுத்தப்படுத்தப்பட்டு, வீடும் மெழுகப்பட்டு அவ்வளவு லட்சுமிகரமாக இருக்கும். தீபாவளி விருந்துக்கென்று நிறைய வீடுகளில் கோழி வளர்ப்பார்கள். முதல்நாளே பலர் ஞாபகமாக கோழிகளை கூடையில் அடைத்துவிட்டாலும், சிலர் மறந்து திறந்துவிட்டு விடுவார் கள். அந்தக் கோழிகளைப் பிடிக்க சிறுவர்கள் ஓடும் ஓட்டமே கொண்டாட்டமாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐப்பசி குளிரும் விளக்கெண்ணெய் தோசையும்!தீபாவளியன்று விடியற்காலை மூன்று மணிக்கே, சேவல் கூவும் சத்தத்துடன் ஆரம்பிக்கும் எங்கள் திருவிழா. வீட்டுக்கு வெளியே மண் அடுப்பில், தோசை சுடும் ஓசை காதுகளில் மெல்லிசையாக நுழையும். அப்போதெல்லாம் விளக்கெண்ணெய் தோசைதான். ஐப்பசி மாத குளிருக்கும், அடுப்பின் கதகதப்புக்கும், தோசை ருசிக்கும் குழந்தைகளின் மகிழ்ச்சி சொல்லி மாளாது. ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு படி, மூன்று படி அரிசி வடித்து, பெரிய பானைகளில் குழம்பு வைப்பார்கள். குழம்புக்காக உரலில் இடிக்கும் மசாலா வாசம் மேகாற்றோடு சேர்ந்து ஊரைச் சுற்றும். சாப்பாடு செய்து முடித்தவுடன் பெரிய அம்மியை ஒட்டிக் கிடக்கும் சிறிய அம்மிகளில் குளிப்பதற்காக அரைக்கும் மஞ்சள் வாசனை, மசால் வாசனையோடு போட்டி போடும். உடல்நலம் சரியில்லாதவர்கள், குழந்தை பெற்ற பெண்கள் தவிர்த்து மற்ற எல்லோருக்கும் குளியல் குளத்திலும் கிணற்றிலும்தான். எண்ணெயை உடல் முழுவதும் குளிரக் குளிர தேய்த்துக் கொண்டு கொட்டாங்குச்சியில் கரம்பை மண்ணும் மஞ்சளுமாகத் தேய்த்து குளித்து விட்டு வருவார்கள். கோழிக்கறி குழம்பு சொந்த பந்தங்களுக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் பகிரப்படும். குழந்தைகள் வயிறு நிறைய  சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

சாப்பிட்டுவிட்டு எல்லோரும் ஊரின் பொதுவான களத்துக்குப் போய்விடுவார்கள். இளவட்டங்கள் சடுகுடு, கயிறு இழுக்கும் போட்டி நடத்த, இளம்பெண்கள் கயிறு தாண்டுவது, எட்டாம் தட்டு விளையாடுவது என்று குதூகலிப்பார்கள். நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தட்டாங்கல், பல்லாங்குழி ஆடுவார்கள். ஆண்கள் ஆடு புலி ஆட்டம், பாம்பு கட்டம் ஆடுவார்கள். வயதானவர்கள் இந்த விளையாட்டுகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். எல்லோரிடமும் கறி சாப்பிட்டதற்கான வெற்றிலை வாசம் தவழ்ந்துகொண்டிருக்கும்.

அப்போதெல்லாம் தீக்குச்சி மத்தாப்பு, சூரிய மத்தாப்பு, பொட்டு வெடிகள் மட்டும்தான் குழந்தைகளுக்கான வெடி. துப்பாக்கி இல்லையென்பதால் பொட்டுவெடியைக் கல்லை வைத்து தட்டித்தான் சிறுவர்கள் வெடிப்பார்கள்.

பெண்கள் எல்லாம் அப்போது வெடி வெடிப்பதில்லை. இளவட்டங்கள் ஓலை வெடி, சிறிதாக இருக்கும் சீனவெடி என்று வெடிப்பார்கள். அதையும் அவர்கள் ஊருக்குள் வெடிப்பதில்லை. ஏனென்றால், வைக்கோல் படப்பும், கூரை வீடுகளுமாக இருப்பதால் ஊருக்கு வெளியேதான் வெடிப்பார்கள்.

மொத்தத்தில் ஊரில் உள்ளவர்களோடு அன்று ஒருநாள் சிரித்து மகிழ்ந்து நினைவுகளை மனதில் தேக்கிவைத்து, மனதும் வயிறும் நிறையும் ஒருநாளாகவே இன்றும் எங்கள் மனதில் நிறைந்திருக்கிறது தீபாவளி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism