லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

கல்யாணத்துக்குப் பிறகு வருகிற வாழ்க்கை காதலைவிட உயர்ந்தது!

கல்யாணத்துக்குப் பிறகு வருகிற வாழ்க்கை  காதலைவிட உயர்ந்தது!
பிரீமியம் ஸ்டோரி
News
கல்யாணத்துக்குப் பிறகு வருகிற வாழ்க்கை காதலைவிட உயர்ந்தது!

ஞாபக நதிக்கரையில்...அவள் கிளாஸிக்ஸ் 1998

ந்த அறையில் கம்ப்யூட்டர் கண் சிமிட்டுகிறது. ஒரு ‘ஹலோ’வோடு கடந்து போகிற ரேவதி, தொலைபேசியில் கூப்பிடுகிற ரகுவரன், ‘மணிரத்னம் சார் ஆபீஸுக்குப் போகணும்’ என்பதை நினைவுபடுத்துகிற உதவியாளர்கள் என்று பரபரப்பாகிறது பாரதிராஜாவின் அலுவலகம்.

கல்யாணத்துக்குப் பிறகு வருகிற வாழ்க்கை  காதலைவிட உயர்ந்தது!

அன்று அங்கே ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷன் நடக்கிறது. பட்டாம்பூச்சிகளாகத் திரிகிற சின்னப் பெண்களும், சில இளைஞர்களும் கோடம்பாக்கத்துக்கு டிக்கெட் கிடைக்குமா என்று காத்திருக்கிறார்கள். உள்ளே... இரண்டு நாள் காய்ச்சலோடு கொஞ்சம் ரசம் சாதம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார் டைரக்டர்.

நேரடியாகவே அந்த முக்கியமான கேள்விக்கு வந்தோம்...

``உங்க படங்களில் எங்கேயாவது ஒரு ஸீன்ல தலை காட்டுவீங்க. ஸ்டேஷன் மாஸ்டரா, புக்‌ஷாப்ல, டெலிபோன் பூத்லனு ஒரு ஓரமா நின்னுட்டு போவீங்க. ‘கல்லுக்குள் ஈரம்’ல மட்டும் ஒரு டைரக்டராவே நடிச்சீங்க. அது உங்க நடிப்பு ஆசைக்கு நீங்களே போட்டுக்கிட்ட தீனியா?”


“நல்லவேளை... இப்பயாவது கேட்டீங்க. என் படங்கள்ல சின்னச் சின்ன கேரக்டர்ஸ்லகூட பெரும்பாலும் என் அசிஸ்டன்ட்ஸதான் நடிக்க வைப்பேன். அங்கங்கே தலைகாட்டுறது சும்மா ஒரு ஜாலிக்காக. ஆனா, ‘கல்லுக்குள் ஈரம்’ கதையே வேற. என்னை ரொம்ப வற்புறுத்தி அப்படி நடிக்க வெச்சது கேமராமேன் நிவாஸ். அதுக்காக அவனோட நான் சண்டை போடாத நாளே கிடையாது. `என்னைத் திட்டம் போட்டுக் கவுத்திட்டீங்க’ன்னு திட்டிட்டிருப்பேன். மேக்கப் போடறேன்னு முகம் பூரா பவுடர் போட்டுவிட்டுருவாங்க. நான் வெறுத்துப்போய் ரெண்டு மணி நேரம் ஷூட்டிங்கை நிறுத்திப்புட்டு போய்ருவேன். அது பழைய கதை. ஆனா, நடிக்கணும்னு ஒரு ஆசை உண்டுதான்!”

`` `அலைகள் ஓய்வதில்லை’ பார்த்து சிரிக்கிறேன். ‘அந்திமந்தாரை’ நினைத்து சிலிர்க்கிறேன்’னு ஒரு முறை சொன்னீங்க. அதுக்கு என்ன அர்த்தம்..?”


“காதல் அழிக்க முடியாது. அசைக்க முடியாது. எரிக்க முடியாது. அது காலகாலமாக வாழும் சக்தி. ‘கைக்கு கிட்டாத வரையில் அது காவியம்’னு கொண்டாடும் போதைதான் `அலைகள் ஓய்வதில்லை'.

அலைகளைக் கடந்து நான் கரையேறியபோது கிடைத்ததுதான் அந்திமந்தாரை. காதல் என்பது ஆசைப்படுவது. அதில் சுயநலம்தான் அதிகம். நேசம் என்பது பகிர்ந்துகொள்வது என்பதை உணர்ந்த பிறகு வந்த தெளிவு இது.

காதல், வயசோடும் மனசோடும் சேர்ந்த விஷயம். இரண்டு தண்டவாளங்களாக அது ஓடும்போது இனிக்கும். என்றாவது ஒரு ஆள் அது இணையும்போது ‘டொக்’னு ரயில் கவிழ்ந்துவிடும். காதலின் இறுதிச் சடங்குதான் கல்யாணம். Yes, Marriage is the death day of Loveனு நான் சொல்வேன். கல்யாணத்துக்குப் பிறகு வருகிற வாழ்க்கை காதலைவிட உயர்ந்தது.

கல்யாணத்துக்குப் பிறகு வருகிற வாழ்க்கை  காதலைவிட உயர்ந்தது!``இருபத்தஞ்சு வருஷம் கிராமத்துல இருந்தீங்க. அதுக்கப்புறம் சென்னைக்கு வந்தாச்சே... இப்போ சொல்லுங்க... இன்னும் நீங்க கிராமத்து ஆளா..?”


‘`அல்லிநகரத்தான்தான். அதுல எந்த மாற்றமும் வரலை. ஒரு மரத்தை லேசா வளைச்சு மறுபடியும் பதியம் போட்டு விட்ட மாதிரிதான் இப்பவும் எனக்கு சென்னை வாழ்க்கை. புது மண்ணோட ஈரமும் உரமும் சேர்த்து சில புதுப்பூக்களைக் கொடுத்திருக்கலாம். ஆனா, என் வேர்கள் அதே அல்லிநகரத்துலதான் இருக்கு. எப்ப நினைச்சாலும் உடனே போக ஒரு ஒத்தையடிப் பாதையை இன்னும் மனசுக்குள்ள பத்திரமா வெச்சிருக்கேன்.”

“மகன், கணவன், தந்தை - உங்களுக்குப் பிடிச்ச ரோல் எது..?”


“மகன்தான். இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவா இருக்கிற பாரதிராஜாவைவிட கருத்தம்மாவுக்கு மகனா இருக்கிற பால்பாண்டியன்தான் பெரிய ஆள். அவன் நல்லவன். யாருக்காகவும் தன் வாழ்க்கையை சுருக்கிக்கொள்ளத் தெரியாது அவனுக்கு.
நிஜமாவே எந்த ஒரு மனுஷனுக்கும் பிடிச்சது அவனோட பிள்ளைப் பிராயமாத்தான் இருக்கும். மனைவி வந்து நாம தேடுறது. குழந்தைகள் நமது விருப்பம். ஆனா, ஒவ்வொரு மனுஷனுக்குள்ளேயும் ஒரு குழந்தை அவன் சாகறவைக்கும் தாய்ப்பாசத்துக்கு ஏங்கி உட்கார்ந்துகிட்டு இருக்கும். என் ஆத்தாதான் எனக்கு முதலும் முடிவுமானவள். ‘அ’வன்னாவும் அவதான்... ‘ஃ’க்கன்னாவும் அவதான். இதோ எனக்கு ரெண்டு நாளா காய்ச்சல். ‘வேலைக்குப் போகாதே... இங்கியே இர்ரா’னு பக்கத்துல உட்கார்ந்திருக்கு. எனக்கு என் அம்மா பெரிசு. என் புள்ளைக்கு அவன் அம்மா பெரிசு.”

“நீங்க சுயசரிதை எழுதிட்டிருக்கீங்கன்னு கேள்விப்பட்டோம்...”

‘`எங்கியோ ஒரு கிராமத்துல சிக்குத் தலையோட திரிஞ்ச ஒருத்தனோட வாழ்க்கை இது. அவனோட வறுமை, அவனுக்குள் இருந்த ஆசைகள், அவன் பட்ட அவமானங்கள், அவன் ஓடிவந்த பாதை, அந்தக் கோபம், தாபம்னு எல்லாம் எழுதணும்னு ஒரு எண்ணம் உண்டு. ஆனா, எழுத ஆரம்பிக்கலை. வாழ்க்கை வரலாறுனு தம்பட்டமடிக்கறதுக்காக அதைச் செய்யப்போறதில்லை. உங்ககிட்டே மனசுவிட்டுப் பேசுறதுக்கு சில விஷயங்கள் என்கிட்டேயும் இருக்கு. அதைச் சொல்ல நினைக்கிறேன். ஞாபக நதிக்கரையில் நின்னு ஒரு ஆத்மா பேசுற கதையா அது இருக்கணும்னு விரும்பறேன்.

‘`சரி, மெய்யாச் சொல்லுங்க... உங்க வயசு என்ன சார்..?”


“ம்... உங்ககிட்டே மட்டும் ரகசியமா சொல்றேன். சரியா சொல்லணும்னா எனக்கு என் மகன் மனோஜைவிட வேகமான, துடிப்பான வயசு...”

(‘அட போங்கப்பா’ என்பது மாதிரி கொஞ்சம் வெட்கத்தோடு மனம் விட்டுச் சிரிக்க ஆரம்பிக்கிறார்!)