லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

சொன்னா கேட்டுக்கணும்!

சொன்னா கேட்டுக்கணும்!
பிரீமியம் ஸ்டோரி
News
சொன்னா கேட்டுக்கணும்!

கணவன் - மனைவிஅவள் கிளாஸிக்ஸ் 1998

‘போர்க்களத்திலும் காதலிலும் எதுவானாலும் தர்மம்தான்’ என்பார்கள். கணவன் - மனைவி உறவிலும் அப்படித் தான்! புரிந்துகொள்ள மறுக்கும் கணவனை வழிக்குக் கொண்டுவர, விதம்விதமான தந்திரங்களைக் கையாள்வதில் தப்பே இல்லை!

சொன்னா கேட்டுக்கணும்!

*குடும்பத்தின் கஷ்டங்கள், சமாளிக்க வேண்டிய பிரச்னைகள் பற்றிச் சொல்லும் போதுதான் கணவர்கள் பெரும்பாலும் நழுவி ஓடுகிறார்கள். தொடர்ந்து குறைகளையே அடுக்கும் போது, இந்த நழுவலும் ஒரு வழக்கமான நடைமுறை ஆகிவிடுகிறது. எனவே, ‘டெக்னிக்’கை மாற்றுங்கள். கணவரின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதை நிறுத்தி, அவரது ப்ளஸ் பாயின்ட்டுகளை ஊன்றிக் கவனித்து வாய்விட்டுப் பாராட்டுங்கள். தன்னைப் பற்றிய புகழ் வார்த்தைகளுக்கு காது கொடுப்பதுதான் மனித இயல்பு. அப்போது கசப்பு மருந்தில் தேன் கலந்து தருவது போல குறைகளையும் எடுத்துச் சொல்ல ஆரம்பியுங்கள். அதற்குள் கணவர் உங்களுக்குக் காது கொடுக்கப் பழகியிருப்பார்.

* ‘சம்பளக் கவரை அப்படியே கொண்டு வந்து கொடுப்பதே மனைவிக்கு நாம் காட்டுகிற மிகப்பெரிய கருணை’ என்று நினைக்கும் ஆண்கள் உண்டு. ஆபீஸில் ஒரு ஃபைலில் மேலதிகாரியிடம் ஒரு கையெழுத்து வாங்க ‘டிலே’ ஆனாலே துடித்துவிடும் இவர்களுக்கு, வீட்டில் குழாயில் தண்ணீர் நின்றுபோனால் உண்டாகிற விபரீதங்கள் தெரியாது. தெரிந்துகொள்ளவும் விரும்புவதில்லை. காரணம், எங்கேயோ எப்படியோ அலைந்து சமாளித்து, நாலு பக்கெட் தண்ணீராவது பிடித்து வைத்து விடுகிற மனைவி! இவர்களின் ஏதாவது ஒரு வசதியை ‘கட்’ செய்தால் போதும். சிலர் வழிக்கு வந்துவிடுவார்கள். உதாரணத்துக்குக் காலையில் எழுந்த நிமிஷத்தில் காபி குடிக்காவிட்டால் வேலையே ஓடாது என்பவருக்கு, காபியை ‘கட்’ செய்யுங்கள். ‘என்னாச்சு?’ என்று கேட்கும்போது, ரேஷன் கார்டில் இன்னும் அட்ரஸ் மாறாததால் சர்க்கரை வாங்க முடியாத விஷயத்தைச் சொல்லலாம்.

சொன்னா கேட்டுக்கணும்! *கணவரிடம் பேசும்போது, திறந்த மனதோடு இருங்கள். குறைவாகப் பேசுங்கள். கச்சிதமாக ‘ரியாக்ட்’ செய்யுங்கள். உங்கள் பக்கமே முழு நியாயமும் இருந்தால்கூடப் பொறுமை... பொறுமை... பொறுமையாகப் பேசுங்கள்.

* கணவருடன் நீங்கள் தனித்து இருக்குமாறு குறைந்தபட்சம் வாரம் ஒரு முறையாவது சந்தர்ப்பச் சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். இம்மாதிரி நேரங்களில், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல உங்கள் விஷயங்களைச் சொல்லுங்கள்.


*
'நான் சொல்வதே சரி’ என்ற மனப் போக்குடன் பிரச்னையைக் கொண்டு செல்வதையும் நிறுத்துங்கள். ‘இந்த விஷயத்தில் என் கருத்து இது. மற்றவர்கள் இப்படிச் சொல் கிறார்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறது?’ என்கிற ‘டைப்’பிலேயே ஒவ்வொரு விஷயத் திலும் அணுகுங்கள். இப்போது கணவரின் காதுகள் நன்றாகத் திறக்கும்!

* உடன் வேலை செய்பவரிடமோ, நண்பர்களிடமோ கணவர் இப்படி ஓர் அலட்சியத்தைக் காட்டுவதில்லை. அதற்காக உரிமை இருக்கிறது என்பதற்காக உங்களை அலட்சியப்படுத்திவிட முடியுமா? மற்றவர் களிடம் எப்படியெல்லாம் விட்டுக் கொடுத்து, சொல்வதைக் கேட்டுப் போகிறார் என்பதை கூடுமானவரை நாசுக்காக நினைவுபடுத்துங்கள். அதே அளவு மரியாதையை மனைவியும் எதிர்பார்ப்பதில் தவறில்லை என்பதைக் கணவர் புரிந்துகொண்டால், நீங்கள் சொல்வதைக் கவனத்தோடு கேட்கத் தொடங்குவார்.

சரி... வித்தியாசமான  முறையைக் கையாண்டு உங்கள் கணவரை நீங்கள் வழிக்கு கொண்டு வந்திருக்கலாம். அது என்ன பிரச்னை, எப்படி ‘டீல்’ செய்தீர்கள்? உங்கள் ஃபார்முலா பலருக்கு உதவலாமே! எடுங்கள் பேனா... எழுதுங்கள் ‘நச்’சென! அனுப்புங்கள் நம்ம அட்ரஸ்ஸுக்கு...

கணவன் - மனைவி, c /o அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை - 600 002 email: aval@vikatan.com