லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

இல்லத்தரசிகள் நிகழ்த்திய இனிய மாற்றம்!

இல்லத்தரசிகள் நிகழ்த்திய இனிய மாற்றம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இல்லத்தரசிகள் நிகழ்த்திய இனிய மாற்றம்!

புதுமைபொன்.விமலா

‘ஹலோ... நான் அர்ச்சனா பேசறேன்.’

‘சொல்லுங்க அர்ச்சனா! நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?’

‘நான் ஹவுஸ்வொய்ஃப்தாங்க!’

‘என்னது ஹவுஸ்வொய்ஃபா...ஹோம் மேக்கர்னு சொல்லுங்க!’

இல்லத்தரசிகள் நிகழ்த்திய இனிய மாற்றம்!

- தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இப்படியான உரையாடல்களை அவ்வப்போது கவனித்திருக்கக்கூடும். ஹவுஸ்வொய்ஃப், ஹோம்மேக்கர் என்று என்னதான் பெயர்களில் மாற்றம் தந்தாலும், ‘வீட்ல சும்மா இருக்கிறவங்க’ என்பதுதான் அவர்களுக்கான சமூக அடையாளமாக இருக்கிறது. ஆனால், இல்லத்தரசிகளால் எவ்வளவு அழகான, ஆக்கப்பூர்வ மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என்பதைச் செய்துகாட்டியிருக்கிறார், தீபா சாரதி. சென்னை, வேளச்சேரியில் உள்ள ‘ப்ரக்ரிதி’ அப்பார்ட்மென்டில் வசிக்கும் தீபா, அங்குள்ள பெண்களை ஒருங்கிணைத்து உருவாக்கிய ‘மாம் - கிட்ஸ் கிளப்’, செயல் பாடுகளில் அசத்தி வருகிறது! 

‘`கல்யாணம் முடிஞ்சதும் கணவரோட வேலை காரணமா சிங்கப்பூர்ல இருந்தோம். 2013-ல திரும்பவும் சென்னைக்கு வந்தப்போ, என் ரெண்டு பொண்ணுங்களும் ஸ்கூலுக்குப் போனதும்... யெஸ், அதேதான்... எல்லா இல்லத்தரசிகளுக்கும் ஏற்படுற அந்த வெறுமையை நானும் உணர்ந்தேன். 

இந்த அப்பார்ட்மென்ட்ல 50 குட்டீஸ் இருந்தாங்க.  ஊஞ்சலும் சைக்கிளும் மட்டும்தான் விளையாட்டு. அதை வேடிக்கை பார்க்கிறது மட்டும்தான் அம்மாக்கள் வேலையா இருந்துச்சு. அந்த நேரத்துலதான் அப்பார்ட்மென்ட்டோட கல்ச்சுரல் செக்ரெட்டரி பொறுப்பு எனக்குக் கிடைச்சது. முதல் வேலையா, ‘மோல்டு' (MOLD - Mom Of Little Ducks) என்ற பெயரில் மாம் அண்ட் கிட்ஸ் கிளப் ஆரம்பிச்சேன். குழந்தைகளின் திறமை களை வெளியே கொண்டு வர வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் இருக்கு. நாமளே நம்ம பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காட்டி வேற யாரு ஒதுக்குவாங்க? நாங்க எங்க பிள்ளைகளுக்கான நேரத்தை ஒதுக்கி, அவங்க உலகத்தை அழகாக்க முடிவெடுத்தோம்.
பசங்களுக்குத் தெரு விளையாட்டு, உறி அடிக்கிறது, பம்பரம், கதை சொல்றது, சுதந்திர தினக் கொண்டாட்டம்,  இன்பச் சுற்றுலா, முழு நிலவு ரசிக்கிறது, மொட்டைமாடிக் கூட்டாஞ் சோறு, சிறுதானிய பார்ட்டி, குழந்தைகள் சினிமா, கார்டன் டூர், மரம், செடி அறிதல், பாட்டு டான்ஸுன்னு நிறைய விஷயங்களை கிளப் மூலமா செய்தோம்” என்கிறவர், கிளப்பின் சந்தோஷத் தருணங்களைப் பகிர்ந்தார்.

‘`எங்க அப்பார்ட்மென்ட்ல, பல மொழிகள் பேசுறவங்க இருந்தாலும், எங்களுக்குள்ள எந்த வேற்றுமையும் இருக்காது. ஆரம்பத்துல எல்லாருக்குள்ளயும் ஒரு தயக்கம் இருந்துச்சு. அதெல்லாம் படிப்படியா விலகி, இப்போ எல்லோரும் செம ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். எங்க குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கினது போக மீதம் உள்ள நேரத்துலதான் கிளப் செயல்பாடுகளைச் செய்றோம். இதனால எங்க குழந்தைகளோட சந்தோஷம், கற்பனைத்திறன், கூடிப்பழகும் பண்பு எல்லாம் பல மடங்கு பெருகியிருக்கு. நாலு பெண்கள் சேர்ந்தா தேவையில்லாத கதைகள்தான் பேசுவாங்கன்னு சொல்ற மூடத்தனமும் மாறியிருக்கு’’ என்கிற தீபா, சமீபத்திய சந்தோஷங்கள்  குறித்தும் பேசினார்.

இல்லத்தரசிகள் நிகழ்த்திய இனிய மாற்றம்!

‘`காந்தியைப் பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும்னு கேட்டா, நிறையக் குழந்தைகளுக்கு ஒரு சில தகவல் மட்டும்தான் தெரிஞ்சது. உடனே காந்தி ஜெயந்திக்கு காந்தி மண்டபம் போகலாம்னு முடிவு பண்ணி, ஒரு பஸ் பிடிச்சு, அம்மாக்கள் பிள்ளைகள்னு எல்லோருமே கிளம்பினோம். அங்க காந்தியைப் பத்தி அவங்க தெரிஞ்சுக்கிட்ட தகவல்களையும், அங்க அவங்களுக்குக் கிடைச்ச அனுபவத்தையும் கடிதமா எழுதச் சொல்லியும் ஊக்கப்படுத்தினோம். இதேபோல தசரா விடுமுறையிலும் தாண்டியா கொண்டாட்டம் ரொம்பவே சிறப்பா நடத்தி முடிச்சோம். 

சந்தோஷம், கொண்டாட்டம் மட்டுமே இல்ல எங்க கிளப் ஆக்டிவிட்டி. போன வருஷம் சென்னை மழை வெள்ளம் வந்தப்போ, எல்லாருமா சேர்ந்து ஒரு லட்சம் ரூபாய் திரட்டி உதவிகள் செஞ்சோம். மனிதம் என்ற பாடமும் பண்பும்தான். குழந்தைகளுக்கு நாம முக்கியமா கற்றுக்கொடுக்க வேண்டியது இது.

இப்போ எங்க குழந்தைகளுக்கான ஓர் அழகான உலகத்தை உருவாக்கியாச்சு. அடுத்ததா, இல்லத்தரசிகளின்  பொருளா தாரத் தன்னிறைவில் கவனம் செலுத்த ஆரம்பிச்சிருக்கோம். சுடிதார் மெட்டீரியல்  சேல்ஸ் பண்றது, வீட்டுச் சாப்பாடு செய்து கேட்டரிங் செய்றதுனு, இப்போ எங்க பெண்கள் பிசினஸ் லைனுக்கு வரத் தொடங்கியிருக்காங்க. தினம் தினம் கொண்டாட்டம், முன்னேற்றம்னு நகருது நாட்கள்’’ என்று சொல்லும் தீபா சாரதி, மாடல் போட்டோகிராஃபி செய்வதுடன், தன் நட்பு வட்டத்துக்கு ஃபேமிலி போர்ட்ஃபோலியோ புகைப்படங்களும் எடுத்துத் தருகிறார்!

குடும்பத்தின் முன்னேற்றத்துக்கும் சந்தோஷத்துக்கும் முதல்படி நேரத்தின் மதிப்பை பெண்கள் உணர்வதே!